01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

கும்பகோணமும் வேதாரண்யமும்…

விடைபெறும் போது
அம்மா இட்டு அனுப்பும்
முத்தங்களை தவிர,
வலிக்கத்தான் செய்கிறது
நீங்கள் ஏற்றிடும்
எல்லா சுமைகளும்.

எந்த சுமையை நான்
குறிப்பாய் கூறுவது,
என் முதுகில் கட்டிய
புத்தகச்சுமை முதல்,
அப்பா தலையில் கட்டும்
ஆண்டுக் கட்டணம் வரை
நெடிதாய்  நீள்கிறது
உங்கள் சுமைகளின் பட்டியல்

எங்கள் வீட்டு
மாதச் சம்பளம் முழுவதும்
உங்கள் மடியில் கொட்டினாலும்,
வருடம் தொடங்கிவிட்டால்
வழிப்பறி திருடர்களைப்போல்
நன்கொடை என்று
நச்சரிப்புகள் வேறு.

கும்பகோணமும்-வேதாரண்யமும்கேட்காமல் நுழைந்திடும்
என் குட்டி நாயினை போல்,
ஜன்னலுக்குள் காற்று
எப்பொழுதும் நுழைந்தால்
எவ்வளவு சுகமாய் இருக்கும்.
அப்படியா உள்ளது – உங்கள்
அடுக்குமாடி வகுப்பறைகள்,
காற்றே கஷ்டப்பட்டு
நுழைந்திடும் ஜன்னல்களில்,
மூச்சுகாற்று வாங்கவே
சிறப்பு கட்டணம்
செலுத்த வேண்டும் போல் உள்ளது.

உங்கள்
வீட்டு கழிப்பறைக்கு
ஒதுக்கிய இடத்தைவிட,
நீங்கள்- எங்களுக்கு
விளையாட தந்த
மைதானத்தின் அளவு
நிச்சயம் சிறியது !
இதில்,
‘வீடியோ கேம்ஸ்’
விளையாடுவதே மிகவும் சிரமம்,
பிறகெப்படி முடியும்
ஆசிரியர் கற்பித்தபடி
ஓடி விளையாட?

பிராய்லர் கோழிகளை
ஏற்றிச் செல்லும்
வாகனங்களில் கூட
கொஞ்சம் ‘பிரைவசி’ இருக்கும்,
எங்களை ஏற்றிச் செல்லும்
உங்களது வாகனங்களில்
ஊசி நுழைந்திடவும்
இடைவெளிகள் இல்லை.
இதில்
பதினெட்டுபட்டிக்கு
ஒரு நாட்டாமை போல,
எல்லோரையும் ஏற்றி இறக்க
குப்பை தொட்டிகளாய்
ஓரிரு வாகனங்கள்.

பயணிக்கும் வழியெல்லாம்
எங்கள் ரத்தம் கேட்டு துரத்தும்
உங்களின் லாப வெறி…,

கேட்டால்  எப்படி
கொடுக்காமல் இருப்பது?
இறுதியாக நாங்கள் – உங்களிடமே
இறக்கி வைத்துவிட்டோம்.
கனவையும், உயிரையும் சேர்த்து.

கல்வி வள்ளலாய்
வாழும் நீங்கள்
காவு வாங்கியதை மறைத்துவிட்டு
விபத்து என்றே
விளம்பரம் செய்யுங்கள்.

ம்….
எங்கள் முகத்தருகே
மொய்க்கும் ஈக்கள் கூட
சத்தம் செய்கிறது.
உங்களின்
கல்விக் கொள்ளையை அறிந்த
காலம் மட்டும் ஏனோ?
மௌனித்து நிற்கிறது.

-முகிலன்

குறிப்பு : வேதாரண்யம் அருகே ஒரு ஆசிரியர் உட்பட 9 பேர் வேனில் சென்ற போது குளத்தில் விழுந்து பலி. அம்மாணவர்களின் நினைவாக….

http://www.vinavu.com/2009/12/12/saturday-poems-14/