Language Selection

இனியொரு இணையத்தின் அரசியல் யோக்கியதை என்பது, தங்கள் கடந்தகாலத்தை முற்றாக மூடிமறைத்தல்தான். திடீர் திடீரென மக்கள் நலனை உயர்த்திக் காட்டி நடிப்பதே, இவர்கள் அரசியல் கலை. கடந்து போன தாங்கள் நடத்திய போராட்டத்தின் தோல்விகள் முதல் அங்கே நடந்த மனிதப் படுகொலை வரை பேசாத ஒரு புள்ளியில், முற்போக்கை உருவாக்குவது பற்றி வம்பளக்கின்றனர்.

 

கடந்தவற்றை பேசுவது ஒற்றுமைக்கும், ஒன்றிணைந்த போராட்டத்துக்கும் பாதகமானது என்ற கருத்தை முன்வைத்தே தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.  இதன் மூலம் மீண்டும், ஒரு தவறான அரசியலை முன்தள்ளுகின்றனர். 1983 களில் தேசியத்தை முன்னிறுத்தியவர்கள்,   தம்மை விமர்சிப்பது தவறு, அது ஒற்றுமைக்குப் பாதகமானது என்று சொல்லியே மக்கள் விரோத இயக்கங்களாகவே இயங்கி அழிந்தன. இவர்கள் உள்ளியக்க விமர்சனத்தைக் கூட அனுமதிக்கவில்லை. இன்று அதே கோட்பாடு மூலம், தங்கள் கடந்தகால மக்கள் விரோத நிலையை மூடிமறைத்துக் கொள்ளவே அனைவரும் முனைகின்றனர். இதன் மூலம் மீண்டும் தம்மை புனிதத்தின் ஒரு பிம்பமாக, காட்ட முனைகின்றனர். 

    

இப்படிப்பட்ட ஒருவர் தான் அசோக். இவரின் கடந்த கால அரசியல் என்ன? அவர் இதை பற்றி ஏதாவது எங்கேயாவது பேசியுள்ளாரா? சரி எதனால் பேசாமல் இருக்கின்றார்? இவருக்கு தெரிந்த, இவரின் தலைமையின் கீழ் நடந்த மனிதப்படுகொலைகள் பற்றி எப்போதாவது எங்கேயாவது சொல்லியுள்ளாரா? இதை ஏன் எதற்காக பேச மறுக்கின்றார்? இதன் மூலம் யாரைக் காப்பாற்ற முனைகின்றார்? இதன் மூலம் இவர் செய்யும் அரசியல் அடிப்படை தான் என்ன? இதைப்பற்றி எதுவும் பேசாது, எப்படி எதன் மீது முற்போக்காளராக இருக்கின்றார்?

 

இந்த அசோக் புளாட்டின் மத்திய குழு உறுப்பினர். தளத்தில் புளட்டுக்கு பொறுப்பாக இருந்தவர். ஏன் அங்கு நடந்தவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் தானே. அங்கு இவருக்கு தெரிந்தும், தெரியாதும் நடந்த அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவர். உதாரணமாக அகிலன் செல்வன் கொலையை எடுத்தால், எப்படி யாரால் ஏன் கொல்லப்பட்டனர் என்று வெளிப்படையாக அதைக் கூற வேண்டியவர். இப்படி சில நூறு கொலைகள் பற்றி, பேச வேண்டியவர். அப்படிப்பட்ட இவர் இன்று வரை இவைகளைப்பற்றி பற்றி எதையும் முன்வைத்;தது கிடையாது. ஆனால் முற்போக்கு வேடம் போட்டுக் கொண்டு உலாவுகின்றனர்.

 

புளாட் இயக்க உட்படுகொலைகள் முதல் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை சமூக விரோதிகளாக்கி தூண்களில் கட்டிப் படுகொலை செய்த இயக்கத்திற்கு, பொறுப்பாக (தளத்தில்) நின்று அதை வழிநடத்தியவர் தான் இந்த அசோக். இதைப்பற்றி பேசாது நடத்தும் திருகுதாள அரசியல் கூத்து மூலம், கொலைகாரர்கள் முதல்  மக்கள் விரோதிகள் அனைவருடனும் தொடர்ந்து அவரால் அரசியல் செய்ய முடிகின்றது. 

 

இவர் ஈ.என்.டி.எல்.எவ் க்கு செல்லும் வரை புளட் மண்ணில் நடத்திய அனைத்தும், இவரின் வழிகாட்டலில் அல்லது இவருக்கு தெரிய நடந்தவைதான். இதை மூடிமறைத்த நிலையில் இவர்கள் நடத்தும் அரசியலும், மே 18 ஜான் போன்றவர்களும் சேர்ந்து குழையடிக்கும் அரசியலும், அடிப்படையில் நேர்மையற்றது. கொல்லப்பட்டவன் சார்பாக நின்று போராட மறுக்கும் இவர்கள், எதை மூடிமறைத்தபடி அரசியல் செய்ய முனைகின்றனர். அரசியல் நேர்மையீனத்தின் முழுமையான வடிவில் நின்றபடி, மீளவும் அதே சாக்கடை அரசியலை முன்வைக்கின்றனர். 

   

கடந்தகாலத்தில் தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் வரை பேசாமல் இருத்தலும், மூடிமறைத்தலும் தான் அசோக் செய்யும் பம்மாத்து அரசியல். இதன் மூலம் முன்னாள் கொலைகார புளட் உடனான உறவு முதல் டக்ளஸ் மற்றும் இந்திய உளவு அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் வரை அரசியல் உறவுகள் கொள்ள முடிகின்றது. இதை நியாயப்படுத்த காரணங்களை மற்றவனுக்கு கூறிக்கொண்டு, அவர்களுடன் உறவாடுகின்றனர். இவர் அவர்களைப் பற்றி எதையும் பேசாத வரை, இவரின் அரசியல் அவர்களை உள்ளடக்கியதாக இருப்பது வெளிப்படையானது.

    

இதன் பின்னணியில் தான் அவதூறு பின்னோட்டங்கள், அவதூறுகளைப் பரப்புதல், தொலைபேசி ஊடாக அவதூறு அரசியல் நடத்துவதும், இதை முற்போக்காக காட்டி  காலத்தை ஓட்டியவர் தான் இவர். இதற்கு வெளியில் எதை முற்போக்காக, எந்த அரசியலை தான் முன் வைத்தவர். புளாட் மத்திய குழு உறுப்பினராக இருந்த காலத்தில் நடந்தவற்றைச் சொல்லவோ, அது பற்றி விமர்சனத்தை செய்யவோ, சுயவிமர்சனத்தை முன்வைக்கவோ இன்று வரை தயாராக இருந்தது கிடையாது.

 

இப்படியிருக்க, இவர் பின் ஒட்டிக்கொள்ளும் முற்போக்கு எது? கடந்தகாலத்தைப் பற்றி இவரின் விமர்சனமும் சுயவிமர்சனமுமா? இவை எதையும் அவர் செய்யவில்லை. இப்படிச் செய்யாதவர், முன் வைக்கும் அந்த முற்போக்கு அரசியல் தான் என்ன? அதையும் அவர் வைத்தது கிடையாது. தன் பின் முற்போக்காக ஓட்டி வைத்துக் கொண்டது, புலி எதிர்ப்பு அரசியல்தான்.

 

புலியெதிர்ப்பு அரசியலை முற்போக்காக காட்டி 15 வருடமாக அதற்குள் சுற்றிச் சுழன்றவர், புலியெதிர்ப்பு வெளிப்படையாக அரசு சார்பு நிலையெடுத்தவுடன் தன்னை அதற்கு எதிராக  முற்போக்காக காட்டுகின்றார். 

    

இதில் என்ன வேடிக்கை என்றால், புலியெதிர்ப்பு அடிப்படையில் அவர்களுடன் நின்றதையிட்டோ, அதை விமர்சித்தோ சுயவிமர்சனத்தை செய்தது கிடையாது. ஆனால் அந்த முன்னாள் நபர்களுடன் உறவு இன்னமும் தொடருகின்றது. மறுபக்கத்தில் இன்று என்ன அரசியலை அவர் வைக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாத புதிர்.

 

அனைத்து பிற்போக்குகளுடன் அரசியல் நல்லுறவு கொண்டபடி, முற்போக்கு அடையாளத்தை பேணுவதுதான் அவரின் அரசியல்;. புளட்டில் இருந்த போது, அதற்குள் எழுந்த போராட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்தியவர் அல்ல. புளாட் ரெசோ மாணவர் அமைப்பு, தீப்பொறி, தேசபக்தன், தளக்கமிட்டி முதல் எண்ணற்ற குழுக்கள் முதல் தனிநபர்கள் வரை, புளட்டிற்கு எதிராக போராடினர். இவர்கள் புளட்டில் இருந்தவர்கள். இவர்களுடன் இவர் தன்னை அடையாளப்படுத்தியது கிடையாது.

 

இங்கு இதுதான் முற்போக்காக இருந்தது. ஆனால் இவர் இந்திய உளவு அமைப்பு உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பில் தான் தன்னை இணைத்தார். இதுதான் முற்போக்கா? அங்கு சென்றவர் உமாமகேஸ்வரனைச் சுட்டுக்கொல்ல ராஜனுடன் சென்றவர், இப்படிச் சுடச் சென்ற அசோக், தான் சூடு வாங்கினார். இப்படிப்பட்ட இவரின் அரசியல் தான் புளட்டின் உட்;படுகொலைகளை நடத்த உதவியது. சமூக விரோதிகள் என்று, பல நூற்றுக்கணக்கானவர்களை கொன்று போட்டது. இந்த அரசியலையே தான் இன்று வரை கொண்டுள்ளதால், அதைப்பற்றிப் பேச மறுக்கின்றனர். ஈ.என்.டி.எல்.எவ் வெளிப்படையாக இந்திய அமைதிப்படையின் கூலிப்படையாக இலங்கை சென்ற போது, அதில் இருந்து ஒதுங்கியதன் மூலம் தன்னை முற்போக்காக்கிக் கொண்டார்.  

     

இதன் பின் புலம்பெயர்ந்தவர், மாற்று அரசியல் என எதையும் முன் வைக்கவில்லை. மாறாக இலக்கிய சீரழிவுக்கும், புலியெதிர்ப்பின் பின் நின்றும் கொண்டு, அனைத்து வலதுசாரிய புலியெதிர்ப்பு அரசியலுக்கு முண்டு கொடுத்தார். புலிக்கு மாற்று அரசியலை மறுத்து, அதை   புலியல்லாத தளத்தில் எதுவுமற்றதாக்கினார். இங்கும் முற்போக்கு என்று இவரின் பின்னணியில் எதுவுமிருக்கவில்லை.    

 

கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, அனைத்து பிற்போக்கு சக்திகளையும் விமர்சனம் செய்து, ஒரு மக்கள் அரசியலை முன்வைத்தது கிடையாது. தன்னுடன் முரண்படுவர்களை, தனக்கு அடங்க மறுப்பவர்களை விமர்சிப்பதும், அவதூறுகளை செய்து அதைப் பரப்புவதும் தான் இவரின் அரசியல்.

 

இதை நாம் எதிர்ப்பதாலும், எம் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், தனிப்பட்ட  என் மீது தனிநபர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். சரி, அதை நாம் அடுத்த தொடரில் இவைகள் உண்மையா என்று பார்ப்போம்.

 

தொடரும்

 

பி. இரயாகரன்
22.02.2010