“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.

கல்கி காலத்திலிருந்து இப்படித்தான் ஆ.விகடன் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை நையாண்டியின் பெயரில் நீர்த்துப் போகச்செய்யும் வேலையை செய்து வருகிறது. இதில் ஊழல், மோசடி, செய்யும் ஆளும் வர்க்க பிரதிநிகள் மட்டும் எப்போதும் இடம்பெறமாட்டார்கள். அதாவது அம்பானி, ஜெயேந்திரன் போன்ற ஒழுக்க சீலர்களை கேடி, கிரிமினல் காமடியன்களாக நீங்கள் சிரித்திருக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நகைச்சுவை இரசனையை தீர்மானிக்கும் இதன் மற்றொரு வெளிப்பாடுதான் எஸ்.வி.சேகரின் காமடி நாடகங்கள். இன்றைக்கு ஆ.விகடனில் இத்தகைய நகைச்சுவைகள் அதிகம் வருவதில்லை. சேகரின் நாடகங்களும் முன்பு மாதிரி பரபரப்பாக நடைபெறுவதில்லை. ஏன்?

விகடனோ, சேகரோ திருந்திவிட்டதனால் இது நடைபெறவில்லை. இவர்களின் பங்கை தொலைக்காட்சியின் விதவிதமான நையாண்டி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அதனால் முழு சமூகமும் அப்படி பேசி, சிரிக்க, சிந்திக்க பழகிவிட்டது. இந்த நகைச்சுவை உணர்வு ஆரோக்கியமானதா?

 


அதற்கு முன் மக்கள் எதற்கு சிரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தெருவில் கிடக்கும் வாழைப்பழத்தோலில் மிதித்து வழுக்கி மண்டை அடிப்பட்டு இரத்தம் ஒழுக கிடக்கும் போது முழு தமிழகமும் அவன் விழுந்ததை நினைத்து சிரிக்கிறது. சூழ்நிலையின் இயல்பில் நடக்கும் இந்த சிறு மாற்றமே சிரிப்பதற்கு போதுமானது என்பதால் சுருங்கச் சொன்னால் மக்கள் தங்களைப் பார்த்தே சிரிக்கிறார்கள்.

அரசியல், சமூக உரிமைகள், ஜனநாயகத்தில் என்ன தரம் இருக்கிறதோ அதுதான் நகைச்சுவையில் இடம் பெறுகிறது என்று சொன்னால் முதலில் உங்களால் ஏற்க முடியாமல் இருக்கலாம். ஜேயேந்திரன் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் போதும், ஜெயா ஈழம்பற்றி சவடால் அடிக்கும் போதும், அழகிரி நேர்மையான தேர்தல் முறை குறித்து பேசுவதும், ராகுல் காந்தி வாரிசு அரசியல் நல்லதல்ல என்று கூறுவதும், ரஜனி திருட்டு சி.டி குறித்து கோபப்படும் போதும் இங்கு யாருக்கும் சிரிப்பு வருவதில்லை. கோபமும் வருவதில்லை.

பிளாக் டிக்கெட் விற்ற காசில் சூப்பர் ஸ்டாரான கோடிசுவர ரஜினியும், வெளிநாட்டில் பீட்டர் வாழ்க்கையில் ஜாலியாக இருந்த ராகுல் வாரிசு என்ற ஒரே தகுதியில் வலம் வருவதும், மதுரை ரவுடிகளின் ரவுடி அழகிரி வள்ளலாகவும், தேர்தல் நிபுணராகவும் வரும் போது, ஈழம் பற்றி முனகினாலே போடாவில் போடும் ஜெயா ஈழத்தாயாக போற்றப்பட்ட போதும், ஜெயேந்திரனது கொலை, கூத்துக்களை மறந்து அவரது உலாச் செய்திகள் ஊடகங்களில் மரியாதையுடன் குறிப்பிடப்படும் நாட்டில் காமடிக்கு என்ன அருகதை இருக்க முடியும்?

உண்மையான கோபமும், ரோஷமும் வராத சமூகத்திடமிருந்து உண்மையான நகைச்சுவை மட்டும் வந்து விடுமா என்ன?

வாழ்க்கையின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாத போது மெலிதான சிணுங்கல் கூட தமிழனை சிரிக்க வைக்க போதுமானதாக இருக்கிறது. இந்த சிணுங்கலுக்கு தனது மூளையக் கழட்டி ஆணியில் மாட்டி விட்டு டி.வியின் முன்னால் அமரும் மனிதர்கள் சீக்கிரமே பழக்கப் படுகிறார்கள். வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவர்களது மொழி, அறிவு, இரசனை எல்லாம் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சமூக அறிவினால் தீர்மானிக்கப்படும் நகைச்சுவை உணர்வு நேரெதிராய் நகைச்சுவை உணர்வால் அறியப்படும் சமூக அறிவாக ஆபாசமாக மாறிவிடுகிறது.

தமிழ்ப்படத்தின் முதல் காட்சியில் ஒரு கிராமத்தில் ஆண் குழந்தைகளை கள்ளிப் பால் வைத்து கொல்லும் வழக்கம் உள்ளதாக காட்டப்படுகிறது. அதற்கான பிளாஷ் பேக் பஞ்சாயத்து காட்சியின் கிண்டலில் சிரிக்க ஆரம்பிக்கும் ரசனையின் மூலம் தமிழ் நெஞ்சங்கள் பெற்றதென்ன?

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்வது இன்னும் வழக்கில் உள்ளது. இவ்வளவு முன்னேற்றங்களும், வாழ்க்கை கருவிகளும் பெருகி விட்ட நாட்டில் இன்னும் ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியாது என்ற அவலம் மாறவில்லை. சமூகத்தின் பாதி எண்ணிக்கையிலிருக்கும் அந்த பாவப்பட்ட பாலினத்தின் தலையெழுத்துக்காக ஒவ்வொரு மனிதனுக் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாட்டில் அதே விசயம் ஒரு திரைப்படத்தின் அறிமுக நகைச்சுவையாக இருக்கிறது. அதுவும் ஆண் குழந்தைகள் கொல்லப்படுவது போல. இனி கள்ளிப்பால் கொடுமைகள் ஏதும் செய்தியாக வந்தால் படிப்பவர்கள் தமிழ்ப்படத்தை நினைத்து சிரித்து விட்டு போய்விடுவார்கள். அல்லது அந்தக் கொடுமையை செய்வதற்கு சமூகக் காரணங்களால் தள்ளப்பட்டவர்கள் அடைய வேண்டிய குறைந்த பட்ச குற்ற உணர்வை கூட இந்தப்படம் இல்லாமல் செய்து விடுகிறது.

பதிவுலகில் இப்படத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிய எந்தப் பதிவரின் அறிவுக்கும் இது தென்படவில்லை. ஏனெனில் அவர்கள் சிரிப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே.

கோவா, தமிழ்ப்படம் இரண்டிலும் ஆரம்பக் காட்சிகளாக கிராமப் பஞ்சாயத்து காட்டப்படுகிறது. தலைவர், மீசை, உறுமல், செம்பு, துண்டு, வேட்டி, வெற்றிலை எச்சில் எல்லாம் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா காட்டிய வகையிலும், காட்டாத வகையிலும் உள்ள நிஜ பஞ்சாயத்துக்களின் அருகதை என்ன? இந்த பஞ்சாயத்துக்களின் மூலம்தான் தீண்டாமை மறுப்பு மணம் செய்த காதலர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள், தலித் பெண்களை வல்லுறவு செய்த ஆதிக்க சாதி ஆண் பொறுக்கிகள் சில நூறு ரூபாய்களை அபராதமாக கட்டிவிட்டு தப்பித்திருக்கிறார்கள், இரண்டாவது மணம் செய்வதற்காக முதல் மனைவிகள் எந்த நிவராணமுமின்றி வெட்டி விடப்பட்டிருக்கிறார்கள், தீண்டாமை குற்றத்தை மீறி செருப்பு போட்டதற்காகவோ, இல்லை சைக்கிள் மிதித்ததற்காகவோ பல தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஊரை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள்… என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

சாதி ஆதிக்கத்தையும், பணம் படைத்தோரின் சட்டங்களையும் இன்றும் நிலைநாட்டி வரும் இந்தப் பஞ்சாயத்துக்கள் இந்த இரண்டு படங்களிலும் எப்படி செம்பு, வெத்தலையாக மாற்றப்பட்டிருக்கிறது பாருங்கள்? இதைப்பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்கள் இனி இத்தகைய கொடுமை பற்றிய செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? பொய்மையின் இருட்டில் உண்மையின் வெளிச்சம் அழிக்கப்படுகிறது.

தமிழ்ப்படத்தில் மாஸ் ஹீரோ, ஓப்பனிங் சாங், விரலைசைவு, கட்டவுட், வில்லன்களை வீழ்த்துவது எல்லாம் மேலோட்டமாக கிண்டலடிக்கப்படும் போது இரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகள் எந்தப்படத்தை நினைவு படுத்துகிறது என்று பேசியவாறு சிரிக்கிறார்கள். உடன் கண்டுபிடிப்பவர்கள் பொது அறிவில் விற்பன்னராக ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் நினைவு படுத்தப்பட வேண்டிய விசயங்கள் என்ன?

சூப்பர் ஸ்டார்களை யார் உருவாக்குகிறார்கள்? சினிமா முதலாளிகள், ஊடக முதலாளிகள் இருவரும் பெரும் இலாபத்தை பறிக்க வேண்டுமானால் இந்த நட்சத்திரங்கள் அவசியம். குறிப்பிட்ட நடிகரின் குறிப்பிட்ட ஃபார்முலா நடிப்பு தற்செயலாக வெற்றி பெற்று விட்டால் அவருக்கு ஊதியத்தை கோடிகளில் பெருக்கி, பம்பாய் நடிகை, அமெரிக்க படப்பிடிப்பு என்று ரிச்சாக உயர்த்துவது யார்? ரஜினி அமெரிக்காவில் மொட்டை அடித்த கதையும், இமயத்தில் ஒன்னுக்கு போன கதையும், கனடா மாப்பிள்ளைக்காக வெட்கப்படும் ரம்பாவின் முகமும், நவ்யா நாயரின் திருமணத்தை விலாவாரியாக விவரிப்பதும் யார் செய்கிறார்கள்?

மணிரத்தினத்தின் வீட்டில் சிறு குண்டு வீசப்பட்டு அதை ரஜினி கண்டித்து அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்ட நேரத்தில் அதற்கு அஞ்சிய தளபதிகள், தமிழினத் தலைவர்கள், புரட்சிப்புயல்கள் எத்தனை பேர்?

இப்படி தமிழனின் அன்றாட கவலையாக மாறிவிட்ட நட்சத்திரங்களை கிண்டல் செய்யவேண்டுமென்றால் இவர்கள் எல்லோரையும் திரையில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் அடிமுட்டாளான ரஜினியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து படியளக்கும் கோமாளி விஜயகாந்தும், தமிழ் தெரியாததை உயர்வாக நினைக்கும் தமிழ்ப்பெண் த்ரிஷாவும், தமிழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்டதை போட்டு உடைக்க முடியும்.

தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் வரும் ரேப் சீன்களைக் கிண்டல் செய்வதற்காக சொர்ணா அக்கா எனும் ரவுடிப்பெண் ஒரு கல்லூரி இளைஞனை வல்லுறவு செய்ய முயல்வதாக காட்டுகிறார்கள். இதற்கு முன் கற்பழிப்புக் காட்சிகளில் ஜாக்கெட் எப்போது கிழியும் என்று எதிர்பார்க்கும் ஆண் இரசிகர்கள் இதையும் பார்த்து சிரிக்கிறார்கள். காமத்தின் இடத்தில் காமடி. ஆனால் இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகமாக நடக்கின்றன. கல்லூரி மாணவியோ, இல்லத்தரசியோ மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டு சொல்லக்கூசும் அருவெறுப்புகள் நிகழ்த்தப்படும் காலத்தில் ஆண் கற்பழிப்பு எனும் கற்பனையே யாருக்கும் விகாரமாகத் தெரியவில்லையே?

ஜாக்கெட் தேவைப்படாமல் முக்கால் உடம்பைக் காட்டுவதே நாயகிகளின் தகுதி என்ற இந்தக்கால நிலையில் ஜாக்கெட் கிழிபடும் எம்.ஜி.ஆர் கால கற்பழிப்புக் காட்சிகள் மறைந்து விட்டன. இதில் கிண்டலடிக்க வேண்டுமென்றால் கற்பழிப்பை தடுத்து நிறுத்த வரும் ஹீரோவை மட்டுமல்ல, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு தவிக்கும் ஆண் இரசிகனையும் குறி வைக்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாக கணவன்மார்கள் மனைவிகளின் புடவையைத் துவைப்பதாக வரும் பத்திரிகை ஜோக்குகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ்ப்படத்தில் பிளாட்பார வியாபாரியாகவும், பேப்பர் போடுபவனாகவும் வேலை செய்யும் ஹீரோ பணக்காரனாகி விடுகிறான். சைக்கிள் கேப்பில் ஹீரோக்கள் வாழ்வில் உயர்ந்துவிடுவதைக் கிண்டலடிக்கும் பார்வையில் அந்த உழைக்கும் மக்கள்தான் உண்மையில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். நிஜத்திலோ, திரையிலோ உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை. மோசடி எனும் விதியன்றி யாரும் மில்லியனராகிவிடுவதில்லை. ஆனால குறுக்கு வழியில் பங்குச் சந்தை மூலம் லாட்டரி அடிக்கலாம் எனும் நடுத்தர வர்க்கம் தனது சேமிப்பு பணத்தை போட்டு எமாறுவது அதனுடைய தவறா இல்லை எல்லா பத்திரிகைளும் அப்படி பணக்காரராகிவிடலாம் என தன்னம்பிக்கை தொடர் வெளியிடுகிறதே அவர்களுடைய தவறா?

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்யும நாட்டில் இந்தியா 2020இல் வல்லராசாகி விடுமென்று கூவுகிறாரே தன்னம்பிக்கைகளின் பிதாமகன் அப்துல் கலாம், அவரை கிண்டல் செய்திருந்தால் நாமும் அதை வரவேற்றிருக்கலாம்.

கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிபணிந்து மாமூல் பெற்று சுவிஸ் வங்கியில் பில்லியன் கணக்கில் சேர்க்கும் போது தமிழ்த்திரைப்படம் மார்க்கெட் மாமூலை கிண்டல் செய்கிறது. முன்னாள் ரவுடிகள், சாராயம் காய்ச்சியோரெல்லாம் கல்வி வள்ளலாக கல்லா கட்டும் நேரத்தில் இந்த மாமூலெல்லாம் எவனுக்கு வேண்டும்?

கோவா படத்தில் வெள்ளைக்கார பெண்களை மணம் செய்து ஃபாரினில் செட்டிலாகிவிடலாமென மூன்று இளைஞர்கள் கோவா செல்கிறார்கள். எப்போதும் பிகினி பெண்களை இரசித்துக் கொண்டு பீர் குடித்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள். எந்தக் கதையும், பிரச்சினையும் இல்லாமல் குடி கும்மாளமென்று வாழும் இந்தப்படத்தை எடுப்பதற்கென்று இயக்குநருக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?

கிராமங்களலிருந்து வாழவைக்க முடியாத வாழ்க்கையால் சென்னைக்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும் விரட்டியடிக்கப்படும் இளைஞர்களின் காலத்தில் கோவா அவர்களைக் கேலி செய்கிறது.

வெள்ளையினப் பெண்ணை ஒரு இந்தியன் காதலித்து மணக்கிறான் என்றால் அதில் கேலிக்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன. இருவேறு பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இருவரின் வாழ்க்கையும் மோதும்போது ஏற்படும் விளைவுகளில் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நிறைய உள்ளன. ஆனால் கோவா படத்தில் அந்த வெள்ளையினப்பெண் காலால் கோலமிட்டு வெட்கப்படும் தமிழ்ப்பெண்ணாக மாற்றப்படுகிறாள்.

கருப்பை தேசிய நிறமாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆண் வெள்ளை நிறத்தின் மீது கொண்டிருக்கும் காம ஈர்ப்பை கேலி செய்வதற்குப் பதில்படம் ஆராதிக்கிறது. அது நிறைவேறவும் கூடுமென ஆசையும் காட்டுகிறது. நிறம், அழகு குறித்து இளையோரிடம் நிலவும் மூடநம்பிக்கைகளை கேலிசெய்து உண்மையை புரியவைத்து அவர்களது தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்கு பதில் கோவா படம் பொய்மையை ஊதிப்பெருக்கி அதில் திளைக்க வைக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நகைச்சுவையான சித்தரிப்பைப் பார்த்து சிலர் பாராட்டலாம். ஆனால் சிறுவர்களை குதறவரும் சீமைப்பன்றிகளின் உல்லாசபுரியாக இருக்கும் கோவாவை பாராட்ட முடியுமா? இந்தியாவின் எல்லா தேசிய இனப்பெண்களும் விபச்சாரத்திற்கென்றே அனுப்பப்படும் கோவாவை, தெற்காசியாவின் முக்கியமான குழந்தை விபச்சார மையமாக திகழும் இந்த நகரத்தை கோவா படம் இளையோர் செல்ல வேண்டிய அற்புத உல்லாச நகராக சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்து பிகினியில் இருக்கும் வெள்ளைக்கார பெண்களை சுலபாமாக மடக்கிவிடலாமென சிலருக்காவது தோன்றாமல் போய்விடுமா என்ன?

கோவா படத்தை ரஜினியின் மகளும், தமிழ்ப்படத்தை அழகிரியின் மகனும் தயாரித்திருக்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான அரசியல் கேவலமும், சினிமாக் கேவலமும் தத்தமது வாரிசுகளைக் கொண்டு இந்தப்படங்களை தயாரித்திருப்பது தற்செயலான ஒன்றா? யார் யாரைக் கேலி செய்கிறார்கள்?

சென்னையின் புறநகர் ஒன்றின் சுமாரான திரையரங்கு ஒன்றில் நள்ளிரவு காட்சியில் தமிழ்த்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியேறும் போது அந்த அறிவிப்பு பலகை தென்பட்டது. வரும் வெள்ளியன்று அஜித் நடித்த அசல் ரிலீசாம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாளும் காலை ஏழுமணிக்கு சிறப்புக்காட்சிகளாம். தமிழ்படம் ஓடிய அதே திரையரங்கு. இன்று கைதட்டிய இரசிகர்கள் நாளைக்கு அதே திரையரங்கில் அஜித்தின் ஓபனிங் சீனுக்கும் பாட்டுக்கும், மாஸ் ஹீரோ சீன்களுக்கும் கைதட்டுவார்கள். பதிவுலகிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

எப்போதும் போல தமிழ் வாழ்க்கை தன்னைத்தானே கேலி செய்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்தில் பெரும்பாலானோர் தவறி விழுந்தாலும் சிரிப்பதெற்கென்று சிலர் இல்லாமலா போய்விடுவார்கள்?

http://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam/