சிறு குறிப்பு. 
 
லங்கையில் திடீரெனக் கட்சிகள்-அமைப்புகள்,ஆயுதக்குழுக்கள்-மார்க்சியப் புரட்சி அமைகளெனப் புலிகள் அழிவுக்குப் பின்னால் அதிவேகமாக உருவாகின்றன.

 இத்தகைய அமைப்புகள் உடனடியாக இனியொரு இணையத்தளத்துக்குப்பேட்டிகள்-செய்திகளும் வழங்கிவிடுவதாகவும் இனியொரு இணையம் தெரிவிக்கின்றது.இன்றைய சூழலில் இலங்கையில் நிலவும் அந்நியச் சக்திகளது ஆதிக்க நலன் நோக்கிய அரசியலானதும், தமிழ் அரசியல் கட்சிகள் முதல் பரவலான இனங்கள்சார் கட்சிகள்-குழுக்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சக்தியோடு உறவாடி அச் சக்திக்கு விசுவாசமாக இலங்கையில் அரசியல் செய்வதில் மக்களைக் கொல்ல முனைகின்றன.
 
இலங்கையின் அரச வரலாற்றில் இவை புதிதானதில்லை!
 
எனினும்,கொடும் இனவாத அரசியல்-இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுத்து, அழிவுற்ற மக்களை மேலும் மொட்டையடிக்கும் அரசியல் சதி சகிக்க முடியாதது.இதைக் குறித்து கவலைப்படுவதுமட்டும் போதுமா?
 
 
இதைக் குறித்து அம்பலப்படுத்தி, எச்சரிக்கை செய்வதும் அவசியமில்லையா?
 
 
பிரபாகரன் அழிந்தபின்பும் புலம் பெயர் புலிகள் மேற்குலகத்தின் தெரிவில் இயங்கும்போது,அவர்கள் இன்னொரு குறுந்தேசியவாதக் கட்சியோடு-அமைப்போடு இனிமேலும் களமிறங்கவும்கூடும்.அதற்கான தெரிவுகள், அமெரிக்காசார் வியூகத்தில் நிலைபெறலாம்.
 
 
வளரும் ஆசிய முலதனத்துக்கு தடைக்கற்களை இலங்கைபோன்ற இனப்பிரச்சனைகள் உள்ள தேசங்களில் உருவாக்க முடியும்.
 
 
இன்றைய சூழலில் ஆதிக்கத்துக்கு-அதிகாரத்துக்க எதிரான எதிர்ப்பு அரசியலின் நிலை பாதகமாக இயங்குகிறது.அது, பரிதாபகரமாக ஆதிக்கத்துக்குள் உள்வாங்கப்பட்ட கைக்கூலி அரசியலாக நகர்கிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பு அரசியல் நடாத்தையை இத்தகைய குழுக்களிடம் தாரவார்த்துப் பின் தொடரும் நிலையை ஏகாதிபத்தியங்கள் செவ்வனவே செய்யும்போது,இலங்கையில் இனங்களுக்கிடையிலான அரசியல் நகர்வுகளும் இதிலிருந்து தப்பவில்லை.
 
 
புரட்சி,மார்க்சியக் கட்சி,வர்க்க விடுதலையெனக்கூட இத்தகைய குழுக்கள் அந்நியச் சக்திகளின் தயவிலிருந்து கூக்குரலிடுகின்றன.இந்த நிலையில் இனியொரு இணையவிதழின் ஆசிரியர் குழுவினர் போடும் அரசியல் நாடாகம், எம்மக்களை மேலும் முட்டாளாக்குவது.புலம்பெயர் மக்களது அரசியலையும்,அவர்களது உணர்வுகளையும் மழுங்கடிக்கும் புலிகளது செயற்பாட்டின் இன்னொரு பகுதியாக இனியொரு இணையத்தளம் முயற்சிக்கிறது.இதை நாவலனின்"புலிகளின் பின்னான அரசியல் சக்திகள்"என்ற இட்டுக்கட்டும் கட்டுரையிலிருந்து பார்ப்பதோடு, மேலும் அதன் தடால் அடிப் பேட்டிகள்-செய்திகளிலிருந்து விளங்க முற்படுவோம்:
 
 
 
இனியொரு தடால் அடி:
 
 
இனியொரு இணையத் தளத்தை நடாத்தும்,நாவலனும்,அசோக்கும் மாறி,மாறித் தமக்குத்தாமே மலிவு விளம்பரஞ்செய்வதையும்,அவர்களே புலம் பெயர் மக்கள் வாழும் ஐரோப்பா தழுவிய முற்போக்குச் சக்திகளுடன் கூட்டமைத்துப் போராடுவதாகவும் அறைகூவல்விடும் சாணாக்கியத்தைப் பார்க்கும்போது, நாம் எள்ளி நகையாடுவதா இல்லை இவர்களது போலித்தனமான இட்டுக் கட்டல்களை அம்பலப்படுத்துவதாவென யோசிக்கின்றோம்.
 
இன்றைய பொழுதில் இனியொரு நாவலன் எழுதும் பித்தலாட்டம் தமது அரசியல் நடாத்தையின் விளைபொருளாக வெளித் தள்ளப்படுவதன் உச்சம்,அசோக்குக்குக் காவடி தூக்குவதில் முடிகிறது.கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்பேசும் மக்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கித் தனது சுயநலத்தேவைகளோடு சரணடைந்த நாவலன், இப்போது கிணற்றுக்குள் இருந்து வெளியேறிய தவளையாகப் புலம்பெயர் சூழலைத் தரிசிக்கின்றார்.அங்கே,அவரது கண்கள் கிணற்றின் மையப் புள்ளியையே உலகமாகக் காணுவதன் தொடரில், இனியொருவுக்குள் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமமும் அடங்குவதாக ஓலமிடுவதில் அவரை தள்ளியுள்ளது காலம்.
 
 
நாவலனது இந்தக் கட்டுரையில் , நாவலன்தம் மைய நோக்கத்தைப் பாருங்கள்.கட்டுரையின் கருப்பொருளே தம்மை முன்னிறுத்தும் பாரிய மனவிருப்போடு மக்கள் நலன் பேசுகிறார்களாம்.புலியிருக்கும்போது பதுங்கியிருந்த பூனைகள்,புலிகளது அழிவோடு மக்களுக்காகக் கத்துகின்றன!
 
புலிகள்,தமது பாசிசச் சேட்டையினால் மக்களைப்படாதபாடு படுத்திக் குதறியபோதெல்லாம் ஒருவரி எழுத்தக்கூட முடியாத நாவலுனுக்குத் திடீர் தாகம் எடுக்கிறது மக்கள் விடுதலையென.பாசிசத்தின் பிடியில் சிக்கிய மக்களது விடுதலையைப் புறந்தள்ளிய சுயநலக்கனவு, இப்போது தனக்கான இருப்பின் தொடராக மெல்ல அரங்கேறுகிறது.
 
 
ஏமாற்றலாம்.
 



யாரும் நமது மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம்!மக்கள் வலுவிழந்து திறந்தவெளிச் சிறையினுள் தமது வாழ்வுக்காக ஏங்கிக் கிடக்கும்போது அவர்களை எவரும் ஏமாற்றலாம்.
 
 
புலிகளதும்-இலங்கை அரசினதும் பாரிய ஒடுக்குமுறை ஜந்திரத்துக்குள் கட்டுண்டுபோயிருந்த அந்த மக்கள், இப்போதோ தமது தொலைந்த வாழ்வின் எச்சங்களைத் தேடுகிறார்கள்.அத்தகைய மக்களது குரல்வளையை ஒட்ட நறுக்குவதற்கான திசைவழியில் தமிழ் அரசியல் கட்சிகளும்,புலம்பெயர் புலிகளும் செல்லும்போது,அவர்களால் அறுக்கப்படும் மக்களது குரல்வளையிலிருந்து சிந்தும் குருதியைக் குடிப்பதற்கு இந்தக் கூட்டம் மெல்ல வாய்களைத் திறக்கின்றன.அந்த வாய்கள் திறுக்கும்போதே இங்ஙனம் குருதி நெடில்வீசும்போது, மக்களது எதிர்காலம் இன்னும் இருளாகவே இருக்கப் போவதென்பது ஆருடமல்ல!
 
 
அராஜகத்துக்கு எதிராக எத்தனையோ வழிகளில் எத்தனையோபேர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்துப் போராடியிருக்கிறார்கள்.புலம்பெயர் மண்ணில் 1984 ஆம் ஆண்டிலிருந்து மாற்றுக் கருத்துக்கான குரல்கள் எண்ணங்களாக ஒலிகத்தொடங்கியது.போலித்தனமான இயக்கவாத மாயையை உடைத்து உண்மையான போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுக்கப் பலர் இப்படிப் போராடியபோது ,பாரிசில் மிகப்பெரும் அரசியல் படுகொலையாக 01.05.1994 ஆண்டு சபாலிங்கம் அவர்கள் கொல்லப்பட்டார்.இப்படி எத்தனையோ மாற்றுக் கருத்துக் குரல்கள் கொன்றழிக்கப்பட்ட இந்த ஆண்டு ஏப்பிரல்வரை(2009) பாசிசத்துக்கு எதிரான அரசியல் அநாதையாகக் கிடந்தது.புலிப்பாசிசத்தின் முடிவு நெருங்கியபோது மேலெழுந்த இந்த நாவலன் வகையறாக்கள் மக்களது விடுதலை குறித்து இயங்கியல்ரீதியாக ஆய்வுகளைச் செய்யவதற்கு எதிர்வு கூறுகிறார்கள்.
 
 
ஆதிக்கச் சக்திகளது எதிர்ப்புரட்சிக்குழுக்கள்:
 
 
இனியொரு நாவலன்-அசோக் அவிழ்த்துவிடும் முற்போக்கு"ஆய்வு"தாம் நமது மக்களது சுயநிர்ணயத்தைக் குறித்த சரியான போராட்டத் திசைவழியைக் கொடுப்பதாகவும் புனைவதற்கான மலிவு அரசியலை நாவலன் நடாத்தும்போது,கிழக்கு மாகணத்தில் மார்க்சியப் போராட்டக்குழு ஈழத்தை நோக்கிப் போராடுவதாகச் செய்தியை ஒரு அன்பன் காதில் போட்டும் விடுகிறான்.
 
 
ஆசிய மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதான தெரிவில், ஆசிய மூலதனம் போடும் வியூகங்களின் நடுவே,மேற்குலகம் தனது இருப்பின் வெளிப்படுத்தல்களை இத்தகைய குழுக்களின்வழிச் சொல்கிறதா?இலங்கைத் தேசத்தின் சுய வளர்ச்சி,அதன் இறையாண்மைசார் பரந்துபட்ட மக்களது விடுதலையென்பது இத்தகைய வல்லாதிக்கச் சதி-வியூகங்களின் நடுவே, பல தரப்பட்ட குழுக்களின்வழி மேலும் குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டு, இலங்கையின் புரட்சிகர அரசியல் சிதைக்கப்படமுடியும்!
 
 
இத்தகைய இலங்கைச் சூழலில், இனியொரு நாவலன்-அசோக் மட்டுமல்ல நாமெல்லோருமே திறம்பட மக்களைக் குழப்பியபடி அந்நியச் சக்திகளுக்கு இலங்கை மக்களை இரையாக்கி இயங்கமுடியும்.என்றபோதும்,இலங்கையில் புலிகளது அழிவின் பின்னே நிகழும் அனைத்து அரசியலும், தென்னாசியப் பிராந்தியத்துள் நிலவும் மேற்குல ஆதிக்கத்தின் அரசியல் வியூகத்தின் தெரிவில் இயக்கமுறுவதும் சாத்தியமாகிறது.
 
 
ஆசிய மூலதனத்தின் இன்றைய கண்ட அரசியல் மற்றும் சந்தைகளுக்கான விய+கம் இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட இலங்கை என்பதையும்தாண்டி இலங்கையில் கூட்டாளுமையை வற்புறுத்துகிறது.இதன்வழி, சங்காய் கோப்பிரேஷன் ஓர்க்கனேஷேசன்(Shanghai Cooperation Organisation) புலிகளை அழித்துத் தமது வியூகத்தை முன்னெடுக்கும் இந்தத் தருணத்தில்தாம் அனைத்து உதிரிக் குழுக்களும் "மார்க்சியம்-புரட்சி-விடுதலை-ஈழப்போராட்டம்" என உறுமுகின்றன.இவைகளின் பின்னே அணி வகுத்துள்ள இந்திய-சீனா தலைமையிலான ஆசிய மூலதனமும்,அமெரிக்கா தலைமையிலான மேற்குலக மூலதனமும், நமக்கு விடுதலை குறித்தும்,புரட்சி குறித்தும் மார்க்சிய வகுப்பெடுக்கும்.கூடவே, புரட்சிகரக் கட்சியையும் கட்டிக் களத்தில் இறங்கிப் போராடியும் காட்டும்.இவையெல்லாம், இலங்கை மக்களனைவரையும் ஒட்ட மொட்டையடித்து இலங்கையின் பாராளுமன்ற அரசியல் பணியையும், தத்தமக்கு ஒத்தூதும் கட்சிகளையும் பதவியில் அமர்த்தி நமது மக்களை ஒடுக்கும் தந்திரமே.
 
 
இன்றுவரை,இலங்கையின் அரசியல்-ஆட்சி நெறியாண்மை சுயதீனமாக இலங்கை ஆளும் வர்க்கத்தால் வழி நடாத்தப்படுவதில்லை.இது, அறிவியல்சார் உண்மை.இலங்கையின் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிய வர்க்கமாக இருப்பதால் அது தத்தமது எஜமானர்களுக்கிசைவான ஆதிக்கத்தை இலங்கைக்குள் அவர்களது தெரிவில் முன்தள்ளுகிறார்கள்.இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அனைத்துத் தெரிவும் தமது நலனையும்,இருப்பையும் தாம்சார் அந்நியச் சக்திகளோடிணைந்து இலங்கையில் நிலைப்படுத்துவதே.
 
 
வரும் ஜனாதிபதித் தேர்தல்கூட இதன்வழி இரண்டு பிரிவுகளான இலங்கைக் கட்சியாதிகத்துள் நிலைத்திருக்கும் இலங்கை அளும் வர்க்கங்கள்-பிரிவுகளது நலன்களே மேற்குலகைச் சார்வதும்,ஆசிய வல்லாதிக்கங்களைச் சார்வதுமாக இருக்கிறது.இதுள் சீருடைகளைந்த இராணுவ ஜெனரலும்,சீருடையணியாத இராணுவ ஆட்சியாளனும் மல்லுக்கட்டுவது தத்தமது எஜமானர்களது கனவுகளுக்கு இலங்கையைத் தகவமைப்பதற்கே.இதையொட்டி வருகின்ற அனைத்து முரண்பாடுகளும் மக்களை ஒட்ட மேய்ந்து ஏப்பமிடும்.
 
 
மக்களிடம் உண்மைகளை இடித்துரைப்பதே அவசியம்:
 
 
வன்முறையை அன்றாட வாழ்வாக்கிய இலங்கைக் கட்சி-பாராளுமன்ற"ஜனநாயகத்தில்",நமது மக்களது அழியப்பட்ட வாழ்வு மேலும் அந்நிய ஆதிகச் சக்திகளால் சிதைவுறும்.பொன்சேகாவோ அன்றி இராஜபக்ஷாவோ மக்களது வலிகளையும்,அவர்களது சிதைவுற்ற சமூக சீவியத்தையும் செப்பனிட முடியாத திசையில்தாம் அரசியலை முன்னெடுக்கப் போகிறார்கள்.
 
 
இதுள்,மேற்குலகைச் சாரும் பொன்சேகாவும் ஆசிய மூலதனம் எடுக்கும் அனைத்து அரசியல் வியூகத்தையும் சிதைக்க முடியும். குறிப்பாக,இன்றைய ஆசிய மூலதனத்தின் செயற்திட்ட வடிவங்கொண்டிருக்கும் வியூகம்(குறிப்பிட்ட தேசங்களில் நிலவும் இனங்களுக்கிடையிலான தேசிய இனப் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு,போரினால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரங்களைச் செப்பனிடுதல்,பொருளாதார முன்னெடுப்புகளால் அதன் வாயிலாகவெழுந்த முரண்பாட்டை மெல்லத் தணித்தல் என்பன இதன் திட்டத்துள் அடக்கும்).
 
 
இத்தகைய அரசியல் போக்கிலிருந்து,போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து மக்களது பரிதாப நிலைகுறித்துத்தாம் இப்போது யோசிக்க வேண்டும்.
 
 
இதுள், அரசியல் ஆதயமடையமுனையும் இனியொருபோன்ற அரசியல் வேடதாரிகள், இலங்கையின் இன்றைய அரசியற் சூழலைத் தமது பங்குக்கும் பயன் படுத்த முனையும்போது இதை அம்பலப்படுத்தும் பணியில், தமிழரங்கமும் தன் வலுவுள்ள வரை போராடுகிறது.இதுதாம் இப்போதைய அவசியமான தேவை.
 
 
மக்களிடம் உண்மைகளை இனங்காட்டல்.அவர்களுக்கு எதிரான அரசியல் போக்குகளை அம்பலப்படுத்தல்,எதிர் புரட்சிகரமாக எழும் ஆயுதக் குழுக்களைக் குறித்து எச்சரித்தல்.மார்க்சியத்தின் பெயரில் அந்நியச் சக்திகள் இலங்கை அரசின் ஆசியோடு புரட்சிகர அமைப்பு வேடம் பூணுவதுகூட நடைபெறும் இன்றைய சூழலில், உண்மைகளை இனம் காட்டுதலன்றி வேறென்ன தெரிவைச் செய்ய முடியும்?
 
 
இதுதாம், தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் பாதையை ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் கண்டடையவைக்கும் முதன்மையான தெரிவு.எதிர்காலத்தினது எதிர்ப்பு அரசியலின் தலைவிதி இங்ஙனமே மீட்சியடைய முடியும்!
 
 
இப்போதுள்ள எமது பணி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்வது.
 
 
இதைக் குறித்துத்தாம் நாம் தொடர்ந்து எழுதுகிறோம்.
 
 
மக்களுக்குத் தவறான அரசியல் மூலம் கெடுதிசெய்யும் ஆயுதக்குழுக்களும்,அவைகளின் அந்நிய எஜமானர்களும் ஒரு வகையில் இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்கு ஒத்தே இயங்குகிறார்கள்.
 
 
மக்கள் குறைந்த பட்சமாவது இச் சூழலை எதிர்த்து வாழத்தக்கவர்களாக, அவர்களது மனோ திடத்தை உருவாக்கி விடவேண்டும்.இத்தகைய வினையின் விளைவினாற்றாம் அவர்கள் தமது கடந்தகால அழிவுகளிலிருந்து மேலெழுந்து, எதிர்காலத்தைத் திடமோடு எதிர்கொள்வார்கள்.
 
இதுவே,மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக்கூடிய சக்தியை அவர்களிடம் தோற்றுவிக்கும். 
 
எனவே,பொய்களை-சதியை உடைத்து, உண்மைகளைப் பேச முனைவோம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வூப்பெற்றால்,
ஜேர்மனி
07.12.2009

http://srisagajan.blogspot.com/2009/12/blog-post.html