12032022
Last updateபு, 02 மார் 2022 7pm

சரத் பொன்சேகாவின் கைது : போர்க்குற்றச் சாட்சியங்களை அழிக்கும் மற்றொரு போர்க்குற்றம்

மகிந்த குடும்பமும், சட்டவிரோதமான கொலைகார கும்பல் ஒன்றும் நடத்திய யுத்த குற்றங்களை, ஒரு விசாரணையில் வெளிப்படுத்த தயார் என்ற அறிவித்தார் சரத் பொன்சேகா. யாரையும் காப்பாற்ற முடியாது என்றார். மறுகணம் சரத் பொன்சேகாவை கைது செய்யுமளவுக்கு, மகிந்த குடும்பத்தின் போர்க் குற்றம் மிகப் பாரியது.

சட்டத்துக்கு புறம்பான குற்றக் கும்பல் ஒன்றைக் கொண்டு, ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தது மகிந்த குடும்பம். இதை வெளிப்படுத்தத் தயார் என்ற அறிவித்ததைத்  தொடர்ந்து, கொலைகாரக் கும்பல் முன்னாள் இராணுவ தளபதியையும் எதிர்க்கட்சி வேட்பாளரையும் கைது செய்து கொட்டமடிக்கின்றது.

 

இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. க்கு எதிராக இரண்டு அழித்தொழிப்பை நடத்திய இலங்கை அரசு, பல பத்தாயிரம் பேரை படுகொலை செய்தது. இந்தப் படுகொலைக்காக யாரையும், எந்த நீதிமன்றமும் விசாரித்தது கிடையாது, தண்டித்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இனங்களைப் பிளந்தவர்கள், இனவழிப்பு போரை அரசு நடத்திவந்தனர். பல பத்தாயிரம் மக்களை இனத்தின் பேரால் கொன்றனர். இறுதி யுத்தம் என்ற பெயரில் இன அழித்தொழிப்பை நடத்தியவர்கள், மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர்.

 

இது பற்றி பொது சமூக அக்கறை இன்றி, குறுகிய தளத்தில் இக் குற்றங்கள் அர்த்தமற்று போனது. ஆளும் வர்க்கங்கள் உருவாக்கிய இனப்பிளவுகளைக் கொண்டு, வர்க்கப் பிளவுகளைக் கொண்டு, இந்த குற்றங்களை நியாயப்படுத்தி அதை பாதுகாத்தனர். ஏன் அதையே தங்கள் அரசியலாக கொண்டு தொடர்ந்தனர். 1970 முதல் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை வௌ;வேறு சமூக காரணங்களின் பின்னணியில், சில இலட்சம் பேரைக் கொன்ற ஆளும் வர்க்கம் கொல்வதையே 40 வருட அரசியலாக்கியிருக்கின்றது.

 

இன்று இந்த ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்ட பிளவு, இதற்கு முடிவுகட்டுகின்றது. முதன் முதலாக  குற்றத்தின் ஒரு பகுதியை முன்னிறுத்தி பிளவு ஆழமாகின்றது. இது சமூக விழிப்புணர்வுக்கு அத்திவாரமாக மாறியுள்ளது. சரத்பொன்சேகாவின் கைது, அதைத் தொடர்ந்து அரசியல் விளைவும் பாரியது.

 

இது சமூகத்தின் இனப்பிளவை தகர்க்கும். கடந்தகால போர்க் குற்றங்களை முன்னுக்கு கொண்டு வரும். ஜே.வி.பி அழித்தொழிப்பு படுகொலைகள் முதல் தமிழினத்துக்கு எதிரான அனைத்து படுகொளையும் முன்னிறுத்தி அணுக, அறைகூவல் விடுகின்றோம். சரத்பொன்சேகாவை கைதூடாக, அதற்கு எதிர்வினை இந்த வகையில் பொதுமைப்படுத்தி அணுக வேண்டும்.

 

சரத் பொன்சேகாவின் போர்க் குற்றமும், அரசின் போர்க் குற்றமும் ஒன்றல்ல. சரத் பொன்சேகாவின் குற்றங்கள் இராணுவ வடிவம் சார்ந்தது. அதுவும் முழுமையாக அவர் அதைக் கையாண்டர் என்ற சொல்ல முடியாத அளவுக்கு, மகிந்த குடும்பத்தின் தலையீடு வழிகாட்டலும் அத்துமீறலும் ஆதிக்கம் வகித்திருக்கின்றது. அதுதான் சரத்பொன்சேகாவின் ஆரம்பப் பிளவு.

 

இதன் பின்னணியில் மகிந்த அரசு நடத்தி போர்க்குற்றம் பாரியது. அனைத்து யுத்தக்குற்ற முடிவுகளை எடுத்தது முதல் இரகசியமாக கடத்திவர்களை கொன்றும் கைதானவர்களை படுகொலை செய்தும், பாரிய படுகொலை வெறியாட்டத்தை அரசு நடத்தியது. பல பத்தாயிரம் பேரை யுத்தமல்லாத ஒரு சூழலில் வைத்துக் கொன்றது. சரத் பொன்சேகா யுத்தம் குற்றம்பற்றி பேச முற்படுவது, அதை முன்னிறுத்தி அந்த சூழலை உருவாக்குவது அவசியமானது. 

      

தமிழர்களைக் கொன்றவர்கள், இன்று தங்கள் அரசியல் எதிராளிகளை அதே பாணியில் வேட்டையாடுகின்றனர். இப்படி மகிந்தா குடும்பம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாசிசம், சரத்பொன்சேகா கைதுடன், எல்லாவிதமான ஜனநாயக வேசத்தையும் களைந்து இன்று நிர்வாணமாகியுள்ளது. புலிகள் கூட இந்தளவு வேகமாக பரந்துபட்ட மக்கள் முன் அம்பலப்பட்டது கிடையாது. அதைவிட வேகமாக மகிந்த குடுப்ப சர்வாதிகாரம், இன்று அம்பலமாகத் தொடங்கியுள்ளது.

 

இந்த பாசிட்டுகளுக்கு எதிரான சரத்பொன்சேகாவின் தொடர்ச்சியான பதிலடி, இனவழிப்புப் பற்றி சாட்சியம் அளிக்கத் தயார் என்ற எல்லைக்கு அவரை இட்டுச் சென்றுவிட்டது. நாட்டை ஒரு சர்வாதிகார குடும்பம், ஒரு இரகசிய சட்டவிரோத கும்பல் மூலம் நடத்தும் இராணுவ ஆட்சியை எதிர்த்து, சரத் பொன்சேகாவின் குரலோ அதிகார வர்க்கத்துக்கு இடையிலான ஒரு மோதலாகத்தான் முதலில் உருவானது.

 

இதுவே அவரை எதிர்க்கட்சி வேட்பாளராக்கியது. போட்டி இனவழிப்பு வேட்பாளராக அவரை மாற்றியது. தொடர்ந்து நடந்த தேர்தல் மோசடி மூலம் வென்ற மகிந்த கும்பல், அதை அம்பலப்படுத்தி சரத் பொன்சேகாவின் நிலையும், ஆளும் வர்க்கத்தின் ஆட்சிபீடத்தை நிலை குலைய வைக்கின்றது. இராணுவ சதி என்ற ஒரு பொய்க் குற்றச்சாட்டையும், அவதூறையும் அள்ளி வீசியது அரசு. இதனால் சரத் பொன்சேகா சரணடைந்துவிடவில்லை. அவர் பதிலடியாக தமிழினத்துக்கு எதிரான போர்க்குற்றத்தை முன்னிறுத்தி நகர்வு, பேரினவாத அரசை கிலியடைய வைத்துள்ளது. அது அவரை கைது செய்து, போர்க்குற்றத்தை மூடிமறைத்துவிடலாம் என்று தன் பாசிச வழியில் சிந்திக்கின்றது. இதனால் தங்கள், தங்கள் போர்க்குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று நம்புகின்றது.

 

சரத் பொன்சேகா பின்னணியில் மேற்குநாடுகளின் நலன்கள் இருந்த போதும், சரத் பொன்சேகாவின் போராட்டம் தனிப்பட்ட ஆளுமை சார்ந்து, அரசுக்கு எதிரானதான குணாம்சம் பெற்று நிற்கின்றது. கடந்த காலத்தில் தமிழின அழிப்புக்கு எதிராக இருந்த ஒன்றுபட்ட சிங்கள மேலாதிக்கத்தை, இது முதன் முதலாக இலங்கை வரலாற்றில் தகர்த்தெறியத் தொடங்கியுள்ளது.

 

அரச பாசிசம், சரத் பொன்சேகாவையே தமிழினவழிப்பை வெளிப்படையாக பேச வைத்துள்ளது. போரக்; குற்றங்கள் எல்லயைற்று நிகழ்ந்தது என்பதையும், அங்கு தமிழினவழிப்பு நடந்தது என்பதையும், சிங்கள மக்கள் முன் முதன் முதலாக ஒரு இராணுவத் தளபதியும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளரையும் சொல்ல வைத்துள்ளது. அவரையும் அதே வழியில் அழித்துவிடவே, அரச பாசிசம் முனைகின்றது.

 

"உண்மையை பேசுவது துரோகமல்ல" சரத் பொன்சேகாவின் கூற்று, சிங்கள மக்கள் மத்தியில் ஆழமான அரசியல் விளைவுகளைக் கொண்டது. சரத்பொன்சேகாவை ஆதரித்த எதிர்க்கட்சியினர், உண்மையான ஒரு எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு இந்த கைது வழிகாட்டியுள்ளது. இந்த வகையில் மக்கள் மத்தியில் ஒரு ஆழமான பிளவுக்கு, இது வித்திட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் நகர்வு, கட்சிகள் முதல் மக்கள் வரை  ஒரு பிளவை நிர்ப்பந்தித்துள்னது.

 

ஜே.வி.பி. முதல் எதிர் கட்சிகள் வரை இனவழிப்பும், தமிழர் படுகொலையும் நடக்கவில்லை என, கூறிவந்தன. இந்த இனவாத அரசியலை, சரத்பொன்சேகாவின் போரக்;குற்றம் பற்றிய கூற்று தகர்த்துள்ளது. எதிரக்;கட்சிகள் சரத்பொன்சேகாவின் இந்த அரசியலையும், போர்க்குற்றத்தையும் முன்னிறுத்தி போராட வேண்டி அவசியத்தை, சரத் பொன்சேகா தன் கைது மூலம் ஏற்படுத்தியுள்ளார். நாளுக்கும் நேரத்துக்கும் கட்சி மாறும் போக்கிரிகளை, இக் கைது ஆட்டம் காண வைத்துள்ளது.

 

இலங்கை அரசு சர்வதேசம் என்னும் புதை சேற்றில் புதையத் தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் பம்மாத்துகள் முடிவுக்கு வந்து விட்டது. இலங்கை மக்கள் இனவாதத்தைக் கடந்த புதிய அரசியல் தெரிவுக்குரிய ஒரு கட்டத்துக்குள் நுழைகின்றனர். அது பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தை, அடிப்படையாகக் கொண்டது.

 

ஒருபுறம் ஆளும் வர்க்கத்துக்கு எதிரான பிளவு, மறுபுறம் வன்முறை கொண்ட பாசிச ஆட்சியை இதன் மேல் திணிக்கும். வர்க்கப் பிளவுகள் ஆழமாகும். ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயும் பிளவு ஆழமாகும். குடும்ப சர்வாதிகாரம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாசிச இராணுவ ஆட்சிக்கு பதிலாக, மற்றொரு இராணுவ சதிக்குரிய நிலையை இக் கைது உருவாக்கியுள்ளது.        

 
இதை தடுக்க, மக்கள் இதற்கு எதிராக போராடுவது அவசியம். இக் கைது அரச பாசிசத்தின் விளைவு. இதை அரசியலாக்குவதும், கடந்தகால அனைத்து போர்க்குற்றத்தையும் முன்வைப்பதன் மூலம், அனைத்து இன மக்களை ஆளும் வர்க்கத்துக்கு எதிராக புரட்சிகரமாக அணிதிரட்டுவதே ஒரேயொரு மாற்று அரசியல் வழியாகும்.

 

பி.இரயாகரன்
09.02.2010

 


பி.இரயாகரன் - சமர்