சுழிபுரம் படுகொலை நிகழ்த்தப்பட்டது 25 ம் திகதி கார்த்திகை மாதம் 1984 ம் ஆண்டு.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. ஆனால் அதனை மறுத்து துண்டுப்பிரசுரம் வெளிவருகின்றது.


புளட்டின் கொலைகளையும் அதன் மக்கள் விரோத அரசியலையும் கொலைகளுக்கும் அராஜகங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் பொறுப்பான நபர்களையும் அம்பலப்படுத்தி உமாமகேஸ்வரனின் தலைமையையும் நிராகரித்து 15 ம் திகதி மாசி மாதம் 1985 ம் ஆண்டு தளத்திலும் பின்தளத்திலும் இருந்த போராட்ட சக்திகள் தமது போராட்டத்தின் இறுதி நடவடிக்கையாக தம்மை "தீப்பொறி" என அடையாளப்படுத்திக் கொண்டு தமது வெளியேற்றத்தையும், தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தமது தற்காலிக தலைமறைவு வாழ்வையும் தமது வெளியீடான "தீப்பொறி" பத்திரிகை மூலமாக அறிவிக்கின்றனர்.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.


தள அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்த முன்னணி தோழர்களின் போராட்டம் இவர்களை நோக்கி மேலும் உத்வேகப்பட்டது. இவர்களின் மவுனங்களும் தட்டிக்கழிப்புகளும் கலைந்ததாயில்லை. 

 
தீப்பொறி தனது வெளியேற்றத்தை அறிவித்து (15.02.1985) ஏறக்குறைய இரண்டரை மாதத்தின் பின்னால் புதியதோர் உலகம் (தளத்தில் அரசியலுக்கு பொறுப்பாக இருந்த மத்தியகுழு உறுப்பினர் கேசவனால் எழுதப்பட்டது - நாவலில் கோபாலன் பாத்திரம்) நாவல்,  மக்கள்,  போராளிகளின் மனங்களை உலுக்கியது.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.


தீப்பொறி வெளியேறிய பின்னால் தளத்தில் தின்னைவேலியில், புளட் இயக்கத்தின் ஆயுததாரிகள் (தீப்பொறியினரை கண்ட இடத்தில் சுடும் அல்லது கைது செய்யும் நோக்கோடு சொந்தப் பாதுகாப்புக்கு என்ற பெயரில் ஆயுதம் தரித்து ஏவிவிடப்பட்டவர்கள்) தீப்பொறியின் தோழர் விபுலை அடித்து நொருக்கி கைது செய்கிறார்கள்.

 

இதனைக் கண்ணுற்றுச் சகிக்காத மக்கள் கூட்டம் அவ்விடத்தில் புளட் இயக்கத்திற்கெதிரான கோசங்களோடு மறியல் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

 

தங்களின் மீதான மக்களின் கொந்தளிப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அசிங்கமான நடவடிக்கை ஒன்றை புளட்டின் ஆயுதப் பிரிவு, பெண்கள் அமைப்பின் ஆயுதம் தரித்திருந்த, அவர்களுக்கு உளவு பார்க்கும் கடமையை தம் சிரத்தால் ஏற்றிருந்த ”தோழிகள்” மூலமாய் இதனை நிறைவேற்றுகிறார்கள்.


ரீட்டா என்ற பெண் துப்பாக்கி முனையில்; கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு, விபுல் தன்னை பாலியல் பலாத்தாரம் செய்ததாக விசாரணைகளில் கூறுமாறு பணிய வைக்கப்படுகிறாள்.


விபுலின் கைதுக்கு இந்தப் பாலியல் பலாத்காரமே காரணம் என எங்கும் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. இந்தக் கைங்கரியத்தை நடாத்தியவர்களில் ஜென்னி பிரதானம்.


மற்றைய பெண்கள் அமைப்பு போராளிகள் இதனை திட்டவட்டமாக மறுத்துரைக்கின்றனர்.


இந்தப் பெண்ணைச் சந்தித்;துக் கொண்ட அவர்கள் இது சோடிக்கப்பட்ட பொய் என்பதையும், இப்படியும் ஒரு போராளிப் பெண்ணை கேவலப்படுத்த முடியுமா என்று கோபம் கொள்கிறார்கள். (இவர்கள் இன்றும் எங்கேயோ இருக்கிறார்கள் அவர்களாக பேச முன்வருவார்களா?)


ஆனால்


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. தள மாநாடு இன்னும் நடைபெறவும் இல்லை.


தளமாநாடு ஒன்று சாத்தியமாவதற்கு இன்னும் போராட்டங்களும் நடவடிக்கைகளும் இவர்களை நோக்கி நடத்தப்படவேண்டியிருந்தது.


புளட்டின் தள அமைப்புக்கள் மகளிர் அமைப்பு மாணவர் அமைப்புகள் தீவிரமான நடவடிக்கைகளை கோரி நின்றன.


இறுதியில் மாணவர் அமைப்பு (TESO) ஒரு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தனது பிரதிநிதிகளை பின்தளத்துக்கு அனுப்புமாறு மத்திய குழு அங்கத்தவர்களான அசோக்கிடமும் குமரனிடமும் அது கோரிக்கை வைத்தது. ஏனெனில் தீப்பொறியினரின் வெளியேற்றம் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைக் அடிப்படையாகக் கொண்டது அநாவசியமானது என்ற வகையிலான பிரச்சாரம் உலாவ விடப்பட்டிருந்தது.


இந்த பின்தள விஜயத்துப் பின்னாலும் தொடர்ந்தும் புளட் அமைப்பின் வாலாக மாணவர் அமைப்பினர் இயங்கத் தயாரில்லை என்ற தீர்மானம் முன்னணி அங்கத்தவர்களிடையில் வலுத்திருந்தது.


மீண்டும் ஒரு சிலர் தங்கள் உயிராபத்தையும் பொருட்படுத்தாது இந்தியாவுக்கு படகுப் பயணம் செய்ய முன்வந்தனர். பின்தளத்தில் கொலையுண்டோர் மற்றும் சித்திரவதைக்கூடம் போராளிகளின் நிலைமை என்ன என்பது பற்றிய விபரங்களை அறிந்து வரப் புறப்படுகிறார்கள்.


"நாங்கள் திரும்பி உயிரோடு வரவில்லை எனில் படகு கவிழ்ந்தது விபத்து நிகழ்ந்தது இலங்கைக் கடற்படை காவு கொண்டது என்ற எந்தக் காரணங்களையும் நம்பாதீர்கள். நாங்கள் நயவஞ்சகமாய் அழிக்கப்பட்டோம் என்பது மட்டுமே உண்மை என வரலாற்றில் எழுதுங்கள்".


"நாங்கள் சாதுரியமான வழிகளில் உண்மைகளை தேடி அறிந்து வருவோம். திரும்பி வந்தால் நாங்கள் கொண்டுவரக்கூடிய தகவல்கள் அடிப்படையில் எந்த தீர்மானத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்"


என்ற அறிவிப்புடன் நாங்கள் பயணமாகிறோம்.


இந்த அறிவிப்பு புளட்டை பொறுத்தவரையில் அவர்களே எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இக்கட்டான நிலைமைக்கு அவர்களைத் தள்ளியது. இது கள்ளனிடமே வீட்டுப் பாதுகாப்பை ஒப்படைத்தது போலாயிற்று.


தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட படகுப்பயணம் மண்டபத்தில் கரைசேர்கிறது. ஒரத்தநாட்டிலிருந்து சில முகாம்களுக்கும் விசேடமாக பி காம்பிற்கும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

 

பி. காம் எந்தச் சலனமுமற்று அமைதியே உருவாக காட்சி தருகிறது. நாலாம் மாடியா? தனிச் சித்திரவதைக் கூடமா? காண முடியவில்லை. நாங்கள் ஏன் வருகிறோம் என்று தெரிந்த பின்னாலும் தடயங்கள் தகவல்களை விட்டு வைக்க அவர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?


பயிற்சி முகாம் போராளி ஒருவர் நான் அணிந்திருந்த செருப்பை தனக்கு தரும்படி அழாத குறையாக இரங்கி கேட்கின்றார். அவருடைய கால்கள் செருப்பின்றி நடமாடமுடியாதபடி பொங்கிப் புண்ணாகியிருந்தது.


அவர்களுடைய முகங்கள் வாடிப் போய் இருந்தன. சரியான உணவின்மை உறக்கமின்மை ஏக்கம் ஏமாற்றம் என்பன அவர்களின் முகத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எங்களை எப்போது நாட்டுக்கு திரும்பிச் செல்ல அனுமதிப்பார்கள் என்ற கேள்விகளால் எங்களைத் துளைத்தெடுத்தார்கள்.


இன்னும் சிலர் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களுக்கு மக்கள் எவ்வாறு தாக்குபிடிக்கிறார்கள். உங்கள் வழிப்பயணங்கள் பாதுகாப்புடன் இருந்ததா என்பன பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்கள்.

 

001.jpg

 

இவற்றைத்தவிர நாங்கள் அவர்களிடம் வெளிப்படையாக எந்தக் கேள்விகளையும் கேட்டுவிடவும் முடியாது. அவர்கள் சொல்லிவிடவும் முடியாது. ஏனெனில் இந்த முகாம்களுக்கு எங்களை அழைத்துச் சென்றவர்களை அவர்கள் அறிவார்கள். நாங்கள் கூட யார் என்ற நம்பிக்கையீனம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். வெறுமனே அவர்களிடமிருந்து விடைபெறுவதைத் தவிர வேறு மார்க்கம் அப்போது ஏதுமில்லை.


உமாமகேஸ்வரனுடைய சந்திப்புக்கு ஒரத்தநாட்டில் காத்திருந்து முடியாது போகவே (அவர் தன்னுடைய காரியாலயத்திலேயே இருந்தார். வேறு சந்திப்புக்களுக்கு நேரம் போதாதிருந்தது அவருக்கு) ஒரத்தநாட்டிலிருந்து உமாமகேஸ்வரன் சென்னைக்கு அவசரமாக புறப்பட இருப்பதால் எங்களையும் தங்களோடு அழைத்துச் செல்லப் போவதாக சடுதியாக அறிவித்தார்கள். இலங்கையிலிருந்து பகுதி பகுதியாய் கடத்தி வரப்பட்டு மீண்டும் ஒரத்தநாட்டு காரியாலயத்தில் பொருத்தி முடிக்கப்பட்டிருந்த (இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த) ஜீப்பில் நாங்கள் இரவிரவாக  சென்னைக்கு உமாமகேஸ்வரன், வாசுதேவா (புதியதோர் உலகம் -இராமநாதன் பெயருடைய கதாபாத்திரம்) மற்றும் சாரதி, மெய்ப்பாதுகாவலர்களுடன் பயணமானோம். விரும்பினால் இந்தப் பயணத்தின் போதே ஜீப்பிலேயே பேசிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் சாரதியாக ஜீப்பை ஓட்டிச் சென்றது உமாமகேஸ்வரன். எப்படிப் பேசிக் கொள்வது?. அதாவது உமாமகேஸ்வரனின் நிகழ்ச்சிநிரலில் எங்களை சந்தித்து பேசுவதற்கு சற்றும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பது அதன் மூலம் புரிந்தது. எங்களது வருகையும் சந்திப்பும் முக்கியமானதாக கருதப்படவில்லை என்பதுவும் எப்படி தளத்தில் அசோக் குமரன் என்போர் நடந்து கொண்டார்களோ அதே வகையிலேயே பேசும் பொருட்களும் நேரங்களும் வேறு விடயங்களைச் சுற்றியே இருந்தது.


சென்னையில் நாங்கள் அசோக் நகரில் வாசுதேவா(இராமநாதன்) வீட்டில் இறக்கிவிடப்பட்டோம். உமாமகேஸ்வரன் தனது இடத்திற்கு போனவர் தான். நாட்கள் கடந்தது.  பின்னர் ஒரு நாள் திடீரென வருவதாக அறிவித்தார். நாங்கள் காத்திருந்தோம். நள்ளிரவும் தாண்டி நாங்கள் தூக்கக் கலக்கத்திலிருந்தபோது திடீரென தோன்றினார்.


அவரிடம் கேட்டுத்தான் எல்லாவற்றையும் அறியமுடியும் என்பதோ அல்லது அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதுதான் நமது நோக்கம் அல்ல. அவர்களின் மொக்கைத்தனமானதும் எதேச்சதிகாரமானதுமான விளக்கங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவில்லை. பிரயோசனமில்லை என்ற முடிவுக்கு எ(ன்)ம்மால் வரமுடிந்தது.


இதற்கிடையில் சென்னையில் சுயாதீனமான நிலையிலிருந்த பலரை சந்தித்துக் கொண்ட வேளை எ(ன)மக்கு நன்றியோடு தமக்கு தெரிந்த நிலபரங்கள் பற்றியும் தங்களது சொந்த நிலபரங்கள் பற்றியும் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனப் பாங்கில் எடுத்துக் கூறினார்கள். சிலர் குமுறினார்கள். உமாமகேஸ்வரனின் எதேச்சதிகார போக்குகள், உட்படுகொலைகள், மாற்றியக்க போராளிகளின் கொலைகள் அத்தனைக்கும் காரணமான படுமோசமான நபர்கள் ஈறாக பட்டியலிட்டு, போராட்ட வரலாற்றில் புளட் இயக்கமானது போராட்டத்தை போராளிகளை எவ்வாறு சிதைத்தது, மக்களும் போராளிகளும் இன்னும் ஏமாற்றப்படுகிறார்கள் இவைகள் யாவும் இன்னும் மூர்க்கமாக அம்பலப்படுத்தப்பட வேண்டும், போராளிகள் இந்தியாவிலிருக்கின்ற பயிற்சி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும், உமாமகேஸ்வரனின் தலைமையும் அத்தலைமையின் விசுவாசிகளாவிருந்து கொலைஞர்களாகவிருந்த சங்கிலி(கந்தசாமி), மொட்டை மூர்த்தி, வாமதேவன, பரந்தன் ராஜன, செந்தில், பாபுஜி, மற்றும் இவர்களின் கூட்டாளிகள் ஒரு ஸ்தாபனத்தை சீர்குலைத்து அதனை மாபியா வழிமுறையில் நடத்திச் சென்றார்கள். அவர்கள் மக்களால் தீர்ப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் துல்லியமாக மக்களின் துரோகிகளை அடையாளம் காட்டினார்கள்.

 

(சமூக விஞ்ஞானக் கழகத்தின் அழைப்பும் கிடைத்தது. ஆனால் ஒரிரு மணித்தியால சந்திப்பில் பேசும் பொருளாக இலங்கை நிலபரங்கள் தான் இருந்தன. காலஞ்சென்ற உத்தமன் அன்று அங்கு பிரசன்னமாகியிருந்தார். இன்னும் புளட்டுக்கு அரசியல் சாயம் பூசுவதற்காக அங்கே புளட்டின் தோழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள்).


சந்ததியாரை சந்திக்க முடியுமா என்ற எனது கேள்விக்கு அவ்வாறான சந்திப்பை தவிர்த்து மிகவும் அவதானமாக முடிந்தவரை மற்றைய கழகப் போராளிகளை விழிப்படைய வைக்கும் பணியே முக்கியமானது என்றவாறான அறிவுறுத்தல் ஒன்று பதிலாக சந்ததியாரிடமிருந்து வேறு ஒருவர் மூலமாக எனக்கு கிடைக்கின்றது. சூழலுக்கும் நிலைமைக்கும் ஏற்ற சரியான பதிலாகவே அது இருந்தது. புளட்டின் கொலைக்கரங்களில் இருந்து பின்னாட்களில் அவரும் தப்பமுடியவில்லை.

 

santhadhyar.jpg

 தோழர்  சந்ததியார் (வசந்தன்; கலாதரன்) வங்கம் தந்த பாடம் தந்த போராளி


திரும்பி வருகிறோம்.


மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஒரு பரந்தளவான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்துகிறார்கள். மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆவலோடு சந்திக்க காத்திருக்கிறார்கள்.


ஆனால் மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை. தள மாநாடு இன்னும் நடைபெறவும் இல்லை.

 

புதியதோர் உலகம் நாவல் இப்படிப்பட்டவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது

 

"இந்த தலைமை வழிபாட்டை மிகச் சாதுரியமாக அவர்கள் நியாயப்படுத்துவார்கள். தாம் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்றும், தாபனக் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றுகிறவர்கள் என்றும் காட்டிக்கொண்டே தலைமை வழிபாட்டை தாபனத்திற்குள் ஏற்படுத்துவார்கள்.

 

தலைமைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முதல் ஒருவர் கொள்கைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படி கொள்கைக்கு விசுவாசமாக இருப்பவர்களாலேயே தாபனத்திற்கு விசுவாசமாக இருக்க முடியும். கொள்கைக்கும், தாபனத்திற்கும் விசுவாசமாக இருப்பவர்களே தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியும். அப்படியில்லாமல் சும்மா தலைமைக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கிறோம் என்றால் அது தலைமை வழிபாடுதான்."

 

புளட் அமைப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறி சென்னையில் தலைமறைவாகியிருந்த புளட்டின் அரசியற்றுறை செயலர் பொறுப்பிலிருந்த சந்ததியார் (புதியதோர் உலகம் - கலாதரன் கதாபாத்திரம்) புளட்டின் முகுந்தனின் (செயலதிபர் உமாமகேஸ்வரன்) கட்டளையின் பேரில் 10 ம் திகதி செப்டம்பர் மாதம் 1985ம் ஆண்டு கடத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டு கூவம் நதியில் சாக்குப் பொட்டலமாக அவரது உடலம் வீசப்படுகிறது.


மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.

இவையெல்லாம் நடந்தேறிய பின்னாலும் இயக்கத்தைப் பிளக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பல தோழர்கள் மேல் சுமத்தப்பட்டது.


இவ்வாறான சந்தேகங்கள் தோழர்கள் மேல் கிளப்பப்பட்டு சிலர் கடத்தப்பட்டார்கள். கொலையும் செய்யப்பட்டார்கள்.

 

புளட்டின் கொலைகள் தொடர்ந்தன.

 

உடுவிலைச் சேர்ந்த சிவனேசன் (காக்கா) புளட்டினால் கொலைசெய்யப்பட்ட செய்தி பரவுகிறது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த இவரின் உறவினர் ஒருவர் புளட் அமைப்பின் பிரதிநிதிகளை இனம் கண்டு அவர்களை நோக்கி மண்ணை அள்ளித் தூவி உமாமகேஸ்வரன் மேல் தனது சாபம் இறங்கட்டும் என்று இவர்களை நோக்கி அழுது குழறி கொதித்து குமுறிய சம்பவமும் நிகழ்ந்தது.

 

கட்டுவனில் ஆவணி மாதமளவில் மின்கம்பத்தில் கட்டிவைத்து இரு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.


சுன்னாகத்தில் "அகிலன்" என்ற இளைஞரும் (இவர் செல்வனோடு கொல்லப்பட்ட அகிலனல்ல) கூட்டாளியும் கொல்லப்பட்டார்கள். (இந்தக் கொலைகள் குமரனால் தனது நெருங்கிய வட்டாரத்துக்குள் மட்டும் ஒத்துக் கொள்ளப்பட்டதாக அறிய வருகின்றது.)


ஆனால் மத்தியகுழு உறுப்பினர்களாக தளத்தில் இருந்த அசோக்கும் குமரனும் தமது நிலையில் தளமாநாடு என்பதை நோக்கி எந்த அசைவையும் காட்டினார்கள் இல்லை.

 

"உண்மைகள் என்றும் உறங்குவதில்லை" - என்றும் பதில் சொல்லாத அசோக்கின் அரசியல் "நேர்மை" (பகுதி 1)

 

தொடரும்


சிறி

11.12.2009