10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

அரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)

ஜனாதிபதி – நிறைவேற்று அதிகாரமும் தமிழ்மக்களின் – நிறைவேறாத ஆசைகளும்…

ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் மகிந்தாவும் எதிரணி பொது வேட்பாளராக சரத்தும் போட்டியிடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டியது தாம் தான் என இருவரும் உரிமைகோரும் போட்டிப்பலத்துடன் களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதால் இரு வருடத்துக்கு முன்னரே தான் தேர்தலை வைப்பதாக தமிழ் மக்களின் மனங்களை லேசாகத் தொட முயற்சிக்கிறார் மகிந்தா. கடந்த தேர்தலில் புலியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை நயிசாக மென்று விழுங்கியும் விடுகிறார்.

சரத்தோ தானேதான் களத்தில் நின்று போராடி புலிப் பயங்கரவாத்தை ஒழித்தவன் என்றும் ஆனாலும் மனிதாபிமானம் இல்லாமல் புலிகளைக் கொன்றது தனக்குத் தெரியாது என்று கைகளைக் கழுவி சுத்தம் செய்து விடுகிறார். தான் ஜனாதிபதியாக வந்தால் இவற்றுக்கு விசாரணை நடத்துவேன் என்று தன்னை நிரபராதியாகக் காட்டியும் விடுகிறார். உண்மையில் சரத் புலிகள் கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் தனது பதவியைத் துறந்திருந்தால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் ஏதாவது இருந்திருக்கும். யுத்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் இந்த நாட்டில் வாழலாமே தவிர உரிமைகளைக் கோர முடியாது என்று சொன்னது ஒருவேளை இராணுவ நாக்காக இருந்திருக்குமோ தெரியாது.

புலிகள் இருந்த காலத்தில் ஆளும் எதிர் மற்றும் யேவிபி கட்சிகளின் வாக்கு வங்கிகள் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் தொடர்பாக இவர்கள் எடுக்கும் – கக்கும் – நிலைப்பாடுகள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பவுத்திரப்படுத்தப்பட்டு வந்தது. இன்று புலிகள் இல்லை. யுத்தவெற்றியின் உரிமைப் பிரச்சனை வாக்குவங்கியின் பாகப் பிரிவினையாக மாறியும் விட்டது. இருவருமே புலிகளைத் தோற்கடித்த ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சிங்கள மக்களுக்கோ நன்றாகத் தெரியும். அதனால் வெற்றி தோல்விகள் யாருக்கு என்பது சரியாகத் தெரியாத பயம் இரு தரப்பினரிடையேயும் இப்போது படர்ந்திருக்கிறது.

அதனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இருவருமே ஏராளமான வாக்குறுதிகளை இப்போ சொரியத் தொடங்கியுள்ளனர். 13வது திருத்தச் சட்டத்துக்கு மேலேயே போவதாகவும் சொல்கிறார்கள். சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கும் புதிய மேல் சபை உருவாக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுவிட்டது!

இன்றுவரை இவ்வளவும் இல்லாமல் தமிழ்மக்கள் நசுக்கப்பட்டுத் தானே இருந்திருக்கிறார்கள் என்பது உள்ளங்கைப் பிரச்சனையாக இவர்களுக்குத் தெரிந்தும் சும்மாதானே இருந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இவர்கள் கூறுவதைக் கொடுக்கக் கூடாது என்று பிடிவாதம் பிடித்து வந்த யே.வி.பி சரத் எதிரணியில் சேர்ந்திருந்தும் கள்ள மவுனம் சாதிக்கிறது. புதுமையாக யே.வி.பி யூ.என்.பி கூட்டில் இம்முறை சேர்ந்ததும் தனது வாக்குவங்கியை எதிர்காலத்தில் தக்கவைத்துக் கொள்ளவே. யூ.என்.பி பொதுவேட்பாளரை நிறுத்தியதும் அவ்வாறே. சம்மந்தர் கூட்டமைப்பு ஆதரிப்பதும் அதனாலேதான்! சிவாஜி தனியே போட்டியிடுவதும் தனக்கான வாக்கு வங்கிக்கே!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தத்தமது வாக்குவங்கிகளை இத்தேர்தலில் ஊடாக சரி செய்து வைக்கின்ற தேர்தலாக இது சில கட்சிகளுக்கு அமைந்தும் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்று காட்டுக்கத்து கத்திவரும் இக்கட்சிகளெல்லாம் இத்தேர்தலில் என்ன பாடுபடுகிறார்கள்.

சிலபேருக்கு மகிந்தா வீட்டுக்குப் போக வேண்டும் சிலபேருக்கு மகிந்தாதான் ஜனாதிபதியாக வரவேண்டும். சிலருக்கு இருவரும் தமிழருக்கு (புலிகளுக்கு) துரோகம் செய்தவர்கள் இதனால் தனித்துப் போட்டியிடும் ‘சிவாஜி’க்கு வாக்குப் போடவேண்டும். (தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யாத கட்சிகள் சொந்த இனங்களுக்குள்ளேயே இல்லையே!) மொத்தத்தில் ‘நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட’ ஜனாதிபதி ஆட்சிமுறை மீது எவருக்கும் ஆட்சேபனையுமில்லை!

இந்த ஜனாதிபதி முறையைக் கொண்டுவர 1966 ல் இருந்து முயற்சிகள் நடந்தாலும் பலத்த எதிர்ப்பின் மத்தில் இது நீண்டகாலம் சாத்தியமாகவில்லை. 1978 இது செயற்படுத்தப்பட்டது. ஜே.ஆர் தன்னைத்தானே ஜனாதிபதியாக்கி இதை நிறைவேற்றினார். 1995 யூலை மாதத்துக்கு முன் ” அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்” என 3வது ஜனாதிபதித் தேர்தலில் போது பகிரங்கமாக உத்தரவாதமளித்த (தேர்தல் வாக்குறுதி!) சந்திரிக்கா : மிகப் பெரும்பான்மை வாக்குக்களால் வென்ற முதல் பெண் ஜனாதிபதியாலும் அவ் வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை.

இந்த ‘நிறைவேற்று அதிகார’த்தால் இலங்கையில் இவர்களால் எல்லாவற்றையும் செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் சிறுபான்மை இனமக்களின் பிரச்சனையை குறைந்தபட்டசம் சுமுகமாகத் தீர்த்துவைக்கத்தான் இதற்கு அதிகாரமே இல்லமால் போய்விடுகிறது. யோசித்துப் பார்த்தால் : இவ்வதிகாரமே சிறுபான்மை மக்களை ஆட்டிப் படைக்கத்தான் என்பது புலனாகிறது. இதைக் காட்டி சிங்கள மக்களைப் பிளந்து வைப்பது இதுதான் இனவாத தரகுக் கட்சிகளின் சாகா வரத்துக்கான மூலிகை!

‘மே18′ க்குப் பின் இனியொரு ‘வியூகம்’…..

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கிழக்கிலே ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற ஓர் இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்திருந்தன. இச் செய்திகள் வெளிவந்த சில தினங்களின் பின்னர் ‘மே 18′ என்றோர் இயக்கமும் தொடங்கப்பட்டிருப்பதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

‘மே 18′ இயக்கத்தின் அரசியல் முன்னணிப் பத்திரிகையாக ‘வியூகத்தை’ அவர்கள் வெளியிட்டும் இருந்தார்கள். இவ் வெளியீடுகளை கனடா இலண்டன் பிரான்ஸ்…என விரிவுபடுத்தி அறிமுகமும் – விமர்சனமும் என்று கூட்டங்களை நடத்தினர்.

இதுவரை ‘மே 18′ இயக்கம் தனது ‘அரசியல் திட்டத்தை’ வெளியிடவில்லை என்றே தோன்றுகிறது.

மே – 18 என்பது பிரபாகரன் உத்தியோக பூர்வமாக (அரசதரப்பு) கொல்லப்பட்ட நாள். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நாள்! தமிழ்மக்களின் பெரும் பகுதியால் ‘தமிழீழ தேசிய விடுதலை போராட்டம்’ என நம்பப்பட்ட – புலிகளின் போராட்டமும் – அதன் அரசும் அழிக்கப்பட்ட நாள். ஒரு வர்க்கம் தன்னை அதிகார வர்க்கமாக அங்கீகரிக்கக் கோரி போராடி இறுதியில் அங்கீகரிக்கச் சரணடைந்து அழிந்த நாள். ஒரு வர்க்கத்தின் 33 வருடகால அரசியலின் தோல்வியின் இறுதிநாள். இதிலிந்து ‘மே 18′ இனியொரு ‘வியூகத்தை’ எடுக்கிறது.

70களுக்குப் பின்னாக தமிழ்த் தேசிய பிரச்சனையில் இளைஞர்களின் தீவிரவாதப் போக்கு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணமாக குறையும் விருத்தியும் சமச்சீருமற்ற பொருளாதாரத்தில் மேலும் நலிந்து நசுக்கப்பட்ட தமிழ் பகுதிகளின் ‘உற்பத்தி வாய்ப்பின்றிய – உபரிச் சனத்தொகையின் பிரச்சனை’ அமைந்திருந்தது. மேலும் இதனோடு சிங்களப் பேரினவாதத்தின் வெறித்தனமான தாக்குதல்களும் அமைந்திருந்தன. இந்த யதார்த்த நிலைமைகள் தமிழ்த் தரகு முதலாளித்துவத்தின் சமரசத்தையும் பாராளுமன்ற சட்டவாத சரணாகதியையும் இளைஞர் தீவிரவாதம் நிராகரித்தது.

இவ் இளைஞர்களின் ‘தமிழீழ’க் கோரிக்கை ‘சமஸ்டி’ கோரிக்கையின் ஏகாதிபத்திய சார்புத்தன்மையைக் கொண்ட அந்நியப்பட்ட குரல்போல் இருக்கவில்லை. இது அரசுக்கு எதிரான தமிழ் சமூகத்தின் சொந்தக் குரலாக ஒலித்தது. இக் கோரிக்கையை சமூகத்துக்குள் ஆதாரப்படுத்தி தலைமைதாங்கிய சமூகவர்க்கமாக இத் தீவிரவாத இளைஞரே இருந்தனர் (குட்டிபூர்சுவா வர்க்கம்).

இளைஞர்களின் விடுதலை ஆவல்களுக்கு – வர்க்க அபிலாசைகளுக்கு – குட்டியபூர்சுவா வர்க்க சிந்தனை வரம்புகளை உடைப்பெடுத்துத் தாண்டி இக் கோரிக்கை வெளிவந்திருக்கவில்லை. அதனால் இதற்கான சரியான உருவமும் உள்ளடக்கமும் பெற்றுக் கொடுக்கக் கூடிய சமூக உறவுகளும் வளர்த் தெடுக்கப்படவில்லை. இவ்வாறு ‘தமிழீழ கோரிக்கை’யின் உயிர்நாடி ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடங்கியிருப்பது பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து கொள்ளப்படவுமில்லை.  தமிழ் மிதவாத கருத்தியலின் தொடர்ச்சியாக சிங்கள அரசிடம் (தரகுமுதலாளித்துவ அரசு என்றும் உணரப்படவில்லை) இருந்து தமிழ் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதாகவே குறுக்கிப் பார்க்கப்பட்டது. இது இன்னொரு விதத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஒர் இனவாத உருவத்தைக் கொடுத்தும் விட்டது.

இவ் இனவாத உருவத்தால் தமிழ்த் தரகு முதலாளித்துவ வர்க்கத்துடன் தன்னை கொள்கை ரீதியாக முறித்துக் கொள்வதை தமிழீழக் கோரிக்கையானது என்றும் தவிர்த்தே வந்தது. தமிழ் தரகு முதலாளித்துவத்தின் அரசியல் கைவிடப்படாமலே – (தூக்கியெறியப் படாமலே) தமிழீழக் கோரிக்கையானது அதன் ஊன்றுகோலாய் கையில் எடுக்கப்பட்டது. இவ் இனவாத உருவமும் ஏகாதிபத்திய எதிர்ப்புமற்ற இத் தேசிய கருத்தாடல் இனவாத முனைப்புப் பெற்று பிரிவினையை முடிந்த முடிவாக ஊட்டியது. தேசிய இனத்தினது ‘சுயநிர்ணய’ உரிமையை இந்த இனவாத உருவத்துக்கு ஏற்றவாறு நடைபாதை வியாபாரமாக கூவி விற்க முன்வந்தது.

18 வயது நிரம்பிய இளந்தாரிப் பருவத்தினர் தமது குடும்பத்திலிருந்து விலகிச் செல்ல இருக்கும் உரிமைபோல தேசிய இனத்தினது சுயநிர்ணய உரிமையை இவர்கள் தமது இனவாத உருவத்துக்கு ஏற்றவாறு கற்பிதம் செய்தனர். சொந்தத் தொழிலாளி வர்க்கத்தின் முரணற்ற ஜனநாயகத்தை மறுதலித்து ஏகாதிபத்திய கைப்பந்தத்தில் இவ் உரிமையை பிரிவினையாகச் சாதிக்கலாம் எனவும் போதித்தது. இக் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வர்க்கப் பார்வை இன்மையால் இதைப் பெரும் கனவாக வளர்த்து முள்ளிவாய்க்காலில் கடைசிவரை காத்திருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற தன்மையால் தரகு முதலாளித்துவ வர்க்கத்தையும் இவ் உலகத்தையும் தவறாகவே எடைபோட்டது. இறுதியில் முகம் குப்புற விழுந்து அழிந்தும் போனது…

இந்த நிலையில் இக் குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனை வரம்பைத் தாண்டாத இவ் இனவாத உருவக் குடுவைக்குள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ” தவறு எங்கே நடந்தது?” என்று துலாவிப் பார்க்கிறார்கள்.  கடந்த காலத்தில் நடைபெற்ற கட்டற்ற அராஜக வாதங்களுக்கு காரணம் : ”அமைப்பல்ல” (இஸ்தாபன வடிவமல்ல) என்றும் ஏனைய பிற தேசிய சிறுபான்மை இனங்களின் மீது தொடுக்கப்பட்ட ‘இனப் படுகொலைகள்’ தமிழ் தேசியத்தின் விளைவு அல்ல மாறாக அது வலதுசாரி பிற்போக்கு வாதிகளால் விளைந்தவை எனவும் (தேசியம் வர்க்கம் கடந்த மாயை) எல்லாம் சரியாகவே இருந்திருக்கிறது இருந்தும் இத்தோல்விகளுக்குக் காரணம் : வலதுசாரி பிற்போக்கு வாதிகளும் தன்னியல்புவாதமும் தான் என்று கண்டுபிடித்து விடுகிறார்கள்.

முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை தப்பெண்ணங்கலல்ல. அது ஒரு வர்க்கத்தின் ஒடுக்குமுறை. தமிழீழப் பிரதேசம் முஸ்லீம் மக்களுக்கும் சொந்தமானது. தமிழீழப் பிரதேச மக்கள் ஒரு தேசிய சமூகமல்ல. அது ஒர் அரச சமூகமே! (பல்லின). அரசு சமூகத்துக்கு ஒரு தேசிய இனத்தின் தனித்துவமான ‘தேசிய அரசு’ என்றும் சாத்தியமேயில்லை. தமிழீழத்தில் இருக்கும் தேசிய சொத்து தமிழ் தேசிய இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவ்வாறு சொந்தம் கொண்டாட நினைப்பது இனவாதப் போக்கே. புலிகளின் அரசு நிர்வாகக் கட்டமைப்புடன் உருவான யாழ். முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் ஒர் வர்க்கத்தால் பிரயோகிக்கப்பட்ட தமிழ் பேரினவாத நடவடிக்கையே.

‘மே 18′ இயக்கத்தினர் தாம் ‘தமிழீழ கட்சி’யின் தொடர்ச்சி என்கிறார்கள். இதன் இறுதி கொங்கிரஸ் அரசியல் தீர்மானங்கள் சரியாகவே எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதாவது ” தேசிய பிரச்சனையே முக்கிய முரண்பாடாக இருப்பதால் இந்த முரண்பாட்டில் ஈழத் தமிழரின் பக்கமாக நின்று சிறிலங்கா அரசை எதிர்த்துப போராடுகிறார்கள் என்ற வகையில் புலிகள் அமைப்பானது ஒரு தேசிய சக்தியாக வரையறுக்கப்பட்டார்கள்”. என்கிறார்கள்

இக்காலத்தில் புலிகள் ஓர் அரசு யந்திரத்தைக் கொண்டிருந்தனர். பொலீஸ் இருந்தது. நீதிமன்றம் இருந்தது. வங்கி இருந்தது. புலிச் சட்டம் இருந்தது. இராணுவம் விமானப்படை ஆகாயப் படை எல்லாமே இருந்தன. இவ்வளவும் இருக்கும் போது இவர்களின் சிவில் நிர்வாகம் சுயபொருளாதாரத்தில் இயங்கவில்லை. சிங்களத் தரகு முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் மறைமுக குத்தகையிலேயே இயங்கியது. அரசை எதிர்த்துப் போராடுவதை மட்டும் எப்படி ஒரு தேசிய சக்தியாக வரையறுக்க ஒரு கட்சியால் முடிகிறது? புலிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. தமிழ் தரகுமுதலாளித்துவ அரசியலை முறிக்கவில்லை. பிறகெப்படி இது தேசிய சக்தி? இது குட்டிபூர்வுவா வர்க்கத்தின் தன்னியல்பான (அரசும்) போரும்! இது பிரஞ்சை பூர்வமான தேசிய உணர்வுடன் கூடிய யுத்தமே அல்ல!!

இந்த குட்டிபூர்சுவாவின் தன்னியல்பான அரசு’ஏகபிரதிநிதித்துவமாக’ வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. தமிழ் தரகு முதலாளித்துவ அரசியலில் கண்ட குறைபாடுகளை நீக்கி தான் நேர்மையாகவும் ஊக்கத்துடனும் போரிடுவதன் மூலம் விடுதலை அடைந்து விடலாம் என்று எண்ணுகிற குட்டிபூர்சுவா வர்க்கத்தின் கற்பனாவாதம். இது தனக்குப் பின்னால் உள்ளவை மட்டுமே நேர்மையானதாகவும் வெளியே உள்ளவை ‘துரோகமாவும்’ எண்ணி விடுகிறது. வர்க்கப்பார்வை அற்ற இக் குட்டிபூர்சுவா வர்க்கம் தனது முரண்பாட்டில் எல்லாவற்றையும் துரோகமென எண்ணி அழித்துவிடுகிறது. இவ்வாறே குட்டிபூர்சுவா வர்க்க எல்லா விடுதலை இயக்கங்களும் தமது முரண்பாட்டை ‘கொலை’களின் மூலம் அழித்தன.

இவ்வாறு குட்டிபூர்சுவா கற்பனாவாத முரண்பாடுகளே பல இயக்கங்களின் தன்னியல்பான தோற்றுவாயாக இருந்ததே அன்றி பிரக்ஞை பூர்வமான தேசிய உணர்வோ அல்லது அன்றைய சமூக சூழல் காலத்தின் தேவை கண்டறியப்பட்டு இருப்பிலுள்ளவைக்கு மாற்றீடாக உணர்வுபூர்மாக புரட்சிகரமாகப் பிறந்தவையுமல்ல. இவை முரண்பாடுகளின் தன்னெழுச்சியான இயக்கத் தோற்றங்கள். ‘தமிழீழ கட்சி’ கூட ”தமிழ் மக்கள் மத்தியில் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவதில் அக்கறையை குவிப்பது எனவும் இதன் மூலமாக புலிகளை அரசியல் ரீதியாக நெருக்குதலுக்கு உள்ளாக்கி அவர்களது ஏகபிரதிநிதித்துவ தலைமை மற்றும் பிற பிற்போக்கு நிலைப்பாடுகளை கைவிடச் செய்வது என்றும் இதற்கு அவர்கள் முன்வராத போது புலிகளது தலைமையை தனிமைப்படுத்தி தமிழ் மக்களது அரசியல் தலைமையை கைப்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது”. என்கின்றது.

குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வர்க்கப் பார்வையற்ற தன்மையும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் அற்ற தன்மையால்: ‘ஓர் அரசியல் சீர்திருத்தம்’ ‘இதய சுத்தியாக இயங்க வைத்தல்’ ‘தனிநபர் நேர்மையை கடைப்பிடித்தல்’ ‘பதவி வெறியைக் கைவிடச் சொல்லுதல்’ ‘ பிழைப்புவாதத்தை நிறுத்தச் சொல்லுதல்’ ‘ஏகபிரதிநிதித்துவத்தை கைவிடச் சொல்லுதல்’….. இவ்வாறான ஒரு விமர்சனப் பாங்கான செயற்திட்டத்தையே கோருகிறது. இவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்கத்தையும் அதன் வர்க்க நலன்கள் தேசிய புரட்சிக்கு எதிராக இருக்கிறதா? என்பதையும் இக் குட்டிபூர்சுவா வர்க்கத்தால் கண்டறிய முடிவதில்லை.

கட்சி என்பது ‘ஒர் வர்க்கத்தின் தலைவன்’. அவன் தனது தலைமையை புரட்சியில் நிலை நிறுத்த வேண்டுமே ஒழிய தன்னியல்பான தலைமைகளை (எதிர் புரட்சிகரமான) வர்க்கரீதியாகத் தோற்கடிக்காமல் நோகாமல் விமர்சனப்பாங்காகத் தலைமையைகத் திருத்துவது அல்லது கைப்பற்றுவதல்ல.

மே – 18 க்குப் பின் தமிழ் தேசியத்தை தலைமை தாங்குவதற்கு கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காக ‘மே-18′ தொடங்கியிருக்கிறது. இது 33 வருடகால தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியையே எடுத்துக்காட்டுகிறது. புலிகளின் கடந்தகால அரசியலில் இருந்து ”முறித்துக் கொள்ளுதல்” என்பது புலிகளின் அணிகளுக்கான இவர்களின் முன்மொழிவே! அன்றி தமிழ் தேசியப் போக்குக்கு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ‘மே-18′ இன் திடீர் வரவும் தன்னியல்பான குட்டிபூர்சுவா தேசியத்தின் வெளிப்பாடே!

‘பிராணனை வாங்கும்’ உலகம்!

வழமைபோல இவ்வருடக் கடைசியிலும் ‘பூமியின் சூடு’ குறித்தும் பேசப்பட்டுள்ளது. டென்மார்க்கின் தலை நகரில் உலகம் மீண்டும் கூடி ஒருமுறை அழுது புரண்டுள்ளது. 194 நாடுகள் புவி சூடேறி வருவது பற்றியும் வெப்ப வாயுவின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது பற்றியும் முதன்மைப்படுத்தி பேசின.

”வெப்ப வாயுகளின் வெளியேற்றத்தால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்வதால் குட்டித் தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என கண்ட நகர்வால் இன்று மிதக்கும் சிறு தீவுகள் கோரிக்கையை முன்வைத்தன. இதற்கு சீனா இந்தியா பிரேசில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ‘தமது உற்பத்திகள் பாதிக்கப்படும்’ என எதிர்வாதமிட்டு நிராகரித்தன.

உலகில் நாளாந்தம் மில்லியாடர் கணக்கான வறிய மக்கள் சிந்திவரும் செஞ்நீரும் கண்ணீரும் இந்தப் பூமியைக் குளிர வைக்கவில்லையா? ஆகக் குறைந்தது 2-3 பாகையை ஆவது குறைத்து விடவேண்டுமென்று இந்த மாநாட்டில் நீலிக்கண்ணீர் விடப்பட்டுள்ளது.

கரியமில வாயுவை வளிமண்டலத்தில் ஏற்றுவதில் மின் உற்பத்தி போன்ற வலு உற்பத்தியும் தொழிற்சாலைகளும் முதலிடத்தைப் பெறுகிறது. நிலமும் காடுசார்ந்த பயன்பாடும் 32 வீத வெப்ப வாயுவை வெளியேற்றுகிறது. போக்குவரத்து 13 வீதத்தையும் இதர செயற்பாடுகள் 10 வீதத்தையும் வெளியேற்றுகின்றன. மின்சாரம் மற்றும் இயந்திர ஆலை உற்பத்திகளால் 45 வீதமான வெப்ப வாயு வெளியேற்றப்படுகிறது.

சூரிய வெளிச்சத்தில் 30 வீதத்தையே இந்தப் பூமி பெற்று வருகிறது. 30 வீதம் மீண்டும் வளிமண்டலத்துக்குத் தெறிப்பாகி விடுகிறது. உலகின் 40 வீதமான விளை நிலங்களே விளைச்சலைக் காணுகின்றன. ஏனையவை தரிசாகி பயன்பாடற்று விட்டது.  சோளம் 16 தொடக்கம் 24 வீதமான சூரிய ஒளியை மீள் தெறிப்பாக்கியும் விடுகிறது.

பூமியின் சூட்டை ஆகக்குறைந்ததுஇ 1-2 பாகையால் அவசியமாகக் குறைக்க வேண்டியுள்ளது மேற்குலகிற்கு! வட – அமெரிக்காவினதும் மத்திய ஜரோப்பாவினதும் உணவு உற்பத்தியின் முன் நிபந்தனையாக இது இன்று அமைந்துள்ளது! பாரம்பரிய விதை தானிய மணிகளான கோதுமை சோளம் நெற் தாணியங்களில் 23 தொடக்கம் 68 வீதமானவை இச்சூழல் மாற்றத்தில் தாக்குப்பிடிக்க முடியாதவைகளாக மாறியும் விட்டன. இதனால் இன்று
25 செ.மீ க்கும் குறைவான குட்டையான நெல்லினத்தை உருவாக்க உலகம் துடித்துக் கொண்டிருக்கிறது!

கரியமில வாயுவின் அளவைக் குறைக்க குழைக்காடுகளை வேண்டும் உலகம் விசித்திரமாக தமது சொந்த சுயநலத்துக்காக குட்டையான தாவரத்தையும் உருவாக்குகிறது. தாவரங்களின் இலைகள் கரியமில வாயுவை உறிஞ்சி நீரையும் பெற்று சூரிய ஒளியின் துணையுடன் சீனியையும் கரியமிலவாயுவுக்குச் சமமான பிராணவாயுவையும் (ஒக்ஸ்சிசன்) உற்பத்தி செய்கிறது.

பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல்களில் 90 வீதமானவை ஜரோப்பாவுக்கான இறக்குமதியில் ஈடுபடுகிறது. இதன் வருடாந்த கடற் போக்குவரத்தால் மட்டும் 800 மில்லியன் தொன் கரியமில வாயு வளிமண்டலத்தில் ஏவப்படுகிறது. இது ஆகாயப் போக்குவரத்தைவிட இரு மடங்கானது. ஜரோப்பாவுக்குள் மட்டும் ஆகாய விமாண (பயணிகள் விமானம்) பயணத்தால் 284 மில்லியன் தொன் கரியமில வாயு ஒரு வருடத்தில் ஏவப்படுகிறது.

யுத்த தளபாட உற்பத்தியாலும் யுத்தக் கண்காணிப்பு மற்றும் வேவுகளுக்காகவும் யுத்தங்களாலும் வெயியேற்றப்படும் கணிசமான கரியமில வாயுவின் அளவை உலகம் வெளியிடவோ அதை நிறுத்தவோ தயாரற்ற நிலையில் உள்ளது. இதற்காக இந்த உலகங்கள் கூடி அழுதது கிடையாது. ஆளும் வர்க்கங்களின் கொழுப்புத் திமிரால் சூடேறும் பூமிக்காக சும்மா இந்த உலகம் சாதாரண அப்பாவி மக்களின் பிராணனை வாங்கியும் வருகிறது.

இன்று ‘பசுமைப் புரட்சி’யோடு ‘நீலப் புரட்சியும்’ உலகுக்குத் தேவைப்படுகிறது. ‘நீலப் புரட்சி’ என்பது கடல் சார் உற்பத்திப் புரட்சியாகும். இவை அனைத்தும் இன்று மேற்குலகின் உடனடி வாழ்நிலை நிபந்தனையாகியும் விட்டது.

இன்று இவ் உலகை சமமாக ஒவ்வொரு மனிதனுக்கும் பங்கிட்டால்: ஒரு மனிதனுக்கு 6 200 சதுர மீற்றர் காடும்  7 200 சதுர மீற்றர் பயன்பாடுடன் கூடிய குடியிருப்பு நிலமும்  54  000 சதுர மீற்றர் கடலும் கொடுக்க முடியும். இதை ஒவ்வொரு மனிதனும் பெற்றால் இந்த உலகத்துக்கு இந்த வாயுப்பிரச்சனையும் அதன் பிடிப்புப் பிரச்சனையும் இருக்காதுதானே?

உலக மக்கள் நாளாந்தம் சுவாசித்து வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவும் அதிகரித்துள்ளது. சிவப்பு நிற மாமிச உணவுவகைகளை அதிகளவு உண்ணும் மனிதர்களாலும் இவ் வளிமண்டலம் சூடேற்றப் படுகிறது. மாமிசம் உண்ணாத ஒரு மனிதனைவிட மாட்டிறைச்சியை உண்ணும் மனிதன் 2.22 வீத கரியமில வாயுவை மேலதிகமாக உற்பத்தி செய்து விடுகிறான்.

ஆக உழைத்து உழைத்து உணவுக்காக போராடும் மனிதன் பட்டினியால் சாகடிக்கப் படுகிறான். சோம்பேறித் தனமான ஆளும் வர்க்கத்தின் சும்மா இருந்து கொழுத்த ஏப்பக்காற்றால் பூமி சூடேறுவதை யார் தடுத்து நிதுத்தப் போகிறார்கள்?

சுதேகு
டிசம் 09  – ஜன 10


http://www.psminaiyam.com/?p=897

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்