பிரபாகரனில் இருந்து தமிழ் தேசியத்தைத் தொடரவே, அதற்கொரு கோட்பாட்டை மே18 இயக்கம் வியூகம் மூலம் முன்தள்ளுகின்றது. இவர்கள் வேறுயாருமல்ல. தீப்பொறி முன்வைத்த   அரசியலை கேசவனுக்கு பின் மறுதலித்தவர்கள். தீப்பொறியை கைவிட்டு, உயிர்ப்பு சஞ்சிகை மூலம் அரசியலை புலிக் கோட்பாடாக்கியவர்கள்.

இந்த அரசியல் கோட்பாட்டின் மூலம், புலிகளின் உளவு அமைப்பாக மாறியவர்கள் தங்களை தமிழீழக் கட்சியாக்கினர். இதை அன்று ஜான் "தன்னியல்பு வாதம்" என்ற கோட்பாட்டின் மூலம், புலிக்கு பின்னால் அழைத்துச் செல்ல முடிந்தது.


இன்று பிரபாகரன் இறந்த "மே18"இன் பெயரில், ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு "வியூகம்" போடும் வண்ணம் வியூகம் சஞ்சிகை மூலம், மறுபடியும் "தன்னியல்புவாதம்" என்ற தனது முந்தைய கோட்பாட்டை கொண்டு வரலாற்றை "தன்னியல்புவாதமாக" திரித்துக்காட்ட முனைகின்றார். இந்த "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாட்டின் ஊடாக, பிற்போக்கான ஒடுக்கும் (சுரண்டும்) வர்க்கங்கள்; முன்தள்ளிய தேசியத்தில் இருந்த வர்க்க அடிப்படைகளை நீக்கி, அதன் அரசியல் சமூக கூறுகளையும் மறுதலித்து "தன்னியல்பு வாதமாக" காட்டமுனைகின்றனர். தமிழ்தேசிய சுரண்டும் வர்க்கம் கடந்த தன் வரலாற்றில் தனிமனித முனைப்புடன் அது ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை, வர்க்க அடிப்படையில் இருந்து பிரித்து "மே 18" இயக்கம் காட்ட முனைகின்றது. இதை கடந்த வரலாறாக்கி, அதை "தன்னியல்புவாத"த்தின் அரசியல் விளைவாக இட்டுக்கட்ட முனைகின்றனர்.

 

நாம் முதலில்  தன்னியல்புவாதம் என்ன என்பதை பார்ப்போம். தத்துவத்தில் இது எப்போதும் கருத்துமுதல்வாதம். தனிநபர் வாதமே, சமூக வளர்ச்சியின் பிரதான அரசியல் போக்கு என்று இது கருதுகின்றது. வரலாற்றுப் போக்கிலான எதார்த்தத்தையும், அதன் புறநிலையான சமூக விதிகளையும் கூட மறுதலிக்கின்றது. எதார்த்தத்தில் நிலவும் சமூகப் போக்கை மறுத்து, தன்வயப்பட்ட முடிவுகளை பலவந்தமாக திணிக்கின்றது. இதுதான் தன்னியல்புவாதம்.

 

இந்த தன்னியல்பு வாதத்தைத் தான், "மே18" தனக்கு ஏற்ப திரித்து, கடந்த எம்போராட்டத்தை இதன் மூலம் காட்ட முனைகின்றது.

 

"மே18" இயக்கம் "வியூகம்" மூலம் போடும் சூழ்ச்சியான அரசியல் என்பது, மிக நுட்பமானது. அது "தன்னியல்புவாதம்" என்ற சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படையான மையக் கருதுகோளை, வர்க்கம் கடந்த ஒரு தளத்தில் முன்வைத்து வித்தை காட்ட முனைகின்றது. இதைக் கொண்டு கடந்தகாலத்தை திரித்து காட்ட முனைகின்றது.

 

"தன்னியல்புவாதம்" இயல்பாகவே முதலாளித்துவ சித்தாந்தம். அது சுரண்டும் வர்க்கம்  சார்ந்து, எங்கும் நிரம்பியது. தனிச்சொத்துடமை அமைப்பில் தன்முனைப்பான தன் நலன் சார்ந்த, ஒரு உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு அது இயங்குகின்றது. இங்கு "தன்னியல்புவாதமே" அதன் பிரதான இயங்குதன்மையாகும்.

 

இங்கும் சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படையிலான வர்க்க நலன்கள், என்பது "தன்னியல்புவாதம்" என்ற சித்தாந்தத்துக்கு உட்பட்டது. தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் சுரண்டும் வர்க்கம் சார்ந்து இருந்தது என்பது, இதன் வர்க்க அடித்தளத்தில் இருந்துதான். அது ஏகாதிபத்தியம் சார்ந்ததாக, தரகு முதலாளித்துவம் சார்ந்ததாக, நிலப்பிரபுத்துவம் சார்ந்ததாக, சமூக ஒடுக்குமுறை (ஆணாதிக்கம், சாதிய மேலாண்மை, பிரதேச மேலாதிக்கம்…) சார்ந்ததாக இருந்தது என்பது, அதன் வர்க்க அடித்தளத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறாகும். இந்த வர்க்கம் தன் வர்க்க நலன் சார்ந்து, இயல்பாகவே "தன்னியல்புவாதம்" கொண்டது.

 

இங்கு இந்த சுரண்டும் வர்க்கம் இயல்பாக கொண்டுள்ள "தன்னியல்புவாத"த்தை, அதன் வர்க்கத்துக்கு வெளியில் வைத்து "வியூகம்" போட்டு காட்டமுனைகின்றனர் "மே18" இயக்கம். சுரண்டும் வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்தேசிய அரசியலை திரித்து, சுரண்டும் வர்க்கம் இயல்பாக கொண்டுள்ள "தன்னியல்புவாத" அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு திரிபின் மூலம், கடந்த போராட்டத்தை "தன்னியல்புவாதமாக" இட்டுக் காட்ட முனைகின்றனர்.

 

இங்கு "தன்னியல்புவாதம்" இருந்தது என்பது, ஒடுக்கும் வர்க்க அடித்தளத்தில் இருந்துதான். ஆனால் இந்த வர்க்க அடித்தளத்தை "மே18"காரர் மறுக்க, "தன்னியல்புவாதம்" தான் அனைத்துக்கும் காரணம் என்ற அரசியல் திரிபை புகுத்துகின்றனர். இதன் மூலம் சுரண்டும் வர்க்கம் "மே18" அன்று விட்டுச்சென்ற புலித் தேசியத்தை, "தன்னியல்புவாதமாக" காட்டி அதை தமதாக்க முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் பொது அரசியல் இயல்பை, அதாவது அதன் மேல்கட்டுமானத்தை மட்டும் தவறானதாக இருந்தாக காட்டும், ஒரு அரசியல் தில்லுமுல்லில் ஈடுபடுகின்றனர். இதைத்தான் அவர்கள் "தன்னியல்புவாதம்" என்று கூறி நிற்கின்றனர். இப்படி கடந்தகால நிகழ்வை வர்க்க அடிப்படைக்கு வெளியில் திரித்துக் காட்டுவது கூட, "தன்னியல்புவாத" கோட்பாட்டுக்கு உட்பட்டது.

 

எம்மைச் சுற்றிய சுரண்டும் வர்க்கத்தின் வலதுசாரிய இயக்கத்தை வெறும் "தன்னியல்புவாதமாக" காட்டுவதன் மூலம், இதுதான் கடந்த காலத்தின் தோல்விக்களுக்கு காரணமாக கூறி, வலதுசாரியத்தை சரி செய்வதன் மூலம் அரசியல் ரீதியாக அதை மீட்டலாகும். இந்த வகையில் புலியின் ஒரு அரசியல் நீட்சியாக "மே18" தன்னை முன்னிறுத்தியுள்ளது. மே 18 முதல், திடீரென தன்னை புலி அரசியலில் இருந்து முன்னிறுத்த முனைகின்றது.

 

"தன்னியல்புவாதக்" கோட்பாட்டை முன்னிறுத்தி, சுரண்டும் வர்க்கத்தின் தமிழ் தேசிய அடிப்படையிலான வலதுசாரிய மக்கள் விரோத ஒடுக்கும் சுரண்டும் வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை மறுதலிக்கின்றனர். இது கொண்டிருந்த தன்னியல்புதான், அனைத்தும் என்று கதைவிட முனைகின்றனர்.

 

தேசிய மூலதனத்தை, சொந்த மொழியை, சொந்த பண்பாட்டையும், சொந்த மண்ணில் பாதுகாக்கும் போராட்டம்தான் தமிழ் தேசியம் என்பதை மறுத்தபடி, அதை ஸ்ராலின் கோட்பாடு என்றும் ஸ்ராலின் பெயரால் அதைக் கொச்சைப்படுத்தியபடிதான், வலதுசாரியத்தை மீளவும் "தன்னியல்புவாதக்" கோட்பாடு மூலம் முன்மொழிகின்றனர்.

 

இப்படி தேசியம் தன்னகத்தே பொருள்முதல்வாதம் சார்ந்து  கொண்டிருக்க கூடிய, பொருளை மறுக்கின்றனர். தேசியம் கொண்டுள்ள பொருளை மறுத்து, கருத்து முதல்வாதிகளாக இருந்தபடி வரலாற்றை திரிக்கின்றனர். கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்கம் சாhந்து கொண்டிருக்கின்ற தன்னியல்புவாதத்தை முதன்மைப்படுத்தி, சுரண்டும் வர்க்கத்தின் வரலாற்றை வர்க்க அடிப்படையில் இருந்து நீக்கி எமக்கு காட்ட முனைகின்றனர்.

 

இதன் மூலம் கடந்த போராட்டத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் போராட்டமாக காட்டி, இதற்குள் இருந்த "தன்னியல்புவாதம்" அதை அழித்ததாக இட்டுக் காட்ட முனைகின்றனர். இதுவே திரிபின் மற்றொரு முகம். ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி  முன்னெடுத்த பிற்போக்கு "தேசியத்தை" மறுத்து, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் முற்போக்கு "தேசியமாக"  போராட்டத்தைக் காட்டுகின்றனர். இதில் நிலவிய "தன்னியல்புவாதம்" தான் தோல்விக்கு அடிப்படையாக இருந்ததாக "வியூகம்" போட்டு காட்டுகின்றனர். இப்படி ஒடுக்கும் வர்க்கத்தின் வர்க்க அரசியல் அடிப்படையை நீக்கம் செய்து, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் போராட்டமாக இட்டுக் காட்டி விடுகின்றனர். இதில் நிலவிய "தன்னியல்புவாதம்" தான், கடந்த எம் வரலாற்று நிகழ்வாக இட்டுக்கட்ட முனைகின்றனர். இது தான் "மே18" இல் இருந்து தொடங்குகின்றது. "மே18" க்கு முந்தையதும், சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தை மறுதலிக்கின்றனர்.

 

இதை அவர்கள் தங்கள் வர்க்க நோக்கில் இருந்து கூறுவதைப் பார்ப்போம். "முற்போக்கு அமைப்புக்கள் என்று கூறப்பட்டவையும் கூட மிகவும் மேல்பூச்சான சிவப்பு கோசங்களைக் கடந்து முறையாக தீர்வுகளை கண்டிருக்கவில்லை. இன்னும் சிலரோ தாமே தமிழீழ போராட்டத்தில் முதன் முதலாக மார்க்சியத்தை முன்வைத்து போராட்டத்தை தலைமையேற்பவர்களாக காட்டிக் கொண்டார்கள். அவர்களது மமதையில் இன்னும் பலரை தாக்கிக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் இப்போது திரும்பிப்பார்த்தால் அந்த கற்கால கோடரிகள் ஒரு நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது. ஒட்டு மொத்தத்தில் போராட்டமானது முழுக்க முழுக்க தன்னியல்புவாதத்திற்கு பலியாகிப் போயிருந்தது."

 

இப்படி கடந்தகாலத்தில் பிற்போக்கான சுரண்டும் வர்க்கம் முன்வைத்த தேசியத்துக்கு எதிராக "மே 18" காரர்கள் அவதூறு பொழிகின்றனர். ஏன் அந்த போராட்டத்தையும், தியாகத்தையும் கூட மறுதலித்த, "கற்கால கோடரிகள் ஒரு நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக"  காட்டுகின்றனர். இந்த வகையில் தான் இவர்களால் புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட கேசவனுக்கு, ஒரு அஞ்சலியைக் கூட செய்யத் தயாராகவில்லை. அது "எதற்கும் பயன்படாத" தியாகம்.

 

பயன்படுவது "மே 18" இல் அழிந்த புலிகளின் போராட்டம் தான். அதை "தன்னியல்புவாதமாக" காட்டி, பயன்பாடு கொண்டதாக காட்டி புலியின் நீட்சியில் தொடர முனைகின்றனர். வவதுசாரி வக்கிரம் "சிவப்பு கோசங்களைக் கடந்து முறையாக தீர்வுகளை கண்டிருக்கவில்லை" என்று கூறி, புலிக்கு பின் தன்னை நிலை நிறுத்தமுனைகின்றது. சுரண்டப்பட்ட வர்க்கத்தின் தலைவர்களை புலிகள் கொன்று குவிக்க, அதற்கு உதவியர்கள் இன்று " நவீன யுத்தத்தில் எதற்கும் பயன்படாதவையாக இருந்தமை தெரிகிறது" என்று மறுபடியும் கொல்லுகின்றனர். புலிகள் அன்று செய்ததை தத்துவ ரீதியாக கொல்வது தான் "மே18" சதிகாரக் கும்பலின் அரசியலாகும். இதனால்தான் கடந்த போராட்டங்களையும், தியாகங்களையும் வரலாற்றில் இருந்தும் மறுதலிக்கின்றனர். அந்த அரசியலை தங்கள் வலதுசாரிய "மே18"க்கு உதவாது என்று கூறி நிற்கின்றனர். கேசவன் காட்டிக் கொடுக்கப்பட்டதும், அவனின் தியாகத்தை மறுப்பதும் இதனால்தான்.

 

தங்களையும், தங்கள் சுரண்டும் வர்க்க அடிப்படையையும் தக்கவைக்க, அதில் இருந்த "தன்னியல்புவாதம்" தான் தோல்விக்கு காரணம் என்கின்றனர். சுரண்டம் வர்க்க நலன்கள் அல்ல என்கின்றனர்.

 

இதற்காக மற்றொரு திரிபை "தன்னியல்புவாதம்" மூலம் புகுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் போராட்டாக இருந்ததாக "தன்னியல்புவாதம்" மூலம் காட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை ஒடுக்கும் வர்க்கம் பலாத்காரமாக தலைமை தாங்கியதை மறுக்க, "தன்னியல்புவாதம்" கோட்பாடு மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் போராட்டமாக காட்டி மறுக்கின்றனர். இதில் இப்படி ஒரு திரிபு புகுத்தப்படுகின்றது.

 

இவர்கள் கடந்த வரலாற்றை மறுக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நீட்சியாக உருவான பெரும்பாலான இயக்கங்கள், அதன் சுரண்டும் வர்க்கம் சார்ந்து "தன்னியல்புவாதம்" கொண்ட ஒன்றாக இருந்தது. இதை மறுதலிக்கின்றனர். "மே18" வியூகம் செய்யும் அரசியல் தில்லுமுல்லு, வலதுசாரியத்தையும் இடது சாரியத்தையும் வேறுபாடற்ற ஒன்றாக காட்டி நிற்கின்றது. இதில் "தன்னியல்புவாதம்;" பற்றி உள்ளடகத்தைக் கொண்டு வலதுசாரிய அரசியலை பாதுகாத்து, புலித்தலைவர் செத்த "மே 18" முதல் அதைத் தொடர "மே18" புலி இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த அரசியல் கடந்த இடதுசாரிய போராட்டத்தை மறுத்து, அந்தத் தியாகத்தை மறுத்து, அது கொண்டிருந்த இடதுசாரிய அரசியலையும் மறுத்து எழுகின்றது. இதற்கு அமைய அது அரசியல் ரீதியாக தனக்கு அமைவாக உள்ள அனைவருடனும், குழையடிக்கும் ஒரு அரசியல் தளத்தில் தன்னை நிலைநிறுத்துகின்றது. இங்கு வலதுசாரிய சுரண்டும் வர்க்க அடிப்படையை மறுத்த "தன்னியல்புவாத" கோட்பாட்டை, முன்னிறுத்தி வருகின்றது.

          

தொடரும்

பி.இரயாகரன்
13.01.2010

 

பகுதி 01 : "வியூகம்" முன்னுரை : "மே18" இயக்கம் "தன்னியல்புவாதம்" மூலம்

முன்மொழியும் வர்க்கமற்ற அரசியல்