Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தீப்பொறி தன்னுடைய உட்கட்சிப் போராட்டத்தின் இறுதியில் கொலைக்கரங்களிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு முன்னமேயே,  தளத்தில் மத்திய குழுவிலிருந்த அசோக் குமரன் போன்றோர்களை நோக்கி தள அமைப்புக்களின் நிலைப்பாடுகள் கோபக்கனலாகியிருந்தது. தள அமைப்புக்களானது தளத்தில் தங்கள் முன்னால் நடமாடிய மத்தியகுழுவின் தளப் பிரதிநிதிகளை எல்லாவிதமான புளட்டின் அராஜகங்களுக்கும் பதில் தர வேண்டிய நிலையில் நிறுத்தி போராடிக் கொண்டிருந்தது.

 

பதில் சொல்லக் கடமைப்பட்ட மத்தியகுழு உறுப்பினர்களான அசோக், குமரன் போன்றோர்கள் தங்கள் சார்புத்தன்மையை தங்கள் அரசியல் முகங்களை மறைத்தபடியே தான் தொடர்ந்தும் இருந்தனர். அதுவா இதுவா என்று பிடிகொடுக்காத இரகசியப் போக்கில் இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். தள அமைப்புகள் மத்தியிலோ தமது சக தோழர்களுடனோ அல்லது மக்கள் மத்தியிலோ வெளிப்படையான விவாதங்களை எதிர்கொள்ளாமல் அது ஒரு மத்தியகுழு விவகாரம் என்ற போக்கில் தமக்கிடையில் பொத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். வெளியில்  தள அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களை நோக்கி மக்களின் ஆவேசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நெருக்கடிகள் கேள்விகள் முறிவுகள் விட்டு வெளியேறுதல் மூலம் புளட் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருந்த அதேவேளை புளட்டின் ஆயுதககுழுவின் இராணுவ அராஜகங்கள் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. கேட்பாரின்றிய விதத்தில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. தளத்தில் பொறுப்பாயிருந்த மத்தியகுழு அங்கத்தவர்கள் இந்த தன்னிச்சைப் போக்குகளுக்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள்.

 

தமிழீழ மாணவர் பேரவை - புளட்டின் மாணவர் அமைப்பிலிருந்த சில சக்திகள் (TESO) தமது சுய தெரிவில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியது. புளட்டினைச் சார்ந்திருக்கும் தமது நிலையை மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான நிலையாக கணிப்பிட்டிருந்தது. ஆனால் மக்களுக்கும் சக போராளிகளுக்கும் மாற்றியக்க போராளிகளுக்கும் புளட்டின் அராஜகத்தை அதன் உட்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நிலையிலிருந்து அவர்கள் வழுவவில்லை.

 

நேரடியாகவே மத்தியகுழுவுக்குள் தன்னை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறான கோரிக்கையுடன் வந்தவரே சிவராம் என்ற தாரகி. இதே கோரிக்கையுடன் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அது சரிப்படாது போகவே, அதே கோரிக்கைகளுடன் புளட்டை அணுகினார். இப்படிப்பட்ட சிவராம் (தாரகி) என்பவருக்கு புளட்டின் மாணவர், மக்கள் அமைப்புகளுக்கு அரசியல் பாசறை நடத்தும் வாய்ப்பு எட்டியது. இவருடைய இக்கோரிக்கை செல்வன் அல்லது அகிலன், இதில் யாரோ ஒருவரால் இது பற்றி ஆராயப்பட்ட கூட்டத்தில் மிகவும் கடுமையாக நிராகரிக்கப்பட்டதாக அறிகிறேன். பின்னாட்களில் அகிலன் செல்வன் இருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலையின் பின்னணியில் திருகோணமலையில் குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்துக்கு அமைப்பு வேலைகளுக்கென சென்றிருந்த ஒரு பெண்ணின் காதல் விவகாரமும் கலந்து பேசப்பட்டது. ஆனால் இக் கொலைகளை இறுதி வரையும் புளட் இயக்கம் மறுத்து, இக்கொலைகாரர்களை காப்பாற்றியது. இவர்கள் கொலையுண்டது புதைக்கப்பட்டது இலங்கையாயிருந்தும் அது மறைக்கப்பட்டது. அவர்கள் பின்தளத்திற்கு (இந்தியாவுக்கு) சென்றிருக்கிறார்கள் என்று கூறி, கொலை மறைக்கப்பட்டது. இன்றுவரை இந்தக் கொலைகளின் சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய முழுவிபரமும் வெளிச்சத்துக்கு வரவேயில்லை.

 

புளட் செயலதிபர் உமா மகேஸ்வரனின் படகுப் பயணம் மூலமான இலங்கை விஜயம்.

 

சுழிபுரத்தில் சுந்தரம் படை என்ற பெயரில், தனிமனித வழிபாட்டை அடிப்படையாக கொண்ட   உமாமகேஸ்வரன் படைப்பிரிவு இருந்தது. தலைமை விசுவாசம் கொண்ட, மக்களை எள்ளளவும் மதியாத, ஒரு புளட்டின் இராணுவக் குழு, தனது எதேச்சதிகாரத்தை தனது அடாவடித்தனத்தினால் இச் சிறிய பிரதேச மக்கள் மேல் நிறுவியியிருந்தது. இப்பிரதேசத்தை இந்த புளட்டின் ”பெரியய்யா” விசுவாசக் குழு தனதாகவே சொந்தம் கொண்டாடியது. அத்துலத் முதலி இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக யாழ் குடாநாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீடு வீடாய் இராணுவம் புகுந்து சோதனை என்ற பெயரில் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் கைது செய்து தெற்கில் பூசா முகாமுக்கு அனுப்பி சிறையிலிட்ட காலப்பகுதி அது.

 

உமாமகேஸ்வரன் சுழிபுரத்திற்கு வருகை தருகிறார். தள அமைப்புகளில் உள்ளவர்களை சந்திக்க ஏற்பாடு நடக்கின்றது. இந்தக் கட்டுரையாளராகிய நான் இந்தச் சந்திப்பைத் தவிர்க்கின்றேன். காரணம் இவரைப் புடைசூழ அவருக்கு பாதுகாப்பு வழங்க அவரோடு கூடவே தரையிறக்கப்பட்ட சங்கிலி தலைமையிலான பிரசன்னமும், ஏற்கனவே உமாமகேஸ்வரனின் தலைமை மேலிருந்த அவநம்பிக்கையும் எனது ஆர்வத்தை கிளறவில்லை.

 

உமாமகேஸ்வரனின் வருகை பலி கேட்கின்றது. நினைத்திராத ஒரு கொடுமை இவர் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னதாவே சுழிபுரத்தில் நடந்தேறுகிறது.

 

சுவரொட்டிகள் ஒட்ட பசைவாளிகளுடன் சென்ற மாற்று ஆறு இளம் இயக்கப் (புலி) போராளிகள், புலிகளின் உளவாளிகள் என்று கைது செய்யப்பட்டு கோரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சுழிபுரத்தில் கொன்று புதைக்கப்பட்டார்கள். அவர்களின் ஆணுடம்புகள் அறுக்கப்பட்டு குரூரமாக கொல்லப்படுகிறார்கள்.

 

உமாமகேஸ்வரனின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு கொலை செய்ய திட்டமிட வந்த புலிகள் இயக்கத்தின் உளவாளிகள் என்ற பொய்க்குற்றச்சாட்டில், இவர்களை உயிர்ப்பலி கொண்டார்கள் இநதக் குரூரக் கொலைகாரர்கள். இயக்கவெறியும் தங்களது பிரதேசத்திற்குள் உள்ளிட்டு சுவரொட்டி ஒட்ட என்னடா தைரியம் என்ற குரூரமான வெறியுமே, அவர்களுக்கு இந்தக் கொலைகளை செய்ய போதுமான காரணமாக இருந்தது.

 solipuram_padukolai1.jpg

solipuram_padukolai1.jpg

solipuram_padukolai1.jpg

solipuram_padukolai1.jpg

solipuram_padukolai1.jpg

solipuram_padukolai1.jpg

இந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் அப்பிரதேசத்தில் சிவராம் பாசறை வகுப்புகள் நடத்தியதாக தகவல். இந்தப் பாசறை வகுப்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் கொலையுண்டோர் கொலைசெய்தோர் பற்றிய விபரம் யாவுமே, இயக்கத்திலுள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை.

 

இவ் இளம் போராளிகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால், இச் சம்பவத்தைப்பற்றி அறிந்திருந்த பின்னாலும் ஆதாரங்கள் கிடைத்த பின்னாலும், இச் சம்பவத்துக்கும் புளாட் இயக்குத்துக்கும் சம்பந்தம் எதுவுமே கிடையாது என வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுத்தின் பெயர் ”உண்மைகள் என்றும் உறங்குவதில்லை”. இந்த துண்டுப்பிரசுரம் தளக்கமிட்டியினாலேயே வெளியிடப்பட்டது. அப்போது தளக்கமிட்டியில் பொறுப்பாக குமரன் அசோக் யாழ்ப்பாணத்திலேயே இருந்தனர். இக் கொலைகளை இவ்வாறு புளட் செய்யவில்லை என இத் துண்டுப்பிரசுரத்தின் மூலம் மறுத்து கூறியது. அவற்றை விநியோகித்து புளட்டின் அராஜகங்கள், அதன் கொலைக்கரங்களை தொடர்ந்தும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை  மத்திய குழுவில் இருந்த அசோக்கும் குமரனும். அறியாதிருந்தார்களா? ஆனால் புளாட்டில் பலருக்கு இது தெரிந்திருந்தது.

 

புளட்டின் மிகவும் தீவிர இயங்குசக்தியாகவிருந்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நேசன் (பின்னாளில் தீப்பொறியுடன் வெளியேறியவர்) என்பவரின் சகோதரன் கொக்கன் சிவா (சிவானந்தன்?) வை இலங்கை இராணுவம் கைது செய்திருந்தது. அவரை விடுவித்ததன் பின்னால், இராணுவத்திற்கு தகவல் கொடுக்கும் உளவாளியாக கூறி புளட் கைது செய்தது. பின்னர் கொலையும் செய்தது. யாரும் பதில் சொல்லவும் இல்லை. அது அப்படியே மறைக்கப்பட்டு, உண்மைகள் புதைக்கப்பட்டன.

 

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் நிலைப்பாட்டில் இருந்த இவர்கள் போக்கில் சினம் கொண்டவர்களால் உந்தப்பட்டு நடாத்தப்பட்டதே தள மாநாடு.

 

மக்களை மதியாத புளட்டின் இராணுவப்பிரிவின் அராஜகப் போக்குகளும் அசோக் குமரன் தளத்தில் தலைமைப் பொறுப்பில் தங்களை தக்கவைத்திருந்தபோது நடந்தேறியவைகளே.

 

தள அமைப்புக்கள் இவ்வாறான அனைத்து கொலைகளுக்கும், மக்களுக்கு எதிரான அராஜகங்களுக்கும் எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தது. கடுமையான இந்தப் போராட்டத்தினால் அது தந்த நெருக்கடியினால் தான், தளமாநாடு ஒன்று ஓழுங்கு செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை மத்தியகுழுப் பிரதிநிதிகளான அசோக்கும் குமரனும் வந்தடைந்தார்கள். தொடர்ச்சியான விடாப்பிடியான கேள்விக்கணைகள், ஆதாரங்கள், கடுமையான விமர்சனங்கள் என்பனவற்றின் பலாபலன் தான் தளமாநாடு ஆக இவர்கள் தலையில் விழுந்தது.

 

<015.jpg

 

தொடரும்


சிறி

07.12.2009