2009 தமிழ்மணம் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றி பெற்ற பதிவர்களுக்கும், பங்கேற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியை திறம்பட நடத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணத்திற்கும், வாக்களிப்பில் ஈடுபட்ட வாசகர்களுக்கும் நன்றிகள்!
சென்ற ஆண்டு தமிழ்மணம் போட்டி குறித்த அறிவிப்பு வந்தபோது அதைக் கொண்டாடும் நிலையில் பலரும் இல்லை. காரணம் ஈழத்தில் தொடர்ந்த முடிவேயில்லாத் துயரம். போட்டியும்கூட அறிவித்தபடி முழுமையாக நடக்காமல் பதிவர்கள் அளித்த வாக்குகளோடு நிறைவுற்றது. எனினும் பதிவர்களுக்காக தமிழ்மணம் நடத்திய முதல் போட்டி என்ற வகையில் அதற்க்கேயுரிய முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது.
பதிவுலகம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது. அன்றாடம் புதிய பதிவர்கள் தமிழ்மணத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அல் பெருனியைப் போலவோ, யுவான் சுவாங்கைப் போலவோ அலைந்து திரியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அம்மையப்பன் வடிவில் உலகைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற விநாயகர்களாக நாம் இருந்தபோதிலும், எல்லோரும் எல்லோரையும் படித்து விடுவதில்லை, படிக்க முடிவதும் இல்லை. ஆற்றலின் வரம்பு காரணமாக ஏற்படுவது மட்டுமல்ல, இந்த இயலாமை. நமது விருப்பு வெறுப்புகளும், பல சந்தர்ப்பங்களில் இந்த இயலாமையை நம் மீது திணிக்கின்றன. “பிடித்ததை மட்டுமே படிப்பது” என்ற பழக்கத்திலிருந்து ஒருவர் மீள வேண்டுமானால், நமக்குப் பிடிக்கின்ற விசயங்கள், என்ன காரணத்தினால் நமக்குப் பிடிக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு புரிந்து கொள்ளும் போதுதான் பிடித்தவற்றின் ‘அன்புப்பிடி’யிலிருந்து நாம் விடுபடத் தொடங்குகிறோம். வினவு என்பது இதற்கான முயற்சி. எங்கள் பெயரிலேயே இருக்கிறது இதற்கான விளக்கம்.
எங்களது இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே போட்டியில் பங்கேற்கிறோம்.
சென்ற ஆண்டு பங்கேற்ற மூன்று பிரிவுகளில் இரண்டில் முதலிடமும், ஒன்றில் ஐந்தாம் இடமும் தந்து எங்களைப் பதிவர்கள் அங்கீகரித்தனர். “ஒரு பதிவர் இரு பிரிவுகளில் மட்டுமே பங்கேற்கலாம்” என்று திருத்தியமைக்கப்பட்ட விதியின்படி, இந்த முறை இரண்டு பிரிவுகளில் பங்கேற்றோம். தமிழ் மணத்தின் பதிவர்களும் வாசகர்களும் இரண்டிலும் எமக்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பங்கேற்பவர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம் என்று அறிகிறோம். முக்கியமாக இந்த ஆண்டு வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பதால் எமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசின் ‘மதிப்பு’ பன்மடங்கு கூடிவிட்டதாக உணர்கிறோம்.
போட்டி… முதலிடம்… முதலானவற்றை விட்டு வெளியே வந்து, வினவு தளத்திற்குள் நுழைந்து அதன் பின்னூட்டங்களைக் கொஞ்சம் சுற்றிப்பார்த்தால், இவ்வளவு எதிர்ப்புகளா என்று வியப்பு தோன்றுகிறது. இந்துத்துவவாதிகள், இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகள், போலிக் கம்யூனிஸ்டுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழினவாதிகள், சாதிவெறியர்கள், மொக்கைகள், இலக்கியவாதிகள் எனப் பலரையும் நாங்கள் ‘பகைத்துக்’ கொண்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள இயலும். இவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கும் நாங்கள் முதலிடத்தை வென்றிருப்பது எங்களுக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. இந்த விவாதங்களில் பங்கேற்கவில்லையென்றாலும், அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் மவுனப்பெரும்பான்மை எத்தனை வலிமையானது என்பது இப்போது தெளிவாக விளங்குகிறது.
மெய் உலகில் புறக்கணித்தக்க சிறியதொரு குழுவாகவும், காலாவதியாகிப்போன கம்யூனிச அரசியல், புரட்சி ஆகியவற்றை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களாகவும், ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்களாகவும் கருதப்படும் எமக்கு, மெய்நிகர் உலகில் அல்லது கருத்தியல் தளத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உற்சாகத்தைத் தருகிறது. நம்பிக்கையைக் கூட்டுகிறது.
சிலருக்கு நேபாளத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெற்ற வெற்றி அதிர்ச்சியூட்டியதைப் போல இதுவும் அதிர்ச்சியூட்டவும் கூடும். அது எங்களுக்கு புரிகிறது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் புரிந்துதான் இருக்கிறது. அதன் விளைவுதான் ஆபரேசன் கிரீன் ஹன்ட். அப்படியொரு கிரீன் ஹன்ட் மெய்நிகர் உலகில் தொடங்கும் வரை இந்தக் களத்தில் எங்கள் ஆட்டம் தொடரும். அல்லது மெய்நிகர் உலகின் பதிவர்களும் வாசகர்களும் அத்தகையதொரு வேட்டையே நடத்தமுடியாமல் சிதம்பரங்களை முறியடிக்கவும் கூடும். அப்படியொரு வெற்றியை மெய்நிகர் உலகில் நாம் அடைவோமாகில், அது உண்மையான ஜனநாயகம் மெய் உலகில் பெறக்கூடிய வெற்றிக்கு ஒரு படிக்கட்டாக அமையும்.