இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்?
90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை தாருங்கள் அல்லது நிர்ணயம் செய்ய அனுமதியுங்கள் என்று பலகாலமாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அரசு; கவர்ச்சியான திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாகப் போடவும், வந்தவிலைக்கு விற்றுவிட்டு வெளியேறவும், இப்படியான நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் சூறையாடுவதற்கும் வேண்டிய அனைத்தையும் செய்துவருகிறது.
பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடிநிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்தநாட்டு மீனவர்களை கடற்புற மேலாண்மை திட்டத்தின் மூலம் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளையும் நட்சத்திர ஓட்டல்களையும் கட்ட முதலாளிகளை அனுமதித்திருக்கிறது.
கைத்தறிகளுக்கும், எளிய விசத்தறிகளுக்குமான ரகங்களின் கட்டுப்பாட்டை நீக்கியதால் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களை சிறுவணிகத்தில் அனுமத்தித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறுவணிகர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது.
எல்லாத்தரப்பு மக்களையும் ஓட்டாண்டியாக்கும் திட்டங்களை சில முதலாளிக்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி பெரும்பான்மை மக்களை வதைக்கும் அரசை குடிகளுக்கான அரசு என்று எப்படி சொல்வது?
நாட்டின் மிகப்பெரிய அமைப்பான ராணுவமும், காவல்துறையும் யாரைப் பாதுகாக்கிறது? தண்ணீர் இல்லை என்பதிலிருந்து வேலையில்லை என்பது வரை யார் எதற்காக போராடினாலும் காவல்துறைதான் குண்டாந்தடியோடு வருகிறது. தீவிரவாதம் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் போலிமோதல் கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் அரங்கேற்றுகிறது ராணுவம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிரந்தரமாக தங்கியிருந்து மக்களை சிதைத்து வருகிறது. ராணுவத்தின் மக்களை காக்கும் அரும்பணிக்கு எடுத்துக்காட்டுகள் கீழே,
ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்ற பெயரை செவியுற்றிருக்கிறீர்களா?
7300 கோடி செலவில் சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் செயல்படுத்தப்படவிருக்கும் ராணுவ நடவடிக்கைக்கு தான் ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்று பெயர். ராணுவ நடவடிக்கை என்பது அரசு சொல்லும் பெயர் ஆனால் எதார்த்தத்தில் இது மக்களுக்கு எதிரான போர். இதற்கு அரசு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகளின், நக்ஸல்களின் தீவிரவாதம் பெருகிவிட்டது என்பது. ஆனால் மெய்யான காரணம் அதுவல்ல. இந்தப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்கள் நக்ஸல்கள், இப்போது பல படைப்பிரிவுகளையும், போர்விமானம், எழுவூர்திகளையும், செயற்கைக்கோள் கண்காணிப்பையும் கொண்டு நக்ஸல்களையும் மாவோயிஸ்டுகளையும் அழிக்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் அந்தப்பகுதியின் கனிமவளங்கள். உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டி விற்க அந்தப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளை விரட்டியடிக்க வேண்டும். இதற்கு எதிராக அம்மக்களை விழிப்புணர்வூட்டி போராடத்தூண்டி வருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இதற்காகத்தான் அவர்களை வேட்டையாடத்துடிக்கிறது அரசு.
இது குடியரசு என்று கூறிக்கொண்டே தன் சொந்த குடிமக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? குடியரசு, ஜனநாயகம் என்ற போர்வையில் முதலாளிகளுக்கான அரசாக நடந்துகொண்டு மக்களை வதைப்பது. அவர்களின் உழைப்பையும், வாழ்வையும் வாழ்விடத்தையும் அபகரிப்பவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவது. இதை புரிந்துகொண்டு போராடினால் அவர்களை கிரீன்ஹன்ட் என்றபெயரில் அழிப்பது; இதை புரியாமல் இருந்தால் குடியரசு என்ற பெயரில் அல்வா கொடுப்பது.
அல்வாவை ருசித்து புறங்கை நக்க நாம் என்ன அஃறினைகளா?
ஆபரேசன் கிரீன்ஹன்ட் குறித்து விரிவாக அறிந்து கொள்ள
பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!
-
நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
-
பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
-
போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்!
-
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்
ஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519