நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்… சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி.

செப்டம்பர் 22, 2009 அன்று வெளியான “நக்சலைட்டுகளின் அரசியல் தலைவர் கோபட் காந்தி தில்லி போலீசிடம் பிடிபட்டார்” என்ற செய்தியால் பரபரப்பானது இந்தியா.  அவருக்கு வயது 58.  தென் மும்பையைச் சேர்ந்த பார்சி இனத்தவர்.  வொர்லியில் கடற்கரையில் அமைந்திருந்த மாளிகையில் பிறந்து வளர்ந்தவர்.  டூன் ஸ்கூலிலும், பிறகு லண்டனில் சார்டர்ட் அகவுண்டண்ட் படிப்பும் படித்தவர்.  நாடு திரும்பியதும், இந்தியக் குடிமக்களில் ஆகக் கொடிய வறுமையில் இருந்த மகாராட்டிர மக்கள் மத்தியில் வேலை செய்யத்தொடங்கினார். பின்னர் 1970களில் தலைமறைவு அரசியல் வாழ்வை மேற்கொண்டார். சமூகவியலாளரான அவரது மனைவி அனுராதாவும் அவருடன் இணைந்த வாழ்வை மேற்கொண்டார்; சென்ற ஆண்டு மூளையைத் தாக்கும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.  [மத்திய இந்தியாவின் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த மையநிலப்பகுதியில், இறப்பை ஏற்படுத்தும் இவ்வகைக் கொடூரமான மலேரியா, நமக்கு தலைவலி, காய்ச்சல் போல சகஜமான நோய்].  காந்தி பிடிபட்டதை “அரசின் முக்கியமான நக்சல் வேட்டை”  என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

செப்,22 அன்று இரவு ’டைம்ஸ் நௌ’ தொலைக்காட்சி, கோபட் காந்தி கைது செய்யப்பட்டதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு ‘ப்ரைம் டைம் விவாதம்’ நடத்தியது.  வெறிக்கூச்சலிடும் பகட்டு ஆரவார நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, நகர்ப்புற மேட்டுக்குடிகளின் நக்சல் பிரச்சினை பற்றிய வழமையான கண்ணோட்டத்தின் சாரத்தைத் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். அவர் நடத்தும் நிகழ்ச்சியை நீங்கள் காண நேர்ந்தால், பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவரும்.  உள்துறை அமைச்சர் கடந்த ஒர் ஆண்டாகவே நக்சல்களுக்கு எதிரான, குறிப்பாக சடீஷ்கரில், ஒரு பெரும் படையெடுப்புக்குத் திட்டமிட்டுவருகிறார். கிடைக்கின்ற செய்திகளின் படி,  மத்திய சேமக்காவல் படையின்[CRPF] அதிரடிப்படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்[ITBP] மற்றும்  எல்லைப் பாதுகாப்புப் படையினர்[BSF] அடங்கிய 75000 துருப்புக்களை இந்தியாவின் மையநிலத்தில் நிரந்தரமாய் நிறுத்துவது என்பதையும் உள்ளடக்கியது அவரது இந்தத் திட்டம். பல செய்தித்தாட்களில் வரும் விவரங்களின்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் தருவிக்கப்படுகின்றன;  ஒத்துவராத அண்டைநாடுகளின் மீதான ஊடுருவல் நடவடிக்கைக்காகவே உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படையும் கொண்டுவரப்படுகிறது; பீரங்கி வண்டிகள், குண்டு விரிப்புகள், கொத்துக் குண்டுகள், மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. அவசியம் ஏற்படுமானால் இராணுவத்தின் சிறப்புப் படைகளையும் கூடக் கொண்டுவருவேன் என்கிறார் சிதம்பரம்.

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை [வரும் நவம்பரில் தொடங்கும்படியாக]  திட்டமிடப்பட்டிருப்பது அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், காட்டு வேட்டை என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, நிலவும் மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நக்சலைட்டுகளை அல்லது மாவோயிஸ்டுகளை “உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மாபெரும் அபாயம்”  என்ற வகையில் குறிப்பிடுகிறார்கள்.  அவர்கள் மீதான இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக இருக்கலாம்.  ஆனால், அதுதான் ஒரே தீர்வா? அதுதான் தீர்வுகளுள் சிறந்த தீர்வா? இத் தீர்வால் உண்மையில் தீர்வு கிடைக்குமா? இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் பாதிப்பு அடையப்போகிறவர்கள் யார்? இந்த நடவடிக்கையின் எதிர்விளைவுகள் என்னவாய் இருக்கும்? உண்மையில் நாம் யார் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கிறோம்? போர் என்ற பெயரில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? கண்ணைத் திறந்துகொண்டுதான் இந்தக் கிணற்றில் குதிக்கிறோமா? காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இவ்வாறான நடவடிக்கை தோற்றுவித்திருக்கும், வெளிப்படையாகத் தெரியும், சரிசெய்ய முடியாத உளவியல் குழப்பங்களில் இருந்து கற்றறிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா?  ஒரு ஜனநாயக உணர்வுள்ள சமூகம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிப் பதில் தேட முனைந்திருக்க வேண்டும்.  வசதிமிக்க மேட்டுக்குடிகள் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளுக்குத் தன் புட்டத்தைக் காட்டுவதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.  நாட்டைக் கவிந்திருக்கும் இத்தகையதொரு பயங்கரமான நடவடிக்கையின் பால் விவாதமின்றி ஊமையாய் நிற்கின்றனவே தேசியக் கட்சிகள், அதற்கு என்ன நியாயமிருக்கிறது?

ஒருக்கால், மௌனம் கவலையைக் குறைக்கும் போலும்.  இந்த அரசு சில தினங்கள் முன் தன் உளவியல் ஆயுதமாக ஒரு விளம்பரத்தை வெடித்தது. ”ஈவிரக்கமற்ற கொலைகாரர்களே நக்சல்பாரிகள்” என நாட்டின் அனைத்துப் பெரும் தினசரிகளிலும் உரக்க அலறியது அந்த விளம்பரம். நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆண், பெண், குழந்தைகளின் பிரேத வரிசையை அதன் காட்சிப்பதிவு கொண்டிருந்தது.

செப்டம்பர் 22, இரவு கோபட் காந்தியைப் பற்றிய விவாதத்தில், நாட்டின் உட்பகுதி எதற்கும் சென்றறியாத நகர்ப்புறத்து கிணற்றுத் தவளையின் ஒழுக்க நெறி நின்று திருவாய் மலர்ந்தார் அர்னாப் கோஸ்வாமி… இவர் “பயங்கரவாதியா, கொள்கைவாதியா?”  என எக்காளமிட்டார். “ மிஸ்டர் காந்தியின் மேற்பார்வையில் ஆறாயிரம் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” (கோபட் காந்தி ஏதோ வாழைப்பழ குடியரசைத் தலைமைதாங்கும்  இடியமின் போன்ற நபர் போல) ”இருந்தும், மனித உரிமை அமைப்புகளும், சில அரசு சாரா அமைப்புகளும் அவர் விடுதலையைக் கோருகின்றன”  என்கிறார் கோஸ்வாமி. (திரு கோஸ்வாமி அவர்களிடம் மனித உரிமைக் காரர்கள் மீது எப்போதுமே ஒரு எகத்தாளம் உண்டு. அவரைப் பொருத்தவரை இவர்கள், பல்வேறுபட்ட சுய சிந்தனை உள்ள மக்கள் அல்ல, பயங்கரவாத சக்திகளின் வளர்ப்புப் பிராணிகள்).  “ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” “அவர்கள் கொன்ற 15 சி.பி.எம். அணிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”  என அவர் முழங்குகிறார்.  குற்றம்சாட்டப்படுபவர், நக்சலிசத்தின் பின்னால் இருக்கும் விரிந்த அரசியல் சூழலை விவரிக்க அல்லது மிகச் சிக்கலான விவாத்ததுக்குள் இறங்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவரால் மடையடைக்கப்படுகிறார். எப்படி? “நாங்கள் கேட்கும் கேள்வி மிகச் சாதாரணமானது; அவர் பயங்கரவாதியா அல்லது கொள்கைவாதியா? அவர் இந்த வன்முறைக்குப் பொறுப்பானவரா, இல்லையா? 6000 பேர் சாவுக்கு அவரைக் குற்றம்சாட்ட முடியுமா? முடியாதா?”..  ஒத்தையா , இரட்டையா?

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது, திருடன் போலீஸ் விளையாட்டில் திருடனைச் சுட்டுக்கொல்லும் சிறுவர்களின் செயலை சற்று வேடிக்கைபார்த்து வந்தது போலிருந்தது. தனிப்பட்ட முறையில், இதில் ஒரு சரக்கும் இல்லை. ஆனால், தற்போது மிகப் பிரபலமான ஆங்கில டி.வி. சேனலான ’டைம்ஸ் நௌ’ ன் குரலாக ஒலிக்கும் திரு கோஸ்வாமி அவர்களின் மூளையற்ற வெட்டுப் பேச்சுகள், விரிந்த, நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் மக்களின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அரசாங்க விளம்பரங்களுடன் இணைந்து, கவலையளிக்கத் தக்கதொரு கண்ணோட்டத்தை பொதுவிவாதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தொகுத்தளிக்கிறது. இது அரசாங்கப் பிரச்சாரம் எனத் தெளிவாய்க் குறிப்பிடத்தக்க வகையிலும்,  மறுபுறம், அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனமானதாகவும் உள்ளது. இரண்டையுமே ஏற்க முடியாது.

இந்த நக்சல்பாரிப் புதிருக்குள், மூன்று அடிப்படைக் கேள்விகள் அடங்கியுள்ளன: நக்சலைட் என்பது யார்? போராட்டத்தின் ஒரு கருவியாக வன்முறையைக் கொள்வது பற்றிய ஒருவரது நிலைப்பாடு என்ன? நாடெங்கிலும் நக்சலிசம் ஏன் வளர்ந்துகொண்டிருக்கிறது?  முதலாவது கேள்வியை அறிந்துகொள்ள ஒரு உவமையை எடுத்துக்கொள்ளுங்கள், நீரில் இருக்கும் மீனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நக்சல் தலைவர்கள் மீன்கள், இன்னார் என்று சுட்டத்தக்கவர்கள் (சுடத்தக்கவர்களும்- தண்டிக்கப்படக்கூடியவர்களும் கூட); நீர் என்பது விரிந்த எண்ணற்ற மக்கள் கூட்டம், அவர்கள் பிரதிபலிக்கும், அவர்கள் நீந்தித் திளைக்கும் மக்கள் வெள்ளம்.

கோபட் காந்தியைப் போல, ஒரு நக்சல் கொள்கையாளர், போர்த் தலைவர் அல்லது பொலிட் பீரோ தலைவர் எந்த சமூகத் தட்டிலிருந்தும் வரமுடியும்.  ஒடுக்கப்பட்ட ஆந்திரத்து தலித்துகளில் இருந்தும், சட்டீஷ்கரின் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசியிலிருந்தும், வங்காளத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளிலிருந்தும், வசதிவாய்ப்பு மிக்க மும்பைப் பணக்கார வர்க்கத்திலிருந்தும்கூட வரமுடியும். இந்த “புரிந்த புரட்சியாளர்கள்”  இரண்டு நிலைகளில் செயல்புரிகிறார்கள். அரசியல் நிலையில், அவர்களுக்குப் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (இதில் அதிகாரம் இன்னமும் நிலப்பிரபுத்துவ மேல்தட்டு வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து இருப்பதாகப் பார்க்கிறார்கள்) அவர்களது நீண்டகால குறிக்கோள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே.  இவ்விசயத்தில், அவர்கள் இந்திய அரசின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார்கள்.  2004ல் ஆந்திர அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்து முறிந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கே. பாலகோபால் உள்ளிட்ட பலரும், இவ்விசயத்தில் அவர்களை எதிர்த்துப் போராட அரசு தன்னளவில் உரிமை பெற்றிருப்பதாகவே கருதுகிறார்கள். “மாவோயிஸ்டுகளே அதிகாரத்துக்கு வந்துவிட்டால்,  அவர்களும் இவ்வாறான சாவால்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் பாலகோபால். நக்சலைட்டு தலைவர்கள், இந்திய அரசு செயல்பட முடியாத வகையில் “விடுதலைப் பிரதேசங்களை”  உருவாக்குவது பற்றியும் பாலகோபால் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். “தாங்கள் மக்களின் பிரதிநிதிகளே என்று அவர்கள் உரிமை கொண்டாடும்போது, மக்களைப் பாதிக்கும்படியான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை – தனது செயல்கள் மூலமாகவோ அல்லது அதனால் தருவித்துக்கொள்ளும் விளைவுகள் மூலமாகவோ- அவர்கள் முன்னெடுக்க முடியுமா?  ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்புகிறார் பாலகோபால்.

இந்த நீடித்த தத்துவார்த்தச் சண்டையில், இரண்டாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட பயங்கரமான ராணிபோட்லி போலீஸ் நிலையத் தாக்குதல் முதல் சமீபத்திய ராஜ்நந்த்கான் தாக்குதல் ஈராக பல நக்சல் தாக்குதல்களும் அவ்வியக்கம் மூர்க்கமான தாக்குதல்களையும், வன்முறை மீதான மூட வழிபாட்டையுமே தழுவி நிற்கிறது என்பதையே காட்டுகிறது. அடக்குமுறையும், ஊழலும் நிறைந்த போலீசுக்கு எதிராகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற போதிலும், யாருமே இதைக் கண்டிக்கவும், இவ்வாறான வன்முறைகளை எதிர்க்கவுமே செய்வர். அல்லது இதைத் தூண்டியவர் தண்டிக்கப்படவேண்டும் என்பர். ஆனால் டஜன்கணக்கான அறிவுஜீவிகளைப்போல, பாலகோபால் அவர்களும் குறிப்பிடுவது என்னவென்றால், இந்த தத்துவார்த்தப் போராட்டத்தை நோக்கி மட்டும் கவனத்தைக் குவிப்பதோ அல்லது சட்டவிரோதமான வழிகளில் மட்டுமே இதை ஒழிக்கமுடியும் என்பதோ தற்கொலைக்கு ஒப்பானது என்பதே.  மூர்க்கமான எதிர்த் தாக்குதல்களால் நக்சலிசத்தை ஒழிக்க முடியுமா?  அது சாத்தியமென்றால், 70களில், மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர் ரேயின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் அதை என்றென்றைக்குமாய் பிடுங்கியெறிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில், நக்சல் வன்முறை பற்றிய கதைகளில் உண்மை இருப்பினும், நக்சல் தலைவர்கள் விரிந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.   ஏனெனில், அவர்கள் சமூகப் பொருளாதாரக் காரணங்களை வெளிப்படுத்துகிறார்கள், இந்திய அரசால் 60 ஆண்டுகளாய் அயோக்கியத்தனமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களை சக்திமிக்கவர்களாக்குகிறார்கள், ஆயுதபாணியாக்குகிறார்கள்.  ஆக, பெரும்பாலான நக்சல் அணிகள் தனது இயக்கக் குறிக்கோளுக்காக நிற்கும் [”Informed revolutionaries”] “புரிந்த புரட்சியாளர்கள்” அல்ல. அவர்கள் தங்களது வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் தமது வாழ்விடத்தில் போராடும் பழங்குடியினரும், தலித்துகளும் ஆவர்.  “நீங்கள் என்னை நக்சல் என்றோ, வேறு மாதிரியோ உங்கள் விருப்பம்போல் அழைத்துக்கொள்ளுங்கள்.  எனது 3 கிலோ அன்னாசிப் பழத்துக்காவே நான் துப்பாக்கி எடுத்திருக்கிறேன்”  என்று தான் சந்தித்த பீகார் தொழிலாளியும் நக்சல் கேடருமான ஒருவர் கூறியதாக பெலா பாட்டியா என்ற மனித உரிமை செயல்வீரர் கூறுகிறார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில்,  இந்திய அரசு தன் மிகவும் பரிதாபத்திற்குறிய மக்கள் மீது இந்த ஆயுதப் போரை நடத்தித்தான் தீரவேண்டுமா? அவர்களையும் உரிமையுள்ள மக்களாக்கி, துப்பாக்கிகளின் அரவணைப்பில் இருந்தும் ”புரிந்த புரட்சியாளர்களின்” குற்றப் பிடியில் இருந்தும் விடுவிக்க வேறு வழி ஏதுமில்லையா?  என்பதே. அர்நாப் கோஸ்வாமி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் இறந்த அந்த 15 சி.பி.எம். உறுப்பினர்களை நினைவுபடுத்தியபோது வசதியாய் சொல்ல மறந்த விசயம், பத்திரிகைகளில் வெளிவந்த விசயம் ( எந்த டி.வி. சேனலும் குழு அனுப்பி விசாரிக்க நினைகாத விசயம்) என்னவென்றால், பத்தாயிரம் போர் கொண்ட உறுதியான மலைவாழ் மக்கள் கூட்டம் ஆயுதக் கிடங்காக ஆக்கப்பட்டிருக்கும், லால்கர் அருகில் உள்ள இனாயத்பூரில் இருக்கும் சி.பி.எம். அலுவலகத்தை சுற்றிவளைத்துத் தாக்கியது. அவரால் குற்றம் சாட்டப்படுபவர்கள் இவ்விசயத்திற்கு அவரது கவனத்தை இழுக்க முயன்றபோது அவர் மிகவும் கேலிக்குரிய வகையில், அந்த பத்தாயிரம் பழங்குடியினருக்கு  நொடிப்பொழுதில் மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிட்டார்.  ஆக, ”காட்டு வேட்டை”  இந்த பத்தாயிரம் பேரையும் வேட்டையாடவேண்டும், இல்லையா? ஒருக்கால், பத்தாயிரம் மாவோயிஸ்டுகள் ஒரு அலுவலகத்தைத் தாக்கியிருந்தால் வெறும் 15 பேர்தான் செத்திருப்பார்களா?  சி.பி.எம். அலுவலகத்தின் மீது சென்ற வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மைதான் என்ன?  மறுநாள் அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் எதையும் காண முடியவில்லையே, ஏன்?  அங்கு முகாமிட்டிருந்த மத்திய துணைராணுவத் துருப்புகள் சம்பவங்கள் எதையும் தடுக்க முடியாமல் போனதேன்? நக்சல் புதிர் பற்றிய விசயத்தில் லால்கர் சம்பவம் கற்றறியப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆறு மாதமாகவே மையநீரோட்ட ஊடகங்கள் லால்கரில் “மாவோயிஸ்ட் அபாயம்” பற்றி அதீத ஆர்வம் காட்டிவந்தன. ஆனால், அவர்களில் யாருக்குமே, லால்கரில் இந்த மாவோயிஸ்ட் வீச்சு மே மாதம் தொட்டு திடீர் என்று ஏற்பட்ட ஒன்றா எனக் கேட்கத் தோன்றவில்லை.(sui generis) ஒரே நாளில் மொத்த சமூகமும் மாவோயிஸ்டாக மாறிவிடுமா? இந்த ஆண்டுத் தொடக்கத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல மாவோயிஸ்டுகள் முயன்றதைத் தொடர்ந்தே லால்கர் பிரச்சினை தொடங்கியது என மிகச் சிலரே கூறினர். அதற்குப் பழிவாங்கும் முகமாக பெங்கால் போலீசு லால்கரைச் சுற்றிவளைத்து அந்தச் சுற்றுவட்டாரத்தில், இக் கொலைமுயற்சிக்கு சிறிதும் சம்பந்தமற்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர்கள் ஏராளமானோரைக் கொடூரமாகத் தாக்கியது. இப்படிப் பல மாதங்களாக, இலக்கற்ற போலீசு ஒடுக்குமுறைக்கு இலக்காகி, ஆத்திரமும் வெறுப்புமுற்ற ஆதிவாசிமக்கள் தன்னெழுச்சியாய்த் தங்களை ஒரு எதிர்ப்பு சக்தியாக அமைப்பாக்கிக்கொண்டு, கைக்கோடாரி, வில், அம்பு போன்ற தங்களது வழமையான ஆயுதங்களை ஏந்தி, இந்திய அரசின் வல்லமையை எதிர்த்து மோதினர். சில வாரங்களுக்குப் பின், துப்பாக்கி மற்றும் ஆலோசனைகளோடு இழையோடும் ஒற்றுமை பற்றிய தந்திர உபாயங்களைப் போதிக்கவும், எதிர்ப்பு அலையை வீச்சாய் எழுப்பவும் கிஷன் ஜீ என்ற மாவோயிஸ்ட் தலைவர் ஆந்திரத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. காட்டு வேட்டைக்கு ஒரு முன்னோட்டம் போல, பதிலுக்கு அரசு, தனது துருப்புக்களை அதிகரித்ததுடன் துணைராணுவப்படையையும் இறக்கியது. பலநாட்கள் கடும் துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அரசு, மாவோயிஸ்ட் கூவலையே கேலியாகப் பயன்படுத்தி, லால்கரைப் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து “விடுதலைப் பிரதேசம்” என அறிவித்தது.  ஆனால், உண்மையில் அன்றிலிருந்து லால்கர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.  சி.பி.எம் அலுவலகத்தின் மீதான தாக்குதல் அப்பகுதியில் கனன்றுகொண்டிருக்கும் கோபத் தீயின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமே.

காட்டு வேட்டை நடவடிக்கை தொடங்க இருக்கும் வெகுதொலைவில் உள்ள தண்டிவாடாவில், நிகழ்ச்சிக் களத்தில் இருக்கும் காந்தியவாதியும், ஒரே மனித உரிமை செயல்வீரருமான ஹிமான்ஷு குமார் சொல்கிறார், “நக்சலிசம் ஒரு பிரச்சினை என்ற கருத்தில் நாம் ஒத்துப்போகலாம். ஆனால், இந்த ஏழை மக்கள் தன் சாவை வரவழைத்துக்கொள்ளத் தக்க ஒரு அரசியலின்பால் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?  வெறுத்து ஒதுக்குதலையும், இழிவுபடுத்துதலையும் விட சாவே கவர்ச்சிகரமானதாக உள்ள அவ்வளவு பயங்கரமான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோமா? அப்படியானால், நான் இந்த சமூக அமைப்பை ஏன் பாதுகாக்கவேண்டும்? உணவு, உடை, சுகாதாரம், கல்வி, தன் நிலத்தின் மீது தனக்குள்ள நியாயமான உரிமை இவையே இந்த மக்களுக்கு வேண்டியவை. இருந்தும், நமது ஜனநாயக வழிமுறைகளை வலுப்படுத்தி அவர்களை வென்றெடுப்பதற்கு பதிலாக, நாம் நமது ஜனநாயகத்தைத் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லப் போகிறோம் என்றால், நாம் பயங்கரமான மீளமுடியாத நிலைமையை நோக்கி நகர்கிறோம் என அஞ்சுகிறேன். நாம் ஒரு உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோம்”.  ஹிமான்ஷு குமார் போன்றோர் நன்கறிவர்.  காயமுற்ற சமூகத்தின் விளிம்பில் ஒரு அவசர சிகிச்சை முகாம் [ICU] போல கடந்த 17 ஆண்டுகளாய் செயல்பட்டிருக்கிறார். கல்வி, மருத்துவ உதவிகள் செய்துகொண்டு பொருமையோடு அவர்களை தேர்தல் மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகளுக்குக் கொண்டுவர உழைத்திருக்கிறார். இக் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள மறுக்கும் அரசு, சவுகரியமாகத் தன் பணிகளை இவருக்கு ஒப்பந்த வேலை [out sourcing ] அளிப்பதுபோல் அளித்திருந்தது.  இருப்பினும், இப்போது இவரது அறிவார்ந்த கருத்துக்குக் காதுகொடுக்க மறுக்கிறது. இவரைக் கலந்து ஆலோசிக்கவும் அது தயாராய் இல்லை.

நக்சல் பற்றிய உவமானத்தில் எது நம்மை நீர் எனும் பொருளை நெருங்கச் செய்கிறது.  மனித உரிமையாளர்களையும் அவர்களது கேள்விகளையும் தேச விரோத முத்திரை குத்துவோர், பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த நக்சல் பிரச்சினை பற்றி முன்னர் என்ன சொல்லிவந்தனர் என்பதை அறிந்தால் வியப்புக்குள்ளாவர். பார்வையாளர் இருக்கையில் இருக்கும் நீதிபதிகளையும் இவ்வரசியல் அமைப்பின் ஆதரவாளர்களையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

2006 ம் ஆண்டு திட்டக் கமிஷன், “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்” முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள் பற்றி ஒரு அறிக்கை தருமாறு வல்லுனர் குழுவைப் பணித்தது.  முன்னாள் உ.பி. காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் அஜித் தோவல், பி. பந்தோபாத்யாய், ஈ.ஏ.எஸ். சர்மா, எஸ்.ஆர். சங்கரன், பி.டி. ஷர்மா போன்ற மூத்த அதிகாரிகள், பெலா பாட்டியா, கே. பாலகோபால் போன்ற மனித உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழு அது. அவர்கள் 2008ல் சமர்ப்பித்த அறிக்கை எதிர்கால நோக்கில் நல்ல ஆய்வையும்,  ஆலோசனைகளையும் கொண்டிருந்தது.

”நக்சலைட் இயக்கத்துக்கான ஆதரவு பிரதானமாக தலித்துகளிடம் இருந்தும், ஆதிவாசிகளிடமிருந்தும் கிடைக்கிறது” என்கிறது அந்த அறிக்கை. இதுதான் நமது உவமையில், நீர் எனும் நக்சல் தலைவர்கள் நீந்தித் திளைக்கும் எல்லையில்லா மக்கள் கடல்.  இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையில் தலித்துகளும், ஆதிவாசிகளும் நான்கில் ஒரு பங்கினர். இருப்பினும் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாத அளவில் பரம ஏழைகளாய், மனித மேம்பாட்டு  அளவுகோலின் அடிமட்டத்தில் கிடப்பவர்களாய் இருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அப்பட்டமான மனிதத்தன்மை அற்ற இழிநிலையில் நடத்தப்படுகிறார்கள்.  கிராமப்புறத்தில் காணப்படும் விரக்திக்கும் வன்முறைக்கும் காரணமானவை பற்றிய, கவனமாகத் தொகுக்கப்பட்ட விவரங்களும், கள ஆய்வுகளும் அடங்கிய விரிவான திரட்டு இந்த அறிக்கை.  ஆனால், இந்த விவாதத்தின் மையப்பொருளாக, “ நமது சமூக-பொருளாதாரக் கட்டமைவின் உட்கிடையான வன்முறை” தான் நக்சல் வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் புதிய தாராளவாதம் நோக்கித் திருப்பப்பட்டிருப்பதை இடித்துரைத்துவிட்டு, நக்சல் பிரச்சினைக்கான தீர்வாக, பாதுகாப்பை மையப்படுத்திய அணுகுமுறைக்கு மாறாக, முன்னேற்றத்தை மையப்படுத்திய அணுகுமுறையை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

1982ம் ஆண்டில் திட்டக்குழு உறுப்பினராய் இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் சொந்த அறிக்கையையும், 2002ல் பிரணாப் முகர்ஜி எழுதியதையும் நினைவூட்டி, மனித உரிமை வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அவையும் மேற்சொன்ன அறிக்கையின் சாரப்பொருளையே கொண்டிருந்தன. ”ஏற்கனவே இந்தப் பார்வையும் புரிதலும் அவர்களுக்கு இருந்தும் ஏன் அவர்கள் தங்களது சொந்த புரிதலுக்கும், பரிந்துரைக்கும் எதிராய் பாதுகாப்பை மையப்படுத்திய வழியைக் கையாள்கிறார்கள் என்பது பெருத்த புதிராய் இருக்கிறது” என்ற பெலா பாட்டியா தொடர்ந்து, ”உண்மையில் இது புதிரான விசயமல்ல.  இச் செயல் இந்திய அரசின் பண்பை (character ) மிகத் தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார்.

பிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் பொருளாதார ஆலோசகராய் இருந்த அர்ஜுன் சென்குப்தா அவர்களும் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 15 அன்று, ”நக்சலிசம் என்பது காதுகொடுக்கப்படவேண்டிய ஒரு அவலக் குரலே” என எழுதியிருக்கிறர். ”நக்சல் பயங்கரத்தை” க் கட்டுக்குள் வைக்க அரசு மேற்கொண்ட அதிகபட்ச முயற்சிக்குப் பின்னும் வன்முறை அதிகரித்திருக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்குப்தா மேலும் கடுமையாக எழுதினார், “இது ஏன் என்பதையும், மேலும், எவ்வகையில் நக்சல் வன்முறை பிற வன்முறை வெளிப்பாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.  அது எப்போதுமே வன்முறை, கொலை, பயங்கரமான குற்றச் செயல்கள் மூலம் சட்டம் ஒழுங்கை மீறுவதாகவுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பதும், காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கையாள்வதும் புத்திசாலித்தனமான செயல் அல்ல. இவ்வகைத் தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அதற்கு அப்பால், சமூகத்தில் வேறோடியிருக்கும் அநீதிகளின்  வெளிப்பாடே.  நாம் முதலில் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.  இல்லையேல், வன்முறை என்றும் கடக்க முடியாததாகவே தொடரும்”. இக் கருத்தைக் கேட்டபின் அரசின் ’பண்பு’  மேலும் வெறுக்கத்தக்கதாகிறது.

(1996ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி எம். என். ரோ தனது தீர்ப்பு ஒன்றில், “இடதுசாரித் தீவிரவாதம் நிர்வாகத்தால் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படும் அதே வேளையில், அது தங்களது பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக வஞ்சிக்கப்பட்ட மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.  இது ஏன் இப்படி? என்று, இன்று எகிறிக்குதிக்கும் தேசியாவாதி ஒவ்வொருவனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.)

சென்குப்தா பிரதமரை எச்சரித்த போது, நக்சல் வன்முறை மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என அவர் அஞ்சியது சரியே.  ஏனெனில், அதன் உயிர்நாடி இந்த சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் உள்ளார்ந்த வன்முறையே; நாட்டின் 5 சதவீத மக்கள் சுகபோகத்தில் திளைக்கையில்,  77 சதவீத இந்திய மக்களை நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையில் காலம் தள்ளும்படி நிர்ப்பந்திக்கும் வன்முறையே; நமது ஜனநாயகக் குடியரசு முகங்கொடுக்க மறுக்கும் இந்த வன்முறையே.

கட்டமைவு வன்முறை: அது நயத்துடன் நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் சூனியம். பெரும்பாலான நகர்ப்புற இந்தியர்களைப் பொருத்தவரை, பழங்குடியினர், தலித்துகளின் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  நமது புத்தகங்கள் இது பற்றி எழுதுவதில்லை,  நமது சினிமாக்கள் இது பற்றிய நினைவை எழுப்புவதில்லை, நமது பத்திரிகையாளர்களோ இவ்விசயத்தின் பக்கம் திரும்புவதுமில்லை.  இது வெறும் வறுமையாக நொடித்துவிடவில்லை; இப்போது இது, நீங்கள் இதுநாள் வரை பார்க்கத் தவறிய இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது.  மிருகத்தனமான, சட்டவிரோதமான, விழுந்து  புடுங்குகின்ற, இப்படி ஒரு சிலரின் விருப்பத்துக்கு  மாமா வேலை பார்க்கின்ற இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது. சட்டீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் ஆந்திரத்து தொலைத்தூரக் காடுகள், பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தின் அனாதையாக்கப்பட்ட மூலைமுடுக்குகள் இப்படி இந்தியத் தாயின் புகைந்துகொண்டிருக்கும் இதயத்தில் ஒருவர் பயணித்து வராத வரையில் அவருக்கு இப்பிரச்சினையின் பயங்கரம் புரியாது.  இப்பிரச்சினையை காட்டு வேட்டை நடவடிக்கை எப்படித் தீர்க்கும்? நீங்கள் உங்கள் கருநாகக் கமேண்டோப் படையை இந்த சூனியப் பிரதேசத்தில் சீறிப் பாயச் செய்யலாம். ஆனால், அது  நமது தேசம் உருவாக்கியிருக்கும் மலையும் மடுவுமான ”இருவகைப்பட்ட மனிதர்களை”  எப்படி ஒன்றாய்ச் சேர்த்து உருக்கும்?  இந்தக் காட்டு வேட்டை பல நூறு “புரிந்த புரட்சியாளர்களையும்”   அவர்களுடன் ஆயுதம் எடுத்திருக்கும் பரிதாபத்திற்குறிய பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களையும் கொன்றொழிக்கலாம்.  ஆனால், வீசிய குண்டுகளால் புதைக்கப்பட்ட கோபத்தில் இருந்து உயிர்த்தெழும் புதிய கோபங்களுக்கு அது என்ன பதில் சொல்லும்?

மனித குல ஆய்வாளரும், வரலாற்றாளருமான ராம் குகா, “வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒன்று தீப்பிடித்திருந்தது.  அதை அணைப்பதற்கு பதில் மற்றொரு அறைக்கு நீங்களே தீ வைக்கிறீர்கள். பிறகு மொத்த வீட்டையும் இடித்துத் தள்ளிவிடுகிறீர்கள்.  இது எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது நடப்பு” என்கிறார்.

இந்த காட்டு வேட்டை நடவடிக்கையை வடிவமைத்தவர்களுள் ஒருவரான உள்துறைச் செயலர் கோபால் பிள்ளை அதிகாரம் கோலோச்சும் ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார்.  சராசரி சிடுமூஞ்சி இந்திய அதிகாரிபோல் எமது முதல் சந்திப்பில் அவர் இல்லை. நட்புணர்வும், சிந்தனையும் உடைய மனிதராகத் தோன்றுகிறார்.  தாம் பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி இருப்பதாகவும், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை மக்களுக்கு என்ன செய்யும் என்பது பற்றி அறிந்திருப்பதாகவும் கூறுகிறார்.  இது எப்படி பெருத்த குளறுபடிகளைத் தூண்டி, எதையுமே உள்ளது உள்ளபடிப் பார்க்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும்; எங்கும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைக்கும் என்பது பற்றியெல்லாம் தாம் அறிந்திருப்பதாகவும் கூறுகிறார். வெளிப்படையானவராகவும், எதற்கும் காது கொடுக்கத் தயாராய் இருப்பவராகவும் தோன்றினார்.  ஆச்சரியப்படத் தக்க வகையில் நேர்மையான ஒப்புதல்களை அவரிடம் காண முடிந்தது.  மணிப்பூரின் மொத்த சமூகமும் விரக்தியுற்றிருக்கிறது; மனித உரிமையாளர்கள் பெருத்த கூச்சல் போடும் பிரச்சினையான, சட்டீஷ்கரில், சல்வா ஜுடூம் அமைப்பை வளர்த்துவிட்டது தவறுதான்; அரசு முன்னெடுக்கத் தவறிய மக்கள் பிரச்சினைகளை பலமுறை நக்சலைட்டுகள் கையிலெடுத்து நிறைய செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே .. ஆனால், அவர்களது வன்முறை வழிப்பட்ட குறுக்கீடுகள் அரசின் செயல்பாடுகளுக்கு உண்மையான இடர்பாடுகளாய் இருக்கின்றன. என்று அவர் சொல்லும்போது அதற்கு என்ன பதில் சொல்வது?

அவரைப் பொருத்தவரையில் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை, அந்தப் பகுதிகளை அரசின் ஆளுமைக்கு உட்படுத்தும்படியாகத் திட்டமிடப்படும் ஒன்றே.  “நாங்கள் அந்த நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற விரும்புகிறோம்; ஆனால், நாங்கள் சுடப்பட்டால் மட்டுமே திரும்பச் சுடுவோம்” என்கிறார் இவர்.  ”லால்கர் ஒரு முன்மாதிரி; நாங்கள் அம்மக்களுக்கு சேதம் விளைவிக்க விரும்பவில்லை; அந்தப் பகுதியில், பொது வினியோகம், நகரும் மருத்துவ ஊர்திகள், உறுதியான போலீசு நிலையம், பள்ளிகள்.. இப்படி அரசின் சமூக நிர்வாகத்தைத் மீளக் கொணர்வதே எமது உண்மையான வெற்றியாக இருக்கும்,  இவையே எமது இலக்குகள்” என்கிறார் இவர்.  உங்களுக்கு இவர் சொல்வது நடக்காதா என்று ஏங்கத் தோன்றும்.

சட்டீஷ்கர் மாநிலக் காடுகளில் உள்ள கிராமங்களை நிர்வாகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.  அக்கிராமங்கள் வெகு தொலைவில் தனித்தனித் தீவுகளாக உள்ளன.  மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் இருக்கும் யாருக்கும் அம்மக்களது மொழி தெரியாது.  காட்டு வேட்டை நடவடிக்கை வெகுநாட்கள் முன்பிருந்தே திட்டமிடப்பட்டு வருகிறது.  நாடெங்கிலும் உள்ள மத்திய சேமக்காவல் படையினர் மற்றும் துணைராணுவத் துருப்புகளுக்கு தொடங்கவிருக்கும் இந்த நடவடிக்கைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  காட்டுப் போர்ப் பயிற்சிக்கான 20 புதிய பள்ளிகள் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.  கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், அதுபோல் சிவில் நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், நிலைமையை உணரச்செய்யவும் அதிவேகப் பயிற்சித் திட்டங்கள் ஏதும் உண்டா என்கிறீர்களா? இவர், இப்பிராந்தியத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தங்களது பங்களிப்பை செய்வதற்காக அழைத்திருக்கிறாரா, என்கிறீர்களா? திரு. பிள்ளை, ஆ.. மறந்துவிட்டோமே என்பது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகி.. இல்லை என்ற ஒப்புதலுடன் “பயிற்சி”,  “பேச்சுவார்த்தை” என தனது மஞ்சள் குறிப்பேட்டில் எழுதிக்கொள்கிறார்.

காட்டு வேட்டை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.  சொல்லப்பட்ட நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையே தொடர்பில்லை; அனுமார் வால் போல் நீண்டு சென்ற ஆய்வறிக்கைகளும், நல்ல பல ஆலோசனைகளும் திட்டக் கமிஷன் அலுவலகப் புழுதியில் புதைகின்றன. நன்கறிந்த விரக்தி மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது.

நியாயமானதும் சமத்துவமானதுமான உலகத்தைக் காண விரும்பும் எவருக்கும் அரசியல் போராட்டத்தில் வன்முறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிப்பதா இல்லையா என்பதே இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. அரசு தனது அக்கறையின்மையை வெளிப்படுத்தும்போது, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் போன்ற மக்களது அமைதிவழி இயக்கங்களுக்கும், பாக்சைட் சுரங்கப் பணியை எதிர்த்து நிற்கும் பழங்குடியினருக்கும், நர்மதா அணை எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்காதபோது, தனது சுகவாழ்வைத் துரந்து சக குடிமக்களான அந்த கையறுநிலையில் உள்ள மக்களோடு இணைந்து நிற்க முன்வராத ஒருவர் அம்மக்களின் ஒரே தற்காப்பான ஆயுதங்களைக் கைவிடக் கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது?

நக்சல் வன்முறையையும் தன்னெழுச்சியான மக்கள் வன்முறையையும் ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா?  இருந்தும், ஒரு ஜனநாயக சமூகத்தில், வன்முறை, அது எத்தன்மையதாயினும் அதை மன்னிக்க முடியுமா?  அது எங்குதான் ஜனநாயக வழிமுறையை விட்டுவைத்திருக்கிறது?

இவ்வகையிலான உள்போராட்டங்களுக்கு இடையிலும், அர்னாப் கோஸ்வாமி அடித்துக் கூறியதற்கு மாறாக, கிட்டத்தட்ட, மனித உரிமை சமூகம் முழுவதும், நக்சல் வன்முறை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அடக்கப்பட வேண்டியதே என்ற கருத்தை ஏற்றது. ஆயுதங்கள் அதிகரித்திருப்பதும், அன்னிய நாடுகளில் இருந்து தருவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதும் வன்முறையை வளர்த்திருக்கிறது.  பலரும் மதிக்கும் முன்னாள் காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங் சொல்வது போல, “நக்சல்கள், வழக்கமாக 20 போரைக் கொண்ட ’தளம்’ என்ற குழுவாக இயங்குவார்கள். இப்போது, தளம் 100 போர் அளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளனர். அவர்களது தாக்குதல்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறது.  இப்படிப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகள் சகித்துக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டும்”.

இந்த செயல்தந்திரம் பற்றியும் அதன் வல்லமை பற்றியும் மாற்றுக் கருத்து எழுகிறது.  உதாரணத்துக்கு, பெயர் சொல்ல விரும்பாத, பொதுவாய் தாக்குதல் குணம் கொண்டவர் எனக் கருதப்படும் ஒரு இராணுவத்துறை வல்லுனர் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை தொடர்பாக சில பாரதூரமான சந்தேகங்களை எழுப்புகிறார். பெரும்பாலான மனித உரிமைச் செயல்வீரர்கள் கொண்டிருக்கும் கவலையையே இவரும் பிரதிபலிக்கிறார்.  ”உங்கள் நிலத்தில், உங்கள் மக்களையே எதிர்த்த இப்படி ஒரு போலீசு நடவடிக்கை ஒரு பயங்கரமான படுகுழியில் விழுவதற்கு ஒப்பானது.  இந்த நடவடிக்கை ஒத்துவராத அண்டை நாடுகள் மேல் கையாளப்படும் ஒன்று. போலீசு ஒரு குற்றவாளியை, உதாரணத்திற்கு, ராம் லாலைப் பிடிப்பதற்கு அலையவேண்டிய ஒன்று. ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கையில்  ராம்லால் யாரென்றும் தெரியாது, அவனைப் பற்றிய, அவனது செயல்பாடு பற்றிய தெளிவான துப்பும் கிடைக்காது.  நீங்கள் ராம்லாலின் சொந்தங்களையோ, அவனது மொத்த கிராமத்தையுமோ கொன்றழிப்பதில் போய் நிற்பீர்கள்.  மேலும், நீங்கள் அதை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றால், நீங்கள் யாரைக் கொன்றிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது” என்கிறார் அவர்.

துணைராணுவத் துருப்போ அல்லது இராணுவமோ நுழைக்கப்பட்டுவிட்டால் அதைத் திரும்பப் பெருவது என்பது நடவாத செயல். அதிகார வர்க்கமோ, இராணுவத் தந்திரியோ, வல்லமைபெற்ற மந்திரியோ யாராய் இருந்தாலும், இந்நடவடிக்கை  ஏற்படுத்தும் திகில் உணர்வையோ, வீண் கொலைகளையோ, நியாயமான தவறுகளையோ, இவை ஏற்படுத்தும் பழிவாங்கும் உணர்ச்சியையோ தடுத்து நிறுத்த முடியாது. நண்பனும், குடும்பத்தாருமே உளவு சொல்பவரானால், பிறகு பார்ப்பவரெல்லாம் எதிரிகளே. இதற்கெல்லாம், காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் வேதனை மிக்க இரத்த சாட்சியங்களாய் நிற்கின்றன.

ஏற்கனவே இந்தப் பயனற்ற ஓட்டம் சடீஷ்கரில் தொடங்கிவிட்டது. தாக்குதலின் முதல் நடவடிக்கையாக, சென்ற வாரம், சிண்டகுஹா என்ற இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையை அழிப்பதற்கு 100 கோப்ரா அதிரடிப்படையினர் கொண்ட குழு விரைந்தது.  அவர்கள் நக்சல் தீயால் சூழப்பட்டனர். ஏழு கோப்ராக்கள் கொல்லப்பட்டனர்.  பதிலுக்கு, 9 நக்சல்கள் தங்களால் கொல்லப்பட்டனர். (அவர்களது சடலம் தங்கள் வசம் உள்ளது) தாக்குண்ட மேலும் பலரை நக்சல்கள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்று அறிவிக்கின்றனர்.  இதை மாபெரும் வெற்றி என அறிவிக்க முயன்றது அரசு.  ஆனால், பயங்கரமான சூனியக்காரியின் சித்து வேலை (smoke and mirror) ஏற்கனவே அரங்கேறத் தொடங்கிவிட்டது. உள்ளது உள்ளபடி எதையும் இனி பார்க்கமுடியாது. கோப்ராக்கள் யாரையும் கொல்லவில்லை; சிலரைப் பிடித்துச் செல்வதற்காக ஏதுமறியா மக்களைக் கிராமத்தில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்;  அவர்களுள் ஒரு கிழவரும், ஒரு கிழவியும் இருந்தனர், என்கின்றனர் கிராம மக்கள்.  சட்டீஷ்கர் டி.ஜி.பி விஷ்வராஜன் ”என்னிடம் விவரம் ஏதுமில்லை” எனக் கூறி மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டார்.  முதல் நடவடிக்கையிலேயே 6 கோப்ராக்களைப் பலிகொடுத்த வலி அவரிடம் வெளிப்பட்டது.

காட்டு வேட்டை தீவிரமடையும்போது இப்பிரச்சினைகள் எல்லாம் பூதாகாரமாய் பெருத்து நிற்கும்.  கணப்போழ்தில் மறையும் தீவிரவாதிகள், அடிபட்ட நாகங்களின் கோபத்திற்கு இலக்காக அவர்கள் விட்டுச் செல்லும் கிராமத்தினர், உள்ளும் புறமும் சூழும் பீதி, சந்தேகம், பழிவாங்கும் உணர்ச்சி, சல்வார் ஜுடூம் நடவடிக்கையின் போது நடந்ததைப்போல், நக்சல்களின் கோபத்துக்கும் அரசின்  கோபத்துக்கும் இடையே சிக்கும் அப்பாவிப் பழங்குடியினர், எனக் கண்ணில் விரிகிறது கட்டுக்கடங்காது காட்டின் மருட்சி.

ஒரு அழுத்தம் அதற்கு சமமானதும் எதிரானதுமான பதில் அழுத்தத்தை உருவாக்கும்.  பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த எளிய வேதியியல் சமன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  சல்வா ஜுடூம் செயல்பாட்டின் விளைவு ஏராளமான பழங்குடியினரை நக்சல்கள் பக்கம் துரத்திவிட்டது.  காட்டு வேட்டை நடவடிக்கை அவ்விடத்தைத் தீயிட்டுக் கொளுத்த உறுதியேற்கிறது. சல்வா ஜுடூமை எதிர்த்துப் பேசியதால் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிகையால் வரவிருக்கும் உள்நாட்டுக் கலகத்தைப் பற்றி ஹிமான்ஷு குமார் எச்சரிக்கும்போது, அவர் சொல்லைக் கேட்பாரில்லை.

“கமாண்டோக்களை அல்ல, சுகாதார ஊழியர்களை, பள்ளி ஆசிரியர்களை சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் அனுப்புங்கள்” ;  “ஆதிவாசிகளுக்கு வாய்ப்புகளைத் திறந்து காட்டுங்கள், அவர்கள் சாவுக்கு பதில் வாழ்வைத் தெரிவு செய்வர்” என அவர் இரைஞ்சுகிறார்.  ஆனால் அவர் குரலின் வீச்சு உள்துறை அமைச்சகத்தின் வாயிலில் படிந்திருக்கும் தூசியைக்கூட அசைக்கவில்லை.

வளர்ந்து வரும் நக்சல்பாரி வன்முறை தொடர்பாக, பலமாய் நாட்டைக் கவ்வியிருப்பதும், அடக்கிவாசிக்கப் படுவதுமான இறுதி அம்சம் ஒன்று உள்ளது. அதுதான் புதிய தாராளவாத –பொருளாதார- நில ஆக்கிரமிப்பும் அந்த நிலத்தின் மீதான பழங்குடியினரின் உரிமையும் என்ற அம்சம்.  இன்றைய, பெரும்பாலான நக்சல் தலைவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விசயம் ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல.   பத்திரிகையாளர் என். வேணுகோபல் கூறுவதுபோல, கம்யூனிஸ்ட் கட்சியால் அப்பட்டமாகக் கைவிடப்பட்ட 1946-51 ம் ஆண்டுகளின் தெலங்கானா இயக்கத்தில் வேர்கொண்டிருப்பதுதான் இந்த நக்சல்பாரி இயக்கம்.  இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1956), ஆந்திராவில் 60 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது.  ஆனால், நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1973ம் ஆண்டில், பணக்கார நிலவுடைமையாளர்களுக்குத் தாராளமான சலுகைகள் அளிக்கப்பட்ட பின் வெறும் 17 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்தது.  இறுதியில் 4 லட்சம் ஏக்கரே வினியோகிக்கப்பட்ட்து.  நிலம், வேலை, விடுதலை என்பதே அன்றைய அறைகூவலாய் இருந்தது.  இன்றும் நிறைவேறாத அந்த வேட்கையால் உந்தப்பட்டு, 46-51 தெலங்கானா போராட்டத்தில் முன்னின்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்களே இன்றைய நக்சல் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள்.

முன்னாள் பழங்குடியினர் நல ஆணையரும், செலவீனங்கள் மற்றும் பொருளியல் விவகாரத் துறையின் (Dept. of Expenditure & Economic Affairs) முன்னாள் செயலருமான ஈ.ஏ.எஸ். சர்மா இப் பிரச்சினையின் மையமான விசயத்தை வெளிப்படுத்துகிறார்.  “நான் எந்த வகையான வன்முறையையும் முற்றாக எதிப்பவன், ஜனநாயக வழிமுறையில் உறுதியான நம்பிக்கை உள்ளவன்… ஆனால், இப்பிரச்சினையில் இடது தீவிரவாதம் என்பது ஒரு இரண்டாம்பட்சமான அம்சமே.  அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பழங்குடியினருக்குத் தெரியும்?  அரசு என்றால், அவர்களைப் பொருத்தவரை போலீசு, ஒப்பந்தக்காரர்கள், நில வர்த்தகக் கொள்ளைக்காரர்கள்.. அவ்வளவுதான்.  மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை, பாரம்பரியமாய் பழங்குடியினர் அனுபவிக்கும் நிலத்தின் மீதும் காடுகளின் மீதும் அவர்களுக்கு முற்றுரிமையை வழங்கியுள்ளது.  தனியார் நிறுவனங்கள் அவர்களது நிலத்தில் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு நீதிபதி சமந்தா அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த அரசியல் அமைப்பு அட்டவணைப்படியான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து வரும் அரசுகள், அரசமைவுச் சட்டம் மற்றும் மேற்சொன்ன தீர்ப்புகளின் உண்மைப் பொருளை [சொல்லைத் திரிக்கலாம்] உணர்ந்து பின்பற்றுவாராயின் பழங்குடியினரின் வெறுப்புணர்ச்சி தானாகவே வடிந்துவிடும்” என்கிறார் இவர்.

திரு சர்மா கிட்டத்தட்ட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.  பழங்குடியினரின் நிலங்களை அபகரித்து, அதில் நிரம்பி வழியும் கனிவளத்துக்காக, அந்நிலத்தைத் தனியார் நிருவனங்களுக்குத் தாரைவார்ப்பதே சட்டீஷ்கரில் சல்வா ஜுடூம் நடவடிக்கையின் உண்மையான நோக்கம், என்று மனித உரிமையாளர்கள் வெகுவாய் விவாதித்திருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளிலேயே 600 பழங்குடியினர் கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது.  பழங்குடியினர் அந்த நிலத்தில் வாழவில்லை என்றால், அரசியல் நிர்ணயச் சட்ட்த்தின் வலுவற்ற இந்த ஐந்தாவது அட்டவணை பயனற்றுப்போகும்.

சல்வா ஜுடூம் கலைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், காட்டு வேட்டை நடவடிக்கை ஒருக்கால் அதன் இரண்டாவது சுற்றாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.  எது எவ்வாறாயினும், அதன் கெடு நோக்கத்திற்காகவோ, மோசமான செயல்பாட்டுக்காகவோ அல்லது திட்டமிடப்படாத சகமனிதர்களின் பெருத்த அழிவுக்காகவோ இப்படிப் பலவற்றுக்காக, தொடங்க இருக்கும் இந்தக் காட்டுவேட்டை நடவடிக்கை பற்றிப் பயப்பட வேண்டியிருக்கிறது.

இடைப்பட்ட வேளையில், நாம் அனைவரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை சற்று ஊன்றிப் படிப்போம்.

ஆங்கில மூலம் தெகல்கா, vol 6, இதழ் 39, 3.10.2009 ,  தமிழாக்கம்: அனாமதேயன்

http://www.vinavu.com/2010/02/18/weapons-of-mass-desperation/