இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women´s Day] வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் என்று பெண்களாலேயே நினைக்கப்படும் அளவிற்கு மேட்டுக்குடியினராலும், விளம்பர நிறுவனங்களாலும்,  அரசாங்கத்தாலும் நடத்தப்படும் ‘ஃபேஷன் ஷோ’ போல் ”பெண்களின் குரல்” [Women´s veice] ஆக்கப்பட்டிருக்கிறது.


சாதாரண பெண்கள் ஒன்றுக்கூடி சாதனைப் பெண்களின் போராட்டங்களை ஒப்புவித்துவிட்டு பின்னர் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுக்கு பல் இளித்துவிட்டு மேடை அலங்காரிகளாக ஒவ்வொரு வருடமும் காட்சியளிக்கும் ‘ஷோ’க்களைக் கண்டு ஆற்றாமையே மிஞ்சுகிறது.

பெண்களுக்காக சர்வதேச அமைப்புகள் ஏற்படுத்தி அனைத்து நாட்டு பெண்ணியவாதிகளையும் ஒன்றிணைத்து பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1857-இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்த அசாத்தியமும், அம்மாநாட்டில் பிரேரிக்கப்பட்ட புரட்சிகர தீர்மானங்களான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் சலுகைகள், திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை, தொழில், கல்வியில் அதிக வாய்ப்பு, வணிகத்துறையில் வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்தும், வேலை வாய்ப்புகள், கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்குரிய சலுகை, விவாகரத்து உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் வென்றெடுத்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியில் [14.06.1789] போராடிய பெண்கள், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடத்தப்பட வேண்டும்” என்றும், “வேலைக்கேற்ற ஊதியமும், எட்டு மணிநேர வேலையும், வாக்குரிமை பெண்களுக்கும் வேண்டும்” என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரான்ஸ் மன்னனுக்கு எதிராக போராடி வென்றெடுத்த வெற்றி ஐரோப்பிய பெண்களுக்கும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தைக் கொடுத்து அவர்களும், போராடி வென்ற பெண்ணிய உரிமைகளும்….

இன்றைய நம் தமிழச்சிகளுக்கு இல்லாமல் போய்விட்டதே ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கான சூழல்கள் எதுவும் இல்லை என்று சமாதானம் சொல்லாதீர்கள்.

சென்ற மாதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘அஜ்மல்கான்’ என்பவர் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம் என்றும், பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்கவேண்டும் என்பது அய்தீகம் என்றும், ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமலும், ஹிஜாப் அணியாமலும் உள்ள ஒளிப்படங்கள் வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவு 25-இன்படி மதப் பாதுகாப்புப் பிரிவுக்கு எதிரானது என்று வழக்கு.

வாக்காளர் உண்மையானவரா, போலியா என்று அறிந்து கொள்ளத்தான் புகைப்படங்கள். அதிலும் முகத்தையும், கண்களையும் மறைத்துள்ள படத்தை வெளியிட வேண்டும் என்றால் வாக்காளர் உண்மையானவரா என்று எப்படி அறிந்து கொள்வது?

இவ்வழக்கு தாக்கல் குறித்து தமிழ்நாட்டு மகளிர் சங்கங்கள் எந்த எதிர்வினையாவது செய்ததா? இல்லையே, ஏன்?

மதப் பிரச்சனைக்குள் நுழைய வேண்டுமா என்னும் யோசனை! இந்த சிந்தனை தடங்கள் பெண்ணியத்திற்கு ஆபத்தானது. உலகில் பெண்ணியத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் மதங்களின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்ததால்தான் பெண்கள் போராளிகளாக முடிந்தது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடிந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் [IDEOLOGY], வர்க்கம் [CLASS], உயிரியல் [BIOLOGY], சமூகவியல் [SOCIOLOGICAL], பொருளாதாரமும் கல்வியும் [ECONOMICS AND EDUCATION], சக்தி [FORCE], மானுடவியல் [ANTHOROPOLOGY], உளவியல் [PHYCHOLOGY] என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ பெண்ணிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதனுடன் மார்க்சியப் பெண்ணியம், தேசியப் பெண்ணியம், மேலைப் பெண்ணியம், இஸ்லாமியப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என பன்முகத் தன்மையில் நம் சமுகத்தில் பெண்ணிய நோக்கு விரிகிறது.

தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் இதுவரை எந்த கோணத்தில் பெண்ணியத்திற்காக போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்?

தமிழ்சூழலின் பெண்ணியம் குறித்து பேசுவதென்றால் ஓர் ஆஸ்திகவாதிகளால் நிச்சயம் முடியாது.

“இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும். ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மத வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?” என்கிறார் பெரியார். [ஆதாரம்: பெரியார் களஞ்சியம். தொகுதி: 5, பக்கம்: 211]

எத்தனை பெண்கள் ‘நாத்திகம்’ பேசத் தயாராக இருக்கிறார்கள்?

இந்தியாவில் பெண்களில் 70 சதவீதம் குடும்ப வன்முறைக்கு [Domestic Violence] உள்ளாக்கப்படுகின்றனர் என்று 2005-இல் எடுக்கப்பட்ட கணக்கு குறிப்பிடுகிறது. அதில் பெரும்பான்மை மதச்சார்பான வரதட்சணை பிரச்சனையும் முக்கியமானது.

குடும்ப வன்முறையில் [Domestic Violence] இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் ஐரோப்பாவில் எப்பொழுதோ வந்துவிட்டது. இந்தியாவில் 2005-இல் தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டன என்றால் பெண்ணுரிமையில் எந்தளவு பின்தங்கிய நிலையில் இந்தியா இருந்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். இருந்தும் பெண்கள் இச்சட்டங்கள் துணையை நாடுவதும் மிகக் குறைவு.

“உற்பத்தி சக்தி உள்ளவர்கள் ஏற்படுத்தும் உறவே சமுதாய நிர்வாகம்” என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருக்கும் பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு அனுசரித்தே செல்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியது போல உற்பத்தி சக்தி உள்ள ஆண் பொருளாதாரத்தை ஈட்டுகிறான். வீட்டில் இருக்கும் பெண்ணின் உற்பத்தி சக்தி என்பது குடும்ப பொறுப்புக்கள் என்னும் பேரால் எந்த பலனும் அவளுக்கின்றி வீணடிக்கப்படுகிறாள். அதில் சோர்வு தட்டிவிடக்கூடாது என்பதற்காக ‘பெண்ணின் சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திற்கு நல்லது என்ற போதனையே அவளுக்கு படிப்பித்திருக்கிறது’ சமூகம்.

துணிந்து கணவன் மீது போலிசில் புகார் செய்யும் பெண்களை மிக மோசமானவர்களாகவே இந்த சமூகம் அடையாளப்படுத்துகிறது.

இப்படி பல சமூக அழுத்தங்களுடன் பெண் என்ன செய்கிறாள்? தன் பிரச்சனையை எப்படி எதிர்நோக்குகிறாள்?

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி.

அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது.

காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5, 6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை கவனித்தீர்களானால் பெண்களின் சுமைகள் இன்னும் அதிகரித்திருக்கிறதே தவீர ஒரளவுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் அச்சுதந்திரத்தை பெண் எப்படி உபயோகப்படுத்துகிறாள் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

புராணக்காலந்தொட்டே பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. இன்று அது நவீனமாக்கப்பட்டிருக்கிறது பெண் இதை உணரவில்லை. அல்லது உணரவும் விரும்புவதில்லை. சமூகம் அங்கீகாரத்திற்காக சமூகத்தோடு அனுசரித்துச் செல்வதே பாதுகாப்பானதாக பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் நமக்கு நலமாக்கிக் கொள்ளும் மாற்றங்கள் பற்றி சிந்திக்க வேண்டியதும், அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.

படித்த பெண்களில் இருந்து சாதாரண பெண்கள் வரை அரசியல் சமூகம் குறித்த விவாதங்களை பேசவிரும்புவதில்லை. அரசியல் சமூக விமர்சனங்கள் என்பது ஆண்களுக்கு உரியதாக நினைக்கிறார்கள். தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போதுகூட தமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே  இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைகளை குறித்து விவாதிப்பதென்றால் தாங்கள் கேவலமாக விமர்சிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

வேறு சில பெண்கள் தங்கள் சுதந்திரம் என்பது எவை என்பதற்கு தங்களுக்கு ஏற்ப எல்லை வகுத்திருக்கிறார்கள். ஜீன்ஸ் போடுவதும் இரவு கேளிகை விடுதிக்கு செல்வதும் ஆணைப்போல் புகைப்பிடிப்பதும் சுதந்திர பாலியல் உறவும் பல ஆண்களை நண்பர்களாக வைத்திருப்பதும் இரவு நெடுநேரம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும் பெண்கள் விடுதலைக்கு போதுமானதாக நினைத்துவிடுகிறார்கள்.

பெரியார் சொல்கிறார்:
“பெண்களால் வீட்டிற்கு, சமூதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.”

-என்று 1946-இல் பெண்கள் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். 64-வருடங்களுக்கு பிறகும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்கும் நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவு இருந்தும் முற்போக்கு சிந்தனைகள் இல்லாமல் தனித்து இயங்கும் தன்மையற்றும் இருக்கிறார்கள்.

பெண்கள் இதுவரையில எந்த வாய்ப்புகளையும் பெண்ணியத்தின் முன்னேற்றத்திற்காக சரியான முறையில் பயன்படுத்தியது கிடையாது.

பதிவுலகில் கூட சிலவிதிவிலக்குகள் தவிர பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், அல்லது ஆண்களை பிரச்சினையில்லாமல் ஆசீர்வதிக்க முயலும் கொஞ்சல்களுமாகவே பதிவுகள் செல்கின்றன. பேஸ் புக் டிவிட்டரில் கூட நான்கு வரி கொஞ்சல்களுக்கு நாற்பது ஐம்பது ஆண்களின் பின்னுட்டங்களும் பெண்களுக்கு திருப்தியைத் தருகிறது.

சமீபத்தில் பேஸ்புக்கில் அண்ணா யுனிவர்சிட்டியில் ஆசிரியராக பணிபுரியும் ஆங்கிலக் கவிதாயினி எழுதியிருந்தார்:

“நான் பச்சை குத்தியிருப்பதைக் கண்டு என் அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அதனால் இன்னும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் காமுறும் இடங்களில்” என்று 3 வரி வார்த்தைகளுக்கு ஐம்பது பின்னுட்டங்கள் எப்படி வந்திருக்கும்?

சமூகக் கிளர்ச்சிகளில் ஈடுபாடில்லாத பெண்கள் வார்த்தைக் கிளர்ச்சிகளில் ஆணோடு கொள்ளும் தொடர்பால் எந்த மாற்றம் வந்துவிடக்கூடும்?

ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி, மதம், ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

இதுதான் இன்றைய தமிழ்சமூகத்தில் பெண்கள் நிலை. பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து மீளவேண்டுமானால் சமூகக் களப்போரில் நுழையாவிட்டாலும் இணையத்திலாவது பெண்களில் சகல இடங்களிலும் ஒடுக்க முற்படும் போக்கை விமர்சிக்கவும் தங்கள் செயல்பாடுகளை ஆராயவும் தொடங்க வேண்டும்.

மகளிர் தினத்தில் மட்டும் பெண்ணுரிமை பேசி வாழ்த்து பரிமாறிக் கொள்வதால் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன் முடித்துக் கொள்கிறேன்.

தமிழச்சி
08.03.2010

 

 

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1997