தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. தனிமனித குறுகிய நலனை முதன்மைப்படுத்தியதே சின்னத்திரை நாடகங்கள். இந்த அடிப்படையில் குடும்பத்தை சிதை என்பதே, அதன் சாரம். இந்த வகையில் குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வையே, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்;பத்தில் நிலவும் தியாகம், விட்டுக்கொடுப்பு, சேர்ந்து வாழ்தல் போன்ற சமூக உணர்வைத் தகர்த்து, தனிமனித நலன் சார்ந்த நுகர்வையே நாடகங்கள் சமூகத்தில் திணிக்கின்றது.

இதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்குகின்றது. இதன் ஒழுக்கம் என்பது, தனிமனித நுகர்வுக்கு உட்பட்ட நீதியாகின்றது. அது தனக்கு என்று ஒரு சமூக வரையறையைக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நுகர்வு எப்படி அராஜகத்தன்மை கொண்டதோ, அதன் போக்கில் தான் இதன் நீதியுள்ளது. இது நுகர்வு வெறிக்குள்ளான சொத்துரிமையின் எல்லையில் தான் தகவமைக்கப்படுகின்றது. அற்பத்திலும் அற்பத்தனம்.

இந்த நாடகங்கள் சமூகத்தில் (உதாரணமாக குழந்தைகளில்) இருந்து அன்னியமாகும் உறுப்புகளின் (பெற்றோரின்) கலாச்சாரத்தை வக்கிரப்படுத்துகின்றது. சமூகத்தை (குழந்தைகள்) ஆபாச உலகத்தில் தள்ளிவிடுகின்றது சினிமா. நாடகம் தனிமனிதனை சதா புலம்பும் அற்ப உணர்வு சார்ந்த உலகத்தில், மனிதனைத் (பெற்றோரை) தள்ளி விடுகின்றது. வாழ்க்கையை பறி கொடுத்துவிட்டதாக சதா நம்புகின்ற ஒரு மனப்பிரமையே, தனிமனித புலம்பலாகின்றது. முடிவின்றி சதா எதையோ திட்டித் தீர்க்கின்றது. எதிரிகளை தேடுவதே, குடும்பத்தின் அடிப்படைப் பண்பாகின்றது. அது குடும்பத்தின் உள்ளேயே, அதை இனம் காண்கின்றது. குடும்பத்திலும்;, உறவுகளிவும்; எதிரியைத் தேடுகின்றது. எதிரி உன்னைச் சுற்றிய உள் உறவுக்குள் காண் என்பதே இதன் தத்துவம். உலகமயமாததல்ல, அதன் ஓட்டுண்ணி அரசல்ல, என்பதே இது சொல்ல வரும் செய்தி. குடும்பத்தை, உறவுகளை இது சிதைக்கின்றது. சமூக உருவாக்கத்தை இது மறுக்கின்றது.

இப்படி சின்னத்திரை நாடகங்கள் முரண்பட்ட மோதலை குடும்பத்தில், தனிமனித வடிவில் திணிக்கின்றது. சினிமா முரண்பட்ட மோதலை சமூகத்தில் தனிமனிதர்களுக்குள் திணிக்கின்றது.

இந்தத் தொலைக்காட்சி நாடகங்கள் என்னும் அற்பத்தனமான அற்பபுத்தியுள்ள கலை இறுதியும் அறுதியுமாக மனிதனுக்கு கூறுவது என்ன? மனிதர்களுக்குள் இணங்கிச் செல்லும் நட்பு முரண்பாட்டை, பகை முரண்பாடாக மாற்று என்பதைத் தான். உலகமயமாதலின் சந்தைக்குரிய வகையில், ஒருவனை ஒருவன் எதிரியாக காண்கின்ற, தனது உயர்வுக்கு மற்றவனை தடையாக காண்கின்ற, தனிமனித அற்பத்தனங்களை கொண்ட ஒரு சமூகமாக்கவே நாடகங்கள் முனைகின்றது. குடும்பத்தினுள்ளும் தனிமனித வெறி பிடித்த நுகர்வாளர்களை உருவாக்குவது தான், இதன் மைய நோக்கம். இப்படி இதன் நோக்கில் இணங்கி வாழ்வதை சிதைக்க, முரண்பாடுகளை பெருப்பிப்பதற்கான அற்பத்தனமான விடையங்களை, அதை ஒட்டிய நுட்பத்தை தூண்டுவது தான் நாடகங்கள். சிறு முரண்பாட்டை, உனக்குள் பிரதான முரண்பாடாக்குவது அல்லது இல்லாத ஒரு முரண்பாட்டை இருப்பதாக கற்பித்து அதை முதன்மை முரண்பாடாக கொண்ட உளவியல் நோயாக கொண்டு வாழக்கோருகின்றது. மனிதன் இணங்கி வாழும் மனித உணர்ச்சியை செல்லரிக்க வைத்து, இணங்கி வாழ மறுக்கும் உணர்ச்சியை உருவாக்குவதே இதன் உத்தி. தனிமனித குதர்க்க வாதத்தை, சமூக வாதத்துக்கு எதிராக நிறுத்துவதே நாடகத்தின் ஒழுக்கவிதியாகும். மனிதர்கள் தமக்கு இடையில் விட்டுக் கொடுத்துச் செல்லும் முரண்பாட்டை, பகை முரண்பாடாக கிண்டி எடுப்பதே நாடகமாகின்றது. கதை சுற்றிச் சுழன்று என்ன சொன்னாலும், நாடகத்தின் அரசியல் நோக்கம் இதுதான்.

தனிமனித உறவுகளை முடிந்த வரை ஒன்றுக்கொன்று எதிராக வக்கிரப்படுத்தி, எதிரியை குடும்பத்தில் தேடத் தூண்டி மோத விடுவதன் மூலம், இந்த சமூக அமைப்பு நுட்பமாக பாதுகாக்கப்படுகின்றது. எதிரியைக் குடும்பத்தினுள், உறவினுள் உருவாக்கி, அதுவே ஒவ்வொரு உறுப்பினரினதும் தலையாய மண்டையை வெடிக்க வைக்கும் பிரச்சனையாக்கப்படுகின்றது. முரண்பட்ட குடும்ப அலகுகள் வன்முறைக்குள்ளும் அல்லது கண்டும் காணாமல் இருக்கும் தனிமை வாதத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. நாடகம் உணர்ச்சி சார்ந்த மோதல், சமூக வெறுப்பு கொண்ட வக்கிரத்தைத் தூண்டுகின்றது. இதுவே மனிதனைப் பிளக்கும் கலையாகின்றது. மறுபக்கம்; எல்லையற்ற ஆபாசம் கலையாகின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

1.ஆபாசமும்! கவர்ச்சியும்! அதன் வக்கிரமுமா! மனித கலாச்சாரம்? : மனித கலாச்சாரம் பாகம் - 01