05282023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும் - குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 3

காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் குளிர் அதிகரித்து சில ஆயிரம் ஆண்டுகளுìÌள் நிலப் பரப்பை முழுதாக மூடிய பனி, உருகிய பனியில் தோன்றிய நீர்ப்பரப்புகள், நிலத்தடியில் அதிவெப்பத்தோடு கனன்று கொண்டிருக்கும் உருகிய திடப் பொருட்கள்,

நிலத்தின் மேல் சுழலும் வெதுவெதுப்பான வாயு மண்டலம், பிரபஞ்சம் உருவான நாள் முதல் அண்ட வெளியில் பரவியிருக்கும் மனிதக் கண்ணில் புலப்படாத கதிர் வீச்சுக்கள், ஒவ்வொரு திடப் பொருளும் இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை, இவ்விசையின் கோணங்களும் தாக்கங்களும் மாறுபடுவதால் ஒவ்வொரு கோளையும் நட்சத்திரத்தையும் இழுப்பதோடு சுழலவும் வைக்கும் சுழற்சி விசை … இவை எல்லாம் கால மாற்றத்தின் சாட்சிகள்.

கதாநாயகர்கள் நடத்தி வரும் புதையல் தேடலில் இதுவரை சிக்கியிருக்கும் சிற்சில முத்துக்களும், வைரங்களும் இவை.

பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும், மனிதர்களும் இந்தக் காலமாற்றத்தின் சக விளைவுகள்.

கதாநாயகர்ளின் புதையல் தேடலில் சிக்கி உள்ள சிறு சிறு மாணிக்கங்கள், வைடூரியங்கள்.

இந்தத் முத்து மணிகளை மாலையாகக் கோற்கும் கயிறு இன்னும் கிடைக்காததால் தனித்தனியாக இத்தனை செல்வமும் சிதறிக் கிடக்கிறது.

கதாநாயகர்கள் கயிறு தேடிக் கொண்டிருக்கிறார்கள்

ல்லாம் தெரிந்த கிழவனுக்கு இந்தத் தேடுதல் பிரச்சினையே இல்லை. அவனிடம் ஏற்கனவே கயிறு இருக்கிறது.ஆத்திர அவசரத்திற்கு எப்போதோ நூற்ற ஒரு சணல் கயிறு. அதில் கோர்க்க ரத்தினக்கள் இல்லாவிட்டாலும் கைமாறிக் கைமாறிப் பல கிழவனார்கள் திரித்த ஒரு தடிமனான தாம்புக் கயிறு.

முத்தும் மணியும் சிதறிக் கிடக்கிறது என்று தெரியாதவர்கள், வேறு இடத்தில் அதி அற்புதமான நவரத்தின மாலை உருவாகிக் கொண்டிருப்பதை உணறாமல், பிரபஞ்சத்தின் புதையல் தேடலில் கலக்காமல், பெருமையுடன் அணிந்து கொண்டிருக்கும் ஒரு பயனுமில்லாத இல்லாத கயிறு.

இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.

இது என்ன கேள்வியென்றே தெரியாமல் ஒருவன் எழுதிய பதில். மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டதால் உண்மையாகக் கருதப் பட்டு நாள்பட பதிலுக்கேற்றாற் போல கேள்வியை உருவாக்கிக் கொண்டு உள்ள அக்கிரமம்.

கிழவனின் கயிறு சிறு சிறு நூல் பிரிகளால் ஆரம்பமானது.

மழை பெய்யும் போது பயப்படு; அழு; வானைப் பார்த்து இறைஞ்சு; மழை நிற்கும்.சூரியனுக்கும் மனிதர்களைப் போலக் கோபம் வரும். காலை வேளை தலை காட்டாது. தடுமாறிப் போவாய். எனவே அத்திசையைப் பார்த்து நன்றி சொல்லு. நெருப்புதான் உலகின் ஆதாரம். ஆதாரத்தை மதிக்க வேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.

“மதிப்பது என்றால் எப்படி?” இன்னோரு மனிதன் ஆயுதத்தால் உன்னை வெல்லும் போது உன் ஆயுதத்தைத் தூக்கிப் போட்டு தரையில் விழுகிறாயே, அதே போல் தலை வணங்கு, கையெடுத்துக் கும்பிட்டு நீ நிராயுதபாணி என்று காட்டிக் கொள்ளு, உன் அடிமை நிலையை நிரூபிக்க எதிரின் கால் தொடுவாயே, அதேபோல் தரையில் விழு, வணங்கு. மனிதர்களுக்கு நீ மரியாதை காட்டுவது போல இயற்கைக்கும் காட்டு. அதற்குப் புரியும். இயற்கையைக் காக்காய் பிடித்து வைத்துக் கொள்.

“இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? பொறாமை, சமாதானம், வன்மம், அன்பு இவையெல்லாம் இயற்கைக்கு எங்கிருந்து வரும்? ஒரு ஊரில் தலை வணங்குவது பணிவு, அடுத்த ஊரில் மூக்கால் மூக்கை உரசுவது அன்பு… இப்படி மனிதருக்குளேயே வேறுபாடுகள் இருக்கையில் உருவமில்லாத இயற்கைக்கு மனித சமிஞ்கைகள் மூலம் என் அடிபணிதல் எப்படிப் புரியும்?”

இக்கேள்விகள் கேட்கப் பட்டிருந்தால் இந்தக் கயிறு திரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், இவை கேட்கப் படவில்லை. கிழவனின் கயிறு கேள்வியில்லாமலே உருவான பதில். தற்காலிகமாக எழும்பிய கூடாரம். கேட்பாரில்லாததால் அது கோட்டையாக வளர ஆரம்பித்தது.

இயற்கையை வணங்க ஒரு வழி வகை இருக்கிறது. சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மழையின் மனித உருவம் இது. நெருப்பின் மனித உருவம் இது. காமத்தின் மனித உருவம் இது. இவற்றை வெல்ல வேறு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த உருவங்களை, கடவுள்களை, திருப்திப் படுத்த நான் வழி சொல்கிறேன்.

நிலவில்லாத நாளில் ஒரு வழி. முழு நிலவன்று ஒரு வழி. அறுவடைக்கு முன்…. வெள்ளம் வரும்போது…. உயிப் பலி கொடுத்து…. மலர் அணிவித்து….

பட்டினி கிடந்து ஒரு வழி. பலவகை விருந்தோடு ஒரு வழி. மேள தாளத்தோடு ஒரு வழி. மவுனமாக ஒரு வழி. வெவ்வேறு பிரச்சினகளை தீர்க்க வெவ்வேறு வழிகள், முறைகள், சம்பிரதாயங்கள்…

மறந்து விடாதே. இக்கடவுளுடன் உன்னால் பேச முடியாது. எப்படிப் பேச வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த மொழியில் பேச வேண்டுமென்றும் தெரியும். அதை உனக்கு சொல்ல மாட்டேன். காரணம் நீ கடவுளின் காலிலிருந்து வந்தவன். நான் நாக்கிலிருந்து. இவன் தோளிலிருந்து. இந்த ஊரை இவன் காவல் காக்கட்டும். நீ ஒதுங்கிப் போ. எனக்குப் பின் என் பிள்ளை வழி சொல்லுவான். இவன் பிள்ளை ஊர் காப்பான். நீ எங்களுக்கு ஏவல் செய்வாய்.

ஏனென்று கேட்காதே? நான் கடவுளின் மைந்தன். என் அம்மாவைத் தொடாமலே கர்ப்பமாக்கியது அவன் தான். அடுத்த ஊர் கிழவன் சொல்வதையெல்லாம் இனிமேல் நம்பாதே. என் அப்பன் என் காதில் மட்டும் தான் உண்மை சொன்னான். ஏழு நாளில் உலகம் படைத்தவன் அவன். ஒரு ஆணையும் அவன் விலாவிலிருந்து ஒரு பெண்ணையும் படைத்தான். வெள்ளத்தில் உலகம் முங்கியபோது ஒருவனின் படகில் எல்லா உயிரினத்தையும் ஏற வைத்தான். அவை பல்கிப் பெருகித்தான் இவ்வுலகம் உயிர்களால் நிறைந்தது. “இரண்டிரண்டு உயிர்களிலிருந்து எப்படி பல உயிர்கள் வந்தன? மூன்றாம் தலைமுறை உருவானதை நினத்தாலே கெட்ட எண்ணங்கள் வருதே?” எதிர்க் கேள்வி கேட்டால் நாக்கறுப்பேன்!!

என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். உன் பாவத்தை என் மேல் தள்ளி விட்டு விடு. உனக்காக அவனிடம் நான் ரத்தம் சிந்துகிறேன். நீ தப்பித்துக் கொள். போகும் வழியில் உன்னிடம் உள்ளதை அந்த உண்டியலில் போட்டு விட்டுப் போ.

“கடவுள் உன் அப்பன்தானே? பாவமே செய்யவிடாமல் தடுக்கச் சொல்லேன்.” உனக்குத் தெரியாது என் அப்பனுக்கு ஆகாதவன் இருக்கிறான் சாத்தானென்று பெயர். அவன் தான் பாவத்துக் காரணம். “அவன் உன் அப்பனை விட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே! அவனைப் படைத்தது யார்?” இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். “எப்போது?” அதெல்லாம் விளக்க முடியாது. என் வழியில் வா! இல்லையேல் நீ நரகம் தான் போவாய்.

கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. இறைவன் தன்னை தினமும் பல முறை வணங்கச் சொல்லியிருக்கிறான். ஏனென்று கேட்காதீர்கள்! அவனுக்கு கருவம் அதிகமாக இருக்கலாம். அதனாலென்ன? சொன்னதை செய்யுங்கள். இல்லையேல் சாவுங்கள்! ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…

கூடாரம் கோட்டையாகிவிட்டது. தவறான பதில்களால் பக்கங்கள் நிரம்பி விட்டன. ஆனால் கேள்வி மட்டும் இந்தக் கிழவன்களுக்குப் புரியவே இல்லை.

கதாநாயகர்களுக்கு கேள்வி என்னவென்று எப்போதோ தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக பதிலும் புரிய ஆரம்பித்தது. புதையல் கிடைக்கவும் ஆரம்பித்தது.

-வித்தகன்

தொடரும்…..

http://www.vinavu.com/2010/01/19/questions-vithagan-3/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்