இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.

சமூக முரண்பாடுகளை களையும் வண்ணம், சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஒரு முன்னேறிய சமூக முன்னோடிகள் பிரிவு இன்று இலங்கையில் கிடையாது. இதனால் சமூகமோ பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றது. ஓடுக்குபவன் முரண்பாட்டுகளுக்கு பின்னால், மக்களை பிரித்து வழிநடத்துகின்றான்.   

 

விளைவு சமூகம் பல முனைகளில், பாரிய சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. மனிதனாக வாழ்வதற்குரிய எந்த அடிப்படையான வசதிகளும் இன்றி தத்தளிக்கின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மக்களுக்கு இடையில் திணிக்கப்பட்ட பிளவுகளால், சமூகங்களுக்கு இடையில் பல பிளவுகள். பிளவுகள் கொண்ட சமூகமாக மொத்த நாடும் மாறியுள்ளது.

 

மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு நிற்கின்றது. பல முரண்கொண்ட முரண்பாடுகளுடன், மக்கள் பலவாக பிளவுபட்டு கிடக்கின்றனர். பிரதான முரண்பாடுகள் அப்படியே இருக்க, பல பகுதி முரண்பாடுகளால் மக்கள் மோத வைக்கப்படுகின்றனர். மக்கள் ஒன்றிணைவதையும், போராடுவதையும் இது தடுக்கின்றது.

 

இயல்பான ஒரு பொதுவான வாழ்க்கை முறை, இலங்கை மக்கள் மத்தியில் கிடையாது. எங்கும் வாழ்வுக்கான பகுதிப் போராட்டங்கள் கூர்மையாகி பின் அவை நசிந்து சிதைகின்றது.

 

பகுதிப் போராட்டங்களையும், மையப் போராட்டங்களையும் ஒன்றிணைக்கும் வண்ணம், ஒரு சிந்தனை முறை இலங்கையில் கிடையாது. மாறாக இதை பிளக்கும் சிந்தனை முறையே, இன்று சமூகத்தில் ஆதிக்கம் பெற்று அதை வழிநடத்துகின்றது. மக்களை பிளந்து, அவர்களை மோத வைத்து வாழும் அரசியலும், சிந்தனை முறையுமே சமூகத்தின் முன் இன்று உள்ளது.   

 

இந்த நிலையை மாற்றி அமைக்கக் கூடிய வண்ணம், வழிகாட்டும் வண்ணம் சமூகத்தில் புத்திஜீவிகள், சமூக முன்னோடிகள் இன்றி சமூகம் காணப்படுகின்றது. தமிழ் சிங்கள் மக்கள் மத்தியில், இதுவே பொதுவான அரசியல் நிலைமையாகும்.

 

இதில் இருந்து தான், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை இன்று அணுக  வேண்டியுள்ளது. இதை நாம் உருவாக்காமல் அதாவது இதுவாக நாம் இருக்காமல், அடுத்து எதையும் யாரும் செய்யமுடியாது என்பது தெளிவாக எம்முன்னுள்ளது.

 

இதற்கு மாறாக பலர் எம்முன்னுள்ள முரண்பாட்டை கையிலெடுத்துக் கொண்டு ஓடுவதுதான், நாம் செய்ய வேண்டிய பணி என்கின்றனர். எது உடன் சாத்தியமோ, அதை செய்வதன் மூலம் செயல்படுவது தான் சரி என்கின்றனர். உதாரணமாக அகதி முகாமுக்கு பணம் சேர்ப்பது, புலிகள் விட்ட தவறுகளை களைந்த ஒரு தேசிய போராட்டத்தை முன் எடுப்பது, "நல்ல" ஜனாதிபதியை தேர்தலை பயன்படுத்தி தெரிவதன் மூலம் பிரச்சனையை கையாள்வது, அரசை அண்டி சலுகை பெறுவதன் மூலம் மக்களுக்கு உதவுவது … இப்படி பல வண்ணம் கொண்ட பல வகைகள்.

 

இங்கு மக்களைச் சார்ந்த உதிரிச் செயல்களும்; உண்டு. அது ஒருபுறம். ஆனால் இதன் பின் ஓடுவதல்ல, நாம் செய்யவேண்டிய அரசியல் பணி.

 

இன்றைய முதன்மையான அரசியல் பணி என்பது, சமூகத்தை வழிநடத்தக் கூடிய புத்திஜீவிகளையும், சமூக முன்னோடிகளையும் உருவாக்குவது தான். சமூகத்தை தலைமை தாங்கி முன்நடத்தக் கூடிய, முன்னேறிய பிரிவை உருவாக்குவது தான்;. இதுவன்றி சமூகத்தின் மாற்றத்தை உருவாக்கவோ, மக்களை வழி நடத்தக் கூடிய ஒரு புரட்சிகரத் தலைமையையோ பெற முடியாது.

 

இது இன்று எம்முன் இல்லை என்பதுதான் எதார்த்தம். முரணற்ற வகையில் சமூகத்தை விளக்கும் மார்க்சிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு முன்னேறிய சமூகப் பிரிவு இன்று கிடையாது. வர்க்கமாக அணிதிரண்;ட சமூகக் கூறு கிடையாது. இதை தன் சிந்தனை முறை கொண்டு, சமூகத்தை கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முன்னேறிய பிரிவு இன்றி, சமூகத்தின் இன்றைய போக்கை மாற்ற முடியாது. இது உண்மை என்பதை, கடந்தகால வரலாறுகள் பலமுறை நிறுவியுள்ளது.       

   

இதுவே எம்முன்னுள்ள எதார்த்தம். முன்னேறிய பிரிவை திடீரென நாம் நினைத்த மாத்திரத்தில் உற்பத்தி செய்;ய முடியாது. மாறாக மக்களின் வாழ்வியல் முறைகள் ஊடாக  போராடுவதன் மூலம் உருவாக வேண்டும். நீண்ட ஒரு போராட்டத்தின் ஊடாக உருவாக வேண்டும். இதற்கு வெளியில் இருந்தல்ல. மக்கள் வாழ்வை கீழ் இருந்து கற்றுகொண்டும், உலகைப் புரிந்து கொள்ளும் முரணற்ற தத்துவத்தை மேல் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு முறை ஊடாக, மட்டும்தான் இது சாத்தியம்.

 

இதை எப்படி செய்வது என்பது தான் எம்முன்னுள்ள பாரிய பிரச்சனை. நாமோ அன்னிய நாட்டில். மண்ணில் இதற்கான அடிப்படைகள் எதுவும் கிடையாது. சமூகத்தில் புரட்சிகரமான கருத்துப்போக்குகள் கிடையாது. அறிவு சார்ந்த, சமூக அறம் சார்ந்த, நேர்மையான  புத்திஜீவிகளின் வழிகாட்டல் எங்கும் கிடையாது.

 

இதுதான் எம்மைச் சுற்றிய எதார்த்த நிலை. இந்த எதார்த்தத்தில் இருந்து தான், நாம் சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஒரு முன்னேறிய பிரிவை உருவாக்கவேண்டியுள்ளது.

 

இதை இன்று எப்படி செய்வது? இதுவே எமது மையமான பிரச்சனையும் கூட. இதற்கான  நடைமுறையில் தீர்வு காண்பதும், உடனடியாக இதை மையப்படுத்தி செயல்படுவதும் அவசியமானது. இந்த வகையில்

 

1. எமது சிந்தனை முறையை, ஒரு முன்னேறிய பிரிவை உருவாக்குவதை மையப்படுத்தி சிந்திப்பது செயல்படுவது.

 

2.சமூக நிகழ்வுகளை இந்தக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்வதன் மூலம், அனைத்தையும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை முறையூடாக பகுத்தாயும் சமூகக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சிந்தனை முறையை சமூகத்தில் உருவாக்;குவது.

 

3.மார்க்சியத்தின் பெயரில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைக்கு மாறாக உருவாக்கும் அனைத்து போக்குகளையும், ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி அதைத் தனிமைப்படுத்துவது.   

 

4.கடந்தகால போராட்டங்களையும், வரலாறுகளையும் சமூகம் கற்றுக்கொள்ளும் வண்ணம், அதை கற்கத் தூண்டுவதற்காக அதை மையப்படுத்தி எம் செயல்களை ஒருங்கிணைப்பது. 

 

5.மக்கள் அனைத்தையும் கற்றுக் கொள்வதை ஊக்குவிப்பது. அதற்குரிய வகையில் அனைத்து வளங்களையும் ஒன்று குவிப்பது.

 

6.முன்னேறிய தத்துவமான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை சமூகத்தின் முன் அறிமுகம் செய்வது. அதுபற்றி தப்பபிப்பிராயங்களை களைவது.

 

7.வேலைகளை புலம்பெயர் மற்றும் மண் வரை ஒருங்கிணைப்பது.

 

இப்படி ஒரு முன்னேறிய பிரிவை உருவாக்க, உடனடியான வேலைகள் பல உண்டு. ஒரு முன்னேறிய பிரிவு என்பதை முரணற்ற மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குவது. புதிய ஒரு புரட்சிகர தலைமுறையை அடிப்படையாக கொண்டுதான், இதை உருவாக்க முடியும். கடந்த காலத்தில் எதிர்ப்புரட்சி அரசியலில் ஈடுபட்டவர்களை கொண்டோ, அரசியலை துறந்தவர்களைக் கொண்டோ, அரசியலில் திடீர் பிரமுகராக வருபவர்களைக் கொண்டோ, அரசியலில் மீள் பிரவேசம் செய்பவர்களைக் கொண்டோ,  ..  இதை நாம் ஒருநாளும் உருவாக்க முடியாது. அவர்களைத் திருத்துவது, எம் அரசியல் வேலையல்ல. அவர்களாக தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொண்டு, மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை ஏற்று வந்தால் அது வேறு.

 

நாம் செய்ய வேண்டியது, புதிய புரட்சிகர அரசியல் பரம்பரையை சமூகத்தில் இருந்து உருவாக்க போராடுவது தான். இதுதான் இன்றைய மையமான அரசியல் வேலை.

 

பி.இரயாகரன்
20.01.2010