ஆன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய எம் மக்கள்தம் அர்ப்பணிப்பு இலட்சம்.எங்கெல்லாம் இன்பமென அலைகிறதோ இந்த மனம், அங்கெல்லாம் இன்பமெனும் அற்பச் சுழற்சியில் அவதிகளைக் கட்டிவைத்து, ஆன்மாவை அழிப்பதுதானே உலகத்தின் நியதி?இது,எமக்கு நீதியாக!

இந்த நியதிகளின் பின்னே அலைந்தோடுகிறேன்,அற்பமான எனது உணர்வுகளை கடைந்தேற்ற முடியாத எனக்கு, அன்றைய வாழ்வுக்கு அர்த்தமொண்றுண்டென அப்பப்ப என்னைத் துரத்தும் இந்த மக்கள் குழாம், எல்லாம் செத்து,சிதைந்து மக்கிப்போகும் எலும்புகளோடு உலகெமல்லாம் வரலாற்றைச் சொல்லும் எச்சங்களாகின.

 

என்ன சொல்வேன்,எப்படி ஏற்பேன்?எனக்கென்றொரு பணியொன்றுண்டானால் எல்லாவற்றையுமே சகஜமாகப் பார்க்கும் மானிடர்தம் வாழ்வில் வதைகளகற்றிய வழிகளைச் சொன்னார், பழிகளைக்கண்டு வாழ்வுக்கு என்னவொரு தேவையென உயிர்கொண்டலையும் என்னையே கேள்விக்குட்படுத்தும் எனது நிலையைச் சொல்வேன்.பொழுது புலர்ந்து விடியலை அண்மித்த சந்தியா வந்தனத்தில் சறுக்கிய எமது பாதங்கள் பட்டுத்தெறித்த புழுதியைக் கேட்டுப்பார், மக்களது அகவிருப்பை.அவர்தம் அன்புக்கு அடிமையான நாங்கள் அவர்களை அழியக்கொடுத்தது எங்ஙனம்?

 

செம்மண்ணொழுங்கையும் சீற்றியடித்த மண்கவர் சட்டையும்-சடையும் மூக்குத் துவராத்துள் முத்துமண் துளைத்த வாசமும், அந்நியர் தம் பாதங்கள் பதிய என் குடி சிறையினுள் சுமை காவிகளாக...

 

என் குடியெல்லாம் தரிசனத்துக்காய் முள்ளுக் கம்பிதன் முகவரிசொல்லி வன்னியிலே வழிபார்த்துக்காத்திருக்க,கள்வர்கள் நாம் கடைவிரிக்கும் அரசியலில், அள்ளியவர் மீள அடுப்படிக்குள் நஞ்சு வைக்க நாடகம் போடுகின்றார்-நன்றிகெட்ட நயவஞ்சக வாழ்வுகொண்டு!

 

இது,வாழ்வா?இல்லை வளங்களைக் குவிக்கும் வழியெனக்கொள்ள மக்கள்தம் அழிவு, உனக்கென்ன சிறுபிள்ளைக் கிலுக்கட்டியா?சொல்லு!உன் சுயத்தை நீ சொல்லு! இதுவன்றி, நீயுரைக்கும் நல்லதென நீகாண் வல்ல தத்துவமும் வதைசெய்யும் என் குடிக்கு.

 

இஃது, பொய்யில்லை! பொதிசுமக்கும் என் குடியின் வாழ்வு சொல்லும் மீதியை.கனவுக் குடங்கொண்டு, கண்ணீர் நிறைத்து உனக்கும்-எனக்கும் தாகம் தீர்த்த அந்தத் தாயின் புதல்வனைப் புசித்தோம். எமக்காகப் பிட்டு அவித்து, புதிய ஓலைக் குட்டானில் சீனியையும் இனிக்கக் கலந்து, தன் விடியலுக்காய் கொட்டிய அவள், தமிழ்த்தாய்.என் நெஞ்சே கனக்கும் அவள் வறுமை, கொடைக்கு அவளை தடுத்ததில்லையே!

 

எனக்கும் என் தலைமுறைக்கும் அவளுரைக்கும் மொழியென்ன?சிந்திக்க எனக்கு நேரமில்லை.என் கூட்டத்தின் அவாவுக்கு ஒரு மக்கட்குழாத்தின் குடிகலைப்பல்லவா பலியாகின?குருதி தோய்ந்த தன் கூந்தல் முடிக்காது, எவரெவரோ எடுத்துவைக்கும் வெற்று மொழிக்குள் தம் விடியலுக்கு வழியுண்டாவென அவர்கள் நோக்க, சூரியனே அவர்களைச் சுட்டெரிக்க, சுகமான வாழ்வு அவர்கட்கு மகிந்தா மாமா வழங்கியதாக நீ பதிலுரைக்க,பாவி அவர்களல்ல!

 

நீயென்றாவது மானிடனோ?

 

போ,போய் உனது முக்த்தை அவர்கள் முகங்களில் பார்!நீ கீறிய தாறுமாறான கோடுகள் எல்லாம் அவர்தம் முகங்களில் யுத்த வடுவாக சாட்சி பகரும்.என்ன, இன்னுமா ஏய்ப்பதற்கு நீ எடுபிடியாய் அலைகிறாய்ஆ?சின்ன வயிற்றுக்கு நீ பெரிய திமிங்கலங்கள் கேட்கிறாயா?மனிதா, உனக்கு முன் ஆண்டுகெட்ட எத்தனையோ கொடுமுடிகளைக் காண்பாய்.ஏன், மறந்தாய் அன்னையின் கர்ப்பத்திலுதித்துத் தவிழ்ந்த சோதரரை சுட்டுக் கொன்றதற்கு-ஆட்காட்டி அழித்ததுக்கு, உண்மையாய் உள்ளதை, உள்ளபடி சொல்ல?

நாமெல்லோரும் மானுடர்தாமா இன்னும்?

 

மகத்துவம் என்கிறாயே-புரட்சி என்கிறாயே, அதன் மொழி என்ன?

 

மக்களைக் கொன்றுவிட்டு, இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் கூடவே,மகிந்தாவுக்கும்-பொன்சேகாவுக்கும் நியாயம் உரைக்க உனக்கென உருத்தொன்றுண்டென்கிறாயா?

 

<

 

என்ன, மக்களது உயிருக்கு மகத்துவம் இல்லையென்பதுதானே உனது கனவு.தலைவர்களதும்,உடமையுடையவர்தம் உயிருக்கு நீ பாதுகாப்புக் கவசம் வழங்கிடினும்,உன் தாய் இலங்கையின் எல்லாத் திசையிலும் தன் சேய் வரவையெண்ணி, இருட்டுத்திசையை வெறுக்கப் பார்க்கிறாளே!அவளது மடியினுள் நீ தவழ்ந்தாயா-உன் சுகமல்லவா அவள் மொழியாகியது?மறந்தாயே மனிதா!வடக்குக்கும்,கிழக்கும் எல்லை வைத்து எல்லோரையும் மொட்டையடிக்க உனக்கென்றொரு வாழ்வு.

 

வா,வா.வந்து பார்!வன்னியின் குடிகளுக்கு நீ உரைத்த வாழ்வு.இத்தனைக்கும் மத்தியிலே, மகிந்தாவுக்கு மகத்துவம் உண்டென்கிறாய்.தேசியமும்,தேசமும் சொன்னவர்கள் குடித்த உயிர்போக, மீதமான எலும்புகளையும் சுவைப்பதற்கு உனக்கும் அவசியம்.உன் தலைவர்களுக்கும் அவசியம்.எதற்காக-எவருக்காக?எந்தப் பொருளுடமைக்காக அவர்கட்கு நீங்கள் முட்கம்பி முடிதரிக்க?

 

ஏசுவே,உனது பிறப்புத்தினம் இன்னுஞ் சில விடியலில்.என்னவர்க்கு ஏன் நீ இத்தனை கொடுமைகளை இவர்வழி வாழ்வாக்கினாய்?சொல்!நீ மட்டுமேதாம் இதையுரைக்க இன்று, வன்னி முகாமிலே வதங்கியவர்களை வேட்டைக்குத் தயார் செய்கிறாய்.எதற்காக?அவர்கட்கு வாழ்வு மறுத்து,சுதந்திரக் காற்றைத் தடுத்து, உன்னையவர்கள் துதிப்பதற்கு நீ என்ன கொடுமையானவனா?உன் பேர் சொல்லி, மதம் மாறு எனக்கூவும் உன் தூதர்கள்தம் பை நிறைக்க என் குடியா பழிசுமக்கும்?

 

ஓ,பாவப்பட்டவனே!உன் பழியறுக்க, நீ பெத்தேலேகமல்லவா சென்றிருக்க வேண்டும்?வன்னியிலே உனக்கும் வேலையுண்டா?பாவப்பட்டவனே-பரதேசி ஏசுவே!உன்னைத் தவிர வேறுயாரை நாம் நோக முடியும்?

 

எல்லோரும் வந்துவிட்டார்கள்.வன்னியிலே வாழ்வர்க்கு

 

 "நீதி"வழங்குவதென.ஆனால்,வதைப்பட்டவர் தொடர்ந்தும் வதை முகாமுக்குள்.வாய் நிறையப் பொய்யமுக்கி நீங்கள் கக்கும் அரசியலோ, என் அடுத்த தலைமுறையின் தலைகளையும் கொய்யுமா?அதைத்தாம் நாமினியும் அனுமதிப்போமா?

 

என் இளங் குடியே!,

 

கம்பி வேலிக்குள் கண்டுண்டுபோக, உமைத் தள்ளிய கோரக் கரங்களைக் கண்டு நீர் அஞ்சாதே!கண்வலிக்க கம்பி வேலிக்குள் விழிகள் எறிந்து வெறித்துப் பார்க்க உனக்கென்றொருவுலகம் அந்த மண்ணில் உண்டென்றுரைக்க, உனக்கும் காலம் வரும்.கற்றுக்கொள்.பொய்மையும்,நிஷத்தையும் பிரித்து அறிந்துகொள்.உனது சின்ன மூளையுள் சிலிர்க்கின்ற எண்ணங்களைப் பற்றி வைத்துக்கொள்.கயவர்கள் அதைப் பறிக்க இடம் கொடாதே!என்றோ ஓர் நாள், உனக்கும் கால் முளைக்கும்.அப்போது, விடியலுக்கு முந்திய "அவசரப் புத்திகொன்று", உன்னைப் பிணைத்துக்கொள் உனது உறுவுகள்வழி.எண்ணிவிடாதே, இது முடிவென்று.முயற்சி உடையோர் முன்சென்றதென்பது உன் பாட்டன்கள்-பாட்டிகள் அனுபவம்.பயப்படாதே.பாவிகள் "இவர்கள்" உன்னைச் சப்பி மென்றுவிடுவார்களென.நாமும் உன்னைப் பார்த்து உண்மைகளை தூது அனுப்புவோம்.பிரித்து-பிய்த்து மேய்!உனது இரைப்பையுள் உண்மைகளைச் சேர்த்து மென்று உருவாக்கு உன்னை!

 

உன் குடிக்கு உன்னைவிட்டால் உலகத்தார் எவருண்டு?

 

உறங்கு நீ இப்போ!

உன்

ஏக்க விழியுள் தொக்கி நிற்கும் கேள்விக்குறிக்கு நீ பதிலாவாய்.

<

இதைவிட்டு,உனக்கெவரும் உறவென்று வெளியிலிருந்து உன் இரத்தமென்றும் உதாவார்.உப்புக்கும் உதாவது உனது உறவுகள், உலகமெல்லாம் உருண்டு மேவுவார்கள்.உன் வாழ்வுக்கும் வழி சொல்வர் வட்டுக்கோட்டை தீர்மானமென்றும்.இவையெல்லாம் அவர்கள் வழிமொழியத் தவறார்.வம்புதாம் இது.தேசம் கடந்து உனக்குத் தேசம் உருவாக்க, நாடுகடந்த "தமிழீழம்"சொல்லியும் பார்ப்பார்.நக்குத் தண்ணிக்கு நீ தவிக்கும்போது உனக்குத் தேசம் குறித்துப் பாடமும் எடுப்பர்.நல்லதோ கெட்டதோவென நீ காண்பதற்குமுன் உன் நினைவைக் கொல்வர் இவர்.

 

தேடு,உனக்கு நடந்த கொடுமைகளது கோடுகளைத் தேடிக் கற்றுக்கொள்!

புலத்திலிருந்து உனக்கான குட்டிக் கரங்களும் பல்மொழியுரைத்து உண்மை சொல்வர்.

 

பயப்படதே!

 

அவர்கள் உண்மைகளைத் தேடி உலகத்தின் பாடசாலைகளில் இப்போது தம்மை உருவாக்கின்றார்கள்.

 

நீ, தோழமையை இவர்வழிமட்டில் உரைத்துப் பெற்றுக்கொள்.என் தலைமுறையை நீ கிஞ்சித்தும் நம்பிவிடாதே.உன் உயிரை மீளக் குடிப்பதற்கு நாம் மே.18 என்று இயக்கமுரைத்து உன்னைக் கொல்ல, உலகத்தின் கொடியவர்தம் கூடாரத்தில் ஒதுங்கியுள்ளோம்.

 

இதை பற்றிப்பிடி.

 

எம்மை நம்பாதே!

 

நாம் உன் குரல்வளையில் நகம் பதிக்க, நடுத்தெருவில் உன் ஆத்தாளின் துயிலுரித்து அவளைவிற்பவர்கள்.நன்றிகெட்டவர்கள் நாம்!

 

நாளைய உலகம் உனக்குத்தாம்!,நம்பு இதை நீ!!

 

அதற்காக, உண்மைகளையே உண்!பொய்யறுக்க பாடம்கொள் இன்று.

எல்லோரையும் சந்தேகி!

 

எவர் பின்னாலும் போகாதே.உன்பின்னால் வருவதற்கு ஒரு கூட்டம் உன் வயதில் இங்கும் உண்டு.உனக்கு இனி அறிவுக்குப் பஞ்சம் இல்லை!

 

உணவுக்கு?...

"

..................."

உனக்கு என் முன்கூட்டிய எச்சரிக்கை இது.

இதைவிட நான் ஒரு மண்ணும் உனக்காகச் செய்யப் போவதில்லை.

நீ,கற்றுக்கொள்,உன் தடத்தில் பதிந்துள்ள குருதிக் கறைகளுக்கு அர்த்தங்காண்.வெற்றி உனக்கே.

 

அன்புடன்,

 

உன் கொப்பனுக்கு-கோத்தாளுக்குச் சங்கூதியவர்களுள் ஒருவனாகிய,

 

ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்

ஜேர்மனி

18.12.2009