Sat01252020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

  • PDF

அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

 

ோராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis  என்ற வைரஸின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

-ஆழியூரான்

http://www.vinavu.com/2010/02/23/gm/

Last Updated on Tuesday, 23 February 2010 10:51