Language Selection

"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசிச சட்டங்களை, மார்க்ஸ் மிக அழகாகவே இங்கு எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் எந்த விதிவிலக்குமின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி

அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான் நிறுவினர். இதன் மூலம் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டினர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை தங்களுக்கு ஏற்ற ஒரு செங்கம்பளமாக்கி, அதன் மேல் தான் வீரநடை போட்டனர். இதுதான் பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் வரலாறுமாகும்.

இலங்கையில் பாசிசப் புலிகள் தேசிய வீரர்களாக, வீரநடை போட்ட கதையும் இப்படித்தான். ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான படுகொலைகள், சித்திரவதைகள் மூலம், பல ஆயிரம் சமூகப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர். தங்கள் சொந்த பாசிச கட்டமைப்புக்கு அவர்களைப் பலியிட்டனர்.  நாள் தோறும் படுகொலைகள், சித்திரவதைகள் மூலமே, தமது மக்கள் விரோத பாசிசத்தை தமிழ்மக்கள் மேல் திணித்தனர்.

மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கி எழுந்த தேசியத்தை, துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்கினர். இதன் மூலம் மக்களின் தேசிய அடிப்படைகளையே திரித்தனர். இதன் மூலம் தம்மை மட்டும், போராடும் சக்தியாக காட்டி அதை நிலைநிறுத்த முனைந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கிய கோரிக்கைளை முன்வைப்பதன் மூலம், இந்தப் போராட்டத்தில் தாங்கள் ஊன்றி நிற்பதாக காட்ட முனைந்தனர். இதற்கமைய மனித அறிவியலை நலமடித்தனர். தங்கள் பாசிச நடத்தைகளையே அறிவியலாக பூச்சூட்டினர்.

தம்மைக் கண்டு மக்கள் நடுங்கும் வண்ணம், அச்சத்தை விதைத்தனர். இதன் மூலம் உருவான சூனியத்தை, சமூகமயமாக்கினர். இதன் மூலம் தம்மை சமூகத்தின் அனைத்துமாக நிலைநாட்டினர். இதன் மூலம் மக்களின் இரத்தத்தையும், அவர்களின் உடல் உழைப்பையும் உறிஞ்சி வாழ்ந்தனர். இதற்கமைய புலிகள் திணித்தது, அர்த்தமற்ற தியாகங்களைத் தான்;. தமது கேடுகெட்ட இழிவான கோழைத்தனமான மக்கள் விரோத சுயநல அரசியலுக்காக, இந்தப் பலியீட்டை நடத்தினர், நடத்தி முடித்தனர்.

மாபியா குழுக்களுக்குரிய லும்பன் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தது, புலிகளின் வாழ்க்கை முறை. இதற்கு ஏற்ப புலிகள் பாசிசத்தை, தமது அரசியலாக்கி, அதையே அரசியல் ஆணையாக்கினர். இதற்காக எமது மண்ணில் பல ஆயிரம் உயிர்களை, ஈவிரக்கமற்ற வழிகளில் கொன்றனர். அந்த இரத்தத்தை தமது கால் பாதங்களில் தெளித்தே, தம்மைத் தாம் புனிதப்படுத்திக் காட்டினர். தங்கள் இந்த புனிதமான பாசிச இருப்பை மூடிமறைக்க, பினாமிய பிழைப்புவாதங்களை வக்கிரப்படுத்தினர். மாற்றுக் கருத்துகளை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிய பின் தான், தேசிய பாசிட்டுகளால் அனைத்தையும் மிக வக்கிரமாக நியாயப்படுத்த முடிந்தது. இப்படி நியாயப்படுத்திய புனிதத்தைப் பற்றி, கோழைகள் வீர வசனங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதன்போது தான் மரணத்தை வாழ்வாகத் தந்து கொண்டிருந்த, அவர்களின் இரகசியமான வதைமுகாமின் சிறைக்கதவுகளைக் நான் உடைத்தேன். அங்கிருந்து உயிருடன் உலகமறிய நான் தப்பியிருந்தேன்;. ஒரு உண்மைச் சம்பவத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட, அதையொட்டிய சுய வரலாற்றை ஆதாரபூர்வமாக நினைவுக் குறிப்பில் இருந்து தொகுத்தளிக்கின்றேன்.

புலிகள் என்னை மிக இரகசியமாக, உரிமை கோராது, கோழைத்தனமாக கடத்திச் சென்றனர். எப்போதும் மக்களைக் கண்டு அஞ்சிய புலிகள், இதை பகிரங்கமாகச் செய்ய முடியவில்லை. இரகசியமாக கடத்தியது முதல் தொடர் சித்திரவதைகளைச் செய்ததுடன், படுகொலை செய்ய முயன்றனர். இந்த நிலையில் அந்த இரகசிய வதைமுகாம் சிறையை உடைத்து, அங்கிருந்து உயிருடன் தப்பியிருந்தேன். இக்கால நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வகையில், "புலிகளின் வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலையங்கத்தில், இதை உங்கள் முன் கொண்டுவருகின்றேன். ஆனால் சிறைக்கு பிந்திய முந்தைய நிகழ்ச்சிகள் சிலவற்றையும், இக்குறிப்பு உள்ளடங்கியுள்ளது.


பி.இரயாகரன்

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)