தோழர் சந்திப்பு என்ற செல்வபெருமாள் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கான்சருடன் போராடிக் கொண்டுதான் வலைப்பூக்களில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவரது ஈடுப்பாட்டைக் காட்டுகிறது.

சமீப வருடங்களில் அவர் எழுதுவதை குறைத்துக் கொண்டதை இயல்பாக ஒரு பதிவரின் பதிவு வாழ்கையில் ஏற்படும் பின்னடைவை போன்ற ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரது பின்னடைவுக்குப் பின்னால் அவரது உடல்நலக் குறைவு இருக்கும் என்பதையோ, அது குறித்த அவரது புலம்பல்களின் சிறு சலனத்தை கூட தனது எழுத்துக்களில் அவர் காட்டியதில்லை என்பதையோ நினைத்துப் பார்க்கும் பொழுது அவரது இழப்பின் வருத்தம் அதிகரிக்கிறது. 

இது போன்ற தோழர்களின் விடா முயற்சியும், ஈடுபாடும், சமூக உணர்வும், தியாகங்களும் நந்திகிராம்களையும், சிங்கூர்களையும், கிரீன் ஹண்டுகளையும் நியாயப்படுத்த பயன்படுத்தும் சிபிஎம் கட்சியின் மோசடியை முறியடிக்கும் கடமையை இன்னும் விரிவாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது.

அவர் ஏற்றுக் கொண்டு நடந்த பாதை தவறானது என்றாலும் அதன் இலக்காக ஒரு கம்யுனிச சமூகம் அமைக்கின்ற கனவையே கருவாக்கிச் சுமந்தார். இதில் அவர் பின்வாங்கியதில்லை. இதுவே எம்மை அவருடன் இணைத்த புள்ளி.
வலைப்பூக்களில் நான் எழுத வந்த ஆரம்ப காலங்களில் எம்மை அங்கீகரித்த மிக சொற்பமான சிலரில் அவர் ஒருவர். அவ்வாறு அவர் அங்கீகரித்த இடத்திலும் எம்மை இந்தப் புள்ளி இணைத்தது.

அவருடன் பல்வேறு விவாதங்கள், மிகக் கடுமையான கருத்து முரன்பாடுகள் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் அவர் ஆக எதிர்திசையிலேயேதான் பிராயணித்துச் சென்றார். கடைசிக் கட்டங்களில் நிகழ்ந்த விவாதங்களில் முற்றிலும் கோட்பாடற்ற எதிர்வினைகளை செய்யும் நிலைக்கும் சென்றார்.

ஆனால், இவையனைத்துமே அவர் சார்ந்த கட்சி அவரை பயன்படுத்திக் கொண்டு அவரது கனவுகளை சுரண்டுவது குறித்த கோபத்தையே என்னிடம் ஏற்படுத்தின. தாம் சார்ந்துள்ள கட்சிக்கு நேர்மையாக அந்தக் கட்சியின் கருத்துக்களை - அவை மோசடியானவை என்றாலும் - நிலைநிறுத்தும் ஒரே உத்வேகம் மட்டுமே அவருக்கு துணை நிற்க அவர் எம்முடன் தனியாகப் போராடியுள்ளார். இதுதான் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்தது. இதுதான் ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம். இத்தகைய போராட்டத்தை அவர், தான் சார்ந்த கட்சிக்குள் நடத்தியிருந்தால்? இத்தகைய கேள்விகளை கேள்வியாகவே தவிக்க விட்டுச் சென்று விட்டார் தோழர் சந்திப்பு.

தோழர் செல்வபெருமாளுக்கு எனது அஞ்சலி

அசுரன்