மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.

 

பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான இந்த நாளை, இக்கட்டுரை மூலம் மீள் பிரகடனம் செய்கின்றேன். இதன் மூலம் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுமாறு அறைகூவல் இடுகின்றேன்.

 

உலகில் பெண்கள் மேலான ஓடுக்குமுறை, தனிச்சொத்துரிமை தோற்றத்துடன் தொடங்கியது. சொத்துரிமை ஆணின் கையில் செல்லவே, பெண் ஆணின் சொத்தானாள். இது ஆணாதிக்கத்தை பெண் மீது திணித்தது. இதுவே பெண் மீதான ஒடுக்குமுறையாகியது. இந்த தனிச் சொத்துரிமை அமைப்பு தன் உற்பத்தித் திறன் சார்ந்து தன்னை மாற்றி அமைத்த உற்பத்தி முறை, சமூக அமைப்புகளையும் அதன் கோட்பாடுகளையும் மாற்றி அமைத்தது. இப்படி உருவாக்கிய கோட்பாடுகளும், தனிச்சொத்துரிமை கண்ணோட்டமும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தியது. இயல்பாக ஆணின் சொத்துரிமை சார்ந்த பெண் மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும், அடக்குமுறையையும் நியாயப்படுத்தியது. ஒடுக்குமுறையும், ஒடுக்குமுறை வடிவங்களும், தனிச் சொத்துரிமை அடையும் வடிவம் சார்ந்து வேறுபட்டதாக காணப்பட்;டது. ஆணால் தனிச்சொத்துரிமை சார்ந்து பெண் மேலான ஒடுக்குமுறையின் உள்ளடக்கம் மாறிவிடவில்லை. இதனால் பெண்ணின் போராட்டமும், சமூகத்தின் போராட்டமும், தனிச்சொத்துரிமை சமூகத்தில் இருந்தே தொடங்குகின்றது.

 

இப்படி தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்க ஒடுக்குமுறை, மூவாயிரம் வருடமாகத் தொடருகின்றது. பெண்ணிண் போராட்டமும் அதே கால அளவைக் கொண்டது. ஆனால் பெண் விடுதலை கிடைக்கவில்லையே, ஏன்?

 

ஆணாதிக்கமும், அதன் ஒடுக்குமுறையும் தொடரக் காரணம் என்ன!? இது தனிப்பட்ட ஆணின் தேர்வா!? ஆண்கள் என்ற சமூகத்தின் தேர்வா!? பெண்களின் குறைபாடா!? கடவுளின் படைப்பா!? இப்படி பல கேள்விகள் சமூகத்தில் எழுந்தது.

 

அதேநேரம் இதற்குள் இந்த ஒடுக்குமுறை இருப்பதாக காட்டியவர்கள், இதற்குள் சிந்தித்தவர்கள் அன்றுமட்டுமல்ல இன்றும் அப்படி கூறுபவர்கள் கொண்டதே இந்த ஆணாதிக்க  சமூகம். இப்படி இதற்குள் பெண் ஒடுக்குமுறையைக் காட்டியவர்களும், காண்பவர்களையும் கொண்ட ஒரு ஆணாதிக்க அமைப்பு முறையே, இன்றும் பெண் ஒடுக்குமுறையாக நீடிக்கின்றது.

 

இதை முதன் முதலில் மார்க்சியம் மறுக்கத் தொடங்கியது. எங்கெல்ஸ் தனிச்சொத்துரிமை தான், பெண் ஒடுக்கப்படக் காரணம் என்பதை நிறுவினார். இதைத் தொடர்ந்து பெண் ஒடுக்குமுறையின் சமூக காரணகாரியங்கள் முதல் ஆணாதிக்கத்தின் பண்புகளையும் அதன் இயல்புகளையும் சமூகத்தின் முன் மார்க்சியம் தெளிவுபடுத்தியது. ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை வடிவில் இருப்பதால், அது இன்னமும் தொடர்கின்றது என்ற உண்மையை மார்க்சியம் போட்டு உடைத்தது.

 

ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட பெண் ஒடுக்குமுறையை, தனிச்சொத்துரிமை ஒழிக்கப்படாத வரை அதுவும் பற்பல சீர்திருத்தங்கள் ஊடாக தொடரும் என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்தியது. ஏன் பெண் சொத்துரிமையைப் பெற்றாலும், அது தனிச்சொத்துரிமையாக இருக்கின்றமையால், ஆணாதிக்கம் ஒழியாது. ஆணாதிக்கமும் அதன் பெண் ஒடுக்குமுறையும், பல சீர்திருத்தங்கள் ஊடாக வேறுபட்ட வடிவங்களில் தொடரும் என்பதை மார்க்சியம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமையின் நலன்களுடன், பின்னிப் பிணைந்ததாகவே காணப்படுகின்றது.

 

இந்த உண்மையின் அடிப்படையில் தான், சர்வதேச கம்ய+னிச இயக்கமும் அதில் இருந்த பெண்களும், மார்ச் 8யை பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு சர்வதேச நாளாக பிரகடனம் செய்தனர். ஆணாதிக்க தனிச்சொத்துரிமைக்கும், அதன் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு நாளாக அதைப் பிரகடனம் செய்தனர்.

 

இப்படி பெண்களை அடிமைப்படுத்திய, தனிச்சொத்துரிமைக்கு எதிரான நாள் இது. இன்று இந்த நாளை ஆளும் வர்க்கங்களும், ஆளும் வர்க்கப் பெண்களும்;, தங்கள் தேவைக்கு ஏற்ப அதைத் திரித்து காட்டுகின்றனர். தனிச்சொத்துரிமை அல்லாத தளத்தில், அதைக் காட்டுகின்றனர். தனிச்சொத்துரிமையிலான ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தின் பெயரில் கடைவிரிக்கின்றனர்.

 

சர்வதேச ரீதியாக மார்க்சியம் திரிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், அது சந்தித்த பின்னடைவும், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தையும், பெண் விடுதலையையும் பின்தள்ளியது. அதேநேரம் தனிச்சொத்துரிமையிலான சமூக அமைப்பில், ஆணாதிக்கத்தை பெண்ணியமாக காட்டும் போக்கே இன்று கோலோச்சி நிற்கின்றது.

 

விளைவு என்ன? இது தனிப்பட்ட ஆணை அல்லது ஆண் சமூகத்தை குற்றவாளியாக்குகின்றது. ஆணின் பாலியல் உறுப்பை, குற்றவாளியாக சமூகம் முன் நிறுத்துகின்றது. மொழியைக் குற்றவாளியாக்கி காட்டுகின்றது. நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை பெண் ஒடுக்கு முறையாக உலகமயமாக்கல் காட்டுகின்றது. உலகமயமாக்கல் நிர்வாணமயமாக்கும் பெண்ணை, பெண் ஒடுக்குமுறையாக நிலப்பிரபுத்துவம் காட்டுகின்றது. பெண்ணியம், பெண் கோட்பாடுகளும் இதற்குள் இருந்து, தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்கமாக புளுத்து வெளிவருகின்றது. தனிச்சொத்துரிமையை எதிர்க்காத உள்ளடக்கமே, இதன் ஆணாதிக்க அடிப்படையாகும்.

 

இதனால் இதன் விளைவு எதிர் மறையாகின்றது. அதாவது ஆணாதிக்கம் மற்றொரு வடிவில் மீள முன்தள்ளப்படுவதில் போய் முடிகின்றது.

 

தனிப்பட்ட ஆண் அல்லது ஆண் சமூகத்தை பெண்ணுக்கு எதிராக காட்டுவதன் மூலம், தனிப்பட்ட பெண் அல்லது பெண் சமூகத்தை முன்னிறுத்துகின்றனர். இது ஆணையும் பெண்ணையும் மோதவைக்கின்றது. ஆண் பெண் ஒரு சமூகமாக சேர்ந்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுவதை இது மறுதலிக்கின்றது. சமூகத்தின்  விடுதலைக்குப் பதில், ஆணாதிக்கம் பெண் வடிவில் மீள அரங்கேறுகின்றது. ஆணை எதிரியாக்கி, ஆண் உறுப்பை எதிரியாக்கி, பெண்ணை முதன்மைப்படுத்திய சிந்தனை முறை மீளவும் ஆணாதிக்கமாகும்;. சமூக விடுதலை என்பது பெண் விடுதலை மட்டுமல்ல, ஆணை ஆணாதிக்கத்தில் இருந்து விடுப்பதும் தான். இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து ஆண் பெண் இருவரும் விடுதலை அடைவது தான், ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலையாகும்.

 

ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்துப் போராடாமல், ஆணை எதிர்த்து நிற்பது ஆணாதிக்கத்தை பாதுகாப்பதுதான். இன்று பெண்ணியம் என்பது ஆணை எதிர்த்து போராடுவதாக இருப்பதால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாக்கும் போராட்டமாக உள்ளது.

 

ஆண் உறுப்பை பெண் உறுப்புக்கு எதிராக காட்டும் பாலியல் சார்ந்த ஆணாதிக்கம், இன்று வக்கிரமடைகின்றது. இது பெண் உறுப்பின் சுதந்திரம் என்ற கோசத்தின் மூலம், ஆண் பெண் என்ற சமூக உறவையும் சமூக அடிப்படையும் அது மறுக்கின்றது. ஆண் உறுப்புக்கு எதிரான, பெண் உறுப்பின் சுதந்திரம் என்பது, வரைமுறையற்ற சந்தைக்குரிய நுகர்வுப் புணர்ச்சிக்கு அது இட்டுச்செல்லுகின்றது. கட்டுப்பெட்டித்தனமான பெண்ணின் உணர்வையும் உணர்ச்சியையும், கட்டுப்பாடற்ற உணர்வாக உணர்ச்சியாக மாற்றுகின்றது. பெண்ணின் பாலியல் உறவை ஆணாதிக்க சந்தைக்கு ஏற்ற நுகர்வு தளத்தில், பெண் உறுப்பை விடுவிக்கின்ற கோசம் தான் பெண் உறுப்பு சார்ந்த சுதந்திரமாகும். இதுவே உலகமயமாதலின் சமூக விளைவாக, சமூக உள்ளடக்கமாக வெளிப்படுகின்றது. இது மறுதளத்தில் இயற்கைக்கு மாறான, ஒரினச்சேர்க்கைக்கு வழிகாட்டிச் செல்கின்றது.

 

இங்கு பெண் உறுப்புச் சுதந்திரம், பாலியல் உள்ளடக்கத்தில் ஆணின் பாலியல் உறுப்பில் இருந்து விடுதலையடைவதில்லை. மாறாக ஒரு ஆண் உறுப்புக்கு பதில் பல ஆண் உறுப்புகளை நுகரும் சுதந்திரத்தை உறுப்புச் சுதந்திரம் கோருகின்றது அவ்வளவுதான். இது ஆணின் உறுப்பு, பெண் உறுப்பை முன்னிறுத்தி இயங்குகின்றது. இது ஆணின் வரைமுறையற்ற புணர்ச்சி உள்ளடக்கத்தில் காணப்படும், வேட்கை சார்ந்த கோசம் கூட. பெண் இதை ஆணாதிக்க உள்ளடக்கத்தில் இருந்து, ஆணிடமிருந்தே பெற்று முன்வைக்கின்றாள். ஆண் பெண்ணை அடிமையாக்கிய தனிச்சொத்துரிமை குடும்ப அமைப்பில் வாழ்ந்த போது கூட, தன் வரைமுறையற்ற பாலியல் நுகர்வுக்குரிய ஏற்பாட்டைக் கொண்டிருந்தான். இதை பெண்ணுக்கு மறுத்தான். இன்று நுகர்வு சந்தை வரைமுறையற்ற பாலியல் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட நிலையில், பெண்ணை அதற்கேற்ப உருவாக்குவது தான், பெண்ணை முதன்மைப்படுத்திய பெண் உறுப்பை முதன்மைப்படுத்திய பெண்விடுதலைக் கோட்பாடு. ஆணைப்போல் தானும் பாலியலை வரைமுறையின்றி நுகரும் உரிமைதான் பெண்விடுதலை என்ற அளவுக்கு, ஆண், ஆண் உறுப்புக்கு எதிரான கோசத்துடன் ஆணை நுகருகின்றது.

 

இதை உருவாக்க நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை, பெண் ஒடுக்கு முறையாக உலகமயமாக்கல் பெண்ணியம் காட்டுகின்றது. நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் உலகமயமாக்கலுக்கும் இடையிலான முரண்பாடு, ஆண்பெண் உறவிலும் கூட வெளிப்படுகின்றது. நிலப்பிரபுத்துவ பெண்ணை விடுவிப்பது பற்றி, உலகமயமாதல் பெண் வைக்கும் கோசம் ஆணாதிக்கத்தை எதிர்த்தல்ல. மாறாக நிலப்பிரத்துவ பெண்ணை நுகர்வுக்குரிய ஒரு பெண்ணாக விடுவிக்கக் கோருவதுதான். சந்தை கோரும் வரைமுறையற்ற நுகர்வை, ஆணாதிக்க நுகர்வாகவும் கூட அது கோருகின்றது. இதை பெண் தன் நுகர்வின் தளத்தில், தான் விரும்பிய அனுபவிப்பாக்கக் கோருகின்றது. இதை பெண் விடுதலை என்கின்றது, பெண் சார்ந்த நுகர்வுச் சந்தை.  இதன் மூலம் ஆணாதிக்க உலகம் சுதந்திரமாக பெண்ணை நுகர, இந்த ஆணாதிக்கத்தையே  பெண்ணியமாக இன்று முன்வைக்கப்படுகின்றது.

 

சில பெண்ணியம் ஆணாதிக்கத்தை மொழியில் ஓழித்து வைப்பதன் மூலம், சமூகத்தில் ஆணாதிகத்தை பாதுகாக்கின்றனர். அதேநேரம் ஆணை பெண்ணுக்கு எதிராக நிறுத்தியும், ஆண் உறுப்பை முன்னிறுத்தியும் இது இயங்குகின்றது.

 

இப்படி பெண்ணியம் ஆணாதிக்க சமூக அடிப்படையை பாதுகாத்துக் கொண்டு, இன்று பல்வேறு கோசங்கள் ஊடாக ஆணாதிக்கம் புதுப்புது  வடிவம் எடுக்கின்றது. ஆணாதிக்கத்தை உருவாக்கிய தனிச்சொத்துரிமையை பாதுகாத்தபடி தான், இன்று பெண்ணியம் பேசப்படுகின்றது. சாராம்சத்தில் இந்த பெண்ணியம் ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து, மறு வடிவம் பெறுகின்றது.

 

இன்று பெண்ணியம், பெண் விடுதலை என்பது ஆணாதிக்கத்தில் இருந்து ஆணை விடுவிப்பதுடன் தொடர்புடையது. ஆணையும், பெண்ணையும் அதாவது ஒட்டுமொத்த சமூகத்தையும் விடுவிப்பதாகும். இது தனிச்சொத்துரிமையிலான ஆணாதிக்க அமைப்புக்கு எதிரான பெண்ணிய போராட்டத்துடன் தொடர்புடையது. இதுவல்லாத எதுவும் பெண்ணியமல்ல. மாறாக  ஆணாதிக்கமே. இதைத்தான் மார்ச் 8 அறை கூவியது.

 

பி.இரயாகரன்
08.03.2010