நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள். வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.
தமிழீழக் கட்சி புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததையும் சரி, தீப்பொறி கேசவன் யாரால் எப்படி எந்த நிலையில் காட்டி கொடுக்கப்பட்டார் என்பதைக் கூட சொல்ல வக்கற்றவர்கள் இவர்கள். கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்த மறுக்கும், அரசியல் சந்தர்ப்பவாதம் கொப்பளிக்கின்றது. "மே 18" இயக்கம் கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்தி, அரசியல் செய்ய முடியாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத பிரமுகர் தனத்தை அரசியலாக்குகின்றனர்.
இன்று இதை இவர்கள் அரசியலாக செய்யும் போது ஜானுக்குரிய அரசியல் அங்கீகாரம் தீப்பொறியுடன் இருந்தவர் என்பதுதான். தேசம்நெற் ஜெயபாலனுக்கு உள்ள அரசியல் தகுதி, இந்த ஜான் ஜெயபாலன் வீட்டில் தலைமறைவாக இருந்தவர் என்பதுதான்.
இதற்கு வெளியில் இருவரும் தமிழீழக்கட்சியில் இருந்தவர்கள். இது புலியின் உளவு அமைப்பாக இருந்தது. தீப்பொறி அரசியலை மறுத்து அதை உயிர்ப்பாக்கி, உயிர்ப்பை புலியின் தமிழீழக் கட்சியாக்கியவர்கள். இதன் மூலம் புலியல்லாத மாற்றுத் தளத்தை உளவு பார்த்ததுடன், ஆள்காட்டி அமைப்பாகவும் செயல்பட்ட வைத்தவர்கள்.
இதில் தேசம்நெற் ஆசிரியரான ஜெயபாலனுக்கு, இந்தக் காட்டிக் கொடுப்பில் பங்கு உண்டு. இந்தப் புலி உளவு அமைப்பைப் பற்றி வெளியில் அம்பலப்படுத்த தவறி, அதற்கு உதவிய ஜான் அது பற்றி இன்று வரை வாய் திறக்கவில்லை. இப்படி இதை மூடிமறைத்து, கூட்டாக கூடி இயங்குவதே ஜனநாயகப் பண்பு என்கின்றனர். எம்மையும் அதையே செய்யக் கோருகின்றனர்.
தீப்பொறி கேசவன் புலிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டதை பற்றியும், அதில் யார் யார் சம்மந்தப்பட்டனர் என்பது பற்றியும், ஜான் இதுவரை வாய் திறக்கவில்லை. என்.எல்.எவ்.ரி. கொடுத்திருந்த பணத்தை, மீள கேசவன் எடுக்கச் சென்ற போதுதான் இந்தக் காட்டிக் கொடுப்பு நடந்தது இதில் மற்றொரு முக்கிய அம்சம். காட்டிக்கொடுத்தவனும், காட்டிக்கொடுக்காதவனும், அதை மூடிமறைப்பவனும், இதைப்பற்றிப் பேசாது, "ஜனநாயகப் பண்புடன்" தம்மைப்போல் அரசியல் செய்யக் கோருகின்றனர். இதைக் கிண்டுவதால் "வெறும் சேறும் சகதியும்" எஞ்சும், இப்படிச் செய்வது ஜனநாயகப் பண்பல்ல என்கின்றார் ஜான். இப்படி செய்வதால் "இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாக" கூறி அனைத்தையும் மூடிமறைக்க வாருங்கள் என்று கோருகின்றார்.
மொத்தத்தில் தீப்பொறி கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்த தயாராகவில்லை. இப்படிக் கோருவது, "ஜனநாயகப் பண்பல்ல" "வெறும் சேறும் சகதியும்" என்கின்றனர்.
இப்படிக் கேசவனின் அரசியலை மறுத்துத்தான், உயிர்ப்பு, தமிழீழக் கட்சி, மே 18 என்று ஜான் ஒரு புலி அரசியலை, ஒரு மாற்றாக காட்டி வருகின்றார். இதன் பின்னான, அதன் மக்கள் விரோத அரசியல் முதல் அதன் காட்டிக்கொடுப்புவரை பேசாத ஒரு அரசியலை செய்ய முனைகின்றார்.
இதை நாம் அம்பலப்படுத்தி, கேசவனின் சரியான அரசியலையும் முன்னிறுத்தி அவருக்கு அரசியல் ரீதியான அஞ்சலியை செலுத்த முனைகின்றோம். கேசவன் முன்வைத்த அரசியல் எது?
"ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது எவ்வளவு புனிதமானது தெரியுமா. வெறுமனே கட்சி அங்கத்தவனாகிற பெருமை மட்டும் போதாது. மார்க்சியம் ஒரு வாழ்க்கை முறை. உயிரோட்டமான வாழ்க்கை அது. ஆனால் எங்கடை கட்சியில் பலர் அதை உணரத் தவறிவிட்டாங்கள். தமது சொந்த நலனுக்காக, ஒரு நாள் மகிழ்ச்சிக்காக, சில பத்து ரூபா லாபத்திற்காக எல்லாம்கூட தங்கள் ஆன்மாவைக் கொன்றழிச்சாங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு சுயநலமும் சோம்பேறித்தனமும் கட்டோடு இருக்கப்படாது. அவனுக்கென்று இருக்கும் ஆசாபாசம் எல்லாமே ஒரு இலட்சிய வாழ்வுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். காதல், திருமணம் இவற்றிலெல்லாம் இது மிகமிக முக்கியம்".
இதற்கு மாறாக, இந்த அரசியலை மறுக்கின்றவர்கள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலையும், அரசியல் செயல்களையும் மூடிமறைக்க விரும்புகின்றனர்.
இதை நாம் அம்பலப்படுத்துவதால், கடந்தகாலத்தில் எதிர்ப்புரட்சியை அரசியலாக செய்த கூட்டம், எமக்கு எதிராக வக்கரித்து முறுக்கு எடுத்து நிற்கின்றது. இந்த வகையில் தான் ஜான் புலியின் வாலாக உருவாக்கிய "மே 18" இயக்கம் வியூகம் இதழை லண்டனில் வெளியிட்ட போது, ஜான் எம் மேல் காறி உமிழ்ந்தார். அதை தேசம்நெற் ஏந்தி எடுத்து, எமக்கு எதிராக கடைவிரித்து மலிவு விலையில் கூவி விற்க முனைந்தது.
இந்தக் கூட்டத்தில் ஜான் எம் மேல் காறி துப்பியது எவ்வாறு என்பதை
"சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டுப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்."
என தேசம்நெற் கூறுகின்றது.
"மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே" என்கின்றார். சரி அது எப்படிப்பட்ட பண்பு!? உங்கள் நடத்தையைப் போன்ற பண்பா!? உங்கள் கடந்த காலத்தை பற்றி பேசாது, நிகழ்காலத்தில் உங்களை விமர்சனம் செய்யாத அரசியலையா ஜனநாயகப் பண்பு என்கின்றீர்கள். அதாவது தங்கள் கடந்த காலத்தை மூடிமறைத்தும், தொடர்ந்து மக்களை ஏமாற்றியும், நீங்கள் அரசியல் செய்ய அனுமதிக்கும் பண்புதான், "மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்பு" என்கின்றீர்கள். இதைச் செய்வதைவிட, அரசியலில் ஒதுங்கியிருக்கலாம்.
நீங்கள் அரசியல் செய்வதாக இருந்தால், தங்களின் கடந்தகால அரசியல் தான் என்ன? இதைக் கேட்பது, ஜனநாயகப் பண்பு கெட்ட நடத்தையோ!? சரி என்.எல்.எவ்.ரி. உங்களிடம் (தீப்பொறியிடம்) கற்றன் நசனல் வங்கி பணத்தில் எஞ்சியதை தந்திருந்தது. அதை நன்கு தெரிந்து வைத்திருந்த நீங்கள் கள்ளமௌனம் சாதிக்க, உங்கள் அரசியல் கூட்டாளிகள் அதை எனக்கு எதிரான அவதூறாக வைத்து அரசியல் நடத்தினர். அப்போது வாய் மூடிக் கிடந்த உங்கள் நடத்தையா, அரசியல் பண்பானது!? எம்மை பார்த்து "சேறும் சகதியும்" என்றும், "இரத்த ஆறு ஓடாதது தான் குறை" என்றும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் துணையுடன் என்.எல்.எவ்.ரி. பணத்தைப் பற்றி உங்கள் அரசியல் "தோழர்கள்" அவதூறு பேசி அரசியல் செய்ததை எப்போதாவது கண்டித்தீர்களா!? உங்கள் "நேர்மை" பற்றி நாம் பேசுவது, அரசியல் பண்பு கெட்ட நடத்தையோ!?
கேசவன் காட்டிக்கொடுக்கப்பட்டான் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இதை உங்களைப் போல் நாம் மூடிமறைப்பதா பண்பான அரசியல்!
கடந்த காலம் பற்றியும், அதில் என்ன அரசியல் வைக்கப்பட்டது என்பது பற்றியும் எதுவும் பேசாது, நீயும் நானும் சேர்ந்து மக்களை ஏமாற்றும் அரசியலை செய்வதுதான் ஜனநாயகப் பண்பு என்கின்றார். இன்று எம்மைச் சுற்றிய அரசியல் என்ன? புலிகள் முதல் புதிய ஜனநாயகக் கட்சி வரை, கடந்த காலத்தை விமர்சனம் செய்யாத, சுய விமர்சனம் செய்யாத அரசியல் சாக்கடையில் புரளுவதா?.
இதை கண்டுகொள்ளாது நாமும் அவர்களுடன் சேர்ந்து எதிர்க்கடையை போட்டு வியாபாரம் செய்வதுதான், அரசியல் நாகரிகம் அரசியல் பண்பு என்கின்றனர். இதை மார்க்சியம் பேசும் புதிய ஜனநாயகக் கட்சி, "சுயவிமர்சனம் என்றால்" என்று கூறுவதன் மூலம் கூறுகின்றனர். தேசியம் பேசும் "மே 18" இயக்கம், இதைப்பற்றி பேசாமல் இருத்தல்தான், ஜனநாயகப் பண்பு என்கின்றது.
கடந்தகாலத்தைக் கண்டுகொள்ளாது எப்படி அரசியல் செய்வது என்பது பற்றி, எமக்கு உபதேசிக்கின்றனர். கடந்தகாலத்தில் நிலவிய எதிர்ப்புரட்சி அரசியலைப் பேசுவது "காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல்" முன்வைப்பதாகவும், "கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக" இருப்பதாகவும் கூறி ரகுமான் ஜான் நெளிகின்றார்.
நாங்கள் இந்த சந்தர்ப்பவாத புழுவிடம் கேட்கின்றோம், உங்களைச் சுற்றி இன்று கும்மியடிக்கும் கூட்டத்தின் கடந்தகால நிகழ்கால அரசியல் தான் என்ன? அதை உங்களால் நேர்மையாக வைக்கத்தான் முடியுமா? உங்கள் தீப்பொறி முதல் இன்றைய மே 18 இயக்கம் வரை, நீங்கள் மிகக் கவனமாக மூடிமறைக்கும் அரசியல் பித்தலாட்டங்களை வெளிப்படையாக முன்வைக்கத்தான் முடியுமா?
இதை நீங்கள் நேர்மையாக வெளிப்படையாக வைக்காத வரை நீங்கள் யார்? இதன் மூலம் எதை, எதற்காக, யாருக்காக காப்பாற்ற முனைகின்றீர்கள்? அதைக் கூறுங்கள். சந்தர்ப்பவாதத்துடன் மற்றவர்களுடன் நீங்கள் கூடி அரசியல் செய்யும் வரை, உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும் எதிரான எமது போராட்டம், ஜனநாயக பண்பற்றதாக உங்களுக்கு இருப்பது ஆச்சரியமற்றது.
நேர்மையாகவும், வெளிப்படையாகவும், செயல்பட முடியாத உங்கள் அரசியல் நடத்தை, மூடிமறைத்த சந்தர்ப்பவாத அரசியலாக இன்று வெளிப்படுகின்றது. இதன் அரசியல் பண்பு, எதிர்ப்புரட்சி தன்மை கொண்டது.
பி.இரயாகரன்
23.2.2009