இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.

கடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.

எண்ணற்ற பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேற்குறித்த அனைத்து வரையறைகளுக்குள்ளும் நான் உட்படுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியாக நான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறேன்.

நீண்ட நெடுங்காலமாகவே பத்திரிகைத்துறையில் நான் செயற்பட்டு வருகிறேன். ‘சண்டே லீடர்” பத்திரிகை 2009 ஆம் ஆண்டு தனது 15 வருட நிறைவினைப் பூர்த்தி செய்கிறது. இந்தப் 15 வருட பயணத்தில் இலங்கையில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் மோசமானதாகவே இருந்திருக்கின்றன என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை.

கொலை செய்வதையே இலக்காகக் கொண்ட ஆட்சியாளர்களால் கொடூரத்தனமாக முன்னெடுக்கப்படும் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில் நாம் சிக்குண்டிருக்கிறோம். பயங்கரவாதச் செயல்கள் தினமும் இடம்பெறும் சம்பவமாகி விட்டது. அது நாட்டினது அரசாலோ அல்லது பயங்கரவாதிகளாலோ முன்னெடுக்கப்படுவதாக இருக்கலாம். சுதந்திரமாகச் செயற்படும் பத்திரிகைத்துறை போன்ற நாட்டினது அலகுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படைக் கருவியாக அரசு படுகொலையினைப் பயன்படுத்துகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள், நாளை நீதியாளர்கள் கூடக் கொல்லப்படலாம். இந்த இரண்டு குழுமத்தினருக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல் என்றுமே இருந்ததில்லை.

இந்த நிலையில் ஏன் நான் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும்? நான் அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்வேன். ஒரு கணவன், அருமையான மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற பிறிதொரு பாத்திரத்தினையும் நான் வகிக்கிறேன். நான் சட்டத்துறையில் இருக்கலாம், பத்திரிகையாளராக இருக்கலாம், எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பம் சார்ந்த பொறுப்புக்களும் எனக்குண்டு.

இந்தப் புறநிலையில், பத்திரிகைத்துறை என்ற ஆபத்தான பாதையில் பயணிக்க வேண்டுமா? பத்திரிகைத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள். சிறந்த, பாதுகாப்பான வாழ்வினை எனக்குத் தரக்கூடிய சட்டத்துறைக்கே திரும்புமாறு நண்பர்கள் பலர் என்னை வற்புறுத்தினார்கள்.

நீங்கள் விரும்பும் அமைச்சுப் பொறுப்பினைக்கூட உங்களுக்குத் தருகிறோம் எனக்கூறி என்னை அரசியலில் இறங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் கோரின. இலங்கையில் சுதந்திரப் பத்திரிகைத்துறைக்கு எழுந்திருக்கும் அச்சுறுத்தலை எடுத்துக்கூறி, தங்களது நாடுகளில் குடியுரிமை தருவதாகவும், பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்வதாகவும் பல இராஜதந்திரிகள் என்னிடம் கூறினர்.

இவை எதனையும் தேர்ந்தெடுக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால், உயர் பதவி, புகழ், அதிக ஆதாயம் மற்றும் பாதுகாப்பை எனக்குத் தரக்கூடிய இன்னொரு அழைப்பு வந்தது. அதுதான் மனச்சாட்சியின் குரல்.

நாங்கள் எனது கண்ணால் எதனைப் பார்க்கிறோமோ அதனையே எழுதியமையினால், ‘சண்டே லீடர்” பத்திரிகை சர்ச்கை;குரிய ஒரு பத்திரிகையாக மாறியது.

குறித்த ஒருவர் களவெடுத்திருந்தால் அவரைக் கள்ளன் என்றோம், பிறிதொருவர் கொலை செய்திருந்தால் அவரைக் கொலையாளி என்றோம். குறித்த நபர் உயர்பதவியில் இருப்பவராக இருந்தால் அவர் செய்த தவறினை மறைத்து, இடக்கரடக்கலாக நாம் துதிபாட முனையவில்லை.

எனது பத்திரிகைகளில் பிரசுரித்த விசாரணை சார் கட்டுரைகளுக்கு ஆதார ஆவணங்களை முன்வைத்தோம். தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தும் அந்த ஆவணங்களை எமக்குத் தந்த மக்களுக்கு நன்றிகள்.

‘சண்டே லீடர்” பத்திரிகையின் வரலாற்றில் நாம் ஆளும் தரப்பினரின் முறைகேடுகளையும் ஊழல்களையும் ஒன்றின் பின் ஒன்றாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் இந்தப் 15 வருட வரலாற்றில் அவை எதுவும் தவறென்பதை நிரூபிக்கும் வகையில் எவரும் பதில் ஆதாரங்களை முன்வைக்கவுமில்லை அல்லது நீதிமன்றங்களில் வாதாடி வெல்லவுமில்லை.

சுதந்திர ஊடகங்களைப் பொறுத்த வரையில் அவை குறித்ததொரு பிரச்சினையினை மக்கள் எந்தவித மிகைப்படுத்தல்களோ அல்லது பூசி மெழுகல்களோ இன்றி என்ன நடந்ததோ அதனை அவ்வாறே அறிவதற்கு வழி செய்கிறது.

மக்களாகிய நீங்கள் நாட்டினது உண்மை நிலையினை, குறிப்பாக உங்கள் குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாட்டினை நிர்வகிப்பதற்கென, நீங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் உண்மை நிலையினை எங்களுடாகத்தான் அறிகிறீர்கள்.

சுதந்திரப் பத்திரிகை என்ற இந்தக் கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் விம்பம் சிலவேளைகளில் இனிமையாக இருக்காது. ஏற்றுக்கொள்வதற்குக் கடினமான குறித்த விம்பத்தினைப் பார்பதற்கே சகிக்க முடியாத நீங்கள் கதிரையில் இருப்பதற்குச் சங்கடப்படும் அதேநேரம், மக்களாகிய நீங்கள் அந்த விம்பத்தினைப் பார்க்கவேண்டும் என்பதற்காக வெளிப்படையாகவே கண்ணாடியினை உங்கள் முன்னால் து}க்கிப்பிடிக்கும் பத்திரிகையாளர்கள் பெரும் அபாயத்தினை எதிர்கொள்கிறார்கள்.

உண்மையான விம்பத்தினை நீங்கள் பார்ப்பதற்கு வழி செய்வதுதான் எமது கடமை. அதனை நாம் தட்டிக்கழிக்க முடியாது.

ஒவ்வொரு பத்திரிகையும் தமக்கேயுரிய பாங்கினைக் கொண்டிருக்கின்றன. நாங்கள் எமக்கேயுரிய தனித்துவமான பாங்கினைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறைக்க விரும்பவில்லை. வெளிப்படைத்தன்மை, மதச்சார்பற்றதன்மை, பாரபட்சமற்ற நிலை மற்றும் ஜனநாயகம் இலங்கையில் இருப்பதையே நாம் விரும்புகிறோம். இந்த ஒவ்வொரு சொற்களையும் எண்ணிப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தத்தினைக் கொண்டிருக்கின்றன.

வெளிப்படைத்தன்மை எனும்போது அரசாங்கம் தான் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்கு அவ்வாறே வெளிப்படுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடந்துகொள்ளக்கூடாது. பல்லினங்கள், பல மதங்கள்; மற்றும் பல்லின சமூகங்களைக் கொண்ட எமது நாட்டில் மதச்சார்பற்றதன்மை என்ற ஒன்றுதான் எங்கள் அனைவரையும் பிணைக்கிறது. மாந்தர்கள் அனைவர் மத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.

ஏனையவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கிறார்களோ அதனை நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டுமே தவிர, நாம் எதனை விரும்புகிறோமோ அவ்வாறுதான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. இதுதான் பாரபட்சமற்ற தன்மை. ஜனநாயகம் நல்லது, இது என்ன என்பதை நான் இங்கு விபரிப்பேனாக இருந்தால் நீங்கள் ‘சண்டே லீடர்” பத்திரிகையினை வாங்காது விட்டு விடுவீர்கள்.

நாட்டினது பெரும்பான்மையானர்வர்களின் கருத்தினை எந்தவித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் பாதுகாப்பினைத் தேடுவதற்குச் ‘சண்டே லீடர்” தனது வரலாற்றில் ஒருபோதும் முனையவில்லை. பத்திரிகை விற்பனையாவதற்கு இதுதான் வழி.

ஆனால், எதிர்மாறாக, சண்டே லீடரில் வெளிவந்த எங்களுடைய கருத்துக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் பலருக்கு கசப்பாக இருந்தன.

உதாரணமாக, பிரிவினைவாதப் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் அதேநேரம், பயங்கரவாதத்தின் அடிப்படைக் காரணங்கள் எவையோ அவற்றைக் கண்டறிந்து தீர்க்கவேண்டிய கட்டாய கடப்பாட்டினையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது என வாதிட்டோம்.

இலங்கையினது இனப்பிரச்சினையினை வரலாற்றின் அடிப்படையில் நோக்குமாறும் பயங்கரவாதம் என்ற கண்ணாடி ஊடாக அணுக வேண்டாம் என்றும் நாம் அரசாங்கத்தினைக் கோரினோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறிக்கொண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு எதிராக நாம் கிளர்ந்தெழுந்தோம். தங்களது சொந்த மக்கள் மீதே குண்டுகளை வீசி அழிக்கும் ஒரேயொரு நாடு இலங்கைதான் என்பதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை என்பதை நாம் வலியுறுத்தினோம். இந்தக் கருத்துக்களை நாம் கூறியமையினால், துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டோம். எமது இந்த நடுநிலையான செயற்பாடு நம்பிக்கைத்துரோகம் என்றால் அதனை நாம் முழு விருப்புடன் ஏற்றுக்கொள்கிறோம்.

‘சண்டே லீடர்” பத்திரிகைக்கு ஏதோவொரு அரசியல் செயல்திட்டம் இருக்கிறது எனப் பலரும் சந்தேகித்தனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை. நாட்டினது எதிர்க்கட்சியினரை விட அரசாங்கத்தின் மீது நாம் ஏன் அதிக குற்றம் சுமத்துகின்றோம்? கிறிக்கெற்றில், களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கும் அணியினை நோக்கிப் பந்து வீச முடியாது. அதுபோலத்தான் இதுவும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த ஒரு சில வருடங்களின்போது, அட்டூழியங்கள் மற்றும் ஊழல் என எது நடந்தாலும் நாங்கள் அவற்றினை வெளிப்படுத்துவதற்குத் தவறவில்லையே. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழல் மற்றும் இதர செயற்பாடுகள் தொடர்பில் நாம் தொடராக வெளியிட்ட கருத்துக்களும் அவர்களது ஆட்சி கவிழ்வதற்கு வழி வகுத்தது என்பதுதான் உண்மை.

நாம் போர் தொடர்பான செய்திகளிலிருந்து சற்று இடைவெளி விட்டே இருந்தமையினை வைத்துக்கொண்டு, ‘சண்டே லீடர்” புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என எவரும் அர்த்தப்படுத்திவிட முடியாது. இந்தப் பூமிப் பந்தில் உருவெடுத்த அமைப்புக்களில் அதியுச்ச இரக்கமற்ற குரூரக்குணம் படைத்த அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்று.

புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் புலிகளை அழிப்பதெனக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமைகளை முற்றாக மீறும் வகையில் அவர்களைச் சுட்டுக்கொலை செய்வதும் குண்டுகளை வீசி அழிப்பதும் உலகிற்குத் தர்மத்தினைப் போதித்த மதத்தின் பாதுகாவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிங்கள சமூகத்திற்கு இழிபெயரைப் பெற்றுக் கொடுப்பதற்கே வழிசெய்யும். இவ்வாறாக தமிழ்ச் சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகங்கள் ஊடகத் தணிக்கை என்ற திரையினால் வெளியே வராது தடுக்கப்படுகின்றன.

நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதானது அந்தப் பகுதிகளின் தமிழ் மக்களது சுயகௌரவம் முற்றாக மறுக்கப்படுவதற்கும் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகள் ஆகுவதற்கும் வழி செய்துவிட்டது. போரின் பின்னர், ‘அபிவிருத்தி” மற்றும் ‘மீள் கட்டுமானம்” ஆகியவற்றை முன்னெடுப்பதன் மூலம் தமிழர்களது மனங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வடுக்களை நீக்கிவிடலாம் என்று எண்ணிவிட வேண்டாம்.

போரின் வடுக்கள் அவர்களது மனங்களில் என்றுமே ஆழப் பதிந்திருக்கும். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும், இலங்கை ஆட்சியாளர்களை அடியோடு வெறுக்கும் புலம்பெயர் தமிழர்களுடனும் அரசு முட்டிமோத வேண்டும். அரசியல் தீர்வு மூலம் தீர்க்கப்பட வேண்டியதொரு இனப்பிணக்கு தவறாகக் கையாளப்பட்தன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் என்றுமே மாறாத வடுவினை ஏற்படுத்திவிட்டது.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் எமது இந்த எழுத்துக்களை உண்மையின் பால் அமைந்ததென்பதை ஏற்க மறுப்பதுதான் எனக்குக் கோபத்தினையும் சினத்தினையும் ஏற்படுத்துகிறது.

ஒருமுறை நான் மோசமாகத் தாக்கப்பட்டேன், பிறிதொரு சம்பவத்தின் போது எனது வீட்டினை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் பகட்டுத்தனமான வாக்குறுதிகளை வழங்கியபோதும், தாக்குதலை நடாத்தியவர்களை அடையாளம் காண்பதற்கு ஏற்ற வகையில் ஆழமான காவல்துறை விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை.

எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல்களின் போதும் அரசாங்கம்தான் பின்னணியில் இருந்து செயற்பட்டது என நான் நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது. இறுதியாக நான் கொல்லப்பட்ட போதும், என்னைக் கொலை செய்தது அரசாங்கம்தான் என நம்புகிறேன்.

கால் நு}ற்றாண்டுகளுக்கும் மேலாக மகிந்தவும் நானும் நண்பர்களாகவிருந்தோம் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் உரையாடும்போது அவரது முதல்பெயரைக் கூறி சிங்களத்தில் ஒயா என அழைத்து அவருடன் நெருங்கிப் பழகும் ஒரு சில நண்பர்களில் நானும் ஒருவன். வழமையான பத்திரிகை ஆசிரியர்களுக்கென மகிந்த நடாத்தும் கூட்டங்களில் நான் பங்குபற்றுவதில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் தனியாகவோ அல்லது வேறு சில நண்பர்களுடனோ மாதத்திற்கு ஒருமுறை நான் மகிந்தவைச் சந்திப்பேன். அரசியல் பற்றியும் அந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் பற்றியும், நாம் பேசுவோம். ஏன் பகிடிகள் கூட விடுவோம். அவரைப் பற்றி இங்கு சில குறிப்புக்களை முன்வைக்க வேண்டியது அவசியம்.

மகிந்த, 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வென்றபோது, எனது பத்திகளில் எவருமே எழுதாதவாறு உங்களை வரவேற்று எழுதியிருந்தேன்.

மகிந்த ராஜபக்ச என முழுப்பெயரையும் குறிப்பிடாமல், பத்தி பூராவும் மகிந்த என உங்களது முதற்பெயரையே பயன்படுத்தி காலம் காலமாக இருந்து வந்த வழக்கத்தினை மாற்றினேன். மனித உரிமைகளைப் பேணுவதில் உங்களுக்கிருந்த ஈடுபாடு மற்றும் உங்களிடமிருந்த பரந்த சிந்தை ஆகியவற்றின் அடிப்படையில், புதிய காற்றினைச் சுவாசிக்கும் தசாப்தத்தினுள் நாம் நுழையப் போகிறோம் என எதிர்பார்த்தேன்.

ஆனால், அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற முறைகேடான சம்பவத்தில் நீங்கள் உங்களை முட்டாள்தனமாக ஈடுபடுத்தியதன் மூலம் உங்களை நீங்களே கெடுத்துக்கொண்டீர்கள். பிரச்சினையினை ஆழமாக ஆராய்ந்த பின்னரே நாம் இந்த செய்தியினை பத்திரிகையில் பிரசுரித்திருந்ததோடு, தொடர்புடையவர்களுக்குப் பணத்தினை மீள வழங்குமாறு உங்களைக் கோரினோம். பல வாரங்களின் பின்னர் நீங்கள் அந்தப் பணத்தினைத் திருப்பிக்கொடுத்த போது, உங்களது பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்தக் களங்கத்துடன்தான் நீங்கள் வாழ முயல்கிறீர்கள்.

ஜனாதிபதியாக வருவதற்கு பேராசைப்படவில்லை என நீங்களே எனக்குக் கூறியிருக்கிறீர்கள். ஜனாதிபதியாவதற்கு நீங்கள் அதிக விருப்புக்கொண்டிருக்கவில்லைத்தான். ஆனால், ஜனாதிபதி பதவி உங்கள் மடிமேல் தானாகவே விழுந்தது. சகோதரர்களை அரச இயந்திரத்தினை நிர்வகிப்பதற்கு நியமித்த தாங்கள், உங்களுடைய பிள்ளைகள்தான் தங்களின் அதியுச்ச மகிழ்வுக்குக் காரணம் என்றும் அவர்களுடன் நேரத்தினைச் செலவிடுவதையே விரும்புவதாகவும் என்னிடம் கூறியிருந்தீர்கள். தற்போது, எனது மகன்களும் மகளும் தமது பாசத்துக்குரிய தந்தையினை இழக்கும் வகையில் உங்களது அரச இயந்திரம் நன்கு செயற்பட்டிருக்கிறது.

எனது மரணத்தின் பின்னர், வழமை போலவே பகட்டுத்தனமான விசாரணைக்கு உத்தரவிடுவீர்கள் என்றும் காவல்துறையினர் முழுமையான விசாரணையினை மேற்கொள்வார்கள் என்றும் நான் அறிவேன். ஆனால், கடந்த காலத்தில் நீங்கள் கட்டளையிட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இந்த விசாரணையின் பலனாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனது மரணத்தின் பின்னால் யார் இருந்து செயற்பட்டார்கள் என்பதை நாம் இருவரும் அறிவோம். ஆனால் அவரது பெயரை உச்சரிக்கத் துணியமாட்டோம். எனது வாழ்வு மாத்திரமல்ல, உங்களது வாழ்வும் இதில்தான் தங்கியிருக்கிறது.

உங்களது இளமைக் காலத்தில் எங்களது நாடு தொடர்பில் நீங்கள் கொண்டிருந்த கனவெல்லாம் உங்களது மூன்று வருட ஆட்சிக்காலத்தில் அடியோடு தகர்ந்து போய்விட்டது. நாட்டுப்பற்று என்ற பெயரில், நீங்கள் மனித உரிமைகளுக்கு என்றுமில்லாத பங்கத்தினை ஏற்படுத்திவிட்டீர்கள், கட்டுக்கடங்காத வகையில்; ஊழல் மோசடிகள் தலை விரித்தாடுவதற்கு இடமளித்து விட்டீர்கள். இலங்கை வரலாற்றில் உங்களைப் போல எந்த ஜனாதிபதியும் பொதுமக்கள் பணத்தினை அதிகம் விரயமாக்கவில்லை. உண்மையைக் கூறப்போனால், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையொன்றில் சிறு பிள்ளையொன்றை இறக்கிவிட்டால் எதனைச் செய்யுமோ அவ்வாறே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள். இந்த ஒப்பீடு கூட இங்கு பொருத்தமில்லாது போகலாம்.

ஏனெனில், அந்தக் குழந்தையின் செயற்பாடு, இந்த மண்ணில் அதிக இரத்தம் சிந்தப்படுவதற்கு உங்களைப் போல வழி வகுக்கவில்லையே. தனது சொந்த நாட்டின் மக்களின் உரிமையை தங்களைப் போல எந்த ஆட்சியாளர்களும் இவ்வளவு மோசமாக அடக்கவில்லையே. அத்துடன், அதிகாரம் என்ற மதுவினை அதிகம் குடித்த களிப்பில் திளைக்கும் உங்களால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்களின் இறப்பின் பின்னர் பிள்ளைகளுக்கான மரபுவழிச் சொத்தாக வெறும் இரத்தத்தினையும் சதையினையும் விட்டுச் செல்லப்போவதை எண்ணி பின்னர் வருந்துவீர்கள். உங்களது செயல்கள் அனைத்தும் பெரும் துயரத்தினைத்தான் பரிசாகக் கொடுக்கப் போகிறது. என்னைப் பொறுத்த வரையில், படைத்தவர்கள் யாரோ அவர்களிடம் தெளிவான மனச்சாட்சியுடன் நான் தற்போது செல்கிறேன். உங்களுக்கான காலம் வரும்போது, அதாவது மரணம் உங்களை நாடிவரும் போது நீங்களும் என்னைப்போல தெளிவான சிந்தையுடன் மனச்சாட்சிக்கு பதில் சொல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில், யாருக்கும் பணியாது துணிவுடன் நடந்தேன் என்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. பத்திரிகைத்துறையில் எனது பயணத்தில் நான் தனித்துப் பயணிக்கவில்லை.

இதர பத்திரிகையாளர்களும் ‘சண்டே லீடர்” குடும்பத்தின் ஏனையவர்களும் என்னுடன் இணைந்து நடந்தார்கள்: இவர்களில் பலர் எனக்கு முன்னரே இறந்துவிட்டார்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படாது தற்போது சிறைகளில் வாடுகிறார்கள் அல்லது து}ர தேசங்களில் நாடு கடந்து வாழ்கிறார்கள்.

ஏனையோர் உங்களது ஜனாதிபதி ஆட்சியினால் ஊடக சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சாவு என்ற நிழலில் தொடர்ந்தும் நடக்கிறார்கள். இதே ஊடக சுதந்திரத்திற்காகவே முன்பொரு காலத்தில் நீங்கள் கடுமையாகப் போராடினீர்கள். உங்களது கண்காணிப்பின் கீழேயே எனது மரணம் சம்பவித்திருக்கிறது என்பதை நீங்கள் மறப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டீர்கள்.

என்னைக் கொலை செய்தவர்கள் யாரோ அவர்களைப் பாதுகாப்பதைத் தவிர தங்களுக்கு வெறெந்த மார்க்கமும் கிடையாது என்பதை நான் அறிவேன்: இந்தக் குற்றத்தினைப் புரிந்தவர்கள் யாரோ அவர்களுக்கு ஒருபோதும் தண்டனை வழங்கப்படமாட்டாது என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வெறெந்த வழியும் கிடையாது. நான் உங்களுக்காக வருந்துகிறேன். அடுத்த முறை உங்கள் மனைவி சிறாந்தி பாவமன்னிப்புப் பெறுவதற்குச் செல்லும்போது, அவர் முழங்காலில் நீண்ட நேரம் மண்டியிட்டிருந்து பாவ மன்னிப்பினைப் பெறவேண்டும். எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவர் நிச்சயம் பாவ மன்னிப்புப் பெறவேண்டும். சிறாந்தியினதும் அவரது குடும்பத்தாரதும் பாவமன்னிப்புத்தான் உங்களை இன்னமும் ஜனாதிபதியாக பதவியில் வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

‘சண்டே லீடர்” பத்திரிகையின்; வாசகர்களுக்கு, நான் உங்களுக்கு எதனைக்கூற? எங்களது இந்த ஊடகப்பணிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. தங்களது வேரை மறந்து அதிகார போதையில் இருந்தவர்கள் யாரோ அவர்கள் புரிந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்தோம்;. கடுமையான உழைப்பின் பெயரால் நீங்கள் சம்பாதித்த செல்வங்களை வரியாகப் பெற்று அவற்றைச் சீரழித்த அதிகாரத்தின் செயலை உங்கள் முன்வைத்தோம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய பிரசாரம் எதுவாக இருந்தாலும் அதனையும் மீறி உண்மையினை உங்களுக்கு உரைத்தோம்; தாங்களாக எழுந்து நிற்க முடியாதவர்கள் யாரோ அவர்களுக்காக நாம் துணிவுடன் எழுந்து நின்று குரல் கொடுத்தோம்.

இதனால்தான் அதிகார வர்க்கத்தினர் எம்முடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக, என்றோ ஒரு நாளைக்கு விலையாகக் கொடுத்தேயாகவேண்டும் என நானும் எனது குடும்பத்தாரும் எதிர்பார்த்த எனது உயிர் இன்று விலையாகக் கொடுக்கப்பட்டு விட்டது. நான் இதற்கு எப்போதுமே தயாராகத்தான் இருந்தேன். இதுபோன்றதொரு நிகழ்வு எனக்கு நிகழாமல் தடுப்பதற்கு ஏதுவாக நான் எந்த முயற்சியினையும் எடுக்கவில்லை: எனது உயிரைக் காப்பதற்குப் பாதுகாப்பு ஒழுங்குகளையோ முன்னேற்பாடான நடவடிக்கைகளையோ நான் எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கும் அதேநேரம், மனிதக் கேடயத்தின் பின்னால் ஒழிந்துகொண்டு என்னைக் கொலை செய்தவன் யாரோ அவனைப் போல நான் கோழையல்ல என்பதை அவனுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.

யாரால் எனது உயிர் எடுக்கப்படும் என்பது நீண்ட பல நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டதை நான் அறிவேன். எப்போது எடுக்கப்படும் என்பதுதான் எழுதப்பட்டிருக்கவில்லை. அதிகார வர்க்கத்தினால் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் வரிசையில் நானும் இணைந்துவிட்டேன்.

‘சண்டே லீடர்”, தான் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காகத் தொடர்ந்தும் போரிடும் என்பதும் கூட எழுதப்பட்டு விட்டது. இந்தப் போரை நான் தனித்து நின்று முன்னெடுக்கவில்லை.

‘சண்டே லீடர்” பத்திரிகை தனது மூச்சினை நிறுத்தும் நாள் வரைக்கும் எங்களைப் போன்ற பலர் கொல்லப்படுவார்கள். எனது படுகொலையானது சுதந்திரத்திற்குக் கிடைத்த தோல்வியாக இருந்தாலும், என்னைப் போன்றவர்கள் தங்களது இலட்சியப் பாதை எதுவோ அதில் முழுவீச்சுடன் பயணிப்பதற்கு அவர்களைத் து}ண்டும் என வெகுவாக நம்புகிறேன்.

எமது அன்பான தாய்நாட்டில் புதியதோர் மானிட சுதந்திர தசாப்தம் உதயமாவதற்கு உள்ள தடைகள் எவையோ அவற்றைத் தகர்ப்பதற்கு எனது படுகொலை உதவும் என நம்புகிறேன்.

நாட்டுப்பற்று என்ற பெயரால் இதுநாள் வரை பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தாலும் கூட, ஜனாதிபதியினது கண்களைத் திறப்பதற்கும் நாட்டில் புதிய மனித தர்மம் உதயமாவதற்கு எனது மறைவு வழி செய்யும் என எண்ணுகிறேன்.

அபாயம் நிறைந்த பாதையில் நான் ஏன் இவ்வாறு பயணிக்கிறேன் என்றும், இதன் விளைவாக நான் எப்போதும் கொல்லப்படலாம் என்றும் மக்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.

ஆம், நான் இதனை நன்கறிவேன்: இது தவிர்க்க முடியாதது. ஆனால் தாங்களாக எழுந்து நிற்க முடியாதவர்கள் யாரோ, அவர்கள் சிறுபான்மையினராகவோ அல்லது எழுந்து நிற்கும் திறன் அற்றவர்களாகவோ அல்லது ஆளும் வர்;க்கத்தினால் துற்புறுத்தப்பட்டவர்களாகவோ இருக்கலாம், அவர்களுக்காக நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுக்காவிட்டால், வஞ்சிக்கப்பட்ட இந்த மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாருமற்ற நிலைதான் இருந்திருக்கும்.

உதாரணமாக, நான் பத்திரிகையாளராகப் பணிசெய்த காலத்தில் ஜேர்மனிய மத போதகரான மாட்டின் நெய்ம்லரது கூற்றுக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. தனது இளமைக்காலத்தில் இவர் யூதர்களுக்கு எதிரானவராகவும் கிட்லரது செயல்களை வியந்த ஒருவராகவும் காணப்பட்டார். நாசிகள் ஜேர்மனியினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர்தான், நாசிகளின் உண்மையான கோட்பாடு எதுவென்பதை அவர் அறிந்தார். கிட்லர், யூதர்களை மாத்திரம் அழிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்துக்கொண்ட யாராக இருந்தாலும் அவர் விட்டுவைக்கவில்லை என்ற இந்த உண்மையினை நெய்ம்லர் வெளியே கொண்டுவந்தார்.

இதற்காக 1937 தொடக்கம் 1945 வரை ளுயஉhளநnhயரளநn மற்றும் னுயஉhயர பகுதிகளிலிருந்த வதை முகாம்களில் அடைக்கப்பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்டார். வதை முகாம்களில் வாடிய அந்த நாட்களில் அவர் ஒரு கவிதையினை எழுதியிருந்தார். எனது இளமை நாட்களில் நான் இந்தக் கவிதையினை வாசித்தது முதல் அந்தக் கவி வரிகள் எனது மனதை விட்டு அகலவில்லை:

யூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் யூதன் இல்லையே.

கொம்யூனிஸ்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் கொம்யூனிஸ்ட் இல்லையே.

தொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.

எனக்கு ஆபத்து வந்தது. யாரும் பேசவில்லை.

ஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே.

நீங்கள் எதனை வேண்டுமானலும் மறக்கலாம், இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், தாழ் சாதியினைச் சேர்ந்தவாராக இருக்கலாம், ஓரினச் செயற்கையாளராக இருக்கலாம், கருத்து வேறுபாடுடையவராக இருக்கலாம் அல்லது அங்கவீனமடைந்தவராக இருக்கலாம், உங்களுக்காக ‘சண்டே லீடர்” இருக்கிறது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். யாருக்கும் பணியாது, யாரைக் கண்டும் அஞ்சாது, ஏற்கனவேயுள்ள துணிவுடன் ‘சண்டே லீடர்” பத்திரிகையின் பணியாளர்கள் உங்களுக்காகத் தொடர்ந்தும் போரிடுவார்கள். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

தங்களது தனிப்பட்ட சுகபோகத்துக்காகவோ அல்லது பெருமைக்காகவோ ஊடகவியலாளர்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக, உங்களுக்காகவே அவர்கள் அளப்பரிய தியாகத்தினைப் புரிகிறார்கள். இவர்களது இந்தத் தியாகத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ அல்லது இல்லையா என்பது வேறுவிடயம். என்னைப் பொறுத்தவரையில், நான் செய்த முயற்சிகளைக் கடவுள் நன்கறிவார்

மொழிபெயர்ப்பு உதவி: சி.செல்வானந்தன்

நன்றி . தமிழ்நாதம்

http://www.psminaiyam.com/?p=249