நடிகர் ஜெயராம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறிய தடித்த தமிழச்சி குறித்த நகைச்சுவை தரமானது அல்ல, சற்று ஆபாசமானதுதான். பொதுப்புத்தியில் இத்தகைய நகைச்சுவை, சாதாரண மக்களை கேலிசெய்யும் பார்வை ஊடுறுவியிருக்கும் போது ஜெயராமை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன்?

ஒருவேளை ஜெயராம் தமிழச்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் வெறும் வேலைக்காரி என்று கூறியிருந்தால் இப்போது குதிப்பவர்கள் யாரும் துள்ளமாட்டார்கள். வேலைக்காரிகளைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப்போகிறார்கள்?

 

நாட்டில் கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த தொலைக்காட்சி நேர்காணலை புலனாய்வு செய்து கண்டு பிடித்து பிரதியை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கிய சிகாமணிகள் யாரென்று தெரியவில்லை. பத்திரிகைகள், தமிழ் சானல்கள் எல்லாம் இதை உலக மகா பாதகம் போல கட்டியமைத்தன. ஈழத்தமிழன் சாவதை வேடிக்கை பார்த்த தமிழர் தளபதிகள் எல்லாம் அறிக்கைகளின் மூலம் களத்திலறங்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.

 

பொதுச்சூழல் இப்படி வாகாக மாறியிருப்பதைப் பார்த்து காகிதப்புலி சீமானின் தம்பிகள் ஜெயராமின் வீட்டை போலீஸ் பாதுகாப்புடன் தாக்கிவிட்டு புறநானூற்றுத் தமிழனின் பெருமையை மீட்டு வந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக ஜெயராம் மன்னிப்பு கேட்டதால் இந்தப்பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

 

தமிழனை 24 மணிநேரமும் ஆங்கிலத்தாலும், தமிங்கிலத்தாலும் இழிவு படுத்தும் வேலையை சன்னும், கலைஞரும் செவ்வனே செய்து வருகின்றன. இதையே பெரியதிரையில் கோடம்பாக்கம் செய்து வருகிறது. கோடம்பாக்கத்து கவிராயர்கள் எல்லாம் அர்த்தமில்லாத லாலாக்கு டோல்டப்பிமா பாடல்களையும், அப்பட்டமான ஆங்கில வரிகளுக்கிடையில் சில தமிழ்வார்த்தைகளைச் சேர்த்தும் பாடுகிறார்கள். ரிலையன்ஷ் பிரஷ் பெயர்ப்பலகை ஆங்கிலத்திற்கு 90 சதவீதத்தையும், தமிழுக்கு போனால் போகிறதென்று பத்தையும் ஒதுக்கியிருக்கிறது.

 

தனது படங்களில் கறுப்பான தமிழச்சிகளைப் புறக்கணித்து பாவனா போன்ற வெள்ளையான மலையாள நடிகைகளை பயன்படுத்தும் சீமானின் வீரத்தம்பிகள் தாக்கியிருக்க வேண்டுமென்றால் இவர்களைத்தானே பின்னியிருக்கவேண்டும்? அத்தகைய வீரமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பதைவிட அப்படி சிந்திப்பதற்கு மூளைகூட அனுமதி தராது. அப்படி சுயதணிக்கை செய்து கொண்டு தமிழைக் கொல்லும் தளபதிகளின் தயவில் வெற்றுக்கூச்சல் போடுவதுதான் அண்ணன் சீமானின் அரசியல் போலும். ஆனால் அந்த வெற்றுக்கூச்சலைக்கூட தெற்காசிய முதலாளியாகிவிட்ட கருணாநிதி அனுமதிக்க மாட்டார் என்பது வேறு விசயம்.

 

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?

 

மும்தாஜ், ஷகிலா உள்ளிட்ட நடிகைகளை பெரிய மார்புடைய மலையாளப் பெண்களாகக் காட்டி காமத்திற்கு அலையும் சேச்சிகளாக விவேக்  உணரவைப்பது மட்டும் போற்றத்தக்கதா? விவேக்கின் இந்த நகைச்சுவைக்கு ஒரு சமூக அடிப்படையும் இருக்கத்தான் செய்கிறது. “மலையாளப் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிது, காம உணர்ச்சி அதிகம், கணவன் வெளிநாட்டில் இருப்பதால் சுலபமாக சேச்சிகளை வளைக்கலாம், அல்லது சேச்சிகள் இன்பத்திற்காக அலைவார்கள், அங்கே கள்ள உறவு அதிகம்” இப்படித்தான் தமிழக இளைஞர்களிடம் மலையாளச் சேச்சிகளைப் பற்றி பொதுக்கருத்து நிலவுகின்றது.

 

தமிழனைக் காட்டானாக சித்தரிப்பதைவிட இது கேவலமில்லையா?  இதையெல்லாம் ஒரு புகாராக மலையாளிகள் என்றும் சொன்னதில்லையே? மலையாளிகள் தமிழனது உருவத்தையும், வடிவத்தையும் கேலிசெய்வதற்கும் தமிழர்கள் மலையாளிகளின் ஆளுமையையும், பண்பையும் கேலி செய்வதற்கு பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது நகைச்சுவையாகவும் பின்னது காழ்ப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.

வெளியிடப்படும் புதுத்தமிழ்ப்படங்கள் எல்லாம் கேரளாவின் எல்லா நகரங்களிலும் ஓடுகின்றன. இங்கு வெற்றி பெறும் அல்லது கவனத்தைப் பெறும் முக்கியமான படங்கள் அங்கும் பாராட்டப்படுகின்றன. முக்கியமாக கேரளாவில் ஓடும் தமிழ்ப்படங்களை பார்ப்பது மலையாளிகள் என்பதுதான் முக்கியம்.

 

ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள். பலான மலையாளப்படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள். அதுவும் மாமனாரின் இன்ப வெறி, காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன். தமிழ், மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம் இப்படித்தானே இருக்கிறது?

 

இன்னும் கேராளவின் கிரன் தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் ஓடுகின்றன. பாடல் போட்டிகளுக்கு வரும் மலையாளப்பாடகர்கள் பிரபலமான தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். 80,90களின் சாதாரண மலையாளிகளது விதம்விதமான வாழ்க்கைகளைச் சித்தரிக்கும் நல்ல மலையாளப்படங்களின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்தை தமிழ் மசாலா ஃபார்முலாவிற்குள் கொண்டு வந்ததுதான் தமிழ் படங்கள் கேரளத்திற்கு செய்திருக்கும் தொண்டு. தமிழில் கிளாமர் போட்டியில் தோல்வியடைந்த நடிகைகளை மலையாளத் திரையுலகம் குடும்பப் பாங்கானா பாத்திரங்களுக்கு பயன்படுத்துமென்றால், மலையாளத்தில் குடும்பப் பாங்கான பாத்திரங்களை நடிக்கும் இளம் நடிகைகளை கவர்ச்சி கன்னிகளாய் பிரபலமாக்குவதுதான் தமிழ்த் திரையுலம் செய்யும் எதிர்வினை.

 

சித்ரா, சுஜாதா உள்ளிட்ட மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஏராளமான பின்னணிப் பாடகர்கள் தமிழ்ப்படங்களுக்காக பாடியிருக்கிறார்கள். அது போல தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவும் கேரளத்தில் பிரபலம். தமிழக அரசியல் செய்திகள் கூட மலையாளப் பத்திரிகைகளில் முதன்மையாய் இடம்பெறும். கேரளச்செய்திகள் அப்படி இங்கு இடம்பெறாது. ஜெயா, கருணாநிதி பற்றி சராசரியான மலையாளி அறிவானென்றால் இங்குள்ளோருக்கு நம்பூதிரிபாடும், நாயனாரும், கருணாகரனும், அச்சுதானந்தனும் அதிகம் தெரியாது என்பது உண்மையுங்கூட.

 

மொத்தத்தில் கேரளம் பொருளாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு வகைகளுக்கும் தமிழகம் என்ற பெரிய அண்ணனைத் தொடரும் சிறிய தம்பியாகத்தான் வாழ்கிறது. அதனால்தான் தமிழகத்தைப்பற்றி ஒரு சராசரியான மலையாளி அறிந்து வைத்திருக்கிறான். கொச்சி துவங்கி திருவனந்தபுரம் வரை நீங்கள் தமிழில் பேசியபடி எங்கும் செல்லலாம். வரலாற்றிலும், மொழியிலும், தேசிய இனத்திலும் தமிழிலிருந்து பிரிந்து வளர்ந்த இனம்தானே அது? அப்போது தமிழும் கூட ஒரு தேசிய இனமாக தலையெடுத்திருக்கவில்லை. அத்தகைய தொல்குடி உறவு இன்றும் தொடர்கிறது என்பதை வெத்துவேட்டு தமிழ் வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

நல்லது, கெட்டதுகள் எல்லாம் எல்லா தேசிய இனங்களுக்கும் சொந்தம்தான். ஒன்று முன்னேறியது, மற்றது பிற்போக்கானது என்றெல்லாம் இல்லை. தமிழில் பார்ப்பனிய எதிர்ப்பு வலுவாக இருந்தது என்றால் கேரளத்தில் அப்படி இல்லை. கேரளத்தில் இடதுசாரி இயக்கம் வலுவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை. இங்கே கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவதும், சங்கராச்சாரியை கைது செய்வதும் நடக்க முடிந்தது என்றால் கேரளத்தில் நடக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்க உரிமை கேரளத்தில் பலம் வாய்ந்தது என்றால் தமிழகத்தில் அப்படி இல்லை.

 

அதனால்தான் தினசரி உடலுழைப்புக் கூலிவேலைக்கு கேரளத்தில் ஊதியம் அதிகம் என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பல இளைஞர்கள் கேரளம் செல்கிறார்கள். சொரணைபடக் கூறுவதென்றால் இங்கு தமிழனது சுரண்டலால் வாழ முடியாமல் தமிழர்கள் கேரளத்திற்கு படையெடுக்கிறார்கள். கேரளத்தில் கல்வியறிவும், பெண்ணுரிமையும் அதிகம் என்றால் தமிழகம் பெண் சிசுக்கொலைகளோடுதான் இன்னும் இருக்கிறது. இப்படி மாற்றி மாற்றி இரண்டு மாநிலங்களும் மற்றதின் நல்ல விசயங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள ஏராளமிருக்கின்றன.

 

முல்லைப்பெரியாறு பிரச்சினை முற்றிலும் கேரள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினை. அதற்கு கணிசமான மக்கள் பலியாகியிருந்தாலும் அதை வைத்து மட்டும் மலையாளிகளை எதிரிகளென்று சித்தரிப்பது அயோக்கியத்தனம். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமல்படுத்தினால் அணையின் எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறிய சில ஆயிரம் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதற்காகவே கேரள அரசியல்வாதிகள் அதை அயோக்கியத்தனமாக எதிர்க்கிறார்கள். இதை வைத்து தமிழகத்தின் மீதான வெறுப்பை கேரள மக்களிடம் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். அனால் கேரளத்தின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தை புறக்கணித்து விட்டு ஒரு நாள் கூட வாழ முடியாது.

 

எல்லா உயிராதாரப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளத்திற்கு செல்கின்றன. அதை வைத்து கேரளத்தின் எல்லையில் இருக்கும் தமிழக விவசாயிகள் பயனடைகிறார்கள். நாமக்கல்லின் கோழிக்கும் முட்டைக்கும் கேரளாவும் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது. இதை வைத்து கேரளத்திற்கு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தவேண்டுமென சில தமிழினவாதிகள் மிரட்டுகிறார்கள். அப்படி நிறுத்தினால் முதலில் பாதிக்கப்படுவது இங்குள்ள விவசாயிகள்தான். சொல்லப்போனால் அவர்களே அதை முதலில் எதிர்ப்பார்கள். கேரள மக்களிடம் தமிழகத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைக்கும் சாதகமான நிலை வாழ்க்கையில் உள்ளது. அதே சமயம் இதற்கு எதிராக இருக்கும் கேரள போலிக் கம்யூனிஸ்டுகளை முல்லைப்பெரியாறு விசயத்தில் அம்பலப்படுத்துவதும் அவசியம்தான்.

 

நமது தரப்பு நியாயத்தை புரியவைப்பதற்காக கேரளத்தின் மீதான பொருளாதார முற்றுகை போராட்டம் கூட கடைசிபட்சமாக நடத்தலாம் என்றாலும் இருமாநில மக்களின் நலனை வைத்தே அதை முடிவு செய்யவேண்டும். அதை வைத்து தமிழனவாதிகளும் – வெறியர்களும் ஆதாயம் அடைவதை பெருங்கேடாக நினைத்து முறியடிக்க வேண்டும்.

 

எம்.கே. நாராயணன், சிவசங்கர்மேனன் என்ற உயர் அதிகாரிகளை வைத்து மலையாளத்துக்காரர்கள் ஈழத்திற்கெதிராக சதி செய்வதாக முன்னர் பல அறிவாளிகள் பேசினார்கள். அப்படி சதி செய்தற்கு இது என்ன செல்வராகவனின் ஃபேன்டசி படமா என்ன? அவர்கள் இந்திய அரசின் அதிகாரிகள். இந்திய முதலாளிகள் – அதிகார வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுபவர்கள். அவர்களுக்கெல்லாம் தேசிய இனமென்ற அடையாளமெல்லாம் கிடையாது. அவர்கள் இடத்தில் தமிழ்பேசும் தமிழர்கள் அதிகாரிகளாக இருந்திருந்தால் அவர்களும் அதேதான் செய்திருப்பார்கள்.

 

விடுதலை இராசேந்திரனும், மணியரசனும் ஒரு பெரும் மலையாள அதிகாரிகளின் பட்டியலை வைத்து அப்போது இதை மாபெரும் கண்டுபிடிப்பாகவும் ஈழத்தின் துயருக்கு முக்கிய காரணமென்றும் சித்தரித்து வந்தார்கள். ஒரு அதிகார வர்க்கத்தின் இயங்குதன்மையைக் கூட புரிந்து கொள்ளாத இவர்களது முட்டாள்தனம் ஆச்சரியமளிக்கக் கூடியது. பாசிச ஜெயாவை வைத்து புலிகளுக்கு தப்பான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பின்பு தங்களது தவறுகளை மறைக்க இப்படி மலையாள துவேசத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை துரத்த வேண்டுமென்று பெ.மணியரசன் தலைவராக இருக்கும் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.

 

தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் யார்? சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இங்கிருக்கும் மலையாளிகளில் ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர்க்கடையில் வேலை செய்பவர்களாகவும், பெண்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களாகவும் இருக்கின்றனர். இவர்களையா துரத்த வேண்டும்?

 

குறிப்பான விவசாய வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ அற்ற கேரளத்தில் வாழ்ந்து பிழைக்க முடியாது என்றுதான் பலரும் பல இடங்களில் குடியேறி வேலை செய்கின்றனர். முன்னர் போல வளைகுடா நாடுகளுக்கு சென்று பிழைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற காரணத்தினால் இத்தகைய இடப்பெயர்ச்சி முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல எல்லா மாநில மக்களுக்கும் ஏன் தமிழர்களுக்கும் கூட உண்டு.

 

சென்னையில் தேநீர்க்கடை வைத்திருக்கும் மலையாளிகளும் அங்கே வேலை செய்யும் மலையாளிகளும் அல்லும் பகலும் கடின உழைப்புடனே நாட்களைத் தள்ளுகிறார்கள். அதிகாலையில் ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு வரை ஒயாது. குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு இங்கு எந்திரவாழ்க்கை வாழ்ந்து கொண்டு சென்னை மாநகரம் முழுமைக்கும் எல்லா நேரமும் இனிய தேநீர் வழங்கும் இந்த மக்களைப் பார்த்து வெளியேற்றுவோம் என்று சொன்னால் அந்த முண்டங்களை எதைக் கொண்டு அடிப்பது?

 

கையேந்தி பவனில் சம்சாவும், ஜிலேபியும் விற்கும் இந்தி பேசும் சிறுவனும் அம்பானியும் ஒரே தேசிய இனமா என்ன? இப்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையில் பல இன மக்களும் கலந்து விட்டார்கள். இரவுக் காவலுக்கு நேபாளத்துக் கூர்காக்கள், குழிதோண்ட கன்னட உழைப்பாளிகள், தொழிற்சாலைகளில் பீகார் இளைஞர்கள், காங்கீரீட் கலவைக்கு தெலுங்கு தொழிலாளர்கள், பாலீஷ் வேலைக்கு ராஜஸ்தான் தொழிலாளிகள், ஒட்டல் வேலைக்கு வடகிழக்கு இளைஞர்கள் என்று பார்த்தால் இங்கே மட்டுமல்ல முழு தமிழக நகரங்களிலும் இந்தக் கலப்பு நடந்தேறி வருகிறது. இதேபோல தமிழக தொழிலாளிகளும் கேரளா, பெங்களூர், மும்பை என்று செல்கிறார்கள்.

 

இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத் திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின் விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

 

இந்தியாவில் மொழிகளும், தேசிய இனங்களும் விதவிதமாக பிரிந்திருந்தாலும் வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாக ஒன்றாக இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தேசிய இன அடையாளங்களைக் கடந்து ஒன்றானால்தான் அதே அடையாளமின்றி வர்க்க ரீதியாக சுரண்டும் முதலாளிகளை எதிர்க்க முடியும். சென்னையில் முதல்முறையாக ம.க.இ.க தோழர்கள் கிரீன் ஹண்டுக்கெதிரான பிரச்சார இயக்கத்திற்காக இந்தியில் துண்டுப் பிரசுரம் போட்டு வடமாநிலத் தொழிலாளர்களிடம் விநியோகித்தார்கள். போதுமான கல்வியறிவு இன்றி அதை எழுத்துக்கூட்டிப் படித்த தொழிலாளிகளுக்குத்தான் எத்தனை ஆர்வம்? தங்களடமிருந்த நிதியை மனமுவந்து அளித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். அவர்களது வாழ்க்கைக்கு தொடர்பேதுமில்லாத மத்திய இந்தியாவின் மலைவாழ் மக்களுக்கு ஆதரவான அவர்களது புரிதல்தான் இந்த ஒற்றுமையின் பலம். சட்டீஸ்கரின் ஆதிவாசிக்காக, தமிழ்நாட்டுத் தமிழன் பீகாரின் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இனிய ராகத்தின் வெளிப்பாடு.

 

அலைந்து திரிந்து ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி சூடாக, ஸ்டாராங்காக ஒரு தேநீர் குடிக்கும் போது அது நமது சேட்டன் போட்ட தேநீர் என்ற உழைப்பின் சுவையை நீங்கள் உணர்ந்திருந்தால் இந்த மலையாள துவேசத்தை வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டும். மலையாளிகளைத் துரத்தவேண்டும் என்று எக்காளமிடும் சிறு கூட்டத்தை நிர்மூலமாக்க வேண்டும். இது தேநீருக்கு செய்யப்படும் நன்றிக்கடன் அல்ல. உழைக்கும் மக்கள் தங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டிய வர்க்க ஒற்றுமை. அந்த ஒற்றுமைதான் இந்தியாவின் எல்லாச்சாபக்கேடுகளையும் வீழ்த்தும் வல்லமையைக் கொண்டிருக்கிறது.

 

http://www.vinavu.com/2010/02/11/tamil-malayalam/