Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் காட்டு வேட்டைக்கு புறப்பட்டிருக்கும் அரசு அதற்கு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழிக்கவேண்டும் என்பது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்ட திட்டங்களின்படி அந்தப்பகுதிகளில் கொட்டிக்கிடங்கும் கனிம வளங்களை பன்னாட்டு தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக அங்கு காலம் காலமாய் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை நாயைப் போல் நரியைப் போல் விரட்டிவிட்டு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்பது.

சுதந்திரமடைந்து விட்டோம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த அறுபத்திச்சொச்சம் ஆண்டுகளில் சாலை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த அரசு, தங்கள் வாழ் தேவைக்காக வில் அம்புகளை வைத்துக்கொண்டிருக்கும் பழங்குடி மக்களை பல்வேறு நவீன ரக துப்பாக்கி, குண்டுகள், எறிகணைகள் மூலம் போர்விமான வசதிகளுடன் விரட்டியடிக்கவிருக்கிறது. இதை வளர்ச்சித்திட்டம் என்று தன்மானமுள்ள அந்த மக்களின் வாழ்வை ஏளனம் செய்கிறது. நிராயுதபாணியான மக்களிடம் நவீன ஆயுதங்களைக் காட்டி மிரட்டுபவன் பயங்கரவாதி என்றால் இந்த அரசை எப்படி அழைப்பது?

 


ஆனால் அப்படியெல்லாம் சுற்றிவளைத்து சிரமப்பட்டு புரிந்து கொள்ளவேண்டிய அவசியமின்றி நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்று ஒரு சட்ட முன்வரைவின் மூலம் வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டுள்ளது இந்த ஆளும் கும்பல். அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிடி பில்) என்பது அந்த சட்ட முன்வரைவின் பெயர்.

பல்வேறு அறிவுத்துறையினரும், அறிவியலாளர்களும் ஜனநாயக நெறிகளின் படி தங்கள் பலத்தை திரட்டி போராடியும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என பிடிவாதம் பிடித்து நிறைவேற்றியது மன்மோகன் அரசு. நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதத்தையும் நடத்தாமல் வாக்கெடுப்புச் செய்யாமல் நிறைவேற்றியது. (அந்த நேரத்தில் நடந்தது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தானே தவிர ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு அல்ல)

எதிர்காலத்தில் நாம் மிகப்பெரிய அளவில் மின்பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறோம் என்று கூறி இந்த ஒப்பந்தம் நியாயப்படுத்தப்பட்டது. அதற்கு யுரேனியம் அவசியமில்லை நம்முடைய நாட்டில் தாராளமாக கிடைக்கும் தோரியம் மூலம் அதை செய்யலாம் என்று அந்த ஆய்வில் முக்கால் பங்கு வெற்றியை பெற்றுவிட்ட அறிவியலாளர்களின் கலகக் குரல் செவிமடுக்கப்படவில்லை. இன்றுவரை ஆண்டுக்கொருவராய் அறிவியலாளர்கள் மர்மமான முறையில் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே நடப்பில் இருக்கும் முறைகளின் மூலமும் வேறு புதிய முறைகளின் மூலமும் மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தினால், சூரியமின் உற்பத்தி போன்ற ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கினால் இந்த ஒப்பந்தத்திற்கு செலவு செய்வதை விட குறைவான செலவில் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் கிடைக்கும் மின்சாரத்தைவிட அதிக மின்சாரம் பெறலாம் என்று அறிவுத்துரையினரால் எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கு அரசிடமிருந்தோ அந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. ஆனாலும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மை(!) பறிபோய்விடும் என்று இல்லாத ஒன்றைப்பற்றி கவலைப் பட்டனர் சிலர். அமெரிக்காவின் ஹைட் சட்டம் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்றார்கள். ஆனால் இந்தியாவின் நீண்ட நாள் நண்பனான ஈரானுடன் இதே அணுசக்தி விசயத்தில் அமெரிக்காவின் நலனுக்காக முரண்பட்டார்கள். ஈரானும் அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தப் போகிறோம் என்று தான் கூறியது. ஆனாலும் குழாய் எரிவாயு திட்டம் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையிலும் அமெரிக்காவை மீறமுடியாமல் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

இவ்வளவு முரண்பாடுகளுக்கிடையிலும், எதிர்ப்புகளுக்கிடையிலும் இந்திய நலனை விட்டுக்கொடுத்து செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இதுவரை பணிகள் எதுவும் துவங்கிவிடவில்லை. தொழில்நுட்ப இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி விடவில்லை. ஏன்? அமெரிக்க முதலாளிகள் பயப்படுகிறார்கள். விபத்து என்று ஒன்று நடந்து விட்டால் நட்டஈடு அதிகம் கொடுக்க நேரிடுமோ என்று.

அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்நோபில் அணுக்கசிவு விபத்துகள் எவ்வளவு கோரமானவை என்று உலகம் கண்டிருக்கிறது. இந்தியாவில் போபால் விசவாயுக்கசிவு நடந்து பல ஆண்டுகள் ஆனபின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகூட மறுக்கப்பட்டு இரக்கமற்று அலையவிடப்பட்டிருக்கும் இந்த நாட்டில் அணுமின் உற்பத்தி செய்து லாபம் என்ற பெயரில் இந்திய மக்களை கொள்ளையிட துடிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விபத்து நடந்தால் இழப்பீடு கொடுக்க நேரிடும் என்பது தயக்கமாக இருக்கிறது. அவர்களின் தயக்கத்தைப் போக்கி, வாட்டத்தை நீக்கத்தான் அணுமின் எரிசக்தி பதிப்புச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது.

என்ன சொல்கிறது இந்தச்சட்டம்? அணுமின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று, கனரக இயந்திரங்கள் தொழில்நுட்ப பாத்திரம் வகிக்கும் நிறுவனங்கள். இரண்டு, இவைகளைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து பகிரும் நிறுவனங்கள். இந்த இரண்டு வகை நிறுவனங்களில் விபத்து ஏற்பட்டால் முதல்வகை நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, தொழில்நுட்ப குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டிருந்தாலும் கூட. இரண்டாம் வகை நிறுவனங்கள் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்று அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக 2785 கோடியை செலுத்திவிட வேண்டும். அதிலும் 500 கோடி மட்டும் செலுத்தினால் போதும் மீதியை அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஈடு கட்டிக்கொள்ளும். இது தான் அந்தச்சட்டம். சுருக்கமாக சொன்னால் அமெரிக்க நிறுவனங்கள் இங்கு வந்து மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகித்து (எந்த விதத்திலும் அரசு தலையிடப்போவதில்லை) மக்களிடம் கோடி கோடியாக கொள்ளையடிக்கலாம், விபத்து நடந்தால் பிச்சைக்காசு 500 கோடியை தூக்கி வீசிவிட்டு போய்விடலாம். அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து இழப்பீடு வழங்கிக்கொள்ளும். கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மூத்திரத்தில் ஏரோபிளேன் ஓட்டலாம் என்பது இது தானா?

மக்களுக்கு அரசு கல்வி கொடுக்க முடியாது எனவே தனியார்கள் கல்வியை மேற்கொள்ளலாம். மக்களுக்கு அரசு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மருத்துவமனைகளை அமைத்துக்கொள்ளலாம். மக்களுக்கு குடிநீர் வசதிகளை செய்து கொடுக்க அரசால் முடியாது எனவே தனியார்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். மக்களுக்கு அரசு மிசார வசதிகளை செய்து கொடுக்க முடியாது எனவே தனியார்கள் மின் விநியோகம் செய்து கொள்ளலாம். ஆனால் இவைகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் முதலாளிகள்  பணம் தரமாட்டார்கள். ஏனென்றால் லாபம் சம்பாதிக்க மட்டுமே ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே அதை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும் அதையும் அந்த மக்களின் பணத்திலேயே.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்பதெல்லாம் திரைபோட்டுக் கொண்டு வந்த காலமெல்லாம் கடந்து விட்டது. தன் கோரமுகத்துடன் நேரடியாகவே வந்து நிற்கிறது. இனியும் மக்கள் வலிக்கவில்லை என்று வாளாவிருக்க முடியாது. எதிர்த்து முறியடிக்க களத்தில் நிற்கவேண்டிய காலமிது.

 

http://senkodi.wordpress.com/