இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள் மிகத் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, இதன் பக்கவிளைவு மிகக் கடுமையானது. முரண்பாடுகள் அற்பத்தனமானதாக, மேலெழுந்தவாரியாக, சின்னச்சின்ன விடையங்களில் பிரதிபலிக்கின்றது. இதன் ஆழம் தெரியாத இந்த சமூக முரண்பாடு, மனிதனுக்குள்ளான பாரிய தனிமனித முரண்பாடாக மாறுகின்றது.

இதில் ஒன்றுதான் பெண் சார்ந்த கலாச்சார முரண்பாடுகள். இது மிகத் தீவிரமான பிரதிபலிப்பை உருவாக்குகின்றது. நெருங்கிய சமூக உறவுக்குள், இது மையமான முரண்பாடாகின்றது. தீவிரமான பிளவுகளையும், எதிர்நிலைக் கண்ணோட்டத்தையும் உற்பத்தி செய்கின்றது. தலைமுறை கடந்த இடைவெளிக்கு அப்பால், இது ஆற்றும் பங்கு வெளிப்படையாக வெளிப்படுவதில்லை. உண்மையில் இதன் சமூகத்தன்மையை தெரிந்து கொள்ளாததன் விளைவு, தனிமனிதர்களின் சின்னத்தனங்கள் கிறுக்குத்தனமாக பிரதிபலிக்கின்றது. சமூகப் பொதுப்புத்திக்கு இவை தனிமனித குற்றங்களாகின்றது.

இந்த முரண்பாடுகள் அன்றாடம், பெண் சார்ந்து கூனிக் குறுகிப்போகின்றது. சில சமூகங்களில் இது, இதற்குள் மட்டும் ஆதிக்கம் வகிக்கின்றது. சமூகம் இப்படித் தான் உள்ளது. கலாச்சாரத்தை பெண்ணின் ஊடாக, சொந்த உறவுக்குள்ளாக சுருக்கிப் பார்க்கின்றது. பெண்ணின் பாலியல் நடத்தையில், இதை ஒன்று குவித்து பார்க்கின்ற மனப்பாங்கே, கலாச்சாரமாக புரியப்படுகின்றது.

தன்னைச்சுற்றி உள்ள பெண்ணுக்கு கலாச்சார வேலியை போடும் சமூகம், சமுதாய அளவில் இதன் மீறல்களை ரசிக்கின்ற மனப்பாங்கு, ஒரு முரண்நிலையாகக் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்ணின் உடை முதல் அந்த பெண்ணின் திருமணம் வரையிலான தீர்மானத்தை யார் எப்படி எடுப்பது என்ற எல்லைக்குள்ளாக, நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிரான மனப்பாங்கு சுருங்கி வெளிப்படுகின்றது. இது முற்போக்கான திசையில் அல்ல, படுபிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்கில் வெளிப்படுகின்றது. இந்த எல்லைக்குள் தான் மொழி குறித்தும், கலாச்சாரம் குறித்ததுமான அக்கறை காட்டப்படுகின்றது.

இந்த அக்கறை தவறாகவே குறுகிய எல்லையில் எழுகின்றது. முதலில் உலகமயமாதல் உருவாக்கும் சந்தைக் கலாச்சாரம் பற்றிய தெளிவு இன்றி, எதையும் சரியாக இனம் காணமுடியாது. குறுகிய சிந்தனைகள், தனிப்பட்ட மனப்பிரமைகள், இந்த சந்தைக் கலாச்சாரத்தின் போக்கில் முன்வைக்கும் புலம்பலாகி விடுகின்றது.

உலகமயமாதல் உற்பத்தி செய்யும் நுகர்வுச் சந்தைக்குரிய கலாச்சாரம், தனக்கு தடையானதையும், தேவையற்றதையும், தனது சொந்த இழிவின் ஊடாக அழிக்கின்றது. இங்கு உலகமயமாதலை தடுக்கின்ற, சமூக இருப்பு சார்ந்த கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதை அடிப்படையாக கொண்டே, நுகர்வுச் சந்தையை நாளொரு பொழுதாக உலகமயமாதல் கைப்பற்றுகின்றது. பொருளை அற்ப நுகர்வு வெறிக்குள்ளாக்கி விற்பனை செய்ய, ஆபாசமாக கவர்ச்சியாக பெண்ணை வக்கிரப்படுத்தி சந்தை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகர்வை, பெண்ணூடாக சந்தை அணுகுகின்றது. பெண் பற்றிய பார்வையை, சந்தையின் நுகர்வுக்குரியதாக, தீவிரமாக தனக்கு இசைவாக புதிய பண்பாடு கலாச்சாரம் ஊடாக மாற்றுகின்றது. கவர்ச்சி, ஆபாசம், அது உருவாக்கும் பாலியல் வக்கிரம் பற்றிய சமூகத்தின் எதிர்மனப்பாங்கு, நுகருவதற்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிப்பதில்லை. இதற்கு பண்பாடு, கலாச்சாரம், அதை ஒட்டி வாழும் மொழி தடையாக இருக்குமெனின், அதையும் அழிக்கின்றது.

இந்த வகையில் மொழி முதல் சமூகங்களின் பண்பாடுகள் கலாச்சாரங்கள் என அனைத்தையும் உலகம் தழுவியதாக அழிக்கின்றது. உதாரணத்துக்கு உணவை எடுத்தால், உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே உணவை உண்ண வேண்டும் என்பதையே சந்தை கோருகின்றது. இதபோல் ஒரு குடிபானம், பொருட்களை விற்கும் ஒரு கடை என்று அனைத்தும், இந்த குறுகிய ஒன்றாகவே கோருகின்றது. இப்படி உருவாக்கப்படும் கலாச்சாரம், பண்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான் சந்தையும் அது உருவாக்கும் கலாச்சாரமும் இயங்குகின்றது. சிறு குழந்தையில் இருந்தே, இந்த நுகர்வுப் பண்பாடு என்னும் நஞ்சு, திட்டமிட்டு இடப்படுகின்றது. சமூகத்தை மந்தைக்குரிய வகையில் ஒரு பொருளை மைய்யப்படுத்தியும், இதற்குள் சைக்கோக்களை உற்பத்தி செய்தும் நுகர்வு உருவாக்குகின்றது. இதை நோக்கிய உலகத்தை உருவாக்கி, அதை நுகர்வுச் சந்தையாக மாற்றிச் செல்லுகின்றது. இதற்கு எதிரான அனைத்தும் அழிக்கப்படுகின்றது.

நுகர்வுச் சந்தைக்கு தடையான பண்பாடு, கலாச்சாரம் முதல், அதன் வேராகவுள்ள மொழியையும் அழிக்கின்றது. இந்த சந்தைக் கலாச்சாரத்தில் மூழ்கியெழும் ஒரு சமூகம் அல்லது சமூகத்தின் தீர்மானகரமான சக்திகள், தத்தம் குறுகிய எல்லையில் மொழி கலாச்சாரம் குறித்து ஒப்புக்கு முண்டு கொடுக்கின்றனர். இதைப் பெண்ணின் எல்லையில் மட்டும் காண்பது தான், இதன் முரண்நிலையாகும். கலாச்சாரத்தின் முரண்பாடுகள் இதற்குள் இருப்பதாக காட்டி பாசாங்கு செய்வது அபத்தமாகின்றது. அதுவே வன்முறையாகின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

7.மனித விழுமியங்களையா கலை உற்பத்தி செய்கின்றது? : மனித கலாச்சாரம் பாகம் - 07