புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்

கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது.

 

 இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.

 

இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.

 

நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.'

 

பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.

இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.

 

நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.

 

காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.

 

மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.

 

ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.

 

இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

 

நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம்

 

 

ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.

 

கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.

 

 

சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.

 

நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.

 

பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள்

 

அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.

 

ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.

 

இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

 

இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

 

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு

அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.

 

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர்  மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

 

 இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

 

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

 

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

 

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில்

 

அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.

 

 

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

 

http://inioru.com/?p=9948