சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.
தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்!
எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.
எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.
அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார்.தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை.பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.
பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.
பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது.
அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.
சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.
ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.
வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.
பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.
பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.
ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.
தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.
பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.
இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.
இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.
இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.
புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.
ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.
நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?
அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.
உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.
இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.
அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.
துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.
நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.
இதே வேளையில் பிரதம மந்திரியாகத் தெரிவு வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.
30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.
பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.
நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.
தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.
சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.
இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்
70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)