11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

பெண்ணாய்ப் பிறந்த சிட்டுக்குருவியும் விடுப்பு நேர வாசகசாலையும்

வாசகசாலைக்குள்
வந்து போனவர்களெல்லாம்
வாசித்து துப்பிப்போட்ட
வார தின கடதாசிப் பட்டாளம்
மல்லாக்க கிடந்த மாலையொன்றில்
சிட்டுக் குருவி நுழைந்ததுள்ளே

எல்லோரும் வாசித்ததை
தானும் வாசித்து
மண்டை கனத்தபடியே
வெளியேறியது அது

தெருவில்
போவோர் வருவோரெல்லாம்
தம்மை மூடி மறைத்தபடி
நிர்வாணமாய் நடந்தனர்
எல்லார் பிடரிகளாலும்
வாசித்துச் சாப்பிட்ட
புதினங்களும் புனிதங்களும்
ஒழுகிக்கொண்டிருந்தன

தலை சுற்றியது சிட்டுக்குருவிக்கு

எதிரில் தென்பட்ட
இடிந்த சுவரில்
தனது
மண்டையை மோதி
மயக்கம் போட்டு விழுந்தது சிட்டுக்குருவி.

விழித்துப் பார்த்தபோது
யாரோ அதற்கு
உடை அணிவித்துவிட்டு போயிருந்தனர்

இப்போது
தான்
நிர்வாணமாய்க் கிடப்பதை
முதன் முறையாக
உணர்ந்து கொண்டது சிட்டுக்குருவி.
(தமிழ் பேசத் தெரிந்த அனைத்து கம்யூட்டர்களுக்கு சமர்ப்பணம்)
http://www.uyirmei.com/2010/03/blog-post_13.html