மீளவும் இவர்கள் திடீர் அரசியலுக்கு வந்தவர்கள், மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இவர்கள் இன்று மார்க்சியம் கலந்து பேசுவது, மூடிமறைத்த தங்கள் சந்தர்ப்பவாத அரசியலை மேலும் மூடிமறைப்பதற்கே. இவர்கள் தேர்தலில் பங்குபற்றவும், வாக்களிக்கவும் கோருகின்றனர். சரி யாரை?

தேர்தல் வழியை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர பிரிவையும், தேர்தல் முறை மீது நம்பிக்கை இழந்த மக்களையும், இதன் மேல் நம்பிக்கை வைத்து வாக்குப் போடக் கோருகின்றனர். தேர்தல் முறையில் நம்பிக்கை கொள்ளக் கோருகின்றனர். ஜனநாயகத்தை "மறுசீரமைப்பு" செய்யவும் "வல்லவரையும் நல்லவரையும் நேர்மையானவரையும்" தெரிவு செய்யக் கூடியதே, இந்தத் தேர்தல் முறை என்கின்றனர்.

 

இப்படி ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் உள்ள பாராளுமன்ற சாக்கடைகளுக்கும்,  அதைத் தேர்ந்;தெடுக்கும் கழிவு வழி பாதாள வழிக்கும், மார்க்சியம் மூலம் ஜனநாயக முலாம் அடிக்கின்றனர். இப்படித் தேர்தல் வழி மீது நம்பிக்கை ஊட்டும் இனியொரு நாவலனும், மே 18 ரகுமான் ஜானும், அரசியல் பித்தலாட்டத்தைச் செய்கின்றனர். தம் பின் நிற்பவர்களையும்,  கேட்பவர்களையும் மந்தைகளாக மாற்ற முனைகின்றனர். இதற்கு கார்ல்மார்க்ஸ், லெனின் முதல் சண்முகதாசன் வரை உதவுவார்களா என்று மண்டை சொறிந்து, அதை வைத்து  உளறுகின்றனர்.

 

தேர்தல் பலரின் "புரட்சிகர" "முற்போக்கு" முகத்தை மட்டுமின்றி, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் அணுகுமுறைகளையும் கூட அம்பலமாக்குகின்றது. நாவலன், ரகுமான் ஜான், புதிய ஜனநாயகக் கட்சி, கவிஞர் தீபச்செல்வன் (இவர் கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளர் பட்டியலில் தெரிவானவராம்!?) என்று பலர். தேர்தல் மழையில் அரசியல் சாயம் கரைந்து விட,   வெளுத்து வருகின்றனர்.

 

இதில் தீபச்செல்வன் பற்றிய செய்திகள் வெளி வருகின்றது. கூட்டமைப்பு பட்டியலில் அவர் பெயர் இன்மை பற்றியதே அந்தச் செய்திகள்;. இதுபற்றிய அவரின் மறுப்பைபோ அல்லது அபிப்பிராயத்தையோ எதையும் தெரிந்து கொள்ள எம்மால் முடியவில்லை.

 

இதற்கு வெளியில் நாவலன், ரகுமான் ஜான், புதிய ஜனநாயகக் கட்சி மார்க்சியம் பேசிக் கொண்டும், புரட்சியைப் பற்றி பேசிக்கொண்டும், சந்தர்ப்பவாத காரியவாத அரசியலை முன்நகர்த்துகின்றனர். இதற்கான காரண காரியங்களை முன்தள்ளுகின்றனர். இந்த சந்தர்ப்பவாத அரசியலோ, மக்களை படுகுழியில் தள்ளுவதுதான். தேர்தலில் நிற்பது ஆதரிப்பது பற்றி தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, இவர்கள் தமக்குள் வேறுபட்ட சூழலைக் காட்டுகின்றனர். இது உள்ளடக்க ரீதியாகவே மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும்.

 

இதை எப்படி நியாயப்படுத்துகின்றனர் என்று பார்ப்போம். நாவலன் கூறுகின்றார் "… முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக, அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக, பாராளுமன்ற ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத அரசியற் சக்திகளை தேர்தலில் ஊக்கப்படுத்துவதும் ஆதரவளிப்பதும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய கடமை." என்கின்றார்.

 

கோமாளித்தனமான விளக்கம். தேர்தல் வழி மீது நம்பிக்கை ஊட்டும், சந்தர்ப்பவாத தர்க்கம்;. "ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக" கொள்ளாத, அந்த இறுதி தீர்வு வழிமுறைதான் என்ன? அதை யார்? எங்கே? எப்படி? முன்வைத்து வேலை செய்கின்றனர். அப்படி வேலை செய்பவன், தேர்தல் ஜனநாயகத்தை ஜனநாயகமாக ஏற்றுக்கொள்வது கிடையாது.

 

சரி ஏற்றுக்கொண்ட, அந்த இறுதித் தீர்வு என்ன? யார் அதை வைத்து அமைப்பைக் கட்டுகின்றனர்!? சமூகத்தைக் குருடாக்கி, தங்கள் சுத்துமாத்தை பித்தலாட்டங்கள் மூலம்  முன்வைக்கின்;றனர். 

 

தேர்தலுக்கு வெளியில் எந்த மாற்றும் அற்றவர்கள் தான், தேர்தலை நாடுகின்றனர். உதாரணமாக மே 18 ரகுமான் ஜான் தேர்தலில் நிற்றல் சரியானது என்பதை நியாயப்படுத்தும் போது, இதைத் தெளிவுபடுத்துகின்றார். இந்த நிலையில் நாவலன்  "ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக" "ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக" தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றார் நாவலன். ஜனநாயகத்தை பற்றிய அடிப்படையான மார்க்சிய உள்ளடகத்தை இது மறுதலிக்கின்றது.

 

தங்கள் புரட்சி இலட்சியத்துக்கு வெளியில், ஜனநாயகத்தை தனியாக தனித்துவமாக அடைவது பற்றியும், மறு சீரமைப்பது பற்றியும், மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவது பற்றியும்,  பிதற்றப்படுகின்றது. பாசிசத்தை ஆளும் வர்க்கம் தெரிவு செய்வது என்பது, சுரண்டப்படும் வர்க்கம் தொடர்ந்து சுரண்டுவதற்காக தெரிவு செய்யும் வடிவங்களில் ஒன்று. இதனால் மக்கள் மேலான ஓடுக்குமுறை வடிவத்தை அது மாற்றி அமைக்கின்றது. இது சுரண்டும் ஜனநாயகத்தின் பண்புகளை மாற்றிவிடுகின்றது. இந்தப் பண்பு வடிவத்தை காட்டி, இதற்குள் தங்கள் அரசியல் சந்தர்ப்பவாதத்தை நுழைத்து விடுகின்றனர். அதைச் சீரமைப்பது பற்றி பேசுவது, பரந்துபட்ட மக்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயகத்தை இல்லாததாக்குவதாகும்.

 

பரந்துபட்ட மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருப்பதை, இது நாசுக்காக மறுத்து திரிக்கின்றது. பரந்தபட்ட மக்களின் ஜனநாயகத்தை கோருவதற்கு பதில், மறுசீரமைப்பு ஜனநாயகத்தை முன்வைத்தல் என்பது சந்தர்ப்பவாத அரசியலாகும். தேர்தல் பற்றிய தங்கள் நிலைப்பாட்டின் ஊடாக இதை முன்வைப்பது, மக்களை பாராளுமன்ற சாக்கடையில் குளிக்கக் கோருவதுதான்.

 

தேர்தல் பற்றி நம்பிக்கை ஊட்டி, இதன் மூலம் ஜனநாயகத்தை மறுசீரமைக்கவும், யாரையோ ஆதரிக்கவும் கோருகின்றார் "பாராளுமன்ற ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத அரசியற் சக்திகளை தேர்தலில் ஊக்கப்படுத்துவதும் ஆதரவளிப்பதும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய கடமை." என்கின்றார். ஆக இப்படி பாராளுமன்றம் மூலம் "மறுசீரமைப்பு" பற்றிய ஒரு அரசியல் பிரமிப்பையும், ஜனநாயகத்தின் இடைக்கால தீர்வாக பாராளுமன்ற வழியை முன்வைக்கின்றனர்.

 

மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயக புரட்சியே நடக்கவில்லை. அப்படியிருக்க பாராளுமன்றத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க முடியும்? ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைக் கூட அனுமதிக்காத நிலையில், பாராளுமன்ற தேர்தல் மூலம் மறுசீரமைப்பு ஜனநாயகத்தை அடைய முடியும் என்று காட்டுவது, சந்தர்ப்பவாதத்துடன் கூடிய திரிபுவாதமாகும். நிலவும் பாசிச உள்ளடக்கத்தை மறுப்பதாகும்.

 

ஜனநாயகப் புரட்சி நடக்காத நாடுகளில், ஜனநாயகப் பிரச்சனையை தீர்க்க மார்க்சியம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைக்கின்றது. இதை மறுதலித்து இறுதித் தீர்வல்லாத சாக்கடையான பாராளுமன்றத்தை அடைய கால்வாய் வெட்டுவதே சரி என்கின்றனர். சாக்கடைக்கு கால்வாய் வெட்டுவதை ஜனநாயகமாக காட்டுவது, மக்கள் புரட்சிகரமாக கற்றுக்கொள்வதையும் இதற்கு எதிராக போராடுவதையும் மறுத்தெழும் திரிபுவாதமாகும்.

 

இதையே மே 18 ரகுமான் ஜான் தன்பாணியில் மிக எடுப்பாக வெளிப்படுத்துகின்றார்.  அதைப் பார்ப்போம்.

 

தொடரும்

பி.இரயாகரன்
27.02.2010