Language Selection

ஐயர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த இரு வருட எல்லைக்குள் பல உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பண்ணைகளின் தேவை அதிகமாகிறது. எமது இயக்க உறுப்பினராவதற்கான நுழைவாயில் பண்ணைகள் தான். அங்குதான் அவர்களின் உறுதித்தன்மை பரிசீலிக்கப்படும். தேடப்படுபவர்களோ, முக்கிய உறுப்பினர்களோ பொதுவான பண்ணைகளில் நிரந்தரமாகத் தங்குவதில்லை.

 

பண்ணை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் பலர். காடு சார்ந்த பிரதேசங்களிலும், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளிலும், எந்த வகையான மத்தியதர வாழ்க்கைக்கும், பண்பிற்கும் உட்படாத தனிமைப்பட்ட வசதியற்ற பண்ணைகளில் போராட வேண்டும் என்ற உறுதியோடு இறுதிவரை தாக்குப்பிடிக்கும் உறுப்பினர்களே இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் இணைத்துக்கொள்ளப்படுவர்.

 

80 களில் புலிகள் இயக்கத்தின் அறியப்பட்ட போராளிகளாகத் திகழ்ந்த பலர் 1977 களின் இறுதியிலிருந்து எம்மோடு பண்ணைகளிலிருந்தவர்கள் தான். பண்ணைகளை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது. அவற்றை ஒழுங்குபடுத்துவதும், பண வசதிகள் குறித்து செயற்படுவதும், உறுப்பினர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதும், எனக்குப் பாரிய சுமையாகவிருந்தது. நான் ஓரிடத்தில் ஒரு நாளிற்கு மேல் தங்குவதே முடியாத ஒன்றாக அமைந்திருந்தது. பண்ணைகளிடையே பயணம் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் பிரதான பணியாக அமைந்தது. பிரபாகரன் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு புதிய பண்ணை உறுப்பினர்கள் பலரை தெரியாதிருந்தது. என்னிடமே அனைத்துத் தொடர்புகளும் முடங்கிப் போயிருந்தன.

 

முதலில் வவுனியா பூந்தோட்டம் பண்ணையும் தவிர புளியங்குளத்திற்கு அருகாமைலயமந்திருந்த பன்றிக்கெய்த்த குளம் பண்ணையுமே எம்மிடமிருந்தன. பின்னதாக , புதுக்குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள வள்ளிபுரம் என்ற இடத்தில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம். இது தான் எமது மூன்றாவது பண்ணை.

 

இப்பண்ணையுடன் ஒரு வீடும் அமைந்திருந்ததால் பல நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமையும் என உறுதிசெய்கிறோம். இங்கு நிலக்கடலை பயிர்ச்செய்கைக்கான நிலம் இருந்ததால் பண்ணையின் பராமரிப்புச் செலவுகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்பு இருந்தது. தவிர, ஆயுதங்களை மறைத்து வைக்கவும் இந்த இடத்தைத் தெரிவுசெய்வதாகத் தீர்மானிக்கிறோம். இந்த நோக்கங்கள் அனைத்துக்குமாக இந்தப்பண்ணையை 25 ஆயிரம் ரூபா பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்கிறோம். பன்றிக்கெய்தகுளம் பண்ணையைப் போலவே இந்தப் பண்ணையும் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருந்தது.

 

இப்ப்பண்ணை இயங்க ஆரம்பித்த உடனேயே மாங்குளம் பகுதியிலிருந்த கல்மடு என்ற இடத்தில் பண்ணையை உருவாக்குகிறோம் . இந்தப்பண்ணையை நாம் விலைகொடுத்து வாங்கவில்லை. இது காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. முன்னதாக விவசாயம் செய்யும் நோக்குடன் இந்தப்பண்ணை காட்டுப்பகுதியில் தனியார் சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பராமரிக்கும் வசதியீனம் காரணமாக அதனை எம்மிடம் ஒப்படைக்கிறார்கள்.

 

அவ்வேளை, மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களுக்கான அங்கீகாரம் உருவாகியிருந்த காலகட்டம். இதனால் நாம் விடுதலை இயக்கம் எனத் தெரிந்துகொண்டே எம்மிடம் இந்தப் பண்ணை தரப்படுகிறது.

 

சிறீமாவோ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் விவசாயப் பொருளாதாரம் முன்னிலைக்கு வந்திருந்தது . தென்னிலங்கை இடதுசாரி அமைப்புக்களுடன் சிறிமாவோ ஏற்படுத்திய கூட்டு, தேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தது.

 

அந்த வேளையில் முத்தையன்கட்டுப் பகுதியில் பல படித்த இளைஞர்களுக்குக் தோட்டக்காணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காணியை ஒருவர் எமக்கு வழங்குகிறார்.ஒட்டிச்சுட்டானில் அமைந்திருந்த இந்தத் தோட்டக்காணி விவசாயம் செய்வதற்கு ஏற்ற பகுதியாக அமைந்திருந்தது.

 

இதன் பின்னதாக மடு வீதியிலுள்ள முருங்கன் பகுதியில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம் . இதுவும் ஒரு தெரிந்தவர் மூலம் இந்தப் பண்ணையைப் பெற்றுக்கொள்கிறோம். இது காட்டுப்பகுதியில் மிகவும் பாதுகாப்பானதாக அமைந்திருந்தது. இங்கு தங்குமிடம் எதுவும் இருக்கவில்லை. ஒரு தண்ணீர்க் கிணறு மட்டுமே அமைந்திருந்தது. நாங்கள் தங்குவதற்கான கொட்டில்களை அமைத்துக்கொள்கிறோம்.

 

பின்னர் பன்னாலை என்ற இடத்தில் ஒரு கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்குகிறோம். இது யாழ்ப்பாணப்பகுதியில் உருவான முதல் பண்ணை எனலாம்.

 

இப்போது எமது பண்ணைகளைக் கிழக்கு மாகாணம் வரை விரிவு படுத்துகிறோம். மட்டக்களப்பில் மியான் கற்குளம் மற்றும் புலிபாய்ந்த கல் என்ற இரண்டு இடங்களில் எமது பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 

திருகோணமலையில் பண்ணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் பின்னர் இறுதிக்காலத்தில் திருகோணமலை நகர்ப் பகுதியில் படிப்பகம் போன்ற ஒன்றை ஏற்படுத்துகிறோம். சிறு குடிசை ஒன்றை அமைத்து அங்கு நான்கு அல்லது ஐந்து பேர் வந்து பேசிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மூதூர் பகுதிகளில் பண்ணையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இறுதிவரை பண்ணை அமைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை. ஒப்பீட்டளவில் மாங்குளம் பண்ணையும் மடுப்பண்ணையும் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருந்தன. ஏனைய பண்ணைகளில் மன உறுதி மிக்கவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை இந்த இருபண்ணைகளிலும் சிறிய இராணுவப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்து அழைத்து வருவோம். அங்கு சிறிய ரகத் துப்பாகிகளால் சுடப்பழக்குவோம்.

 

உடற்பயிற்சியிலிருந்து குறிபார்த்துச் சுடுதல் வரை பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.காட்டுப்பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதிகளில் அமைந்திருந்த இப்பண்ணைகள் இந்த நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமைந்திருந்தது.

 

தவிர தேவிபுரத்தில் தென்னம் தோட்டம் ஒன்று ஒரு வயதான பெண்ணிற்குச் சொந்தமாக இருந்தது. அவரது மகன் கூட இயக்கத்தில் இணைந்திருந்தார். ரத்தினம் என்ற அவரது மகன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்தார். இந்தத் தென்னந்தோப்பும் எமது இயக்கத்திற்கு வழங்கப்பட நாம் அதனையும் ஒரு பண்ணையாகப் பாவிக்கிறோம். இந்தப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும்,  நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடமே இருந்தது.

 

இந்தப்பண்ணைகளில் ஏறக்குறைய ஐம்பது பேர்வரை இணைந்திருந்தனர். பொதுவாக அனைவருமே மத்தியதரவர்க்க இளைஞர்களாக இருந்தனர். இவர்களிடம் கணக்கு எழுதி வாங்குவது மட்டும் சிரமமான வேலைப்பகுதியாக எனக்கு இருந்தத்து. மத்திய குழுக் கூட்டங்களில் நான் கணக்குகளைச் சமர்ப்பித்தாலும் யாரும் அவற்றைப் பெரிதாகப் பரிசீலிப்பதில்லை. அந்தளவிற்கு எம்மத்தியில் பரஸ்பர நம்பிக்கை இருந்தது.

 

பண்ணைகளில் இருந்தவர்களைத் தவிர இதே காலத்தில் வெளியே இருந்து இயக்கத்திற்கு முழு நேரமாக வேலை செய்பவர்கள் சிலரையும் இணைத்துக் கொள்கிறோம். இவர்களுக்கும் இயக்கச் செயற்பாடுகளுக்காக வெளியே அனுப்பப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா வீதம் வழங்கப்பட்டது.

 

இது தவிர பண்ணைகளின் உறுப்பினர்கள் தொகை, வசதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பண்ணைகளுக்கான பணம் வழங்கப்படும்.

 

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று சிகரட் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த வேளைகளில் வழமையான சண்டைகளெல்லாம் வந்து ஓயும் தருணங்களும் உண்டு. ஒருவரது சிகரட்டை மற்றவர் திருடுவதும், அதற்காக மற்றவர்கள் முறையிடுவதும் போன்ற குடும்பமாக, பரஸ்பர நம்பிக்கைகளுடனும் உறுதியுடனும் எமது உறுப்பினர்கள் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.

 

ஒவ்வோரு பண்ணைகளிலும் முதலில் இணைந்து கொண்ட உறுப்பினர்களே பொறுப்பாக இருந்தனர். பண்ணைகளில் வேலைப்பழு அதிகமாக எனக்கு உதவியாக குமணனும் மாதியும் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். நான் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் பண்ணைகளிற்கு ஒரு தடவை தான் சென்று வந்துள்ளேன். குமணன்,மாதி ஆகியோரே இவற்றின் தொடர்பாளர்களாக இருந்தனர்.

 

பிற்காலத்தில் மனோ மாஸ்டரும் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களுடனான தொடர்புகளுக்கு எனக்கு உதவியாகச் செயற்பட்டார். குமணன்,மாதி,மனோ மாஸ்டர் ஆகியோரின் உறுதி மிக்க உற்சாகமான செயற்பாடுகள் மறக்கமுடியாதவை.

 

பண்ணைகளில் எமக்குக் குறித்தளவு வருமானமும் இருந்தது. ஒட்டிச்சுட்டனில் வெங்காயம் மிளகாய் போன்ற பயிர்ச்செய்கைகளும்,பன்றிகெய்த குளத்தில் நெற்செய்கையும் மேற்கொண்டோம். இவற்றை ஒழுங்படுத்துவதும், வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக்கொள்வதும் என இயக்க வாழ்க்கை சுமையானதாகவும், வேகமானதாகவும் ஒரு சில வருடங்களுள்ளேயே மாறிவிட்டது.

 

பிரபாகரன் , உமா மகேஸ்வரன், நாகராஜா போன்ற தேடப்படும் உறுப்பினர்கள் பண்ணைகளுக்கு சென்றுவருவதில்லை என்பதால் அவர்களுக்கு பண்ணை உறுப்பினர்களுடன் அதிக தொடர்புகள் இருந்ததில்லை. ஒரு குறித்த காலத்தின் பின்னர் மத்திய குழு உறுப்பினர்களும், தேடப்படுகிறவர்களும் மடுப் பண்ணையில் தங்கியிருந்தோம். நான் ஒவ்வொரு பண்ணைகளுக்கும் சென்றுவருவதால் நிரந்ததரமான தங்குமிடம் ஒன்று இருந்தில்லை.

 

உமா மகேஸ்வரன் , செல்லக்கிளி, ராகவன், நாகராஜா, கறுப்பி என்ற நிர்மலன், சற்குணா போன்றோர் மடுப் பண்ணையிலேயே தங்கியிருப்பர். வெளியே சென்று பண்ணைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு சித்தப்பா (ஞானம); ஆகியோர் செயற்பட்டனர். தவிர இங்கு இராணுவப் பயிற்சிகளும் மேற்கோண்டோம்.

இந்தப் பண்னையில் நம்பிக்கைகுரிய மூத்த உறுப்பினர்களும்,

 

தேடப்படுவோரும் தங்கியிருந்தனர். முக்கியமானவர்கள் மாங்குளம் பண்ணைக்கும் மடுப் பண்ணைக்கும் இடையே மாறி செல்வது வழமை. சாந்தன் கிட்டு போன்றோரும் மாங்குளத்தில் தான் தங்கியிருந்தனர். மாங்குளம் பண்ணை இரண்டாம் கட்டத் தெரிவுக்கான மையம் போல் செயற்பட்டது. உதாரணமாக,கிட்டு இயக்கத்தில் இணைந்து மூன்று மாதங்கள் அளவில் தேவிபுரம் தென்னந்தோப்புப் பண்ணையில் தங்கியிருந்த பின்னர் மாங்குளத்திற்கு இடம் மாற்றப்படுகிறார். அவர் இயக்கத்திற்கு ஏற்ற உறுதியான மனோவலிமை உடையவர் என அடயாளம் காணப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சிகளுக்காக இங்கு இடம் மாற்றப்படுகிறார்.

 

சேகுவேரா மக்களோடு தோட்டமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டாராம் என்று நீண்ட காலத்தின் பின் தான் அறிந்து கொள்கிறோம். போராட்டம் வெற்றியடைந்த தேசங்களிலெல்லாம் வெகுஜன அமைப்புக்களும் கூட்டுப்பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. போராளிகள் மக்களோடு இரண்டறக் கலந்திருந்தனர். மக்களிலிருந்து தனிமைப்பட்ட பண்ணைகளைத் தான் நாங்கள் உருவாக்கினோம். எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்ற ஞானோதயம் உருவான போது எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு.

 

இந்தக் காலப்பகுதியிலேயே உழவு இயந்திரம் ஒன்றையும் , விசைப் படகு ஒன்றையும், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

 

படகிற்குப் பொறுப்பாக குமரப்பாவும் , மாத்தையாவும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீன் பிடித் தொழில் செய்துகொண்டே படகையும் பராமரித்துக் கொள்கிறார்கள். படகைப் பராமரிப்பதற்காகவும் மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளவும் இவர்கள் இருவரும் பண்ணையிலிருந்து வெளியிடத்தில் தங்கியிருந்தனர்.

 

உழவு இயந்திரம் தேவிபுரத்திலேயே விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லக்கிளி ஒரு உற்சாகமான போராளி, அவருக்கு உழவுதொழில் கைவந்த கலையாக இருந்தது. அவர் தான் தேவிபுரத்தில் விவசாயம் செய்வதில் தீவிரமாக இருந்தவர்.

 

மோட்டர் சைக்கிள் யாழ்ப்பாணத்திலேயே பாவிக்கப்பட்டது. எமது மத்திய குழு உறுப்பினராக இருந்த தங்காவிடம் தான் அது இருந்தது. அவர் இந்தக் காலப்பகுதியிலேயே இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் போது அதனை எம்மிடமே ஒப்படைக்கிறார்.

 

தங்காவைத் தொடர்ந்து, லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்துகொண்ட விச்சுவும் இயக்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள். தங்கா ஒதுங்கிக்கொண்டதற்கான குறிப்பான எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை. ஆரம்பத்தில் இயக்கத்துடன் தனது வேலைகளைக் குறைத்துக்கொண்டவர், பின்னதாக முற்றாகவே செயற்பாடின்றி விலகிவிட்டார்.

 

விச்சுவிற்கு , உமாமகேஸ்வரனுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்ற காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருந்தது. இதே வேளை இங்கிலாந்தில் இருந்து சார்ள்ஸ் போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளோடு ஏற்பட்ட தொடர்புகளும் அவரை விலகுவதற்குத் தூண்டியிருக்கலாம் என நம்பப்பட்டது. விச்சுவை கொலைசெய்ய முற்பட்டாலும் பின்னதாக அது நடைபெறவில்லை.

 

நான் எமது முதல் பண்ணைக்காக உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்று புகையிரத நிலையத்தில் காத்திருந்து இறுதியில் நிர்மலன் மட்டுமே வந்து சேர்ந்த போது ஏற்பட்ட விரக்தி மூன்று வருட எல்லைக்குள் மிகுந்த உற்சாகமாக மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேலான முழு நேர உறுப்பினர்கள். பலரின் ஆதரவு. உறங்குவதற்குக் கூட நேரமின்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயற்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியவை. விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்

 

அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.

 

பிரபாகரன், கலாபதி, ராகவன் குலம், செல்லக்கிளி, சற்குணா, சித்தப்பா என்ற ஞானம், கறுப்பி என்ற நிர்மலன், நாகராஜா, கணேஸ்வாத்தி, பேபி சுப்பிரமணியம், தங்கா, பாலா, விச்சு, உமாமகேஸ்வரன், சாந்தன், குமணன், மாதி, பண்டிதர், சுந்தரம், சிறி என்ற மாத்தையா கிட்டு, குமரப்பா என்ற குமரன், சங்கர், கண்ணன் என்ற சிவனேஸ்வரன, காத்தான், பீரிஸ், யோகன், பவானந்தன் மரைக்கார், ராஜன், மனோ மாஸ்டர், அழகன், நந்தன், நெப்போலியன், சசி, ரத்தினம், சிவம், சோமண்ணை, முஸ்தபா, சற்குணாத்தம்பி,காந்தன் டானியல் என்ற தயாளன், இந்திரன், செயந்தன், பொன்னம்மான்,ராம் என்ற ஐயர் ஆசீர், புலேந்திரன்,ஜெயாமாஸ்டர்,ரகு, வீரபாகு,சாத்திரி,லாலா என்ற ரஞ்சன்போன்றோர் முழுநேர உறுப்பினர்களாக, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது இயக்கம் வேகமாக வளர்ச்சிபெறுகிறது.

 

ஒரு தேசத்தின் விடுதலைக்கான பணியின் சுமையை எமது தோள்களில் உணர்கிறோம். இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார், தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.

 

திருகோணமலையில் நான் அதிகமாகச் சந்திக்க வாய்ப்பற்றறிருந்த இளைஞன் ஜான் மாஸ்டரும் இணைந்து கொள்கிறார். இவர்களோடெல்லாம் எனது தோழமையுள்ள இனிய நினைவுகள் என்றும் பசுமையானவை. ஒரு குடும்பமாய் அவர்களின் துயரங்களோடும், மகிழ்வுகளோடும், அவர்களது போராட்ட வாழ்க்கையோடு இழப்பதற்கு எமது உயிரைத் தவிர ஏதுமின்றி கலந்திருந்த காலங்களோடு எனது எனது நினைவு நரம்புகள் வேர்விட்டுப் படர்ந்துள்ளது. இந்த நினைவுகளை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்வேன்.

 

இன்னும் வரும்…

 

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

http://inioru.com/?p=10744