Language Selection

"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.   

கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் "போராடியவர்கள்", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.

 

புலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.

 

புலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து, தம்மை புனிதப்படுத்தி காட்டமுனைகின்றனர். இதனால்தான் கடந்தகாலத்தை சுயவிமர்சனம், விமர்சனம் செய்யக்கூடாது என்று, மனித விரோத வரலாற்றுக்கு மொத்தமாக முழுக்கு போட முனைகின்றனர். அவர்களின் கவலையோ, தாங்கள் அக்காலத்தில் மனிதஅவலம் பற்றிப் பேசாத "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை" எப்படி தொடர்ந்து நியாயப்படுத்துவது என்பது பற்றியதே. "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை" உருத்திராட்சக் கொட்டையாக்கி, கையில் வைத்து உருட்டிக் கொண்டு செபம் செய்து கொண்டிருந்த அரசியல், விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் முற்றாக அம்பலப்பட்டு போகும் என்ற ஆன்மீகக் கவலை.  

 

இதனால்தான் இவர்கள் கடந்தகாலத்தில் புலியல்லாத தளத்தில் நடந்த மக்கள் விரோதக் கொலைகள் முதல் மக்கள் விரோத அரசியல் வரை, யாரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது அவசியமில்லை என்கின்றனர் புதிய ஜனநாயகக் கட்சியினர். இதைக் கோருவதோ, தவறான அரசியல் என்கின்றனர். இப்படி இனியொருவின் அடியாளாக மாறிய புதிய ஜனநாயகக் கட்சி, கடந்தகால புலியல்லாத மனிதவிரோத குற்றங்களை பேசுவது அவசியமில்லை என்று "விமர்சனம் சுயவிமர்சனம்" பற்றி புது அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர்.

 

"மே 18" இயக்கமோ, தன் வியூகம் சஞ்சிகையில் புலியிடம் மட்டும் விமர்சனத்தையும்  சுயவிமர்சனத்தையும் கோருகின்றது. மற்றவர்களிடம் அதைக் கோரக் கூடாது என்பதே,  அதன் சந்தர்ப்பவாத அரசியல். இந்த சந்தர்ப்பவாத நிலையெடுத்து, அவர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தும் பல்வேறு கூத்துக்கள், உள்ளடக்க ரீதியாக பரஸ்;பரம் தங்கள் கடந்தகால மக்கள் விரோத அரசியல் கூத்துகளை மூடிமறைக்கின்றது.  இவர்களின் கடந்தகால அரசியல் பின் புலம் பற்றி எல்லாம், பரஸ்;பரம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் அணுகுகின்றனர். ஏன் இன்று திஏரென இதைச் செத்துப்போன புலிகளிடம் கோரும் இவர்கள், அதை மற்றவர்களிடம் கோரவில்லை. ஏன் தங்களைப்பற்றிக் கூட, முன்வைக்கவில்லை. இதுவே இவர்களுக்கு எதிரான, உடனடியான எமது அரசியல் எதிர்வினையாகின்றது. மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியல், மிக ஆபத்தானது.   

 

"மே 18" இயக்கக்காரர் புலியிடம் இன்று விமர்சனம் சுயவிமர்சனமாக, எதைக் கோருகின்றனர் என்பதை நாம் பார்ப்போம்.

 

"புலிகள் அமைப்பினருடன் எந்தவிதமான ஆரோக்கியமான அரசியல் தொடர்பாடல்களையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு பின்வரும் நிபந்தனைகளை இவர்கள் பூர்த்தி செய்தாக வேண்டியுள்ளது.

 

1.தலைவர் பிரபாகரனது மரணத்தை பகிரங்கமாக அறிவித்து, அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செலுத்துவது. தனது தலைவனது மறைவையே ஒத்துக் கொள்ள முடியாத போலி வேடதாரிகளுடன் எந்தவொரு அரசியலையும் யாருமே சேர்ந்து செய்ய முடியாது.

 

2.கடந்த காலத்தில் புலிகள் அமைப்பானது செய்த தவறுகள், குற்றங்கள் போன்றவற்றை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு அவற்றிற்காக மன்னிப்பு கோருவது, தவறுகளை சீர் செய்வது, இயலுமான பட்சத்தில் அவற்றிற்கு உரிய நட்டஈடுகளை வழங்குவது. இப்படியாக ஒத்துக் கொள்ள வேண்டிய தவறுகளில் பின்வருவன முக்கியமானவை என நாம் கருதுகிறோம்.

 

2.1.மக்களது ஜனநாயக உரிமைகளையும், மனிதஉரிமைகளையும் மீறியமை.
2.2. மாற்று அமைப்புக்களை தடை செய்தமை.
2.3. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் மக்களது இனச்சுத்திகரிப்பு.
2.4. சிங்கள மக்கள் மீதான படுகொலைகள்.
2.5. போர்க்கால குற்றங்கள்
2.6. சிறுவர்களை படையில் சேர்த்தமை
2.7.அமைப்பினுள் நடைபெற்ற உட்கொலைகளை பகிரங்கப்படுத்தி மன்னிப்பு கோருவது.
2.8. இவற்றைவிட இன்னும் சில விடயங்கள் தொடர்பாகவும்

 

புலிகள் தமது பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டியுள்ளது. அவையாவன.

 

1. புலிகள் அமைப்பானது தன்னிடமுள்ள சொத்துக்களை தேச உடமையாக்குவது. மேற்கொண்டு எந்த விதமான பணச் சேகரிப்புக்களையும் மேற்கொள்ளாமல் விடுவது.

 

2. தலைவர், புலிக்கொடி போன்றவற்றை கைவிட்டு திட்டவட்டமான அரசியலை முன்வைப்பது. தலைவர் செய்வார், தலைவருக்கு தெரியும் போன்ற அரசியல் பிரமைகளை கைவிட்டு அரசியல் திட்டம், மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றின் அடிப்படையில் திட்டவட்டமான அரசியலை முன்வைப்பது.

 

3. கடந்தகால தமது அரசியலை கட்டுடைப்பது. முழுமையான சுயவிமர்சனத்திற்கு உள்ளாவது.


மேலே குறிப்பிட்ட விடயங்கள் ஒன்றும் புலிகள் அமைப்பை அவமதிக்கும் நோக்கத்துடனோ, அல்லது புலிகள் அமைப்பை போராட்டத்தில் இருந்து ஓரம் கட்டும் நோக்கத்துடனோ முன்வைக்கப்பட்டவை அல்ல. இப்படிப்பட்ட தவறுகள்தான் எமது போராட்டத்தை இந்த அளவிற்கு சீரழித்து இப்படிப்பட்ட தோல்வியில் கொண்டு போய் விட்டது என்பதை நியாயமாக சிந்திக்கும் எவருமே ஏற்றுக் கொள்வர். எனவே, நாம் மேற்கொண்டு இந்த தவறுகளில் இருந்து படிப்பனைகள் பெற்று, அவற்றை திருத்திக் கொண்டு முன்னேறுவது என்றால் அவற்றை களைந்தெறிவதில் நாம் ஈவிரக்கம் காட்டமுடியாது. இந்த தவறுகளுக்காக தனிநபர்களும், முழுத்தேசமுமே கொடுத்த விலைகள் மிக மிக அதிகமானது என்பது உணரப்பட வேண்டும். இத்தனைக்குப் பின்னரும் இந்த தவறுகளை ஒத்துக் கொள்ளாமலேயே, வழமைபோல செயற்பட முடியும் என்று கருதுவது அயோக்கியத்தனமாகும்."

 

இப்படி இதைச் செய்யாத புலிகளின் "அயோக்கியத்தனத்தைப்" பற்றி "மே18" இயக்கம் மிகத் தெளிவாக குறிப்பிட்டு அம்பலமாக்குகின்றது.

 

புலியிடம் "மே18" இயக்கக்காரர்கள் முன்வைக்கும் கருதுகோளில் போதாமையும், முரண்பாடுகளும் இருந்த போதும், குறைந்தபட்சம் "மே 18" அரசியல் எல்லைக்குள் இந்த கோரிக்கைகள் மிக நியாயமானவைதான். இதை நாம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்க முடியும். ஆனால் இதே அளவுகோல் அடிப்படையில், புலியல்லாத அரசியல் தளத்திலும் முன்வைத்து போராடினால் மட்டும்தான், நாங்கள் ஆரோக்கியமான அணுகுமுறை அவர்களுடன் கையாள முடியும். இல்லாதவரை, இவை கூட அரசியல் ரீதியான "அயோக்கித்தன"மாகும்.  

 

புலிகளுடன் ஆரோக்;கியமாக இணைந்து செயல்பட "மே 18" இயக்கம் இதைக் கோரும் அதே தளத்தில் தான், இவர்கள் தங்களுக்கு இதை அவசியமற்றது என்று கருதுகின்றனர். இவர்களுடன் கூடி கூத்தாடும் எல்லாக் கூட்டத்துடன் சேர்ந்து கூடி கும்மியடிக்க, இது உதவுகின்றது. ஆகவே புலியிடம் மட்டும், விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றனர். ஆக இங்கு சுயவிமர்சனத்தை மட்டும் மறுக்கவில்லை, விமர்சனத்தையும் கூடவே மறுக்கின்றனர்.

 

இன்று "மே 18" இயக்கம் முதல் அதனுடன் கூடிக் கூத்தாடும் கூட்டம், கடந்தகாலத்தில் என்ன செய்தது? அதில் அவர்கள் ஆற்றிய எதிர்ப்புரட்சி அரசியல் பங்கும், அதை மூடிமறைக்கும் அரசியலும் இன்று எதற்கு உதவும்!? இன்று இவர்கள் புலியிடம் மட்டும் கோருகின்றனர். இதன் மூலம் தங்களைச் சுற்றி தூய்மையான ஒரு வரலாற்றை இட்டுக் காட்டுகின்றனர்.

 

கடந்தகாலத்தில் இயங்கிய யாரும் (நாங்கள் உட்பட) விமர்சனம், சுயவிமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாங்கள் தவறு இழைக்காதவர்களா எனின், இல்லை. நாம் அதை சுயவிமர்சனம் மூலமாக மக்களை சார்ந்து நிற்கும் சொந்த அரசியல் நடைமுறைகள் மூலம், தவறுகளை களைந்து வந்திருக்கின்றோம்.

 

பொதுத்தளத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் இரண்டு பிரதான வகைப்பட்டது.

 

1.சமூகம் போக்கு சார்ந்த பொது நடைமுறைகள்

2.சமூகம் மேலான குற்றங்கள் 

 

கடந்தகாலத்தில் தேசியம் மூலம் உருவான குட்டிப+ர்சுவா மனப்பாங்கு, எம்மைச் சுற்றி பெருமளவில் ஆதிக்கம் பெற்ற போக்குகள் காணப்பட்டது. இதனை வாழ்வியல் அனுபவம் மற்றும் போராட்ட வழிமுறைகளில் இனம்கண்டு, அதைக் களைந்து அதற்கு எதிராக போராடுவதே உள்ளடக்க ரீதியாக விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு இயல்பாக உட்பட்டு விடுகின்றது.

 

கடந்தகாலத்தில் நாம் செய்த தவறுகள் தொடர்ந்து சமூகத்தில் நிகழும் போதும் சரி, வேறு தவறுகள் நிகழும் போதும் சரி நாம் என்ன செய்ய வேண்டும்?  அதை எதிர்த்து போராடுவது உட்பட, அரசியல் ரீதியாக அதை விழிப்புணர்வூடாக அந்தத் தவறை உணர வைப்பது என்ற வகையில், மக்களை அரசியலை முன்னிறுத்தி ஒரு நடைமுறையில் போராடி வழிகாட்டல் தான், விமர்சனம் சுயவிமர்சனத்தின் அடிப்படையாகும்.

 

சமூகம் மேலான சமூகவிரோதக் குற்றங்களைக் கூட, தனது தவறை மனம் திறந்து ஓத்துக்கொண்டு, அதற்கு எதிராக தன்னை மக்களுடன் முன்னிறுத்தி நிற்பவனின் நடைமுறைதான் விமர்சனம் சுயவிமர்சனமாகும். புலிக்காகவோ, புளட்டுக்காகவோ, ஈ.பி.ஆர்.எல்.எப் காகவோ ஒரு கொலையைச் செய்தவன் கூட, தான் தவறாக வழிகாட்டப்பட்டு  தவறான அரசியல் மூலம் அதை செய்ததாக மனம் வருந்தி, அதற்கு எதிராக அவன் மக்களுக்காக குரல்கொடுத்து போராடுவதும் தான் விமர்சனம் சுயவிமர்சனமாகும்;. இப்படிப்பட்டவர்கள் தான், சமூகத்தை உண்மையாக நேசிக்கின்றனர். மற்றவர்கள் "மே 18" இயக்கம் சுயவிமர்சனம் செய்யாத புலிக்கு கூறுவது போல் மக்களை ஏமாற்றும் அரசியல் "பொறுக்கிகள்" தான்.

 

மக்களைச் சார்ந்து நின்று தங்கள் கடந்தகாலத்தை விமர்சனம் சுயவிமர்சனம் செய்பவர்கள் நேர்மையானவர்கள். இதற்காக இவர்களை யாரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டியதில்லை. அவர்களுடன் சேர்ந்து நாம் வாழ முடியும், சேர்ந்து போராடவும் முடியும்.

 

நாங்கள் 1980 இல் அரசியலுக்கு வந்த போது, இன்றைய அரசியல் தெளிவுடனும் அனுபவத்துடனும் வந்தவர்கள் அல்ல. நாங்கள் சமூகத்தில் நிலவிய அனைத்து  தவறுகளுடனும் தான் போராட வந்தோம். மக்களுடன் தொடர்பு, அனுபவம், அரசியல் கல்வி.. மூலம், எம்மை நாம் விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி வந்தோம்.

 

என்.எல்.எவ்.ரி வரலாற்றை எழுதிய போது, எ(ன்னி)ம்மிடமிருந்த குட்டிபூர்சுவா மனப்பாங்கையும் கூட எழுத முனைந்தேன். இந்த வகையில் தனிப்பட்ட எனது மனப்பாங்குகளையும் (என்னைப் பற்றியும்) கூட எழுத முனைந்தேன். அந்த வரலாற்றுத் தொடரை என்.எல்.எவ்.ரி மத்திய குழு உறுப்பினர் குமரன் கொடுத்த நிர்ப்பந்தத்தால் நிறுத்தினேன். எழுதி வெளியாகிய சில பகுதியை, கீழ் இணைப்பில் நீங்கள்  காணமுடியும்;. அதில் சிறி என்ற பாத்திரம் இரயாகரனாகிய நான்.

1.   என்.எல்.எப்.ரியின் வரலாறு

 

2. தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு!

 

3. NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...

 

உதாரணமாக என்.எல்.எவ்.ரி தவறுகளற்ற இயக்கமல்ல. மற்ற இயக்கங்கள் செய்தது போல் பாரிய மனிதவிரோத செயலை அது செய்யவில்லை. இதற்குக் காரணம் மக்களை முதன்மைப்படுத்தி நின்ற ஒரு அமைப்பாக அது இருந்தது. தவறுகளை மக்களைச் சார்ந்து நின்றதன் மூலம், தொடர்ந்து தன்னைத்தான் திருத்தி வந்தது. இதில் தனிநபர்கள் பாத்திரம் உண்டு. அவையும் கூட்டுவேலைமுறை ஊடாக திருத்தப்பட்டது. இப்படித்தான் நாம் கற்றோம். விமர்சனத்தை, சுயவிமர்சனத்தையும் செய்தோம். அடுத்தமுறை அத்தவறுகளைச் செய்யாது இருக்க, தெரிந்து கொண்டோம்.

 

இங்கு நாம் எம் அமைப்பின் தவறான கூறுகளுக்கு எதிராக, ஏன் எமக்கு எதிராக நாம் போராடுகின்றோம். இதன் மூலம் எம்மை, எம் தவறுகளையும் களைந்து, மக்களை சாhந்து மக்களுடன நிற்க எப்போதும் முனைகின்றோம். இப்படி எம்மை எம் தவறுகளையும் விமர்சனம் சுயவிமர்சனத்தக்கு உள்ளாக்கி, தொடர்ந்து போராட முனைகின்றோம்.        

 

முந்தைய எம் தவறுகளை களைந்து, மக்களுடன் மட்டும் நின்று இயங்க முற்படுகிறோம். இதுவே விமர்சனம், சுயவிமர்சனத்தின் அரசியல் உள்ளடக்கமாக நாம் காண்கின்றோம்.

 

இதைச் செய்யாது இருத்தல் சுயவிமர்சனமல்ல. கடந்த காலத்தில் மக்களுக்கு இழைத்த கொடுமைகள், போராட வந்தவனுக்கு நடந்த கொடுமைகள், (அன்னிய) கைக் கூலிகளாக மாறி போராட்டத்துக்கு செய்த குற்றங்கள் எதுவும், எம் சமூகத்தின் முன் இன்னும் அரசியல் ரீதியாக தீர்ப்புக்குள்ளாகவில்லை. இன்றும் குற்றவாளிகளே, சமூகத்தின் மேல் தொடர்ந்து அதிகாரம் செலுத்;துகின்றனர். இதைப் பாதுகாக்கும் அரசியல் தான், தனது விமர்சனம் சுயவிமர்சனமற்ற ஒன்றின் மூலம் கூடி கும்மியடிக்கின்றது.

 

'இப்படி இதை பாதுகாக்கின்ற விமர்சனம் சுயவிமர்சனமற்ற அரசியல்தான், இன்று எதிர்ப்புரட்சி அரசியலாக உள்ளது. "மே 18" காரர்கள் புலியிடம் கோரியது போல், நாமும் சிலவற்றை இவர்களிடம் தொடர்ந்து கோரி வருகின்றோம்.

 

1. 1983 முதல் 1990 வரை இயக்கங்களை எதிர்த்து நடந்த உள் மற்றும் வெளி இயக்க புரட்சிகமான அரசியல் போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிக்க கோருகின்றோம்.

 

2. இதை முன்னிறுத்தி, இன்று அதன் வழியில் நின்று போராடக் கோருகின்றோம். இது  தவறு என்றால், ஏன் தவறு என்று கூறுங்கள்.

 

3. இதன் போது தியாகம் செய்த அனைவரையும் அரசியல் ரீதியாக முறையாக இனம் கண்டு,   அவர்களை வரலாற்றின் முன் அரசியல் ரீதியாக கொண்டு வரக்கோருகின்றோம்.

 

4. இவர்களுக்கு எதிரான அன்று நிகழ்ந்த அனைத்து சமூக விரோதக் கூறுகளையும், ஈவிரக்கமின்றி அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தக் கோருகின்றோம்.

 

5. 1990 களில் புலம்பெயர் நாடுகளில் காணப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு அரசியல்   கூறை இனம்கண்டு, முற்போக்கு கூறை முன்னிறுத்தக் கோருகின்றோம். பிற்போக்கு கூறை இனம்காட்டக் கோருகின்றோம். அரசியல் ரீதியாக இதன் மேல் விமர்சனத்தையும், சுயவிமர்சனத்ததையும்; கோருகின்றோம்.

 

6. புலம் பெயர் அரசியல் சீரழிவின் பின், மக்களுக்காக தொடர்ந்து நடந்த அரசியல் போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிக்கக் கோருகின்றோம்.

 

இதை மறுப்பதுதான், குழையடிக்கும் கூட்டத்தின் இன்றைய மாற்று அரசியல். புலியிடம் மட்டும், விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றனர். புலிகள் மக்களுக்கு எதிராக செய்த பல, இன்று இவர்கள் கூடி குழையடிக்கும் கூட்டத்தின் கடந்தகாலப் அரசியல் போக்கின் பின் இருந்துள்ளது. இதை மூடிவைத்துக்கொண்டு தான் அரசியல் செய்கின்றனர்.       

             

1983 முதல் மக்களுக்காக நடந்த போராட்டத்தை அரசியல் ரீதியாக அங்கீகரிப்பதும், அந்த தியாகங்கள் அரசியல் ரீதியாக முன்னிறுத்தப்படுவதும், தொடர்ந்து இன்றும் மறுதலிக்கப்படுகின்றது. அன்று அனாதையாக மடிந்த அவர்களை, வரலாற்றில் இருந்து இன்று இருட்டடிப்பு செய்கின்றனர். இதுதான் இன்று குழையடிக்கும் மாற்று அரசியல்.

 

இப்படிச் செய்யும் அரசியல் போக்கை இன்று அம்பலப்படுத்துவதும் அவசியமானது. இதை செய்ய மறுப்பது "பொறுக்கித்தனம்".

 

இன்று தனிப்பட்ட நபர்கள் முதன்மை பெற்ற அரசியல் போக்கில், அவர்களை சுற்றி கடந்த காலத்தை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாத அரசியல் நகர்வுகள் என்பது "பொறுக்கித்தனம்" கொண்டவை. பொது அரசியல் தளத்தில் இவை பற்றிய தெளிவை, விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் மக்களுக்கு முன்வைக்க தவறுகின்ற போது, அதுவும் "பொறுக்கித்தனம்" தான்.  

  

கடந்தகால அனைத்து மக்கள் விரோதத்தையும் புலிகள் மேலும், இறுதியாக அதை புலித் தலைவர் பிரபாகரன் மேலும் போட்டுவிட இன்று முனைகின்றனர். சகல இயக்கப் படுகொலைகளையும் மூடிமறைப்பது முதல் தமிழ்மக்களுடன் சம்மந்தமில்லாத சுய இருப்பு அரசியலை செய்தது வரை, இதுவே மாற்று அரசியலாக எம்மைச் சுற்றி இயங்கியது.

 

மக்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்த போது, அதை எதிர்த்துப் போராட எவனும் எவளும், அதற்கு ஏதோ ஒரு வகையில் துணை நின்றவர்கள்தான்;. இதை ஓத்துக் கொள்ள மறுத்து, அதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்வது அவசியம் கிடையாது என்று கூறி அரசியல் செய்வது அபத்தம். "மே 18" இயக்கக்காரர் புலிக்கு கூறுவது போல், இதுவும்  "அயோக்கியத்தன"மானதாகும்.

 

இதை நாம் சொல்லும் போது பண்பாட்டுடனான ஜனநாயகத்தைப் பற்றியும், போதனையுடன் கூடிய  நச்;சரிப்புகளும், இவர்களை விட்டால் நாம் வேறு யாருடன் தான் சேர்ந்து அரசியல் செய்வது என்று கேட்கின்றனர். இதன் மூலம் வரலாற்று குற்றங்களை மூடிமறைத்து  குழையடித்து கும்மியடிக்கும் அரசியல் சாக்கடைக்குள், இதற்கு எதிரான போராட்ட வரலாற்றை  புதைக்க முனைகின்றனர். கடந்தகாலத்தில் அரசியல் சீரழிவால் உருவான முதுகு சொறியும் இலக்கியச் சந்திப்பு போன்று, மறுபடியும் முதுகு சொறியும் குழையடிப்பு அரசியல் சந்திப்பு ஒன்று உருவாகி வருகின்றது. இங்கு குழையடிக்கும் பொறுக்கி அரசியலே, இதன் மையமான அரசியலாக இருக்கின்றது.

 

பி.இரயாகரன்
26.12.2009