Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஒரு பரந்தளவான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்துகிறார்கள். மகளிர் அமைப்பின் முன்னணிப் பிரதிநிதிகள் சிலர் ஆவலோடு சந்திக்க காத்திருக்கிறார்கள்.

 

இந்தப் பின்தள விஜயம் குறித்த மாணவர் அமைப்பின் விசேட சந்திப்பில் மத்தியகுழு அங்கத்தவர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

 

மாணவர் அமைப்பின் இக்கூட்டத்தில் புளட் அமைப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுயாதீனமாக அவரவர்கள் தங்கள் நிலைப்பாடுகளுடன் தங்களது அரசியல் நடவடிக்கைகளை தாங்களே தீர்மானிக்கலாம் என்று நான் பரிந்துரை செய்தேன். மக்களிடமிருந்து வரவேற்கப்பட்ட கொள்கைகளிலிருந்து, பிரச்சாரம் செய்யப்பட்ட கொள்கைகளிலிருந்து, ஏற்றுக் கொண்ட அரசியல் பாதையிலிருந்து புளட்,  அதன் தலைமை எப்போதே விலத்திச் சென்றுவிட்டது எனவே புளட்டின் மாணவர் அமைப்பாக இனியும் தொடர்ந்து இயங்குவது என்பது புளட்டின் அராஜகங்களுடன் இணைந்திருப்பதாகவே முடியும். எனவே நீங்கள் ஒருமுறை சிந்திப்பதற்கான கால அவகாசத்துடன் புளட்டினை நிராகரித்து போர்க்கொடி தூக்கும் அதேவேளை புளட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் தளத்திலுள்ள மத்தியகுழு நபர்கள் இராணுவக் கட்டமைப்பினை பிரதிநிதிப்படுத்துவோர் மேல் நெருக்கடிகளை உருவாக்கினால் மட்டுமே தளத்திலுள்ள அமைப்புக்கள் விழித்துக் கொள்ளும். இந்த மத்தியகுழு உறுப்பினர்களையும் இராணுவப் பொறுப்பாளர்களையும்  அவர்களால் மூடிமறைத்து முண்டு கொடுக்கப்படும்  அனைத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்ற மனவுணர்வும் மிகுந்த மனவிரக்தியும் இந்த துடிப்பான மாணவர்கள் மத்தியில் பரவியதை யாராலும் தடுக்க முடியவில்லை. பொய்களாலும் சக போராளிகளின் கொலைகளாலும் தாங்கள் ஏற்றுக்கொண்ட அரசியலுக்கு முற்றிலும் மாறாகவே இயக்கத்தின் அதிகாரம் தலைவிரித்தாடி தமிழ்மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றது என்பதையும் அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மிகுந்த சோர்வுடனும் ஏமாற்றத்துடனும் அவர்கள் கலைந்து போக வேண்டியதாயிற்று.

025.jpg

மத்தியகுழு உறுப்பினர்களோ ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் அவர்கள் அறிந்தே  இருந்தார்கள். ஆனால் எதிர்வினையாற்றாமல் இருந்தார்கள். மூடி மறைத்தார்கள். அவர்களுக்கு இந்த அராஜகவாதிகளுடன் உடன்பாடு இருந்தது. அவர்கள் இத்தனை கொலைகளுக்கும் பொறுப்பானவர்களுடனேயே கூடிக் குலாவினார்கள். இவற்றை மறுத்து போராடியவர்களுக்கு (தீப்பொறிக் குழுவினருக்கு மற்றும் மறுதலித்து நின்றோர்க்கு)துப்பாக்கியால் பதிலளித்தார்கள். பதிலளிக்க துடித்தார்கள் தேடி அலைந்தார்கள்.

036.jpg

 

இத்தனை அராஜகங்களையும் கொலைகளையும் அரசியல் பம்மாத்துக்களையும் சகித்துக் கொண்ட இவர்களால் தீப்பொறிக் குழுவினர் மீது ஆத்திரப்படவே தான் முடிந்தது. சந்ததியார் கொலையைக் கேட்ட பின்னரும் கூட இவர்கள் நிச்சயம் மகிழ்ந்தே இருப்பார்கள். எதனால் எனில் இவர்கள் இயக்கத்தின் முரண்பாடுகளுக்கு சந்ததியார் மேலேயே குற்றம் கண்டார்கள். சந்ததியாரின் அரசியலை வெறுத்தார்கள். இடதுசாரிக் கருத்துக்கள் இவர்களுக்கு கசத்தன. புலிகளைப் போன்றதொரு அமைப்பாகவே தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற போக்கு இவர்களிடையே காணப்பட்டது. (கேசவன் மீது குற்றம் கண்டார்கள். ஒருமுறை கேசவன் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பின்தளம் வருமாறு பணிக்கப்பட்டு பின்தளம் சென்றார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு தள இராணுவ பொறுப்பாளர் சின்ன மென்டிஸ் முன்னின்றார்.) . எல்லாம் அம்பலமாகி வெளிக்கு வந்த பின்னாலும் எவையும் இவர்களை உசுப்பவில்லை. நடந்த சந்ததியாரின் கோரக் கொலையில் தொலைந்தான் பீடை என உள்ளுர மகிழ்ந்தார்கள். ஒரு சிறு அஞ்சலி கூட இவர்கள் செலுத்தாததிலிருந்து இவர்களை யார் எனப் புரிய முடியும். இவர்களோ தாங்கள் சார்ந்திருந்த கொலையாளிகளின் கைகளை  இறுகப்பற்றிக் கொண்டார்கள். சந்ததியாரின் அஞ்சலியைத் தாங்கிய சுவரொட்டிகள் இவர்களையும் மீறி NLFT இனால் குடாநாடெங்கும் ஒட்டப்பட்டிருந்தது. சந்ததியாருக்கு சமர்ப்பணமாக்கி ஒரு நூல் ஒன்றினையும் NLFT வெளியிட்டிருந்தது. உள்ளுரப் பூரித்துக் கிடந்த இவர்கள்,  இந்த மத்தியகுழு உறுப்பினர்கள் சாகவாசமாக "பிடில்" வாசித்துக் கொண்டிருந்தார்கள். தீப்பொறியும் வெளியேறி சந்ததியாரையும் பலி கொண்டு எல்லோரையும் அரசியல் நீக்கம் செய்யும் வரை இவர்கள் காத்துக்கிடந்தார்கள் கொலைகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

தள மாநாட்டுக்கு இவர்கள் யாரை வரவழைத்தார்கள் என்றால் கண்ணன் என்ற சோதீஸ்வரனையும் செந்தில் பாபுஜி போன்றவர்களையும் தான்.   தளத்திலிருந்த மத்தியகுழுவோடு முரண்பட்டு நின்ற சக்திகள் தள மாநாடு கூட்ட விழைந்த நோக்கமோ வேறுவிதமாகவிருந்தது. அது தனது அரசியல் பாதையை இவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு தனது தளத்திலுள்ள அமைப்புக்களுக்கு சுயவிமர்சனத்தையும் புதிய மார்க்கவழியையும் முன்னணிக்கான உறவுகளையும் விருத்தி செய்யும் வழிக்கான ஒரு மாநாடாகவே தனது கோட்பாடுகளுடன் இதனை திட்டமிட்டிருந்தது. பார்க்க

 

இதற்கான வரைபுகளை முன்னின்று நடத்தியவர்கள் இந்த கொலைகளுக்கு உடந்தையாகவிருந்த மத்தியகுழு உறுப்பினர்கள் அசோக்கோ குமரனோ அல்லர். அவற்றையெல்லாம் மறுத்து நின்று போராடிய தோழர்களே. இங்கு ஜபி எனப்படும் தோழரின் உழைப்பே,  இந்த மத்தியகுழு உறுப்பினர்களையும் கண்துடைப்பாக தவிர்க்கவியலாத வண்ணம் மாநாடு வரையும் இழுத்துகொண்டு வந்தது.

 

தளமாநாடு தங்களால் தங்கள் முனைப்பால் தங்கள் உட்கட்சிப்போராட்ட விருப்பால் விழைந்த ஒன்று என்று கூறுவதற்கு அசோக்கும் குமரனும் அருகதையற்றவர்கள். அதன் உந்துசக்தியாகவிருந்து உள்ளுரப்  போராடியவர்கள் உழைத்தவர்களில் மிகப்பிரதானமானவர் ஜபி என்னும் தோழர்.

 

சிவக்குமார், குருபரன், நந்தா, வனிதா, கலா, தனஞ்செயன் மற்றும் நினைவில் வராத இன்னும் பல தோழர்களின்  விடாப்பிடியான தொடர்ச்சியான ஒரு விமர்சனப்போரே இவருக்கு பக்கபலமாக அன்றிருந்தது. இந்தப் போராட்டமே மத்தியகுழு உறுப்பினர்களான அசோக்கினதும் குமரனதும் பிடரியை பிடித்து மாநாடு வரை தள்ளியது. இந்த தோழர்கள் அன்று பற்றிப்பிடித்திருந்த அரசியலானது திட்டவட்டமாக மக்கள் சார்ந்திருந்தது. மக்களுக்காக அவர்கள் அன்று மரணிக்கவும் தயாராகவிருந்தனர்.

*******************************************

புளட்டின் அன்றைய காலத்திய பாடல் ஒன்று

{play}http://www.tamilcircle.net/audio/PLOTSONGS/AdikalumUthakalum.mp3{/play}

 

******************************************

 

 VimalesPhoto.gif

 

 VimalNewspaper.gif

இப்படியான ஒரு தோழனே பின்னாட்களில் மக்களுக்கான ஒரு போராட்டத்தில் தன்னையே தியாகம் செய்தான். அவன் யாருமல்ல புலிகளால் கொல்லப்பட்ட விமலேஸ்வரன். அசோக், குமரன் போன்றவர்களின் போக்குகளுக்கு முற்றிலும் மாறாக மறுத்து நின்று போராடிய விமலேஸ்வரனை, அவனது அன்றைய போராட்டங்களை மறுத்து நின்ற அசோக், இன்று தோழன் என்று விழிப்பது எந்த முகத்துடன் என்று புரியவில்லை. அன்றைக்கு அவனையும் விழுங்கி ஏப்பமிட்டிருக்கக் கூடிய அரசியலுக்கு நீங்கள் மத்தியகுழுவாய் இருந்தீர்கள். உங்களையெல்லாம் மறுத்து எத்தனையோ மாதங்களுக்கு முன்பாகவே அவன் தன்னை விலத்திக்கொண்டு வெளியேறியிருந்தான். மாணவர் அமைப்பிலிருந்து வெளியேறி மக்கள் மத்தியில் தனது வேலையை தொடர்ந்தான். உங்களைப் போல் தள மாநாட்டின் தீர்மானங்களைப் புறந்தள்ளி றோவின் கைக்கூலி அமைப்பான ஈ.என்.டி.எல்:எவ் விடம் அவன் தஞ்சமடையவில்லை. அந்த இயக்கத்தின் இரகசிய வேலைத்திட்டங்களுடன் அவன் களமிறங்கவில்லை. நீங்களோ புளட்டின் மத்தியகுழு உறுப்பினரான தளத்திலிருந்த ஈஸ்வரனுடனும் ஜென்னியுடனும் குமரனுடனும் முரளியுடனும் ஈ.என்.டி.எல்.எவ் வின் கடத்திவரப்பட்ட இரகசிய வேலைத்திட்டத்தில் ஒன்றிணைந்தீர்கள். தளமாநாடு கோரி நின்ற கோரிக்கைகளுக்கெல்லாம் மாறாக அத்தளமாநாட்டின் தீர்மானங்களுக்கெல்லாம் முதுகில் குத்தினீர்கள். கடத்திவரப்பட்ட இரகசிய வேலைத்திட்டத்தில் இந்தியசார்பு மேலாதிக்க அரசியலுக்கு தமிழ்மக்களை தாரைவார்க்க தளம் இட்டீர்கள்.

 

யாரெல்லாம் புளட்டின் மக்கள் விரோத நடவடிக்கைககளுக்கு பொறுப்பானவர்களோ கொலைகாரர்களாக தலைமை விசுவாசக்குழுவாக இருந்தார்களோ அவர்களுடனே தான் திரும்பவும் கூட்டுச் சேர்ந்தீர்கள். பரந்தன் ராஜன் இந்திய றோவின் கையாள் என்பது புளட்டின் எல்லா மட்டத்திலும் தெரிந்திருந்த ஒன்று. பரந்தன் ராஜனின் சித்திரவதைகள் பற்றி எங்கும் பேசப்பட்டது. தளமாநாட்டின் தெளிவான தீர்மானங்களுக்கு பிற்பாடும் நீங்கள் கூட்டு வைத்ததோ மக்கள் விரோதிகளுடனும் கொலைகாரர்களுடனும் இந்திய கைக்கூலிகளுடனும். செந்தில், பாபுஜியின், பரந்தன் ராஜனின் கரங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் வழிகாட்ட நினைத்தீர்கள். நீங்கள் இவை எவற்றையும் மறுதலிக்காமலே இன்று மாவோவாதியாகியிருக்கின்றீர்கள். ஈ.என்.டி.எல்.எவ் இன் திட்டத்திற்கு நீங்கள் தளத்தில் இரகசிய ஏஜென்டுகளை உருவாக்கினீர்கள். இது எப்படி?

 018.jpg

034.jpg

தளமாநாடு உங்களது சுயவிமர்சனம் அல்ல. அது சுயவிமர்சனமாக இருப்பின் நீங்கள் அத்தளமாநாட்டின் கோரிக்கைகளுக்கு எவ்வாறு முதுகில் குத்தியிருப்பீர்கள்? அதற்கு மறுபுறத்தில் அத்தளமாநாட்டை நீங்கள் வேசம் போடுவதற்காகவே பாவித்தீர்கள். தளமாநாடு எந்தப் போக்குகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோ அந்தப் போக்குகளுடன் நீங்கள் இரகசிய உடன்பாடு போட்டீர்கள். நீங்கள் செய்துகொண்ட ஈ.என்.டி.எல்.எவ் இரகசிய ஒப்பந்தம் உங்கள் வேலைத்திட்டம்.

 

நீங்கள் செல்வன் அகிலனைக் கொன்ற அரசியலுக்கு அதிபதிகள்

 

நீங்கள் தீப்பொறியின் உட்கட்சிப் போராட்டத்துக்கு விரோதமானவர்கள்

 

சந்ததியாரின் படுகொலைக்கு கள்ள மவுனம் சாதித்தவர்கள்

எத்தனையோ உட்படுகொலைகளுக்கு உடந்தையானவர்கள்

 

தளமாநாட்டின் அரசியல் விமர்சனங்களுக்கு மாறாக இந்திய கைக்கூலிகளுடன் கை கோர்த்து நின்றவர்கள்.

 

இந்தக் கடந்துவந்த பாதையை திரும்பிப் பாருங்கள்.

 

மக்களுக்கு சொல்வதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா?

தொடரும்

 

முன்னைய தொடர்கள்

 

"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)

 

 பாலியல் பலாத்காரம் செய்ததாக துப்பாக்கி முனையில் சொல்ல வைத்தது, அசோக்கும் குமரனும் தலைமையிலான புளட் (பகுதி 2)

 

(தீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்தது (15.02.1985)

சந்ததியார் கொலை நடந்தது 10 ம் திகதி செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு

தள மாநாடு நடந்தது 19.02.1986-24.02.1986)

 

சிறி

03.01.2010