இந்த புலி வதைக்கு முந்திய பிந்தைய காலகட்டத்தில், நேரடியாக நான் அறிந்த, என் மீதான படுகொலை முயற்சி பற்றிய விரிவான குறிப்புக்கு பதில், சிறு குறிப்புகளை இதில் தர முனைகின்றேன்.

1. 1984 ஆண்டின் இறுதியில் இந்தியக் கூலிகளாக பயிற்சிபெற்ற ரெலோ அமைப்பினர், என்னை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டனர். பல இடத்தில் இதற்கான நேரடி முயற்சியை முறியடித்து, அதில் இருந்து தப்பிச் சென்றதன் மூலம் நான் தலைமறைவாகினேன். அதேநேரம் இதில் தோல்வி பெற்ற ரெலோவினர், எனது வீடு மீது சுற்றி நின்று சரமாரியாக துப்பாக்கி வேட்டுகளால் சுட்டதன் மூலம், ஊர் உலகத்தையே அதிரவைத்தனர். அதேநேரம் எனது அமைப்பைச் சேர்ந்த வேறு சில உறுப்பினரை, ரெலோவினர் கடத்திச் சென்றனர். (இதைப்பற்றிய சில குறிப்புகள் என்.எல்.எவ்.ரி பத்திரிகையான "இலக்கில்" உள்ளது) இந்த வெறியாட்டத்தை எதிர்த்தும், அவர்களின் மக்கள்விரோத வன்முறையை எதிர்த்தும், தமிழ்மண்ணில் இயக்கத்துக்கு எதிரான முதல் ஜனநாயகப் போராட்டத்தை நாம் நடத்தினோம்;. மக்கள் தமது முதலாவது சாலை (வீதி) மறியல் போராட்டத்தை, இயக்கத்துக்கு எதிராக, இதன்போது தான் நடத்தினர். இந்தியக் கைக்கூலியாக பயிற்சி பெற்ற ரெலோவினர், இந்தியா கொடுத்த ஆயுதங்கள் மூலம் அந்த மக்கள் மேல் வேட்டுகளை பொழிந்து தள்ளினர். மக்கள் இதற்கு எதிராக உறுதியாக நின்று போராடினர். மக்கள் அசைந்து கொடுக்காமையால், கைது செய்தவர்களை ரெலோவினர் கொண்டு வந்து மக்கள் முன் விடுவித்த நிகழ்வு, இந்த தமிழ் மண்ணில் தான் நடந்தது. எனது சொந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக பங்குபற்றிய போராட்டம் இது. இந்த போராட்டத்தை எனது சொந்த ஊரைச் சேர்ந்த உயர் சாதியைச் சேர்ந்த முன்னணியாளர்கள் (ஆண் பெண்) பங்குபற்ற, அயல் ஊரான தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்களும் கூடி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

2. 1985 இல் "சதி"  எனக் கருத்துப்படும் ஆனால் சதி வழிமுறையையே இயல்பாகவும் கொண்ட இயக்கமான புளாட்டின் மனிதவிரோதத்தை எதிர்த்து, அவர்களின் சொந்த கோட்டையாக இருந்த தெல்லிப்பழையிலும், உமாமகேஸ்வரனின் சொந்த ஊரான (அது எனது ஊரும் கூட) வறுத்தலைவிளானிலும் தொடர்ச்சியாக பல போராட்டத்தை முன்னெடுத்தோம். சொந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்சாதியின் முன்னணியாளர்கள் ஒன்றிணைந்து, தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டி வந்தோம். இதன் மூலம் அரசியல் போராட்டங்களையும் நடத்தினோம்;. புளாட்டின் மனிதவிரோத செயல்கள் பலவற்றையும், ஊர் கோயிலில் புளாட்டின் ஆதரவுடன் பின்பற்றிய சாதிய வழிமுறைகளையும் எதிர்த்துப் போராடினோம். புளாட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் சொந்த ஊரே, அவருக்கு எதிராக நின்றது.

இதனால் ஆத்திரமுற்ற புளாட்டின் தலைவர் உமாமகேஸ்வரனின் நேரடியான உத்தரவுக்கு இணங்க, என்னைப் படுகொலை செய்ய கொலைகாரனான வாமதேவனை அனுப்பினார். அவன் என்னை படுகொலை செய்யும், கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தான். புளாட்டில் அதிருப்;தியுற்று இருந்த, எமது தொடர்புடைய சக்திகள் மூலம் இதை நான் அறிந்து கொண்டேன். இதை அவன் முன், அம்பலப்படுத்தும் ஒரு திடீர் வழிமுறையைக் கையாண்டேன். தெல்லிப்பழை சந்தியில் மக்கள் கூடியிருந்த போது, அவன் நின்றிருந்த நேரம் பார்த்து, திடீரென கொலை செய்ய வந்திருப்பதை அம்பலப்படுத்தியதன் மூலம், அவன் தன் படுகொலை முயற்சியை கைவிட்டு ஒடச் செய்தேன்.

3. விமேலேஸ்வரனை 18.7.1988 அன்று இரண்டு மணியளவில், நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் வைத்து புலிகள் படுகொலை செய்தனர். இதற்கு அடுத்த நாள் என்னை படுகொலை செய்ய நேரடியாக முயன்ற இரு புலிகளை நான் அடையாளம் கண்டு கொண்டதன் மூலம், அந்தக் கொலை முயற்சியை முறியடித்தேன்;. இதன் பின்பு எனது வீடு உட்பட நான் தங்கிச் செல்லும் சில இடத்திலும், புலிகள் என்னை வலைபோட்டு தேடினர். இவை அனைத்தும் நான் தெரிந்து கொண்ட வகையிலான என் மீதான நேரடியான படுகொலை முயற்சியாகும்.

இது தவிர்ந்த எனக்கு தெரியாத பல படுகொலை முயற்சிகள் இருந்திருக்கும் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் நான் கொண்டிருக்கவில்லை. "புலிகளின் வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை" என்ற இந்தக் குறிப்பில், புலிகளால் உரிமை கோராத கடத்திச் சென்று சித்திரவதையுடன் கூடிய படுகொலைக்கான முயற்சி மற்றும் அதை முறியடித்து தப்பிய நாட்களின் பின்னான சில சம்பவங்களையே இதில் தொகுத்து அளிக்கின்றேன்.

பி.இரயாகரன்

3.மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)


2.1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)