10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

 

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

 

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’, இவ் இறப்புத் தேதிகளுக்கு முன்பே தப்பிச்செல்லும் தேதியாக மே – 16 தான் இறுதியாகவும் இருக்கிறது. இது இவ் முக்கூட்டுச் சக்கரத்துக்குள் இருக்கும் முரண்பாட்டின் விளைவாக, இவ் மூன்று தேதிகளுமே இவர்களுக்கு அதி வசதியாகவும் இருந்துவிடுகிறது.

 

யூலை மாதம் 2ம் வாரத்தில் வெளிவந்த, இப்போரின் ‘கடைசிச் சாட்சி’ என்று வர்ணிக்கப்படும் திருநாவுக்கரசுவின் பேட்டியைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுமார் 3 இலட்சம் மக்களோடு மக்களாக வெளிக்கிட்ட இவர்தான் ‘கடைசிச் சாட்சி’ என்றால் அதன் அர்த்தம் என்ன? எழுத்தாளன் தான் சாட்சியாகலாம் என்பதா? அல்லது வேறு ஏதாவது அர்த்தமா?

 

மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பிக்குள் வெளியேற முடியாமல், களிசான் கழன்று விழவும், விலா ஒட்டிய வயிறும், குழிவிழுந்த கண்களும், சீவாத பரட்டைத் தலையும், புன்னகையை அடகுவைத்த முகமுமாக வாழ்வைத் தொலைத்து நிற்கிற கூட்டத்திலிருந்து தமிழகத்துக்கு கரையேறிய இவரின் கதை எப்படி?..

 

இவரே சொல்கிறார்…

 

‘நக்கீர’னுக்காக படப்பிடிப்பாளர் அசோக்கோடு, இளைய செல்வனின் கேள்விகளில் ஒன்று இது ……

 

” தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்?

 

பதில்….

 

பணம்.. பணம்.. பணம்… எல்லாம் பணம்தான். இலங்கைப் பணத்தில் 2 இலட்ச ரூபாய் தந்துவிட்டுத்தான் தப்பித்து வந்தோம். நள்ளிரவில் போட்டில் ஏற்றிக்கொண்டு வந்த சிங்களவன் விடியற்காலையில் ஒரு திட்டில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான். பிஸ்கட் மட்டும் இருந்தது. குடிக்கிற தண்ணீரும் தீர்ந்துபோச்சு. திக்குத் தெரியாத திட்டில் பசியோடு எப்படி தமிழகத்திற்கு போவது என்று தெரியாமல் விழித்தோம். இந்த திட்டில் சிக்கித் தவிக்கிறோம் என்று அறிந்துகொண்ட முதல்வர் கலைஞர், காவல் துறையினரை அனுப்பி எங்களை காப்பாத்தச் சொல்லியிருக்கிறார். காவல் துறையினரும் கடலில் இருந்த ஒவ்வொரு திட்டு திட்டாகத் தேடித்தேடி களைத்துப் போனார்கள். ஒரு வழியாக மறுநாள் மாலை 5 மணி சுமாருக்கு எங்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர் தமிழக போலீஸார்.

 

(சிங்கள இராணுவத்தையே ஏச்சுப்போட்டு, ஒரு சிங்களவன்தான் காசை வேண்டிக் கொண்டு இந்தியாவிலை கொண்டுவந்து விட்டிருக்கிறான். … ஆனால் நீங்கள் எங்கேயோ தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் தலைவர் கலைஞருக்குத் தெரிந்து விட்டது … ம்…..ம்ம்…….)

 

‘எரிகல்’ வீழ்வதாகப் பார்க்கின்ற அதிசயங்கள் எப்போதாவது நிகழலாம்! ஆனால், தமிழகத்தில் மற்றும் இலங்கைத் தமிழ் அரசியலில் ‘அதிசயங்களை’ நிமிடத்துக்கு நிமிடம் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றவர்களும் நாங்கள் தான்!!

 

இந்தப் பாக்கியத்தை நாங்கள் பார்க்க வேண்டாமோ?
இதோ, அந்த வரப்பிரசாதம்!

 

‘திருநாவுக்’கரசரை நக்கீரனுக்காகக் பேட்டி எடுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். ‘விகடனுக்’காக இப்போ பேட்டி எடுக்கிறார். இரா. சரவணனும் படப்பிடிப்பாளர், வி. செந்தில்குமாரும்.

 

”பிரபாகரனின் நிலை என்ன ஆனது?” (’விகடனில் கேள்வி இதுவாக இருந்தது)

பதிலோ…..

 

”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம்.
ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!”

(இப்படி இருந்தது)

 

அதிசயமாக இதே கேள்வி ‘நக்கீரனில்’ கொஞ்சம் வார்த்தைகள் மாறுபட்டு….

 

” பிரபாகரனைப் பற்றி? (இது ‘நக்கீரனின்’ கேள்வி)


பதிலோ….

 

13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், “என்னாச்சு?’ என்று கேட்டபோது, “ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை’ என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, “இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்’ என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயிருப்பார்கள்.

 

(’இரட்டைவால் குருவி’ என்ற தென்னிந்திய சினிமாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இலங்கைத் தமிழ் எழுத்தாளன் ஒருவனின் ‘இரட்டைவால் அரசியல்’ சினிமாத்தனத்தை ஒரு -பிரபாகரனின்- தென்னிந்திய மரணத்தில் பார்க்கிறேன்! ஊடக – மைய்க்குப்  பொய்யழகு!


பிரபாகரன் மரணத்திலோ பணப்- பை அழகு!)

 

‘இரட்டைவால்’ அரசியலும் அதன் சதிகளும்

 

ஏப்பிரல் மாதத்தின் கடைசி வாரத்தில், போரிடும் புலிப் போராளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட மாவீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் வரும்படி அழைக்கப்பட்டிருந்தனர். இவ் அறிவித்தல் முதலாவது அரணை இராணுவம் உடைத்த (ஏப். 22) பிறகு, பெருந்தொகையான மக்கள் வெளியேறிய பின்னர் ஏனையோருக்கு விடப்பட்டது.

 

மக்களோடு மக்களாக வெளியேறியதாகக் கருதப்படும் தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரரின் ‘வீடியோ’ பேட்டிகளின் பின்னரே இவ் அறிவித்தல் வெளியாகியும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தயா மாஸ்ரர் மற்றும் ஜோர்ஜ் போன்றவர்கள் எவ்வாறு வெளியேறினர் என்பது புலிகளுக்கு நன்கு தெரியும்! இங்கு புலிகள் என்பது அழிந்த தலைமையும் ‘நாடுகடந்த தமிழீழ’த் தலைமையும் மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைமை தொடக்கம் வட்டுக்கோட்டைத் தீர்மானக்காரர் கே.பி ஈறாக அனைவருக்கும் தெரிந்த விடயமாகவே இது இருந்தது.

 

அண்மையில் வெளியான ‘தி.வழுதி’ யின் கருத்துப்படி….

 

மே 14, வியாழன் அன்று, தம்மால் இன்னும் தொடர்ந்து சில காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்; அதே விடயத்தை, அதே நாள், அவர் பத்மநாதன் அண்ணனுக்கும் சொல்லியுள்ளார். என ‘வழுதி’ சொல்லுகிறார்.

 

மேலும்,

 

போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை “மவுனிக்கச் செய்வதற்கு” மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

 

அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை – ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

 

இதே தகவல் – பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்.

 

வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்.

ஆனால் – விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன.

 

என அவர் அறுதியிடுகிறார்.

 

 

nedesan

pulidevan

 

ramesh

அதாவது 24 மணிநேரத்துக்குள் புலிகள் நேரெதிரான முடிவுகளை எடுத்திருந்தனர்.

 

மே – 16ம் திகதி ‘லங்கா ஈநியுஸ்’ தகவலின் படி….

 

கே.பி யின் பிரபாகரின் இறுதித் தொடர்பு  மே-14 அதிகாலை( இலங்கை நேரம்) 2 மணியாக உள்ளது.

 

பிரபாகரனுக்கும் கே.பி க்குமான செய்மதித் தொடர்பை தாம் மே-07ம் திகதிமுதல் அடையாளம் கண்டதாக, இத்தாலிய உளவுஸ்தாபனத்தை ஆதாரப்படுத்தி ‘லங்கா ஈநியூஸ்’ செய்தியை வெளியிட்டது. பிரபாகரனின் குரலை கணனியின் மென்பொருட்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதாக, இவ் உளவுஸ்தாபனம் கூறுகிறது. இறுதியாக நடந்த உரையாடலில் பிரபாகரனின் குரல் பலவீனமாகக்
காணப்பட்டதாக அது கூறுகிறது. ஒருவேளை அது வருத்தமான குரலாகவோ, அல்லது கோபத்துக்குரிய குரலாகவோ இருந்திருந்ததாகக் கருதுகிறது. மே -15ம் திகதி புலிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் துணைவிமார்கள் உட்பட, அக்குடும்பத்தின் அனைத்து அங்கத்தினரையும் இராணுவத்தின் தலைமையிடம் அனுப்புவதாக தான் முடிவெடுத்து இருப்பதாக, இச்சம்பாசணை அமைந்திருக்கலாம் என ‘அரசியல் அவதானிகள்’ கருதுவதாக இவ் உரையாடல் தொடர்பாக செய்தியை வெளியிட்ட ‘லங்கா ஈநியூஸ்’  கருதுகிறது….


தொடரும் மிகுதி…..

 

சுதேகு
131209

தொடரும்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்