இரண்டு கண்ணீரும் பாசிசத்துக்கு எதிராக விட்ட கண்ணீர். ஒன்று ஒடுக்கப்பட்ட இன மக்கள் விட்ட கண்ணீர். மற்றது ஆளும் வர்க்கத்தில் இருந்த ஒருவரின் மனைவி விட்ட கண்ணீர். இரண்டும் போலியானதல்;ல. பாசிசத்தை எதிர்கொண்டு விடும் கண்ணீர். இதை ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்தி அணுகுவதல்ல மக்கள் அரசியல்.

இனப் பிளவுகள் ஊடாக எப்படி தமிழ்மக்களின் கண்ணீரை சிங்கள மக்கள் உணரவில்லையோ, அப்படி நாம் மக்களை வழிகாட்ட முடியாது. சிங்கள மக்களின் கண்ணீரையும் ஆளும் வர்க்கத்தின் கண்ணீரையும் தமிழ்மக்கள் உணராமல் இருத்;தல், தொடர்ந்தும் அது ஒரு இனத்தின் தற்கொலையாகும்;. இதை உணரவிடாமல் செய்தல் இனவாதமாகும். இது சாராம்சத்தில் பேரினவாத பாசிசத்தின் இருப்பை பாதுகாத்தலாகும். 

    

தமிழ்மக்களை யுத்த முனையில் கொன்று குவித்த ஒரு இராணுவத்தின் தளபதியை, இன்று பாசிசம் தன் சிறையில் தள்ளியுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது?

 

1. அரச பாசிசத்தை தன் குடும்ப இராணுவ சர்வாதிகாரமாக இலங்கை மக்கள் மேல் நிறுவவே, இந்தக் கைது அரங்கேற்றியுள்ளது.

 

2. பேரினவாத அரசு நடத்திய போர்க்குற்றங்களை சாட்சியமாக சொல்ல தயார் என்று அறிவித்த நிலையில் தான், இராணுவ விசாரணை மூலம் அவருக்கு மரண தண்டனை வழங்கி போர்க்குற்றத்தை மூடிமறைத்துவிட முனைகின்றது.   

  

இந்த வகையில் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ள அரசு, தங்கள் பாசிச ஆட்சியை இலங்கை முழு மக்கள் மேலும் உறுதிப்படுத்த முனைகின்றது. இதை நாம் ஆதரிக்க, நியாயப்படுத்த முடியாது. இதை நாம் எப்படி எதிர் கொள்வது?

 

நிலைமை என்ன? அரசியலற்ற தளத்தில் தமிழ்மக்களை செயலற்றதாக்கி, அவர்களை பார்வையாளராக மாற்றியுள்ளது. இதற்கமைய கருத்துக்கள், செய்திகள். "அரசன் அன்று அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும்" என்ற பழமொழியின் உள்ளடக்கத்தில் வெளிவருகின்ற  கருத்துகள் அபத்தமானவை. இதுவோ தமிழன் பெயரால் பழிவாங்கும் புலி அரசியல். மக்களை தொடர்ந்து மந்தையாக வைத்திருக்கும் அரசியல். மாறாக  இந்தக் கைதை இலங்கை வாழ் அனைத்து மக்களும், எதிர்த்து போராட வேண்டும். ஏன்?

 

யுத்தக் குற்றத்துக்கு எதிராக சாட்சியமளிக்க அனுமதிக்க கோரி, சரத்தை விடுவிக்கப் போராட வேண்டும்  

 

இந்த வகையில் தமிழ் பேசும் மக்கள் போராட வேண்டும். தமிழ்மக்கள் இதன் மேல் இன்று செயல்படுவது தான் இன்றைய உடனடி அரசியலாகும்.

 

இந்த அரசு போர்க்குற்றத்தை செய்துள்ளது. இதை இன்று சரத்பொன்சேகாவே வெளிப்படையாக அறிவித்ததுடன், அதை சாட்சியம் சொல்லத் தயார் என்பதை உலகத்தின் முன் வெளிப்படுத்தியுள்ளார். இதை நாம் முன்னிறுத்தி போராட ஏன் தயங்குகின்றோம்.

 

அவரின் சாட்சியத்தை தடுக்கவும், மூடிமறைக்கவும் முனையும் அரசு, அவரை கைது செய்துள்ளது. இதை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுமா!? எதிர்த்துப் போராட வேண்டுமா!? மவுனம் சாதிக்க வேண்டுமா!?

 

நாங்கள் இதை எதிர்த்து, உரத்த குரலில் போராட வேண்டும். அவர் போர்க்குற்றத்துக்கு எதிராக சாட்சியம் சொல்லும் வண்ணம், அவரை விடுவித்து போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோர வேண்டும். இதன் மூலம் போர்க்குற்றத்தில் அவர் இழைந்து இருக்கும் பக்கமும் வெளிப்படும். இதுதான் சரியான அரசியல்.

 

இந்த வகையில் போராடாது தீர்ப்பளிக்கின்றனர். போராடாதே என்கின்றனர்.

 

1. மகிந்தவும், சரத் பொன்சேகா என இருவரும் தமிழ்மக்களை கொன்றவர்கள். அவரின் கைதுக்காக நாம் கவலைப்படத் தேவையில்லை என்கின்றனர். புலி சார்ந்த கருத்துகள் இந்த வகையில்தான் வெளிவருகின்றது.

 

2. சரத்பொன்சேகா மேற்கத்தைய பின்னணி உள்ளவர். எதிர்க்கட்சி அரசியல் அடிப்படையைக் கொண்டவர். வென்ற பின் ஒரு இராணுவ ஆட்சி நிறுவ முனைந்தவர்(?). இப்படி மகிந்தா ஆதாரவளர்களான புலி எதிர்பாளர்கள் இந்தக் கைதை ஆதாரிக்கின்றனர். இடதுசாரி பேசும் சிலர் இதை வாதத்துக்குள் நின்று, இதைக் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.

 

இப்படி இந்த கைது பற்றி அலட்டிக் கொள்ளாது, தமிழ் தரப்பு அரசியல் புளுக்கின்றது, புளுக்க வைக்கின்றனர்.

 

உண்மையில் அமெரிக்கா உட்பட புலிகள் வரை, போர்க்குற்ற விசாரணை நடப்பதை விரும்பவில்லை. அவரவர் நலன்களை இதைக் கொண்டு அடையத்தான், இதை கோருகின்றனர். உண்மையான ஒரு விசாரணையை அல்ல. சரத்பொன்சேகா நடத்தை, இதை மீறிச் செல்லுகின்றது. இந்த நிலையில் போர்க்குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் போராடுவது அவசியமானது. இதை தடுக்கும் வண்ணம் கைதை ஆதரிப்பதல்ல, கருத்துரைப்பதல்ல. 

 

சரத் பொன்சேகா சாட்சியம் அளிக்க முன்வருவதை புலிகள் தடுக்க முனைகின்றனரே! ஏன்? போர்க்குற்ற விசாரணை என்பது, திரைமறைவு நாடகங்களை, துரோகங்களை வெளிக்கொண்டு வரும். இது புலத்தில் இருந்து புலிகள் நடத்திய சதியையும் அம்பலமாக்கும். புலிகள் இழைத்த போர்க்குற்றங்களை அம்பலமாக்கும். புலத்து புலி அரசியலே கந்தலாகிப்போகும். அதை புலிகள் விரும்பவில்லை. சரத்பொன்சேகாவின் சாட்சியத்தை அழிக்க, மகிந்த அரசுக்கு  உதவுகின்றனர். 

   

இந்த விசாரணை மகிந்த அரசின் பங்கையும், சரத்பொன்சேகாவின் பங்கையும் தெளிவுபடுத்தும். புலத்துப் புலிகள் இதைத் தவிர்க்கவே, மகிந்தாவின் பாசிசத்தை ஆதரித்து நிற்கின்றனர். இதன் மூலம் பழிவாங்கும் அரசியலை முன் நகர்த்துகின்றனர். மகிந்தா நடத்திய கைது மூலம், தமிழ் மக்களுக்கு திருத்திப்படுத்தி காட்டி  ஏமாற்ற முனைகின்றனர். மகிந்த அரசுக்கு எதிராக, சரத்பொன்சேகா போர்க்குற்ற சாட்சியம் அளிப்பதை புலிகள் விரும்பவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற, இந்த சாட்சியத்தை தடுப்பது புலிக்கு அவசியமானது. 

 

கைதை ஆதரிக்கும் கூட்டம் மகிந்தாவை விட சரத் பொன்சேகாவை மோசமானவராக காட்டி நிற்கின்றது. இதனால் கைதை ஆதரிக்கின்றது. புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்தாவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றது. போர்க்குற்றத்துக்கு உடந்தையாக, எடுபிடியாக இருந்தது, இருக்கின்றது. இன்று மற்றொரு போர்க்குற்றக் கைதையே அது நியாயப்படுத்துகின்றது.

 

இதற்கு சரத்பொன்சேகாவின் அரசியல் சார்பைக் காட்டியும், இடதுசாரிய அரசியல் மூலம் நியாயப்படுத்துகின்றது. இதை உள்வாங்கும் இவர்கள் அல்லாத இடதுசாரிகள், எப்படி கைதை கண்டிக்க முடியும், விடுவிக்க கோரி போராட முடியும் என்று அங்கலாய்க்கின்றனர். 

             

கைது செய்யப்பட்டவர், எமது மக்களின் எதிரி என்பதாலோ, சரத் பொன்சேகா என்ற தனிமனிதன் என்றதாலோ, அவரின் கைது நடக்கவில்லை. மாறாக பாசிசத்தின் நகர்வு. இரண்டாவது போர்க்குற்றத்துக் எதிராக சாட்சிமளிக்க தயார் என்ற ஒருவரை, பாசிசம் இன்று அழிக்க முனைகின்றது. கைது அரசியல் ரீதியானது. ஜனநாயகத்துக்கு புறம்பானது. போர்க்குற்றத்தை மூடிமறைத்தலாகும்.  இந்த வகையில் இதற்கு எதிரான போராட்டம், பாசிசத்துக்கு எதிரான போராட்டமாகும்;. மக்கள் நலனுடன் பின்னிப்பிணைந்தது.

 

மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருந்த சரத் பொன்சேகாவின் மனைவி அநோமா விட்ட கண்ணீரின் பின் உள்ள உண்மையை யாரும் நிராகரித்துவிட முடியாது. அவர் தன் பேட்டி ஒன்றில், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நாளை இது நடக்கலாம் என்;று மக்களைப் பார்த்துக் கூறியது என்பது, எதார்த்தமானது. இதை யாரும் மறுக்க முடியாது. "சிங்களவனுக்குத் தானே" என்று கூறி, இனவாதத்தில் நாம் மூழ்கிவிட முடியாது. அது முழு மக்களையும் தான் ஒடுக்கும். 

 

தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?

 

எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், இதுதான் கடந்த காலத்தில் நடந்தது என்பதை சொல்லியபடி அவர்களுக்காக போராட வேண்டிய காலமிது. காணாமல் போன எங்கள் உறவுகளை மீட்க, அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள, தங்களையும் இதில் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய காலமிது. இது வெறும் சிங்கள மக்கள் சார்ந்த பிரச்சனையல்ல. ஜே.வி.பி காலகட்டத்துக்கு பிந்தைய காலத்தில், தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று சிங்கள மக்களுக்கு எதிராக தொடங்கியுள்ளது.

 

சிங்கள மக்கள் மீண்டும் இதை முதன் முதலாக உணரும் காலகட்டத்தில், தமிழ்மக்கள் அவர்களுடன் சேர்ந்து நின்று, அதை சிங்கள மக்களுக்கு சொல்லும் காலமிது. அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டிய காலமிது.

 

எங்களுக்கும் நியாயத்தை வழங்கக் கோரியும், இந்தக் கைதை எதிர்த்தும் போராட வேண்டும்;. மகிந்தா குடும்பம் கடத்தி காணாமல் போன பல ஆயிரம் பேரின் கதி என்ன? இதை ஒரு குரலில் நாமும் கேட்க வேண்டிய காலமிது. பல பத்தாயிரம் மக்களை கொன்று குவித்த யுத்தக் குற்றவாளிகளை, நீதியின் முன் நிறுத்துவதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இதற்காக உரத்துக் குரல் கொடுங்கள்

 

இதற்குள்ளான மையக் கோசங்கள்

 

போர்க் குற்றத்தை விசாரணை செய்!

சாட்சியமளிக்க அனுமதி!


சாட்சியத்தை அழிக்காதே!

நாட்டை பாசிசமயமாக்காதே!


குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவாதே!


இராணுவ ஆட்சியை திணிக்காதே!

 

பி.இரயாகரன்
11.02.2010