கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

 

http://www.vinavu.com/2010/01/26/republic-day/