10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்!

“பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியது.

மூன்று இலட்சத்துக்கும் மேலான அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு துரித அபிவிருத்திகளுக்காக “அம்பியை” அவர் அழைத்திருந்தார். விதைப்புக்காலம் தொடங்க இருப்பதால் ஒக்டோபர் மாதத்திற்குமுன் தம் பணிகளைத் தொடங்க ஒரு பெண்கள் குழாமை அவர் அமைக்க முற்படுகிறார். இப்பெண்களைக் கொண்டு அவர் முதற் கட்டப் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.


உலக அரிசி உற்பத்தியில் 2005ம் ஆண்டு சீனா முதலாவது இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏழு மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்தது (1947). அம்பி சுவாமிநாதனின் முன்னெடுப்பின் பின்னர், யப்பான் மற்றும் மெக்ஸிக்கன் நாடுகளில் விளைந்த தானியங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மெக்ஸிக்கன் விதைத் தானியங்களை இந்தியாவிற் பயிரிடுவதற்கு உகந்ததாக மாற்றினார். 1964ம் ஆண்டில் பதினெட்டாயிரம் தொன் மெக்ஸிக்கன் தானியங்களை இறக்குமதி செய்து காலநிலைக்கு உகந்ததாக மாற்றப்பட்டு பயிரிடப் பட்டது. 1968ல் இந்தியாவின் உற்பத்தி 12மில்லியன் தொன்னில் இருந்து, 17மில்லியன் தொன்னாக உயர்ந்து “நிறைப் புரட்சி”யை உண்டு பண்ணியது. அதற்காக இந்திய அரசு அன்று ஒரு முத்திரையையும் வெளியிட்டது. இதேபோல் IR-8 இனவகை “பசுமதி” அரிசி இனத்தினைக் கொண்ட, தாய்வான் விதை நெற்களைக் கலப்பினமாக்கி அம்பி சுவாமிநாதனால் பயிரிடும் பரிசோதனை நடத்தப் பட்டது. இவ் இன வகையான பசுமதி 15வருடங்களின் பின்னர் பிரசித்தி பெற்ற “பூசா பசுமதி”யாகப் பெயர் பெற்றது.

ஓர் வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் சீனா நடத்திய நிலப் புரட்சியின் விளைவாக அதன் உட்கட்டுமானத்தின் இயல்பு, இன்று சீனாவின் உற்பத்தியில் மிக வேகமான வளர்ச்சிக்கு இது ஏதுவாக அமைந்திருக்கிறது. இதேபோல ரஷ்யாவும் அவ் உட்கட்டுமானத்தைப் பயன்படுத்தி இன்று முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் உடைவுக்குப் பிறகும் சீனாவும் ரஷ்யாவும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து வருவது, இன்றைய உலக ஒழுங்கமைப்பில் ஏனைய மூன்றாம் உலக நாடுகளில் இப் பசுமைப் புரட்சியின் புதிய உற்பத்தி முறையை சமூக ஒழுங்கமைப்புடன் கூடிய புதிய வடிவாக முன்னெடுக்க வேண்டிய தேவையை இவர்கள்முன் முன்நிறுத்துகிறது. சுவாமிநாதனால் முன்னெடுக்கப்படும் இப் புதிய உற்பத்தி முறையானது கணணி மயப்படுத்தப்பட்ட இணைய வசதியூடாக கிராமங்களை ஒன்றிணைத்து, காலநிலை மாற்றங்கள் மற்றும் உற்பத்தியில் எதிர் நோக்கும் இயற்கைத் தாக்கங்களைக் கண்டறிந்து அவற்றை ஒருமுகப்படுத்தி தீர்வு காணும் முறையையும் இவர்கள் திட்டமிடுகின்றனர். இவ் வசதிகளின் ஊடாக உற்பத்தியின் சராசரி மாதிரி விலையை மதிப்பிடுவதும், இவ்வளர்ச்சிக்கு உகந்ததாக மாறுகிறது. இதனூடு உற்பத்தி செய்யப்படும் சகல உற்பத்தியும் “கூட்டுறவுச் சங்கங்களின்” ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு இத் தனிமனித உற்பத்தி அனைத்தும் சந்தைப் படுத்தப்படவும் இருக்கிறது.இன்று உலகிலுள்ள அனைத்து மக்களுக்குமான உணவு உற்பத்தியில் 80% ஆவது உற்பத்தி செய்ய வேண்டுமானால், பிரேசில் போன்ற நாடுகளுக்கு சமமான நிலங்களில் பாரம்பரிய உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு நிலப் பரப்பை இன்று தேடுவதும் அது விவசாய நிலமாக இருப்பதுவும் சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இன்று உலகு எதிர்நோக்கும் உற்பத்திக்கான நெருக்கடி மிகவும் சிக்கலானது. இன்று ஐரோப்பாவில் மேற்கொள்ளப்படும் “கண்ணாடித் தோட்டங்கள்” ஊடாகக்கூட இவற்றை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளது. நீரும், நிலமும் இன்று மிகப் பெரும் பிரச்சனையாகவே உலகில் உள்ளது.
இயற்கை அமைப்புக்களுடன் இசைந்து, வாழ்க்கை முறையை அமைத்து பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து உற்பத்தியில் ஈடுபடும் விவசாய மக்களை இப்புதிய உற்பத்தி முறைக்கு இவர்கள் வற்புறுத்தி அடிபணிய வைக்கின்றனர். விவசாயிகளை அடிமைகளாக உலக சந்தைகளுக்காக பயிரிட வைத்து கொள்ளை லாபமீட்டவும் நினைக்கின்றனர். சுய தேவைகளுக்காக பயிரிட்டுக் கொண்டிருந்த விவசாயிகளை உலக பன்நாட்டு சந்தைகளுக்காக பயிரிடவும் இவர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். இயற்கை நிலைமைகளுக்குப் பொருத்தமற்ற, முற்றிலும் அந்நியமான புதிய பயிர்ச்செய்கை முறையைத் திணித்தும் வருகின்றனர். காலம் காலமாக வாழ்ந்துவரும் சுதேச மக்களின் சொந்த அனுபவங்களில் இருந்து தமக்குத் தேவைப்படும் தொழில் நுட்பத்தை இவர்களாகவே பெறவும் முடியும். தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சகல வழிமுறைகளையும் இம் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள் என்ற உண்மையை இவர்கள் உதாசீனம் செய்கின்றனர்.

இன்று உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக மகிந்த அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் (புலிகளின்) பிடியிலிருந்து மக்களை மீட்டதாகவும், பயங்கர வாதத்தைப் பூண்டோடு ஒழித்து விட்டதாகவும் அது கூறுகிறது. மகிந்தா அரசினால் இன்று நடத்தி முடிக்கப்பட்ட இவ்யுத்தமானது, உலக சந்தைக்கான விளைநிலங்களாக இலங்கையை மாற்றியமைக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே இவ் யுத்தம் வடிவமைக்கப் பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழப் பிரதேசமானது கடலையும், அதை அண்டிய விவசாய நிலங்களையும் கொண்ட பெரும் பிரதேசமாகும். இவ் விவசாய நிலங்கள் கடல் மட்டத்துடன் இருப்பதால், இப்புதிய உற்பத்தி முறைக்குத் தேவைப்படும் இன்றியமையாத வரப்பிரசாதமான விளைநிலங்களாக இவை அமைந்துள்ளன. கடல் மட்டத்துடன் இருக்கும் இப் பெரும் தொகையாக விளைநிலங்கள் உலக தட்ப வெப்ப நிலைக்கு (குளோபல் வோம்) ஏற்ப பயிரிடக்கூடிய புதிய பயிரினங்களை உருவாக்கக்கூடிய விளைநிலமாக இவை இருப்பதால், இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் இவை தேவையாகவே இருக்கிறது. அதனால் இவர்கள் எல்லோரும் இணைந்து திட்டமிட்டு இன்று உள்நாட்டு யுத்தத்தை மோசமான முடிவுக்குக் கொண்டு வந்து இப் பெரும் விளைநிலத்தை திட்டமிட்டே அபகரித்துக் கொண்டனர்.

இந்த நிலப் பரப்பிலே பாரம்பரியமாகவும், யுத்தத்தின் நிமித்தமும் வாழ்ந்துவந்த 4லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை, இவ் யுத்தத்தின் ஊடாக (கணிசமான ஒரு தொகையினரை) இனவாத அடிப்படையில் அழித்தொழித்ததுடன், 3லட்சத்துக்கும் மேற்பட்டோரை அம் மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேற்றியும் உள்ளனர். அரசினால் கைப்பற்றப்பட்ட இப் பெரும் நிலப்பரப்பில் இம் மக்களை உலக நாடுகளுடன் சேர்ந்து, புதிய வடிவமைப்பில் மீள் குடியேற்றவும் உள்ளனர். இவ் மீள் குடியேற்றமானது பன்நாட்டு நிறுவனங்களின் தயவில், இவர்களுக்கான உற்பத்தியின் ஆயுட் சேவகர்களாக, புதிய அடிமைகளாக இவர்கள் குடியேற்றப் படுவர். இன்று இவர்களின் அகதி வாழ்வைப் பயன்படுத்தி, இவர்களின் வறுமையைத் துடைக்கும் துரித அபிவிருத்தி என்ற பெயரில் இப் புதிய உற்பத்தி முறையை இலகுவாக இவர்களிடம் திணித்துவிடவும் இவர்கள் முற்படுகின்றனர்.

வன்னிப் பெரும் நிலப் பரப்பானது மிக நீண்ட காலமாக புலிகளின் அதிகாரத்தின் கீழ் இருந்ததால், இதன் பெரும்பகுதி புலிகளின் உடமையாகவே மாறியிருந்தது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இவ் நிலப்பரப்பின் நில உடமையாளர்களின் ஒரு பகுதியினர் ஏற்கனவே அகதிகளாக உள்நாட்டுத் தலை நகரத்திலும் வெளிநாடுகளிலும் குடியேறியிருந்தனர். இன்று வன்னியில் அகதிகளாக வெளியேறியுள்ளவர்களில் பெரும் பகுதியினர் வறிய கீழ்த்தட்டு, தாழ்த்தப்பட்ட மக்களாகும். இவர்களுக்கு மிக மிகச் சிறிய நிலப் பரப்பே சொந்தமாக இருப்பதால், இவ் மீள் குடியேற்றத்தின் மூலம் அரசு பெரும் தொகையான நிலப் பரப்பைத் தனதாக்கிக் கொள்ளும். பிற பகுதியில் இருந்து யுத்தம் காரணமாக புலிகளின் இக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இடம்பெயர்ந்தும், பெயர்க்கப்பட்டும், இன்று அகதியாகியவர்களுக்கு எதுவித உடமைகளும் (நில) இல்லாதுள்ளனர். இதனால் இவர்களை மிக இலகுவாகவே பன்நாட்டு உற்பத்திக்கான பண்ணைகளில் குடியமர்த்துவது இலகுவானதாகவே அரசுக்கு அமைந்தும் விடும்.

புலிகளிடமிருந்து வன்னியை கைப்பற்றி அரசுடமையாக்கப்படும் பெரும் நிலப் பரப்பானது, எந்தக் கேள்வி தீர்வையுமின்றி பன்நாட்டுக் கம்பெனிகளின் உற்பத்திகளுக்கு வழங்கப்படும். இப் பன்நாட்டு உற்பத்திக்கான வெறும் கூலி அடிமைகளாகவே இவ் வன்னி மக்கள் மாற்றப் படுவர். அரசினால் கையாடல் செய்யப்பட்ட இவ் நிலங்களில் படிப்படியாகத் திட்டமிட்ட குடியேற்றங்களும் மெதுவாக நடத்தி முடிக்கப்படும். நிலம் சார்ந்த பாரம்பரிய உற்பத்தி முறை உடைக்கப்பட்டு, புகுத்தப்படும் இப் புதிய உற்பத்தி முறையினூடாக, இவ் விவசாயிகளுக்கான மறுஉற்பத்தியும் மறுக்கப்படும். பன்நாட்டு கம்பனிகளின் கைகளிலேயே விதை பொருட்கள் என்றும் இருத்தி வைக்கப்படும் நிலமைகளும் உருவாக்கப்படும்.

இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது, வன்னிப் பிரதேசத்தில் ஒரு சதுர மைலுக்கு 16பேர் மட்டுமே வாழ்வதாக இருந்தது. (மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் இது 70பேராகக் காணப்பட்டது.) சுதந்திரத்தின் பின் இளைஞர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட உணவுற்பத்தி அபிவிருத்தித் திட்டங்களினால், 1981ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் ஒரு சதுர மைலுக்கு 94பேராகக் குடியமர்த்தி அதிகரித்துக் காணப்பட்டது. (மட்டக்களப்பு மற்றும் திருகோண மலையில் இது 250பேராகக் காணப் பட்டது.

இவற்றை யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிப்பரம்போடு ஒப்பிட்டு நோக்கும்போது மிக ஆச்சரியத்தையே கொடுத்தது. 1981இல் யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பல் ஒரு சதுர மைலுக்குச் சராசரியாக 1039பேர் வாழ்ந்திருதார்கள். குடாநாட்டின் நகரச் செறிவுப் பிரதேசம் 1745பேராகவும் காணப் பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் சிறுதுண்டு நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயப் பிரதேசங்களில் குடிப்பரம்பலானது 1981இல் 3000ஐ எட்டியிருந்ததும் மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். இதற்கு யாழ்ப்பாணத்தின் வடமேற்குப் பாகத்தின் கீழே காணப்படும் மயோசீன் காலத்து சுண்ணாம்புப் பாறைகளின் விளைவாக, இப் பகுதிகள் ஆழ்நீரூற்றுப் பகுதிகளாகளாகவும் காணப் படுகின்றன. இதனால் இத் தாராள நீரூற்றுக் காரணமாக இங்கு மக்களின் குடிப் பரம்பல் அதிகதிரித்துக் காணப் பட்டது. இங்கு விவசாயமானது வருடம் முழுவதும் செய்யப் படுவது (பணப்பயிர்) சிறப்பம்சமாகவும் இருந்தது. இலங்கையில் வெங்காயச் செய்கையில் ஈடுபடுத்தப்படும் நிலப் பரப்பில் 38%யும், மிளகாய்ச் செய்கை பரப்பளவில் 15%யும் குடாநாடே கொண்டிருந்தது.

வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில், தமிழ் மக்கள் தொடர்ந்து சந்தித்து வந்த இனத் தகராறுகள் மற்றும் இனக் கலவரங்களால், மலையகத் தமிழர்களில், இவ்வாறு குடியேற்றப் பட்டவர்களை மலையகத் தமிழர்கள் என வரையறுக்கப்பட்ட போதும், இவர்களில் கணிசமானவர்கள் இந்நாட்டுக்குச் சொந்தமல்லாத- நாடற்றவர்களாகவே இப்பொழுதும் இருந்து வருகின்றனர். மலையக மக்கள் தனியான தேசிய இனமாக இருந்த போதும் இன்னும் எவரும் நாடற்றவர் பிரச்சனையில் அதிகளவு அக்கறை காட்டவில்லை. பிரிட்டிசாரின் கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக சீனாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் தொழிலாளர்களைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் இவை பொருத்தமற்றதாகவும், பெரும் செலவீனத்துக்கு உரியதாகவும் இருந்ததால் கைவிடப்பட்டது. தென்னிந்தியாவில் நிலமற்ற, வறிய, தாழ்த்தப் பட்டவர்களே இலங்கைக்குக் கொண்டு வரப் பட்டனர். இதற்காக மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, ராமநாத புரத்திலிருந்தும் புதுக்கோட்டையிலிருந்தும் கொண்டு வரப் பட்டனர். கோப்பிக்கால அறுவடை முடிந்ததும் இவர்கள் தம் சம்பாத்தியத்துடன் தாயகம் திரும்பினர். இதில் ஒரு சிறு பிரிவினரே முதலில் இலங்கையில் தங்கினர்.

1861இல் கோப்பிச் செய்கை வீழ்ச்சியுற்றதுடன் உருவாக்கப்பட்ட தேயிலைப் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்தே இவர்கள் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர். இவ்வாறு நிரந்தரத் தொழிலாளர் தேவையை அடுத்து இவர்கள் சாதிரீதியாகவே இங்கும் குடியமர்த்தப் பட்டனர். பறையர்(தா)-30%, பள்ளர்-26%, சக்கிலியர்-16%, அகம்படியார்(பி)-05%, கள்ளர்(பி)-5%, மொட்டை வெள்ளாளர்(உ)-3%, செட்டியார்(ம)-03%, இடையர்(பி)-02%, மறவர்(பி)-2%, புளுக்கர்(ம)-1.5%, ஆசாரி(ம)-1%, பித்தளை(பி), கம்மாளர்(ம), இப்பி(ம), சாணர்(பி)=1%, வெள்ளாளர்(உ)-05%, செட்டி(உ)-05%, குசும்பர்(உ)-0.5%, வண்ணார்(ம)-0.5%, அம்பட்டையர்(ம)-0.5%, ஈழுவர்(ம)-0.25%, தாட்டியர்(ம)-0.5%, நாயக்கர்(உ)-0.25%, கன்னாரங்(ம)-0.25, வள்ளுவர்(ம)-0.5%, பன்னார்(ம)-0.25%, குரவர்(தா)-0.25, பரவர்(ம)-0.25.

தா- தாழ்த்தப்பட்டோர்
ம- மத்திமம்
உ- உயர்குலத்தோர்
பி- பிற்படுத்தப்பட்டோர்
(இது வில்லியம் கிளார்க்கின் பட்டியல்) நன்றி: எழுதாத வரலாறு

மலையகத்தில் இருந்து 19%தினர் வவுனியாவிலும், 14%தினர் முல்லைத் தீவுக்கும் குடி பெயர்ந்தனர். இவர்கள் பெருந் தோட்டத்தில் இருந்து விவசாயத்தின் கூலித் தொழிலாளிகளாகக் குடி பெயர்ந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இங்கு யாழ் குடா நாட்டின் வீட்டுத் தொழிலாளிகளாக- எடுபிடிகளாக- அமர்த்தப்பட்ட மக்களின் விகிதாசாரமும், சிறுவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் விகிதாசாரங்கள் இன்னும் பதிவிடப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது) இந்த மலையகக் கூலித் தொழிலாளர்களின் இடப்பெயர்வும் சேர்த்தே வன்னியில் 1981இல் குடிப்பரம்பல் கணக்கிடப் பட்டது. இதை விடவும் 70களில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் காரணமாக, வன்னிப் பிரதேசத்தில் உயர்கல்விப் பொதுத் தேர்வில் தேற்றிய கணிசமான யாழ் இளைஞர்களின் விகிதாசாரமும் சேர்ந்தது என்பது மறைமுக வரலாற்று உண்மையாகும்.

இன்றைய வன்னி யுத்தச் சூழலைப் பொறுத்தவரை, சந்திரிக்கா அரசின் யாழ்குடா முற்றுகையைத் தொடர்ந்து(1995) பெரும் தொகையான மக்கள் (3லட்சத்துக்கும் மேற்பட்ட) வன்னியை நோக்கி இடம் பெயர்ந்தனர். நாளடைவில் இதில் கணிசமான தொகையினர் குடாநாட்டுக்குத் திரும்பியும் இருந்தனர். இருப்பினும் யாழ் குடாநாட்டு முற்றகையின் நிமித்தம் 1989களுக்குப் பின்னர் கரையோரப் பகுதிகளில் (மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட மக்கள்) வாழ்ந்த மக்களும், இவற்றுக்குத் தொடராக அமைந்திருந்த விவசாயத்தில் ஈடுபட்ட மக்களும் இடம் பெயர்ந்திருந்தனர். 83 இனக்கலவரத்துக்குப் பின்னர் மீன் பிடித் தடையினால் இவர்கள் ஒடுக்கப் பட்டதும், (கடல் வலையச் சட்டம்) விவசாய பணஉற்பத்தி மண்ணெண்ணை மற்றும் இதர விவசாய உற்பத்தித் தடைகளால் (உரம், கிருமிநாசினி, விதைபொருட்கள்....) ஒடுக்கப் பட்டதோடு இரு சாராரும் சந்தைப்படுத்தும் போக்குவரத்துத் தடைகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப் பட்டனர். குறிப்பாக 89களில் இருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மீன்பிடி, மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட மக்களும் இவற்றுக்கு உறுதுணையாயிருந்த கடல்த் தொழிலாளர்களும் சொந்தப் பிரதேசத்தில் இருந்து அகற்றப் பட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடாநாடானது (90கடைசி-95) சந்திரிக்கா அரசால் கைப்பற்றப்பட்டபோது, மீன்பிடி மற்றும் விவசாய கடல்த் தொழிலாளர்கள் இவ் யுத்தத்தின் காரணமாகவும், இவ் யுத்தத்தை முன்னெடுத்த ஆதிக்க சக்திகளின் நிலைகளாலும் வேறு வழியின்றி இடப்பெயர்வின்போது வன்னியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழேயே தங்கி வாழ்ந்தனர். (இவர்களுக்கு வேறு தொழில்கள் செய்ய முடியாத யுத்தத்தின் அகப் புற காரணத்தினாலும், கொழும்பு போன்ற நகரத்தில் வாழ வசதி அற்றவர்களாலும், இவர்களது குடும்பத்தின் உறவினர்கள் வெளிநாடுகளில் ஏற்கனவே புலம் பெயர்ந்து வாழாததாலும்) இவர்களுக்கு எந்தவித வாழ்வாதாரமும் அற்றநிலையில் தமது கைகளை நம்பியே வாழவேண்டி இருந்ததாலும் இவர்கள் வன்னியில் தங்கி, புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழவேண்டிய யதார்த்த நிலைக்குத் தள்ளப்பட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த மக்களின் நிர்ப்பந்தமாக இது மாறியது.

புலிகளின் யாழ்-குடாநாட்டு நிர்வாகத்தின் போது அவர்களின் -பாஸ்- முறைக்கு இணங்க குடாநாட்டில் வாழ்ந்த மீன்பிடி, மற்றும் விவசாயத்தில் ஈடுபட்ட பணக்கார வர்க்கத்தினர் -உடமையாளர்கள்- இடம் பெயர்ந்து கொழும்பு போன்ற நகரத்திலும், வெளிநாட்டு குடி பெயர்விலும் தமது வாழ்வை நிலை நிறுத்தினர். ஆனால் கடல்த் தொழிலில் ஈடுபட்ட, தொழில் ரீதியாகவும் அதன் அடிப்படையான சாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டு மக்கள் இடம்பெயர முடியாமல் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தனர். 90-91காலப் பகுதியில் புலிகள் தொழில் ரீதியான சாதி பாகுபாட்டை கலாச்சார ரீதியாக தகர்க்க முற்பட்ட போதிலும் இவை வெகு காலம் பயனளிக்கவில்லை. இக் காலகட்டத்தில் குடாநாடு அரசினது பொருளாதரத் தடை முற்றுகைக்குள் இருந்தது. கரையோரப் பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப் பட்டும் அதை அண்டிய விவசாயத் துண்டு நிலங்களும் இராணுவ முற்றுகைக்குள் இருந்தது. இப்பிரதேசத்தில் இருந்த மக்கள் இடம் பெயர்ந்து நகரத்தை அண்டி செறிந்து வாழ்ந்தனர். இவ்வாறு செறிந்து வாழ்ந்ததாலும் பொருளாதார முற்றுகையாலும் புலிகளின் புதிய நிர்வாக அதிகாரத்தின் கீழ் சமூக முரண்பாடுகள் கூர்மையடைந்து மேல் கிளம்பின. இதனால் புலிகள் சாதிப் பாகுபாட்டை தமது நிர்வாக ஒழுங்குகளை சாதகமாக்கும் போக்கில் கையாண்டனர். இக்காலத்தில் யாழ் முஸ்லீம் மக்களின் பொருளாதாரத்தையும், உடமைகளையும் பறித்து துரத்திவிட்டு அகச் சமூக முரண்பாடுகளை இனவாத கூக்குரலின் கீழ் நிர்வகிக்க முற்பட்டனர். சந்திரிக்கா அரசானது குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் வன்னியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இவை வழமைபோல் வைக்கப்பட்டது. வன்னியில் புலிகளின் நிர்வாகம் உறுதியாகக் கட்டமைக்கப் படுவதற்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்துவிட்ட மக்களினதும், தாழ்த்தப்பட்ட மக்களினதும் தீரமான போராட்டப் பங்களிப்பே பிரதான காரணமாகும். (ஏனெனில், இந்த நிலங்களைத் தக்க வைப்பதின் ஊடாகவே தமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பது இவர்களது வாழ்வு சார்ந்த பிரச்சனையாக இருந்தது. இது புலிகளதும் மற்றும் மேல்த்தட்டு வர்க்கத்தினருக்கும் பிரச்சனையாக இருந்திருக்கவில்லை.) இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாண மக்களின் போராட்டம் பெரும் தூணாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதி 25அங்குலம் தொடங்கி மழை வீழ்ச்சியானது மட்டக்களப்பின் மேற்குப் பகுதிகளில் 75அங்குலம் வரை இது அதிகரித்துச் செல்கிறது. அம்பாறை மட்டக்களப்பு பெரும் பாகங்கள் 50 தொடக்கம் 75 வரை மழை வீழ்ச்சிப் பகுதிகளாக அமைகின்றது. மொன்சூன் காற்றினாலும், சூறாவழிகளாலும் அதிகளவு மழை வீழ்ச்சியை இவை பெறுவதோடு பல சந்தர்ப்பங்களில் இயற்கை சீற்ற அழிவுகளுக்கும் ஆளாகிவிடுகின்றன. இருந்தும் வருடம் மொத்த மழை வீழ்ச்சியில் 70வீதத்தை இப் பிரதேசங்கள் பெறுவதால் காலபோக விவசாய செய்கைக்கு இது நன்கு உதவுகிறது.

நெற் செய்கையைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட விளைநிலம்; (356839ஏக்கர்)-1975-76 நிலமாகும். இது இலங்கையின் மொத்த விளை நிலப்பரப்பில் 31வீதமாகும். இவ் விளை நிலப் பரப்பில் கிட்டத்தட்ட 68வீதத்தினைக் கிழக்கு மாகாணம் கொண்டுள்ளது. இதில் 44.4வீதம் பருவகால மழையை நம்பிய விளை நிலங்களாக உள்ளன. வருடத்திற்கு இரு தடவைகள் போகம் செய்யப்படும் நிலப் பரப்பு 99300 ஏக்கர்களாகும். இது இலங்கையின் மொத்த விளை நிலப் பரப்பில் 28வீதமாகும்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கு மாகாணங்கள் அரசினால் கைவிடப் பட்டதாலும், இவைகள் வரண்ட பிரதேசமாக இருந்ததாலும் விவசாயம் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டது. விவசாயத்தில் ஈடுபட்ட வடகிழக்கின் 60வீதமான மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பெரிதும் ஒடுக்கப் பட்டனர். இவர்களில் நெற் செய்கையில் ஈடுபட்ட பெரும் தொகையான கிழக்கு மாகாண மக்களை (போகம்) மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் பலவந்தமாகத் தள்ளியது. இந்த ஒடுக்குமுறையின் எதிரொலியே கிழக்கு மாகாணம் அரசுக்கு எதிரான யுத்தத்தில் தீர்க்கமான பங்கைப் பெற்றது. இதை விடவும் கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழ்கின்ற பகுதியாக இருப்பதால், இனவாதம், அதன் கருத்தியல் முரண், நேர்முகங்களை இவர்கள் சந்திப்பதால் இப் போர்க் குணாம்சம் அதிகமாகக் காணப் பட்டது. கருத்தியல் ரீதியாக இனவாத அடித்தளத்தில் தமிழ்த் தேசிய வாதத்துக்கு(?) இன அடிப்படையில் இது மிக தீர்க்கமான சக்தியாக மாறியது.

இதுவே அன்றைய சூழலில் யாழ் குடாநாட்டுக் கைப்பற்றலுக்கு வெளியேயான தமிழரின் பாரம்பரிய பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பொதுப் பிரச்சனையாக மாறி இருந்தது (தமிழ் தேசிய, இனவாதப் போக்குக்கு பலம்சேர்க்கும் அடிப்படையில்.) இது, இதுவரை காலம் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனத் தேசியக் கருத்தாடலின் தொடர் வளர்ச்சியின் நிபந்தனையும் ஆகியது. -யாழ்ப்பாணக் குடாநாட்டு இழப்பே- தமிழ் இன, மொழித் தேசியத்தில், தமிழர் பாரம்பரிய நிலப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகள் பாதுகாக்கப் படுகின்ற அல்லது அரசிடமிருந்து வெற்றி கொள்கின்ற வேட்கையில் மிக வேட்கையான உந்துதலைத் தூண்டியது. ஏனெனில் யாழ் குடாநாடு தவிர்ந்த பிரதேசத்தில் குடியேற்றம், அல்லது நிலப்பறிப்பில் தமிழ்த் தேசியம் அதிக அக்கறை முன்னரும் பெரிதாகக் காட்டியிருக்கவில்லை.
கடல் வளத்தைப் பொறுத்தவரையில் 1100மைல்கள் நீண்ட நெடிய கடல் வளத்தைச் சூழ்ந்த இலங்கைத் தீவின் மொத்தப் பரப்பளவு 12,000 சதுர மைல்களாகும். இதில் 73.4% பரப்பளவு வட கிழக்கு (தமிழ்) மாகாணங்களைச் சார்ந்ததாகும். இதை விடவும் வடக்கிலிருந்து தென்னிந்தியாவரை வரைபடத்திலுள்ள கண்டத் திட்டானது, இலங்கைக்குச் சொந்தமான கண்டத் திட்டினதின் 57.3%ஐக் கொண்டுள்ளது. வடகண்டத் திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை மற்றும் முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை என்பன பிரசித்தமானவை. இவைகள் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய (இக்கனட்ல்) மேடைகளாக இருப்பதனால், மீனணுவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் மிக அதிகமாகவே காணப்படுகிறன. இதுவே இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீன்வளம் அதிகம் காணப் படுவதற்கான வாய்ப்புகளை இயற்கையாகக் கொண்டுள்ளது.
இப் பகுதியானது தென்மேற்கு கச்சான் காற்று (சோளகக் காற்று) வீசும் திசைக்கு ஒதுக்குப் புறமாகவும், வடகீழ்க் கச்சான் காற்றின் வீச்சின் மென்மைப் பிரதேசமாகவும் இருப்பதால், வருடம் முழுவதும் மீன் பிடித்தலுக்கு சாதகமான பேறுபெற்ற பிரதேசமாக இது அமைந்துள்ளது.

இதனால் இலங்கை இனவாத அரசுகள் கடல் வலயச் சட்டத்தை முதலில் குடாநாட்டில் கடுமையாக அமுல்ப் படுத்தின. கொழும்புச் சந்தையில் சந்தைப்படுத்தப்பட்ட மீன்பிடி தொடர்பான புள்ளி விபரங்களின்படி, தமிழர் பிரசேங்களின் மீன்பிடியின் அரச கணிப்பீடு: 1979இல் உடன்மீன் 54.94%வும், 1980இல் 56.52%வும், 1981இல் 56.85%வும் இருந்தது. பதப்படுத்தப்பட்ட கருவாடு உற்பத்தித் தொகையில் 1979இல் 80.33%வும், 1980இல் 93.47%வும், 1981இல் 81.88%வும் இது இருந்துள்ளது. இப் புள்ளி விபரங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களாகும். இதில் தமிழர் பிரதேசங்களில் வாழும் மக்களின் நாளாந்த தேவைகளுக்காகப் பாவிக்கப்பட்ட உடன்மீன், மற்றும் கருவாடு போன்றவை இதில் அடங்கவில்லை.

இப் புள்ளி விபரங்களை ஏன் தருகிறேன் என்றால், இலங்கையில் இருந்த தரகு முதலாளித்துவ கொழும்புச் சந்தையில் இவ் வடக்குக் கிழக்கு நிலசார் மற்றும் மீன்பிடி உற்பத்திகளால் தமிழ்த் தரகு முதலாளித்துவத்தின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதனால் சிங்கள, தமிழ் தரகு முதலாளிகளுக்கிடையிலான முரண்பாடு மிகவும் கூர்மை அடைந்தும் இருந்தது. இதற்கு இன்னோர் முக்கிய காரணமும் உண்டு. இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலத்தில், நிலத்தின் மீது கொண்டிருந்த முன்னுரிமை தெளிவற்ற நிலையாகவே காணப் பட்டது. இந்நிலையில் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றியதும் காட்டு நிலங்கள், கழிவு நிலங்கள் மற்றும் பயிரிடப்படாது இருந்த நிலங்கள் முழுவதையும் முடிக்குரிய நிலங்களாக மாற்றினர். பெருந்தோட்டச் செய்கைக்காக சிங்கள விவசாயிகளின் பெருந் தொகையான நிலங்கள் அபகரிக்கப்பட்டும் இருந்தன. இதனால் சிங்கள மக்களுக்கு நிலப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக துரித கதியில் மாறவும் தொடங்கி இருந்தது. இதனால் சிங்கள அரச பௌத்த தரகு முதலாளித்துவம் மிகப் பெரிய இனக் கலவரத்தைத் திட்டமிட்டது. ஏகாதிபத்தியத்தின் துணையுடன் திருநெல்வேலித் தாக்குதலையும், சிறைப் படுகொலையையும், பெரும் கலவரத்தையும் நடத்தி முடித்தது. இதற்கான சூழலை திருகோணமலையில் கலவரமாக அரசே ஆனியில் தொடங்கியும் இருந்தது. இவ்வாறு அன்றிருந்த அமெரிக்க, ரஸ்ய ஏகாதியத்திய முரண்பாடுகள் எம் நாட்டின் உள்@ர் யுத்தத்தில் பாரதூரமான மனித அவலங்களை தமது சுய முரண்பாடுகளுக்காக வளர்த்தன.

இந்த இனக்கலவரத்தைப் பயன்படுத்தி, இந்தியா இயக்கங்களுக்கு ஆயுத உதவியை வழங்கி இலங்கைப் பிரச்சனையில் தனது ஆதிக்கக் கால்களைப் பதித்தது.

இத் தொடரை எழுதிக் கொண்டிருக்கும்போது சுவாமிநாதன் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். இலங்கையில் இவர் அபிவிருத்தியை மேற்கொள்வதை எதிர்த்து “இலங்கைக்குத் திரும்பிச் செல்லக் கூடாது” என இவரது வீட்டின்முன் முற்றுகைப் போராட்டம் நடாத்தப் போவதாக செய்திகள் மூலம் அறிய முடிந்தது. இதை அடுத்து அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பவும் போகப் போவதில்லை என்றும், தமிழருக்குத் தீங்கிழைத்த இலங்கை அரசுக்கு ஒரு தமிழர் உதவக் கூடாது என்ற தமது போராட்டம் வென்று விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருப்திப் பட்டுக் கொண்டனர்.

இந்த நிலைமைகளைக் கொஞ்சம் அவதானிக்கும் முகமாக இத் தொடரை எழுதுவதில் தாமதம் உருவானது. இருப்பினும், இத் தொடரை எழுதி வெளிக்கொணர வேண்டும் என்ற “உயிர்மெய்”யின் ஊக்கத்தை அடுத்து, இவ் அபிவிருத்தித் திட்டம் எந்த வகையான சக்திகளின் அழுத்தங்களாலும் நின்று விடாது என்பதையும், இது உலக ஒழுங்கமைப்புக்கு இன்றியமையாத ஒன்று என்பதையும் நாம் சற்று விரிவாகவே எழுத வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுவாமிநாதனுக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போது, குடாநாட்டில் அரசானது அபிவிருத்தியைத் தொடங்கியது. செம்மண் பிரதேச மக்கள் தம் மண்ணில் “மண்மாற்று” முறை விதைகளைப் பயன்படுத்தும் மண்ணான தம்பசிட்டி மண்ணில் அரசானது “ஏர்”ப் பூட்டு விழாவாக இவ் அபிவிருத்தியைக் கோலாகலாமாகத் தொடங்கியது. இச் செம்மண்ணுக்கான பணப்பயிர் தானியங்களே மண்மாற்று முறை மூலம் செம்மண்ணில் கூடுதலான விளைச்சல்களைப் பெற்றிருந்தன. இவ்வாறு அரசானது அபிவிருத்தியை குடாநாட்டில் தொடங்கும்போது, தமிழ்நாட்டில் விவசாயம் தொடர்பான புதிய சட்டம் உருவாக்கப் பட்டது.

விவசாயத்தை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்வருடம் ஜூன் மாத இறுதி வாரத்தில் “வேளாண்மை ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்” என்ற ஒரு சட்டத்தைத் தமிழ்நாட்டு அரசு நிறைவேற்றியது. தமிழ் நாட்டிலுள்ள விவசாயப் பட்டதாரிகள் (அறிவியல்) இதில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்வதற்கு இச் சட்டம் அனுமதி அளிப்பதோடு, அவர்களே விவசாயத்தை மேலாண்மை செய்யவும், வழி நடத்தவும் உரிமை உடையதாக இச் சட்டம் உருவாக்கப் பட்டது.

இச் சட்டத்துக்குப் புறம்பாக பாரம்பரிய உற்பத்தியில் ஈடுபட்டுவரும் எந்த விவசாயிகளும் தம் மண்ணில் இருந்து பெறும்/பெற்ற சொந்த அனுபவங்களை சக விவசாயிகளுடனோ அல்லது தலைமுறைகளுக்கோ பரிமாற்றிக் கொள்ளுதல் சட்டரீதியாகக் குற்றமாக்கப் பட்டுள்ளது. இதை மீறுவோர் 5,000ரூபா அபராதத்தையும், அதையும் மீறுவோர் 10,000ரூபாய் அபராதமும், 6மாதகாலச் சிறைத் தண்டனையும் பெறுவர் என இச் சட்டம் எச்சரித்துள்ளது.
காலம் காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும், சொந்த மண்ணிலே நாம் பெறும் அனுபவத்தைக்கூட இந்த புதிய அபிவிருத்தி முறைக்காக இவர்கள் குற்றமாக்கியுள்ளனர். தமது சொந்த விவசாய மண்ணிலே அரசின் சட்டப்படியான உற்பத்தியில் மட்டுமே ஈடுபட முடியுமென சொந்த மண் மீதான உரிமையையும் மறைமுகமாக இவ் அபிவிருத்தி பறித்துள்ளது. இந் நடவடிக்கையைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் இன்னோர் உண்மை இலகுவாகப் புரிந்து விடும். விவசாயிகளின் சொந்த நிலத்திலிருக்கும் பயிரிடும் உரிமை மறைமுகமாகப் பறிக்கப் பட்டுள்ளது. அதாவது நிலத்தை அபகரிக்காமல் பன்நாட்டு நிறுவனங்களுக்காக, உலக உணவுத் திட்டத்துக்காக மட்டுமே பயிரிடும் உரிமையை மட்டுமே வழங்க முடியுமென சட்டரீதியாக விவசாயிகளிடம் திணித்துள்ளனர்.

இலங்கையில் பன்நாட்டு உற்பத்திக்காக நிலங்களையே பறித்தது இலங்கை அரசு. இந்திய அரசோ, நிலங்களை விட்டுவிட்டு பயிரிடும் உரிமையைப் பறித்துள்ளது என்றால் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பையும், அதன் தேவையையும், உலக உணவுத் திட்டத்துக்கமைய உற்பத்திமுறை மாற்றப் படுகிற தீரத்தையும் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
சுவாமிநாதன் மீது நெருக்கடிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசு இச் சட்டத்தைப் பயன்படுத்தி புதிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இலங்கையில் 5இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடும் அபிவிருத்தித் திட்டத்தின் முதல் வரைபை இக் குழு சமர்ப்பித்துள்ளது. இக்குழு சுவாமிநாதனின் நேரடி ஆலோசனையிலேயே இயங்கும் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். உலகின் பசுமைப் புரட்சியின் தந்தையும், உலக விதை தானியக் களஞ்சிய வங்கியின் ஒருங்கிணைப்பாளருமான சுவாமிநாதனையே இன்று உலக உணவுத் திட்டத்தினர் எதிர் காலத்தின் பிதாமகனாக நம்பியிருக்கும்போது, இந்தியாவும், இலங்கையும் இதற்கு விதிவிலக்காக ஏன் இருக்க வேண்டும்? இலங்கையில் இன்று நடந்து முடிந்த இந்த யுத்தத்தின் முடிவும், அதில் இந்திய சீனாவின் (தென்கிழக்கு ஆசியாவின்) பிராந்திய விருப்பை உலகம் மீற முடியாததற்கான பிரதான காரணம் இதுவேயாகும்.
உலகத்தின் எதிர்காலத் தலைமுறைக்கான விதை தானியங்களையும், அதற்கான காப்புறுதிகளையும், இயற்கை அழிவில் இருந்து இவற்றைப் பாதுகாப்பதற்கான விதை தானிய வங்கிகளையும், அதற்கான காப்புறுதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். நோர்வேக்கும், இலண்டனுக்கும் இடையில் இருக்கும் நோர்வேக்குச் சொந்தமான தீவொன்றில், உலகத்தின் எதிர்காலத் தலைமுறைக்கான விதை தானியக் களஞ்சியம் பெரிய அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இது இத் தீவின் மலையையும் அதை அண்டிய பகுதியிலும் (18பாகை கொண்ட) களஞ்சியமாகப் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய விதை தானியக் களஞ்சியமாக 4இலட்சம் வகையான தானிய வகைகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.
இவ் விதை தானிய வங்கியினர் சுவாமிநாதனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து, 77ஆயிரம் வகையான நெல் விதை தானிய வகைகளும், 61ஆயிரம் வகையான கோதுமை விதை மணிகளும் சுவாமிநாதனால் உருவாக்கிக் கொடுக்கப் பட்டுள்ளது. உலகின் இவ் விதை தானிய வங்கி 26.02.2009இல் தனது முதலாவது வயதைப் பூர்த்தியாக்கியது. இது சரியாக ஒரு வயதைப் பூர்த்தி செய்யும்போது இலங்கையில் மேல் மாகணசபைத் தேர்தலும், முல்லைத் தீவுக்குள் இருந்த புதுக்குடியிருப்புப் பகுதிக்குள் இராணுவமும் புகுந்து கொண்டது. இதையடுத்து புலிகள் பேச்சுக்குத் தயார் என யுத்த சூழலில் முதல் தடவையாக அறிவித்தனர். இலங்கையில் அறுவடை காலத்தின் பின் (அடுத்தடுத்த வாரங்களில்) அரிசியின் விலை குறைக்கப்படும் என அரசு அறிவித்தது- கிழக்கு மாகாணம் மீட்கப் பட்டதன் பின், இப் போகம் 1இலட்சத்து 20ஆயிரம் ஏக்கரில் அரிசி உற்பத்தி செய்யப் பட்டது.

இவ்வாறு,
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்கும், உற்பத்தித் தேவைக்கான உறவும் மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தின் வீழ்ச்சியுடன் மிகத் தீவிரமடைந்தது. இத் தீவிர முரண்பாட்டுக் காலகட்டத்தில் பிராந்திய நாடுகளின் வளர்ச்சியும் ஆதிக்கமும் ஓங்கியும் இருந்தது.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் சுதந்திரமடைந்திருந்த (போலி) காலனித்துவ நாடுகளில், ஏகாதிபத்தியங்களின் அபிவிருத்திப் போட்டி முட்டி மோதிக் கொண்டிருந்தது.
இலங்கையில் அபிவிருத்தித் திட்டமானது பொல்கொல்லைத் திட்டத்துடன் ஆரம்பமாகியிருந்தது. (1967-73) அடுத்தடுத்து விக்டோரியா மிபேத் திட்டமும் (1973-77), மொரகாகா கண்டத் திட்டமும் (1977- 80) திட்டமிடப்பட்டன. இத் திட்டமானது உலக வங்கி மற்றும் அமெரிக்க உதவியுடன் திட்டமிடப் பட்டன.

அஸ்வான் அணைக்கட்டுத் திட்டமானது அமெரிக்காவால் கட்டித் தருவதாகத் திட்டமிடப் பட்டு இருந்தாலும், ஏகாதிபத்திய அரசியல் உள்முரண்பாடு காரணமாக இது சோவியத்தால் கட்டி முடிக்கப் பட்டது. இவ்வாறு மாகாவலி அபிவிருத்தித் திட்டத்திலும் ஏகாதிபத்தியங்களின் உள் முரண்பாடுகளின் தாக்கங்கள் இலங்கையின் அபிவிருத்தியில் பாரிய மோதல்களாக உருவாகின.

கிட்டத்தட்ட 125தொடக்கம் 200 அங்குலம் வரையிலான சராசரி மழை வீழ்ச்சியைப் பெறும் இலங்கையின் தென்மத்திய பகுதியில் இருந்து மகாவலி ஊற்றெடுக்கிறது. பல கிளை நதிகள் இணைந்து 206மைல்கள் நீளமாக ஓடி, வங்காள விரிகுடாவில் இது குதிக்கிறது. 4304 சதுரமைல்களைக் கொண்ட இந் நதியின் அபிவிருத்தித் திட்டமானது 1962இல் வெளிநாட்டுப் பொறியியல் ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப் பட்டது.

இத்திட்டம் 30வருடத் திட்டமாக திட்டமிடப் பட்டது. சுமார் 10இலட்சம் குடும்பத்தினரைக் குடியேற்றும் இத் திட்டமானது, மாவலி, மதுருஓயா வடிநிலங்களிலுள்ள சுமார் 473000 ஏக்கர்களையும், வடமத்திய பிரதேசத்திலுள்ள 427000 உள்ளடக்கியதோடு, 5.8மில்லியன் ஏக்கர்களுக்கு அடிநீர் பாய்ச்சக் கூடியதாகக் கண்டறியப் பட்டது. மின் உற்பத்தியில் 400வீதமும், நீர்ப்பாசன நிலப் பரப்பை இரு மடங்காகவும் விஸ்தரிக்க முடியுமென இத் திட்டம் தொடங்கப் பட்டது.

கண்டிக்கு வடக்கே அமைந்திருக்கும் “பிறிம் றோஸ்” மலைக்குன்றைக் குடைந்து வாய்க்கால் வெட்டி நீரைத் திருப்பும் இத் திட்டம் 1970 பெப்.28-இல் ஆரம்பமானது. இத் திட்டம் தொடங்கப்பட்டபோது நெல் உற்பத்திக்கு 29சதவீத நிலங்களும், கலப்புப் பயிருக்கு 16சதவீதமும், பணப்பயிருக்கு 50சதவீதமும், புல் வளர்ச்சிக்கு 3சதவீதமும், கரும்புக்கு 2சதவீதமுமாக ஒதுக்கப் பட்டது.

மின் உற்பத்தியைப் பொறுத்தவரை 43 நிலையங்களை அமைக்கக் கூடிய ஏதுநிலைகள் இருந்த போதும், இதனூடாக வருடமொன்றுக்கு 470கோடி கில்லோவாட்ஸ் மின்னைப் பிறப்பாக்க முடியுமெனவும் கண்டறியப் பட்டது. இதில் 15 நிலையங்களுக்கான திட்டங்களை சுமார் 20வருடத்தில் பூர்த்தி செய்து, வருடத்துக்கு 200கோடி கி.வா மின்னைப் பெறுவதாக 1968-இல் திட்டமிடப் பட்டது. இவ் மகாவலித் திட்டத்தை வடக்குக்குத் திருப்புவதன் ஊடாக, இந்தியாவுக்கு மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் கருதப் பட்டது.

இவ் அபிவிருத்தித் திட்டத்தால், இலங்கையின் பிராந்திய வல்லரசான இந்தியா சுமுக வளர்ச்சியைப் பெற்றுவிடும் என அமெரிக்கா புரிந்து கொண்டது. இலங்கையின் அபிவிருத்திக்கான விதை தானியங்களை இந்தியாவே வழங்க வேண்டியிருந்தது அமெரிக்காவுக்கு நெருடலாகவே இருந்தது. இந்தியாவில் இருந்து தூத்துக்குடி மிளகாய் விதை தானியங்களும், வேதாரணியம் விதை வெங்காயமும் இவ் அபிவிருத்தித் திட்டத்தை அடுத்து பெருமளவு அறிமுகப் படுத்தப் பட்டன. இத்தோடு இந்தியா மின் சக்தியையும் பெறுமானால், தென் இந்தியாவின் ஆலை உற்பத்தியில் பெரும் வலுவாக இருக்கும் என்பதால் இவ் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைக் கிடப்பில் போடுவது ஏகாதிபத்திய முரண்பாடுக்கு அவசியமாகியது.

இதனால் உள்நாட்டில் யுத்தத்தை உருவாக்குவது தவிர்க்க முடியாதிருந்தது. 77க்குப் பின் வந்த அமெரிக்க சார்பு யு.என்.பி அரசானது அதன் முனைப்பைக் கொண்டிருந்ததைத் தெளிவாகக் காண முடியும். இவ் அபிவிருத்தித் திட்டம் வடக்கு நோக்கி திரும்பி பூர்த்தியடைவதை இனவாதக் கருத்தியலால் இடை மறித்து, அதையே ஊதிப் பெருப்பித்து- உள்நாட்டு யுத்தமாக்கி- இதனைத் தாமதப் படுத்த வேண்டியது அவசியமாகியது. இவ்வாறு செய்வதால் ஒரு திறந்த பொருளாதாரத்துக்கான, பல்தேசிய கம்பெனிகளின் நாடாக இலங்கையை மாற்றி, தனது பொருளாதார செல்வத்தைப் பெருக்கிவிட அமெரிக்கா விரும்பியது.

இனக் கலவரத்தை அடுத்து, இந்தியா தமிழர் பிரச்சனையைத் தனது கைக்குள் கொண்டு வந்தது. காலப்போக்கில் அமெரிக்காவுக்கு இது கடுமையான பிரச்சனையாகவே இருந்தது. வடக்கு, கிழக்கு அரச நிர்வாகம் ஸ்தம்பிதம் அடைந்ததால், இவ் நிர்வாகத்துக்கான அக்கறையும், அதிகார ஒத்துழைப்பும் தமக்குரியதே என இந்தியா சாப்பாடு போட்டது முதல் ஒப்பந்தம், சமாதானப் படையையும் அனுப்பியதுவரை தனது முக்கியத்துவத்தை நிலை நாட்டியது.

இக் காலகட்டத்தில், அமெரிக்கா வடக்குக் கிழக்குக்கான நிர்வாக அதிகாரத்தையும் தனது கைக்குள் கொண்டு வருவதுடன், இவ் உள்நாட்டு யுத்தத்தைத் தீரமாக நடத்தவும் திட்டமிட்டது. இதனால் யு.என்.பி-யை 17வருடங்கள் அரசில் நிறுத்த வேண்டிய கடின நிலையும் உருவானது.

இவ்வாறான ஒரு நிலையில்தான் இலங்கையில் அரசுக்கெதிராகப் போராடும் சக்திகளின் தலைமை முழுவதையும் பூண்டோடு அழிக்கும் தேவைகளும் உருவாகின. 1980-90களின் ஜே.வி.பியின் உயர்மட்டத் தலைமை அழிக்கப் பட்டது. இக்கால கட்டத்தில் இந்திய ஒப்பந்தத்தில் முக்கிய பங்கெடுத்த E.P.R.L.Fஇன் தலைமையும் முற்றாக அழிக்கப் பட்டது. இது தொடர்ச்சியாக எல்லா இயங்கு சக்திகளின் தலைமை மீதும் குறியான தாக்குதலாக இருந்தது.

ரசியா 16துண்டுகளாக சிதறுதேங்காய் ஆனதன் பின்னர் (1992) அமெரிக்க சந்தையின் அடி சறுக்கல் நிலை வேகமாக ஏற்படத் தொடங்கியது. இயற்கை தனது சீற்றத்தைப் பெரும் அழிவுகளாக இவ் உலகுக்கு தொடராகக் கொடுத்தது. இயந்திரவியல் வளர்ச்சி மற்றும் எலக்ரோனிக் வளர்ச்சியானது நகரங்களின் பெருக்கத்தை அதிகரித்தது. மறுபுறத்தில் உலகம் உணவுக்காகத் திண்டாடும் நிலைமை பூதாகரமானது.

ஐரோப்பாவை இணைத்து (EU) மேற்குலக நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுத்த முயற்சி முட்டுக் காலுக்கு மேல் எழும்ப முடியவில்லை. மேற்குலகின் பொருளாதார நலன்கள், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி ஓட வேண்டிய தேவையை வேகப் படுத்தின. இந்த நிலைமையில் அமெரிக்கா தன்னை, பயங்கரவாதத்தை ஒழிக்கும் மீட்பனாகக் காட்ட வேண்டிய கட்டாய நிலை உருவானது. பெரும் நிலங்களுக்கான தேவை ஆசியாவின் நிலங்களில் சமாதானப் பாப்பரசர்களின் முயற்சியும், தென்கிழக்காசியாவுக்கான- அமெரிக்காவின்- முந்தைய வடிவிலான தலைமைகளைப் பூண்டோடு அழிக்கும் தேவையும் பனிப்போராக இலங்கையில் சமாதானத்தின் பெயரில் நடந்தது.

இப் பனிப்போரின் முடிவு தென்கிழக்காசியாவின் பிராந்திய விருப்பு மேற்குலக நாடுகளின் முந்தைய விருப்ப முடிவுகளையே தமது இன்றைய விருப்பாக இவர்களின் முகத்தில் திருப்பி அறைந்துள்ளது.

இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பானது எவ்வாறு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய ஜனநாயக விழுமியங்களை உட்புகுத்தி ஒழுங்கமைக்கப் பட்டதோ, அதேபோல பிராந்திய வல்லரசுகளின்- பிராந்திய நலன்களையும் உட்புகுத்தியே நகர வேண்டிய தேவை யதார்த்தமாக மாறி விட்டது.

சுவாமிநாதன் இலங்கையில் என்ன செய்யப் போகிறார் என்பது பலருக்கு இன்னும் புரியவில்லை. 
வீசி விதைக்கும் உற்பத்தி முறைக்கு மாறாக நாற்று நடுகை அறிமுகப்படுத்தப் பட்டது. இது அடர்த்தியான பயிரிடும் முறையைக் கொண்டது. இருப்பினும், நாற்று நடுகையால் ஏற்படும் தொழிலாளர் செலவுகளால் சிறு விவசாயிகளின் பெரும் பகுதியினர் விருப்பமற்று இருந்தனர்.

ஆனால் சுவாமிநாதன் இவ் நாற்று நடுகையில் ஈடுபடுத்தப் படும் நாற்றுக்களை புதிய வடிவில் உருவாக்குகிறார். குட்டையாகவும், அதன் இதழ்கள் செங்குத்தாகவும், வேர்கள்- புற்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டதாகவும் மாற்றி அமைக்கிறார். இதனால், குறைந்த காலத்தில் பெரும் விளைச்சலைக் காட்டுகிறார். பயிர்கள் குட்டையாக இருப்பதால் நீரின் தேவை குறைக்கப் படுகிறது. இதழ்கள் மேல் நோக்கி உருவாக்கப் படுவதால் மிக நெருக்கமாக இவை பயிரிடப் படுகின்றன. புற்களைப் போல வேரமைப்புக் கொண்டிருப்பதால், நீர் மற்றும் இதர கனிப் பொருட்களின் தேவையைக் குறைக்கிறார். இவ்வாறான ஒரு பயிரிடும் அபிவிருத்தி முறையை சுவாமிநாதன் இலங்கையில் மண்களின் வளங்களுக்கு ஏற்ப உருவாக்கிக் கொடுப்பதும், இம்மண்ணில் உலகத்துக்காக பயிரிம் பயிரினங்களை உருவாக்கிக் கொடுப்பதுமே சுவாமிநாதனின் அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியத்துவமாகும்.

ஆனாலும் இவ் வடிவமைப்புகள் ஊடாக மேற்குலக நாடுகளின் இயற்கை, காலநிலைக்கேற்ப பயிரிடக் கூடிய விதைகளாக மாற்றும் இலக்கிலிருந்தே இவை முன்னெடுக்கப் படுகின்றன.
ஒரு தாவரம் இயற்கையாக தான் ஓங்கி வளர்வதால் அது இயற்கைத் தாக்கங்களால் பாதிக்கப்பட்டு, நோய்வாய்ப் பட்டு அழிந்து விடுவது மிக அரிதானது. புற்களும், காட்டு மரங்களும் எந்தக் கிருமி நாசினிகளோ, உர வகைகளோ இன்றி அழியாது உள்ளன. செயற்கையான தாவர வடிவம் இப் புறத் தேவைகளை அதிகளவில் நாடி நிற்கின்றன. இதனால் பெருந் தொகையான உரவகைகளும் அளவுக்கு அதிகமான கிருமிநாசினிகளும் பாவிக்கும் உற்பத்தி முறையாதலால் சீக்கிரமே மண் செத்துவிடும் நிலைமையையும் இது கொண்டே உள்ளது.

சுவாமிநாதனின் திட்டத்தால் அதிக விளைச்சலைப் பெறுவதுகூட தொடரான நீண்ட காலத்துக்கு சாத்தியமா? என்பது விளக்கப்படவில்லை. அல்லது கண்டறியப் படவில்லை. கடந்த காலத்தில் ஏகாதிபத்தியத்துக்காக பயிரிடப்பட்ட நிலங்கள் ஒன்றுமே செய்யமுடியாத தரிசாக மாற்றப்பட்டும் விட்டது. ஏனெனில் இவ் முறையினூடான நாற்றுக்களும், விதைகளும் இயற்கையை எதிர்க்கும் சக்தியை இழந்த பலவீனமான உற்பத்திச் சாதனமாகும். இதை விடவும், நிறைவான செழுமையைப் பெற்று வளர முடியாத பயிர்கள் என்பதால் இவை பூரண ஊட்டச் சத்துக் கொண்டிருப்பவையும் அல்ல. மறுபுறமாக இவற்றிலிருந்து கிடைக்கும் கால் நடைகளுக்கான உணவு பற்றாக் குறையை நோக்கி நகரும். மனிதனோடு சேர்ந்து (விலங்குகளுக்கான) கால்நடைகளுக்கான உணவுப் பற்றாக் குறையையும் இந்த விஞ்ஞான மனிதரே உருவாக்குகின்றனர்.

இப் பயிர்ச் செய்கையின் ஊடாகக் கிடைக்கப் பெறும் வைக்கோல் குட்டையான பயிரின முறையால் போதிய அளவு உற்பத்தி செய்ய முடியாமல் போகும். இதில் காகித உற்பத்தி போன்ற உற்பத்திகள் இவ் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இதர உற்பத்திகளும் பாதிப்படையும். கணினி முறையால் இதை ஈடு செய்வது என்பது, வறிய நாடுகளான எமது நாடுகளில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அகர வரிசையே கற்க முடியாத பிற்படுத்தப்பட்ட மக்களாக ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கும் போக்கே ஆகும். இவர்களை என்றென்றும் உலக உணவுத் திட்டத்தின் உற்பத்திக்கான புதிய பண்ணை அடிமைகளாக மாற்றி அமைப்பதே இவர்களின் கனவாகும். பண்ணை அடிமை முறையில் இருந்து மீண்டு வந்த மனித வளர்ச்சி, இன்று புதிய ஒழுங்கமைப்பு என்ற வடிவத்தினூடு நவீன பண்ணை அடிமைத் தனத்தை உலகு திணிக்கிறது.
----------------------------------------------------
பி.கு:- இக்கட்டுரையானது எமது அறிவியல் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு முயற்சியாகும். வாசக அறிவு மட்டத்தில் இருந்தே இது எழுதப்பட்டது. இக்கட்டுரையை எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் ஒத்துழைப்பும் தரவுகளும் தந்துதவிய ‘உயிர்மெய்’ இனருக்கு மீண்டும் நன்றிகள்.

 

http://www.uyirmei.com/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்