புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.

சிறுபான்மை இனங்கள் எதற்காக இந்த அரசை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் தமிழ் தேசியத்தை கோரியல்ல. புலிகளை ஆதரித்தல்ல. மாறாக தங்கள் மீதான இன ஒடுக்குமுறையை எதிர்த்து வாக்களித்தனர். இதுதானே இன்றைய எதார்த்தம். 

 

சிறுபான்மையான தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்து இந்த, அரசு இயங்குகின்றது. பெரும்பான்மை மக்களின்; அரசாக தன்னைக் காட்டி, பெரும்பான்மை மக்களையும் ஒடுக்குகின்றது.

 

இப்படி சிங்கள இனவாதத்தை சார்ந்த நின்று, சிறுபான்மை மக்கள் மேல் கட்டமைக்கும் பிளவுவாத இனவாத அரசியலை எதிர்த்துதான், சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர். இது தானே உண்மை.

 

சிறுபான்மை இனங்கள், இன்று பெரும்பான்மை மக்களுடன் சேரத் தடையாக இருப்பது எது?  பெரும்பான்மை சார்ந்து கக்கும் இனவாத அரசியல் தானே. கடந்த 60 வருடமாக ஆட்சியாளர்கள் இந்த இனவாதத்தின் மூலம் தானே, தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று வருகின்றனர். இந்த பெரும்பான்மை சார்ந்த இனவாதம் தான், சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை இனத்துடன் இணைவதற்கு பதில் இனப் பிளவை உருவாக்கி வருகின்றது. இதற்குள்தான் குறுகிய சிறுபான்மை இனவாத அரசியல் முளைவிடுகின்றது. இந்தத் தேர்தல் அதை மீண்டும், உசுப்பேத்தியுள்ளது. பெரும்பான்மை இனம் சார்ந்த இனவாதம், இந்தத் தேர்தல் மூலம் சிறுபான்மை குறுந் தேசியத்துக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. 

 

புலிகளின் அழிவின் பின், தமிழ் குறுந்தேசியம் குட்டிச் சுவராகி சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. இந்த தேர்தல் பெரும்பான்மை சார்ந்த தேசிய இனவெறியைக் கக்கியதன் மூலம், குறுந்தேசியத்தின் ஒருங்கிணைவைத்  தூண்டியுள்ளது. மீண்டும் ஒரு புலியை, அரசு தன் இனவெறி மூலம் உருவாக்க முனைகின்றது. இவர்கள் தங்கள் சுரண்டும் வர்க்கத்தின் அரசியலை பாதுகாக்க, மீண்டும் ஒரு புலி தேவை.

 

இந்த வகையில் பெரும்பான்மை மக்களைச் சார்ந்த இனவாத அரசியல் மூலம், ஆட்சியை தக்கவைக்கவும் உருவாக்கவும் முனைந்த இரு பிரதான அரசியல் போக்குகளும், இன்று  இனப்பிளவை அடிப்படையாக கொண்டு அரசியலை நடத்தியது. ஐக்கியத்தை முன்வைத்து, அரசியல் செய்யவில்லை. சிறுபான்மை இனத்தை சிங்கள மக்களுக்கு எதிராக முன்னிறுத்தினர். சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமையை மறுப்பது, அதை ஒடுக்குவதும் மையமான இனவாத அரசியலாக முன்நிறுத்தியது.

 

இப்படி ஆளும் அதிகார வர்க்கம் தன் அதிகாரத்தை தக்கவைக்க, சிறுபான்மை இனத்தை தனக்கு எதிராக நிறுத்திய நிலையில், சிறுபான்மை இனம் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது. சிறுபான்மை மக்கள் முன் இதற்கு மாற்றாக, எந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது அவர்கள் அரசியல் வெற்றிடத்தில், சமூகம் பற்றிய புரிதலுமின்றி வாழ்கின்றனர். அதில் இருந்தே வாக்களிப்பாகின்றது.

 

நாட்டை இனங்களாகப் பிளந்து கட்டமைக்கும் பெரும்பான்மை இனவாத அரசியல், இயல்பாகவே சிறுபான்மையின் எதிர்ப்பு அரசியலாக மாறுகின்றது. ஆளும் வர்க்கத்தை சேர்ந்த ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கவே, பெரும்பான்மை சார்ந்த இனவாதம் சிறுபான்மையிடம் கோருகின்றது.

 

தேர்தல் காலத்தில் இனம் சார்ந்த பிளவும், இது சார்ந்த சிந்தனை முறையும் வளர்ச்சியுற்றது. நாடு தளுவிய அளவில் இனவாதம் முதன்மை பெற்ற ஒரு அரசியல் கூறாக மாறியிருந்தது. எல்லா அரசியல் நகர்வுகளும் இதற்கு உட்பட்டு காணப்பட்டதுடன், இனவாத பிரச்சாரங்கள் உச்சத்தை தொட்டது. இதுதான் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானித்தது.

 

சமூகம் சந்திக்கும் சமூக பொருளாதார எதார்த்தம் சார்ந்த வாழ்வியல் கூறுகள் அனைத்தும்  இரண்டாம் பட்ச விடையங்களாகியது. இவை தேர்தல் காலத்தில், முற்றாக அரசியல் களத்தில் இருந்து மறைந்து போனது. இன ஐக்கியத்துக்குரிய சமூக கூறுகள் அரசியல் ரீதியாக  மறுதலிக்கப்பட்டது.

 

மாறாக இலங்கையில் இனவாதத்தை தொடர்ந்து முன்னிறுத்தி, இனங்களைப் பிளந்து, ஆளும் வர்க்கங்கள் தங்கள் வர்க்கத்தின் சுரண்டல் நலன்களை பாதுகாக்கவே முனைகின்றது. இது இந்தத் தேர்தலில் முழுமை பெற்;ற வடிவில் வெளிப்பட்டது. இனப்பிளவிலான சமூகப்பிளவின் மூலம், தன் சுரண்டும் வர்க்க அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

 

மக்களை குறுகிய அடிப்படையில் பிளந்துதான், ஆளும் வர்க்கங்கள் தங்கள் ஆட்சிகளை மக்களுக்கு எதிராக தக்கவைக்கின்றது. இதுதான் இன்று இந்தத் தேர்தல் வழிகாட்ட, ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியை தேர்வு செய்தது.

 

இனவாதம் மூலம் ஆளும் வர்க்க பிரதிநிதிகள் வெற்றி பெற, சிறுபான்மை இனங்கள் அதை எதிர்த்து நிற்கின்றனர். இதுவே இன்று இயல்பான எதிர்ப்பு அரசியலாகும்.

 

இந்த பின்னணியில் ஆளும் வர்க்கத்துடன் நின்ற பொறுக்கித் தின்னும் அனைவரையும், மக்கள் வெறுத்து ஒதுக்கினர். மக்களுக்கு சேவை செய்கின்றோம் என்று சொல்லி, பொறுக்கித் தின்றதை மக்கள் அம்பலமாக்கினர். மக்கள் கோரும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை, இவர்கள் பெற்றுத்தர முடியாது என்பதை மிகத் தெளிவாக மக்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் பொறுக்கித் தின்னும் நாய்க் கூட்டம் தான் என்பதை, மக்கள் தெளிவாக இனம் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர்.

 

இது தமிழ் அரசியலில் மட்டுமல்ல, மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் கூட தங்கள் மேல் நடத்தும் சிறுபான்மை ஓட்டுண்ணி அரசியலை வெறுத்து ஒதுக்கியுள்ளனர்.

 

மறுபக்கத்தில் புலிகள் அல்லது புலி வால்கள் எதை ஆதரிக்கின்றதோ, அதை எதிர்த்து மறுதரப்பை ஆதரிக்கும் அறிவுசார் விளக்கங்களையும் கூட மக்கள் நிராகரிக்கின்றனர். தம் வாழ்வு சார்ந்த இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து, ஒடுக்குமுறைக்கு சார்பான கருத்தியலை தம் வாழ்வின் எதார்த்தம் மூலம் மக்கள் பதிலளிக்கின்றனர்.

 

இனங்கள் மேலான இனவொடுக்குமுறை இன்று எதார்த்தமாக இருக்கின்ற நிலையில், அதை மறுக்கின்ற அனைத்து அரசியல் திரிபுகளையும் விளக்கங்களையும் மக்கள் மறுதலிக்கின்றனர். தம் மீதான இன ஓடுக்குமுறையை, புலியையும் குறுந் தமிழ் தேசியத்தையும் முன்னிறுத்தி மறுப்பதை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி புலி மற்றும் குறுந் தேசியத்தை முன்னிறுத்தி, தமக்கு எதிராக கட்டமைக்கும் இனவொடுக்குமுறைக்கு ஆதரவான கருத்துக்கள், செயல்கள் அனைத்தையும் மக்கள் மறுதலிக்கின்றனர். இதைத்தான் இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தினர்.

 

இது தமது குறுந்தேசியத்துக்கு ஆதரவானதாக காட்டுகின்ற கூத்தும், மறுபக்கத்தில் அரங்கேறுகின்றது. மக்கள் தம் மீது, குறுந்தேசியம் மூலம் கையாள முனையும் எந்த ஒடுக்குமுறையையும் ஏற்றுக்கொள்பவர்களல்ல.

 

மக்களுக்கு எதிராக மக்கள் இருப்பதில்;லை. அப்படி இருக்கும் ஒரு தெரிவை மட்டும் தான், மக்களுக்கு எதிராக இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவற்றை அரசியலாக, கருத்தியலாக மாற்றி, மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை அறிவிழக்கப் பண்ணி மோத வைக்கின்றனர். 

 

இதைத்தான் குறுந்தேசிய அரசியலும் செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியும், விடுதலைப் புலிகளும் மக்கள் எதிரான அரசியல் மற்றும் பம்மாத்துகள் மத்தியில், அவர்கள் அந்த மக்கள் மேல் கையாண்ட ஒடுக்குமுறைதான் அவர்களைத் தோற்கடித்தது. ஆம் மக்கள் அவர்களை தோற்கடித்தனர். இது கடந்த வரலாறு.

 

மக்கள் இன்று தம் சொந்த வாழ்வை தீர்மானிக்க முடியாத அரசியல் வெற்றிடத்தில் தான், தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களின் இந்த எதிர்ப்பு தமக்கான ஒரு அரசியலாக செயலாக மாறாத நிலையில், பிற்போக்கு வர்க்கங்களும் சக்திகளும் தமது குறுகிய அரசியலுக்கு அதைப் பயன்படுத்துகின்றது. இந்த தேர்தலிலும் மக்களின் எதிர்ப்பு அரசியலை, தமதாக்க மக்கள் விரோத சக்திகள் தொடர்ந்து முனைகின்றது. இதுதான் இன்று நிலவும் அரசியல் எதார்த்தம்.  

 

பி.இரயாகரன்
28.01.2010