Language Selection

தீப்பொறியின் அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1990 களில் அந்த அரசியல், புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. தீப்பொறியை தமிழீழக்கட்சியாக்கி, புலியின் ஆள்காட்டியாக மாற்றியதுடன், புலிகள் போட்டுத்தள்ளவும் உதவியது. இப்படி புலியின் உளவு அமைப்பாகி இயங்கியவர்கள தான்; மீண்டும் இன்று "மே 18" இயக்கமாக வெளிவருகின்றனர். தீப்பொறி அரசியலை அழித்து, புலி உளவு அமைப்பாக மாற்றிய அதே அரசியல், அதே தர்க்கம்.  

புலியின் அழிவின் பின், எதிர்ப்புரட்சி அரசியலே மீளவும் தன்னை மூடிமறைத்துக் கொண்டு மக்களின் முதுகில் குத்த களமிறங்கியுள்ளது. உலகின் உளவு அமைப்புகள் முதல் இலங்கை இந்திய அரசியல் புலனாய்வுப் பிரிவும் கூட இதற்குள் தான் இயங்குகின்றது. கடந்தகால வரலாற்றை மூடிமறைத்தும் திரித்தும், வரலாறு தெரியாத அப்பாவிகளுக்கு வலை வீசுகின்றது. 

 

கடந்த காலத்தில் யாரெல்லாம் மக்களுடன் நிற்கவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராகவே நிற்கின்றனர். கடந்த மக்கள் விரோத வரலாற்றை வரலாற்றில் இருந்து அகற்றி, திரிக்கப்பட்ட ஒரு வரலாற்றை கூற முனைகின்றனர். மக்கள் விரோதத்தையும் அதன் சமூக விளைவுகளையும் மூடிமறைக்க, அவர்கள் கொண்டிருந்த தத்துவத்தின் குறைபாடே இவை என்கின்றனர். சமூகத்தின் விளைபொருள்தான் இது, அன்றி இதை முன்னெடுத்தவர்களின் பொறுப்பல்ல என்கின்றனர். இப்படிக் கூறி, இதற்கு எதிராக போராடியவர்களையும், அவர்கள் தியாகங்களை எல்லாம் காயடிக்கின்றனர். கடந்துபோன மனிதவிரோத அரசியலை நியாயப்படுத்த, அவற்றை சின்னச் சின்ன விடையங்களாக "தன்னியல்பான" அரசியலாக காட்ட முனைகின்றனர். "மே 18" பெயரில் உருவாகும் கும்பல் கூட, தன் வரலாற்றைப் புரட்டி எதிர்ப்புரட்சியை மீளத் தொடங்கியுள்ளது. எல்லா மனித விரோதிகளும் கூட்டாகக் கூடி, கும்மியடிக்கத் தொடங்கியுள்ளனர்.  

 

"மே 18" காரர்கள் யார்? இவர்கள் வேறு யாருமல்ல. தீப்பொறி அரசியலைக் காட்டிக்கொடுத்து, கடந்தகாலத்தில் புலியின் உளவு அமைப்பாக இருந்த தமிழீழக் கட்சிக்காரர்கள் தான் இவர்கள். புலம்பெயர் நாடுகளில் மக்கள் விடுதலையை முன்னிறுத்திய ஒரு அரசியல் வந்து விடுவதை தடுக்க, புலிகள் தீப்பொறியில் இருந்து உருவாக்கிய அமைப்புத்தான் இந்த தமிழீழக்கட்சி. அது புலியின் உளவுப் பிரிவான தமிழீழக்கட்சியாக மாற, மார்க்சியம் பேசியது. மார்க்சியத்தில் தேசியம் பற்றிய குறைபாடு உள்ளதாக கூறியது. இப்படி பலவற்றைக் கூறித்தான், புலியின் ஒரு உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக, ஆட்களை போட்டுத்தள்ள உதவும் அமைப்பாக மாறியது.

 

கேசவன் காட்டிக்கொடுக்கப்;பட்டு புலிகளால் அழிக்கப்பட்ட பின், கேசவன் முன்வைத்த அரசியலை அந்த அமைப்பு மறுதலித்தது. இந்த வகையில் தீப்பொறி முன்வைத்த அரசியலை மறுதலித்து வழிகாட்டிய ஜான், தேசபக்தன் என்ற புதுப்பெயரில் இன்று கட்டுரை வரைகின்றார். தேசபக்தன் என்ற பெயரில் இயங்கிய அமைப்பும், அதன் பத்திரிகையும் இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் தான், அது முற்றாக அழிக்கப்பட்டது. இப்படி அவர்களை இல்லாது அழித்தவர்களுக்கு வழிகாட்டிய ஜான் தான், இன்று அந்தப் பெயரைப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுதுகின்றார். இப்படிப் புலிகள் கடந்தகாலத்தில், பல பெயர்களை அபகரித்து பயன்படுத்தியவர்கள். "மே 18" வியூகம் இதழில், இந்த தேசபக்தன் பெயரில், ஜான் பழையபடி உலாவுகின்றார். தீப்பொறியின் அரசியலுக்கு மாறாக, தேசபக்தனின் அரசியலுக்கு மாறாக, பழையபடி அதே தத்துவம் பேசுகின்றார். தமிழீழக்கட்சி உருவாக உயிர்ப்பில் எப்படி தத்துவம் பேசி மார்க்சிய அரசியலை நீக்கம் செய்தனரோ, அதே தர்க்கம் அதே வாதம், மீண்டும் ஒரு எதிர்ப்புரட்சி. அன்று நாம் மட்டும் இந்த புலிப் பாசிசக் கூட்டத்தை தனித்து எதிர்த்து அம்பலப்படுத்தினோம் என்பதே, புரட்சிகர வரலாறு. இதை இன்றும் நாம் மட்டும் தனித்து செய்யும் வரலாற்றுக்குள் தொடர்ந்து நிற்கின்றோம்.   

       

இவர்கள் கடந்த எதிர்ப்புரட்சி வரலாற்றை இனம் காணாத வண்ணம், புரட்சிகர அரசியலை  அரசியல் நீக்கம் செய்வது தான் இவர்களின் முதன்மையான இன்றைய அரசியலாகி விடுகின்றது. அன்று தீப்பொறிக்கு இதையே செய்தவர்கள். இன்று இதையே "வியூகம்" போடுகின்றனர்.  

 

நாடு கடந்த தமிழீழக்காரர்கள், வட்டுக்கோட்டை தீர்மானக்காரர்கள், மே 18 காரர்கள் முதல் தேசம்நெற் வரை, கடந்தகாலத்தில் தங்கள் பின் இருந்த எதிர்ப்புரட்சி அரசியலை மூடிமறைப்பதன் மூலம் தான், மீண்டும் மக்களுக்கு எதிரான அரசியலை செய்யமுனைகின்றனர். தங்கள் எதிர்புரட்சிக்கான அரசியலை மூடிமறைக்க, அதை "தன்னியல்பு" அரசியலாக, "சமூகத்தின் விளைபொருளாhக" இட்டுக்கட்டுகின்றனர்.

 

மார்க்சியத்தை மறுத்தும், திரித்தும், மார்க்சியத்தில் பற்றாக் குறை உள்ளதாக கூறி திருத்தி முன்தள்ளிய கடந்தகால எதிர்ப்புரட்சி அரசியலை "தன்னியல்பு" வாதம் என்ற கோட்பாட்டுக்குள் மூடிகட்ட முனைகின்றனர். 1992 களில் வெளிவந்த உயிர்ப்பில் ஜான் இதே "தன்னியல்புவாதம்" பற்றிப் பேசியபடி தான், மார்க்சியத்தை மறுக்கின்றார். இப்படி கூறி புலி உளவு அமைப்பாக இருந்த தமிழீழக்கட்சி, எந்த தத்துவத்தைக் கொண்டு எந்த வார்த்தைகளைக் கொண்டு உருவானதோ, அதன் வழியில் வந்த "மே 18" காரரின் வியூகம் இதழிலும் மீளக் காணமுடியும்.

 

புலிக்கு அன்று உளவு பார்க்கவும் காட்டிக்கொடுக்கவும் ஜானின் மார்க்சிய விரோத புலித் தத்துவம் தான் உதவியது. இன்று யாருக்கு உதவுவதற்காக அதை மீள முன்தள்ளுகின்றனர் என்பதுதான், இன்று நாம் இனம் கண்டு போராட வேண்டிய கேள்வியாகியுள்ளது.

 

பி.இரயாகரன்
20.12.2009