இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுபிட்சமான வாழ்வா!? இல்லை. வேறு தெரிவு எதுவும் இல்லை என்பதாலா!? இல்லை. அப்படியாயின் எது? இலங்கையில் நிலவும் உச்சக்கட்ட சிங்கள இனவாதம்தான், மீண்டும் மகிந்தாவை வெல்ல வைத்துள்ளது. சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிங்கள இனவாதம் தோற்கடிக்கப்பட, சிறுபான்மை இனங்கள் அதிகமாக வாழும் சிங்களப் பகுதிகளில் விளிம்பில் வெற்றி பெற்று, முழு சிங்களப் பகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் மகிந்தா.

 

குடும்ப சர்வாதிகாரம் பாசிசம் கொப்பளிக்கவே, இனவாதியாக மாறி தமிழ் பகுதிகளில் வாக்களிப்பை பல வழிகளில் தடுத்து நிறுத்திய மகிந்தா, வெற்றியை தக்க வைக்க முனைந்தார். யாழ்குடாவில் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பை தடுத்தது முதல், வன்னியில் போக்குவரத்தை முடக்கியதுடன், முழுத் தமிழ் மக்களையும் தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மக்கள் வாக்களிப்பதைத் தடுத்தனர்.

 

இலங்கை முழுக்க இராணுவத்தை கொண்டும்,  அரச அதிகாரத்தைக் கொண்டும் தேர்தலை முறைகேடாக்கி, தனது வெற்றிக்குரியதாக மாற்றினார். அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் கையாண்டு, தன் வெற்றியை உறுதி செய்து கொண்டார்.

 

புலிகள் எதையெல்லாம் செய்து தேர்தலை தமக்கு ஏற்ப வாக்களிக்கும் முறைகளை தீர்மானித்தனரோ, அதையே செய்தனர். இதற்கெல்லாம் தமிழ்ச்செல்வன் பல்லைக்காட்டி விளக்கம் கொடுத்தது போல், மகிந்தாவின் கையில் கட்டப்பட்டிக்கும் மந்திரம் ஓதப்பட்ட கயிறுகள் தான் விளக்கம் சொல்லுகின்றது.

 

தேர்தல் தோல்வி சார்ந்த மகிந்தாவின் அச்சம், பல சடங்கு சார்ந்து மந்திரக் கயிறாக மாறி, மகிந்தாவின் கையில் குடிகொண்டு அதுவே மகிந்தாவை வழிநடத்தியது. கோயில்கள்,  சடங்குகள், மந்திரங்கள் முதல் சாத்திரம் வரை, மகிந்தா தன் தோல்வியை தவிர்க்க பட்டபாடும், பயமும் சொல்லிமாளாது. இதற்கு வெளியில்  அனைத்துத் தில்லுமுல்லுகளையும் மக்களின் மேல் திணித்தனர். இன ரீதியாக சிறுபான்மை இனங்களின் வாக்கெடுப்புகளை தடுத்து நிறுத்த, அனைத்து முயற்சியையும் சிங்கள் இனவெறியுடன் மேற்கொண்டனர்.

 

தன்சொந்த இனத்தைச் சார்ந்து வெல்வதற்கு, தனது சொந்த இனவாதத்தில் நம்பிக்கை கொண்டு காய்களை நகர்த்தினர். தேர்தல் தோல்வி என்ற பயம் பிடித்த நிலையில், சிங்கள மக்கள் இனவாத கண்ணோட்டத்தில் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிகையுடன் பல மதச்சடங்குகளைச் செய்தபடி, அனைத்த பாசிச ஜனநாயக விரோத தோதல் வக்கிரங்களை ஏவினார். இதன் மூலம் மகிந்த வெல்ல, எதிர்க் கட்சிகள் கொண்டிருந்த இனவாதமே மையக் காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது.

 

இந்தத் தேர்தல் சிங்கள மக்கள் முன் கோரியது யார் தமிழ்மக்களை ஒடுக்கியது புலியை அழித்தது என்ற விடையம் தான் முதன்மை பெற்று இருந்தது. மகிந்தாவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட இந்த விடையத்தையே தங்கள் பரப்புரையாக்க, மகிந்தாவும் இதை முன்னிறுத்தினார். சிறுபான்மைக்கு முன் இனவாதம் குறைந்தது எது என்பதே, அவர்கள் தேர்வாக காணப்பட்டது.

 

சிங்கள மக்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது, யார் அதிகம் தமிழ்மக்களை ஒடுக்கும் தகுதி உண்டு என்பதைத்தான்.  இனவாதம் தான், அதைத் தீர்மானித்தது. வேறு எதுவும் தேர்தலை தீர்மானிக்கும் வண்ணம், எதிர்க்கட்சியிடம் எந்த மாற்று விடையங்களும் இருக்கவில்லை. இனத்தை முன்வைத்து, கட்சி அரசியலை நடத்தினர்.

 

இந்த இனவாதி மகிந்தவை முதல் முறை ஜனாதிபதியாக்கியவர்கள், இரு இனவாதிகள்.   

 

1.தமிழ் குறுந்தேசியம் சார்ந்து புலிகள் மகிந்தாவை அன்று வெல்ல வைத்தனர்.

 

2.சிங்களக் பேரினவாதம் சார்ந்து ஜே.வி.பி மகிந்தாவை அன்று வெல்லவைத்தனர்.

 

இவ்விரண்டும் இன்றி மகிந்தா அன்று வென்று இருக்க முடியாது. இந்த இனவாதம் சார்ந்த அரசியல் உள்ளடக்கம் தான், ஜே.வி.பியைப் பிளந்தது. ஜே.வி.பி அணிகளை இனவாதமாக்கி அதை தீவிரமாக நடைமுறைப்படுத்தி மகிந்தாவின் பின் பெருமளவில் மக்களையும் செல்லவைத்தது. மறுதளத்தில் புலிப்பாசிசம் புலியெதிர்ப்பு அணியை, மகிந்தாவின் பின் செல்ல வைத்ததுடன், அதற்கு பிரச்சாரப் பீரங்கியாக்கியது. மகிந்தா பலம் பெற, சிங்கள இனவாதம் புலிகளைச் சொல்லி பலத்தைப் பெற உதவியது.

 

மகிந்தாவின் எதிர்தரப்பு தன் இனவாத எல்லைக்குள், குண்டுச்சட்டியை ஓட்ட முடிந்தது. இறுதியில் எதிர்க்கட்சிகள் இந்த இனவாத யுத்தத்திற்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியையே, தங்கள் சொந்த இனவாதக் கண்ணோட்டத்துடன் நிறுத்துமளவுக்கு அவர்களின் இனவாத அரசியல் தெளிவாக வழிகாட்டியது.

 

இதன் மூலம் சிங்கள மக்கள் யார் அதிகம் இனவாதி என்ற தேர்வை, இந்தத் தேர்தலில் தேர்ந்து எடுக்கும்படி நிர்ப்பந்தித்தது. சிங்கள இனம் மகிந்தாதான் சிறுபான்மை இனங்களை ஒடுக்கக் கூடிய வல்லமையான இனவாதி என்பதை மிகத் தெளிவாக இனம் கண்டு, அவருக்கு வாக்குப்போட்டு ஜனாதிபதியாக்யுள்ளனர். சிங்கள இனவாதமோ கொப்பளிக்கின்றது.    

 

சிறுபான்மை இனங்களின் தெரிவு எதைச் சொல்கின்றது

 

சிங்கள இனவாதிக்கு எதிராக சிறுபான்மை இனங்கள் தங்கள் வாக்கைப் போட்டுள்ளனர். குறிப்பாக பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்கும் உரிமை பல வழிகளில் தடுக்கப்பட்ட போதும், வாக்களித்தவர்கள் மகிந்த என்ற இனவாதிக்கு எதிராக தெளிவாக வாக்களித்துள்ளனர்.

 

இது சரத் பொன்சேகாவுக்கான அரசியல்  தேர்வல்ல. மகிந்தா என்ற இனவாதியை எதிர்த்த வாக்களிப்பு. வடக்கு மேலாதிக்கம் சார்ந்த, மேற்கு சார்பான ஒரு வாக்களிப்பல்ல. மாறாக கிழக்கு மக்கள், முஸ்லிம் மக்கள் உட்பட மலையக மக்களும் கூட, மகிந்தாவுக்கு  எதிராகத்தான் வாக்களித்துள்ளனர். சிறுபான்மை இனங்கள் மகிந்தாவிற்கு தங்கள் எதிர்ப்பை, இலங்கை முழுக்க தங்கள் வாக்களிப்பு மூலம் தெளிவாக இனம் காட்டியுள்ளனர்.

 

சிங்கள மக்கள் தனித்து வாழும் பிரதேசங்களில் மகிந்தாவிற்கு இனவாதம் மூலம் வீழ்ந்த வாக்குகள் வீதம், தெளிவாக சிறுபான்மை இனங்களின் எதிர்ப்;பை துல்லியமாக அம்பலமாக்கி நிற்கின்றது. இனப்பிளவு ஆழமாகி கிடப்பதை இது காட்டுகின்றது.

 

போலி இடதுசாரியத்தின் இனவாதம் தான், மகிந்தாவின் வெற்றி

 

குறிப்பாக ஜே.வி.பி மீள முடியாத படுதோல்வியைப் பெற்றுள்ளது. இனவாதத்தில் அது கரைந்து குட்டிச் சுவராகியுள்ளது. இனவாதமே போலி இடதுசாரிகளின் அரசியலாகி, இனவாதம் கொழுக்கின்றது. மக்கள் இதற்கு வெளியில் அரசியலை கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் இன்று எதுவும் இருப்பதில்லை.

 

இது தேர்தலில் தீர்மானிக்கா விடையமாக, அனைத்துக் கட்சிகளும் இந்த இனவாதத்திற்கு வெளியில் மாற்றாக மக்கள் முன் எதையும் முன்வைத்து கிளர்ச்சிப் பிரச்சாரத்தை செய்வதில்லை. தோதலில் இனவாதம் முதன்மையான கூறுறாகி, மக்கள் இனவாதத்தை தெரிவு செய்ய வைக்கின்றது.

 

போலி இடதுசாரியத்தை இனவாதம் தன் வெற்றிகள் மூலம் அவர்களை எதுவுமற்றதாக்கியுள்ளது. அரசியலில் அவர்கள் குட்டிச்சுவராகிவிட்டார்கள்.

 

மக்கள் தங்கள் வாழ்வை சுற்றி நடப்பதை புரிந்துகொள்ள முடியாத வண்ணம், அரசியல் வெற்றிடத்தில் இனவாதமும் இனப்பிளவும் ஆழமாகி நிற்கின்றது.

 

இதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது. இந்த இனவாதத்தில் இருந்து மக்களை மீட்டு வழிகாட்ட, இலங்கையில் இன்று எந்த மாற்றும் கிடையாது என்பதே எதார்த்தம். கட்சிகளோ இனவாதத்தின் எல்லைக்குள் நின்று, தம்மை தெரிவு செய்ய மக்களிடம் கோருகின்றனர் என்பது மட்டுமே மற்றொரு எதார்த்தம். இதைத்தான் இலங்கையின் தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகின்றது. முழு இலங்கையும் இனவாத எல்லைக்குள் குறுகிக் கிடக்கின்றது. இதில் இருந்து மீட்சி எப்படி என்பது தான், எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.

 

பி.இரயாகரன்
27.01.2010