Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது இனியொருவில் வெளியான றயாகரன் மீதான சேறடிப்புக் கட்டுரை தொடர்பான எழுத்துக்களையும் அதற்கான பதில்களையும் அவதானமாகப் பார்த்துவருகின்றேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சமூகம் சார்ந்தவர்கள் யார் என்பது பற்றி இடையில் குறுக்கிட்டு எழுதும் நாவலனின் எழுத்துக்கள் தான்.

முதலில் விவாதத்தை நடத்துங்கள் அந்த விவாதத்தின் முடிவில் சமூகம் சார்ந்தவர்கள் யார் எனவும் சமூக அக்கறை கொண்டவர்கள் யார் எனவும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

 

விவாதத்தை ஆரோக்கியமாக நடத்தும்போது இடையில் சேறடிப்புகளை தவிருங்கள். நாவலன் உங்கள் மீது ஒரு வினா கடந்த பல வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்தியப் பிரயாணத்தின் பின்பான உங்கள் மாற்றம் தான் இவை.

 

நண்பர் றயாகரனும் நண்பர் அசோக்குக்கும் இடையிலான விவாதம் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும், கடந்தகால வரலாற்றின்  மீதான விவாதமாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம். இந்த வரலாற்று விவாதத்தில் பங்குபற்றுவதற்கு ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நபர்களுக்கும் உண்டான வரலாற்றுக் கடமை. அதன் அடிப்படையில் நானும் இதனுள் நுழைகின்றேன்.

 

முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்

 

நான் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவன. எனது பெயர் சீலன். நான் 1983 இறுதிக்காலகட்டத்தில் புளட் அமைப்பில் சுகந்தன் என்பவரால் இணைக்கப்பட்டு அதனுடன் இயங்கினேன். எனது விருப்பத்தின் அடிப்படையில் 19.04.1984 அன்று இந்தியாவிற்கு சென்றேன். அங்கு எனது பெயர் காந்தன். எனது இலக்கம் 1825. நான் பின் தளத்தில் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் கலந்து கொண்டவன். புளட்டின் வதைகளுக்கு (சந்ததியாரின் மேலான பிரச்சனையில்)உட்படுத்தப்பட்டு எனது முதுகு முள்ளந்தண்டு உபாதைகளுடன் தப்பிப்பிழைத்திருக்கின்றேன். என்னுடன் வதைமுகாமில் இருந்த மூவரை புளட்டின் உட்படுகொலையில் இழந்தவன்.

 

ஈழப்போராட்டத்தில் மிகவும் பெரிய இயக்கங்களாக இருந்த ஐந்து இயக்கங்களின் நிலைப்பாட்டை நாம் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு இன்று நடைபெறும் இவ்விவாதம் புளட்டை ஆய்விற்குட்படுத்துவதாகவே உள்ளது.

 

புளட்டின் மத்தியகுழு உறுப்பினர் நண்பர் அசோக். இவர் புளட்டில் தளமகாநாட்டிற்கு முன்பு நடந்த அத்தனை உட்படுகொலைகள் உட்பட, தளத்தில் நடந்த சுழிபுரம் படுகொலை போன்றவற்றிற்கு மக்கள் வெளி அரங்கில் பதில் கூற வேண்டிய கடப்பாட்டை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

 

இதை விட சிவராம் துணையுடன், கிழக்கில் வைத்து கொல்லப்பட்ட அகிலன் செல்வன் கொலையானது அசோக் தளத்தில் மத்தியகுழு அங்கத்தவராக நடமாடிய போது தான் நடந்தேறியது. இக்கொலைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. அவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் நாட்டிலேயே என்று தெரிந்த பின்னாலும் கூட அவர்கள் பின்தளத்திலிருந்த வந்த அழைப்பின் பேரில் பின்தளத்துக்கு விசாரணைக்காக சென்றிருக்கிறார்கள் விரைவில் தளம் திரும்புவார்கள் என்று தள அமைப்புகளுக்கு கூறப்பட்டது. இந்தக் காலங்களில் நடந்தேறிய  புளட்டின் அனைத்து அராஜகங்களும் அவை நடக்கும் போது, தாங்கள் தளத்தில் மத்திய குழு உறுப்பினராகத்தானே இருந்தீர்கள். இதுவரையில் அதைப்பற்றியோ அல்லது அமைப்பின் மேல்மட்டத்தில் நடந்த விடயங்கள் பற்றியே எதுவுமே எங்குமே முன்வைக்கவில்லை. என்ன காரணம்?

 

"குறிப்பாக புளட் அமைப்பின் கொலைகளுக்கு எதிராகப் போராடிய மூன்று குழுக்களில் அசோக் சார்ந்த தளக் குழு மிகப்பிரதானமானது. "  என நாவலன் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. அசோக் சார்ந்த குழு என்று குறிப்பிடுவது பரந்தன் ராஜன், பாபுஜி, செந்தில், சேகர், ......... என்பவர்களையே. இந்த நபர்களே இவர்களே கொலையாளிகள் என்று தள அமைப்புக்கள் திட்டவட்டமாக அவர்களின் பெயர் விபரம் ஈறாக இனம் கண்டு போராடியது. ஆனால் நீங்களோ தள அமைப்புக்கள் யாருக்கெதிராக திரண்டெழுந்தனவோ அவர்களுடன் பின்தளம் சென்று கூடி கூட்டறிக்கை விட்டு அந்த தள அமைப்புக்களின் முதுகில் குத்தினீர்கள். இப்படிக் குத்திய பின்னாலும் தள அமைப்புகள் சார்பாய் போராடியதாக கூறுவது சகிக்க முடியாதது.

 

இதில் முதலாவது சேகர் என்பவர் யார் தெரியுமா? இதை நாவலன் நீங்கள் அறிந்துள்ளீர்களா? இவர் இந்திய கடற்படை தளபதிகளில் ஒருவர். றோ அமைப்பால், புளட்டுக்குள் வேலை செய்தவர். இவரின் நேரடிக் கண்காணிப்பில் திருச்சியில் ஒரு முகாம் இருந்தது. ஒரு இராணுவப்பயிற்சி முறை, அதாவது தடபடா என குறிப்பிடும் பயிற்சியை இவர் நடத்தினார். இவர் தான் 1985 காலப்பகுதியில் புளட்டின் இந்திய பயிற்சி முகாம்களில் இராணுவ வகுப்பு எடுத்தவர். அப்போதே பாக்கிஸ்தானுடன் தமது நாடு சண்டைபிடிக்கும் போது நடத்திய உளவு நடவடிக்கைகளையும் அதனூடான அனுபவங்;களையும் பகிர்வார். அப்போதே முகாம்களில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு இவர் இந்திய உளவுப்பிரிவின் ஒருவர் என்பது தெட்டத் தெளிவாகத் தெரியும்.  அப்படி இருக்கையில் இவருடன் நண்பர் அசோக் இணைந்திருந்தார் என்பது எதன் அடிப்படையில். சேகரின் உள்நோக்கம் அல்லது செயற்திட்டம் புளட் அமைப்பு அவ்வேளையில் மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நிலையில், அதற்கு ஒப்ப இன்னுமொரு இயக்கத்தை உருவாக்குவதே.

 

இந்த சேகர் தான் இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தத்தின் பின்னான இந்திய இராணுவத்தின் தமிழ்மக்கள் மீது ஏவப்பட்ட படை நடவடிக்கைளின் போது இலங்கையில் ஒரு பாரிய முகாம் பொறுப்பாளராக பிரசன்னமாகியிருந்தார்.

 

அடுத்து பரந்தன் றாஜன். இவர் யார் ஒரு பேட்டை ரௌடி. கிளிநொச்சி வங்கிக் கொள்ளையில் சம்மந்தப்பட்டவர். பின் ஜெயில் உடைப்புடன் மீண்டும் புளட்டில் இணைந்தார். இவர் இயக்கத்தில் இணைந்ததும் இவருக்கு என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரால் தான் உருவாக்கப்பட்டது புளட்டின் நாலாம் மாடியான வதை முகாம். அதற்கு பொறுப்பானவர் தான் மொட்டை மூர்த்தி இது தகவல். இந்த ராஜன் அனைத்து முகாம் பொறுப்பாளராக இருக்கும் போதுதான் முதல் உட்படுகொலை நடந்தேறியதாக நினைக்கின்றேன்.

 

பி முகாம் பொறுப்பாளர் மதனை பயிற்சி எடுக்கும் புதிய தோழர்களுக்கு முன் வைத்து அடித்து வதை செய்தார். இவரால் தான் பட்டுக்கோட்டையில் உள்ள பண்ணையார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படிப்பட்டவர் தான் சந்ததியார் விடையத்திலும் நாடகமாடினார் அதாவது சந்ததியாரின் படுகொலைக்கான அரசியல் காரணங்களைப் புறந்தள்ளி சோடிக்கப்பட்ட காரணத்தில் ஒன்று, புளட்டில் ஒரு முகாமில் நடந்த உட்கட்சி போராட்டம் தொடர்பானது. அந்த முகாமின் பொறுப்பாளர் தோழர் தங்கராஜா தொடர்புடையது. அவரைத் தப்ப வைத்ததும் ராஜன் தான். தங்கராஜா தற்போது ஈ.என்.டி.எல்.எவ் பில்  தான் உள்ளார். பின் தங்கராஜாவின் பாதுகாவலரை இதற்காக பலிக்கடா ஆக்கினார்கள். இவ்வாறானவர் தான் ராஜன். இவரைப் பற்றி புளட்டில் தளத்திலுள்ள அமைப்புகள் முதலாய் பின்தளத்திலும்  பலருக்கு தெரியும். உதாரணத்திற்கு தீப்பொறி காந்தன், அனைத்து முகாம்களின் உதவிப் பொறுப்பாளராக இருந்த தோழர் செல்வராஜா, இதைவிட பல பல முகாம் தோழர்கள் இவருடைய பாத்திரத்தை நன்கு அறிவார்கள்.

 

செந்தில் கைதேர்ந்த திருட்டுக் கொலைகாரன். சங்கிலியை (கந்தசாமி) பயன்படுத்தி பலரை கொலை செய்ததில் இவரும் ஒருவர். இதற்கு ஒரு உதாரணம் ஒன்று போதும். அதாவது ஊர் ஞாபகம் இல்லை ஒரே ஊரைச் சேர்ந்த பயிற்சிக்கென வந்த ஐந்து பேர்களை புலிகளின் உளவாளிகள் என்று கொலை செய்ததற்கு முன்னதாக விசாரணை என்ற போர்வையில் சித்திரவதை செய்தவர் இவன்தான்.

 

பாபுஜி இவரைப்பற்றி என்ன செல்வது. ஒட்டு மொத்தத்தில் காக்கா பிடித்து கொண்டு இருப்பவர் இவர் அதிகம் செந்திலுடன் தான் திரிவார். கொலைஞர்களின் கூட்டாளி.

 

இப்படிப்பட்டவர்களுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட்டவர் தான் நண்பர் அசோக். தள அமைப்புகள் மற்றும் பின்தள போராளிகள் யார் மீது குற்றம் சுமத்தினரோ அவர்களுடன் சேர்ந்து அவர்களின் கையொப்பம் இட்ட அறிக்கை மூலம் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

இவர்களை அப்பலப்படுத்தி தானும் சுயவிமர்சனம் செய்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை ஏன்?

 

அத்தோடு தளமகாநாட்டில் காந்தனுடன் ஒரு சிறு பகுதியினர் சென்றனர் என்பது தவறான தகவல். தளமகாநாட்டிற்கு முன்னரே (ஒரு வருடத்தின் முன்) காந்தன் இந்தியாவில் தலைமறைவாகிவிட்டார். அவருடன் குறிப்பிட்ட சிலரும் தலைமறைவானார்கள். இதற்கு இன்று நண்பன் காந்தன் இருக்கின்றார். அவரை நீங்கள் கேட்டறியலாம்.

 

நீங்கள் ஒரு தகவலை கொடுக்கும் போது அதை தயவு செய்து சரியாகக் கொடுங்கள். ஏன் என்றால் இன்று நாம் அவற்றின் அடிப்படையில் தான் கற்கையை மேற்கொள்ளவும், மக்கள் சார்ந்து நின்றவர்கள் யார்? மக்கள் விரோதக் குழுக்கள் யார்? என்று இனங்காண முடியும். அசோக் உங்கள் நண்பன் என்பதற்காகவோ அல்லது றயாகரன் உங்களின் அரசியலை எதிர் நின்று விமர்சிப்பவர் என்பதற்காகவோ தயவு செய்து வரலாற்றை திரிக்க வேண்டாம்.

 

றயாகரனால் ஆரம்பச் சமர் பத்திரிகைகளில் என்.எல்.எவ்.ரீ யின் வரலாறு எழுத ஆரம்பிக்கப்பட்து ஆனால் பல என்.எல்.எவ்.ரீ யின் தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சமரில் வாசித்தேன். சரி இதே மாதிரி நண்பர் அசோக் ஏதாவது செய்துள்ளாரா?

 

சிலவேளை புதியதோர் உலகம் தீப்பொறியால் வெளியிடப்பட்டுவிட்டது தானே, ஏன் நான் கூற வேண்டும் என்று நண்பர் அசோக் கூறலாம். ஆனால் அன்று தீப்பொறியினரை தேடியழிக்கும் கூட்டத்தோடு இவரும் இருந்தார் என்பது உண்மை. தீப்பொறியுடன் சிறு உறவும் கூட வைத்திருக்காத நபராக அசோக் இருந்தார்.

 

என்னைப் பொறுத்தவரையில் பழைய பெருச்சாளிகளின் பம்மாத்து அரசியல் என்பது முடிந்துபோன காலம். மக்களை ஏமாற்றி தம்மைக் காத்தவர்களை என்ன என்று சொல்வது! இதற்கு ஒரு உதாரணம் மன்னாரில் நடந்தது. புளட்டுக்கு என புறப்பட்ட ஒரு தோழர் இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சுட்டில் காலமாகிவிட்டார். அவரை மற்றைய நண்பர்கள் கடற்கரையிலேயே போட்டுப் புதைத்தனர். மற்றவர்கள் இந்தியா வந்து சேர்ந்தனர். பல காலங்களின் பின் வந்த நண்பர், நாடுதிரும்பிய போது இறந்த தோழனின் பெற்றோர்கள் உறவினர்கள் இன்னமும் தன் மகன் உயிருடன் தான் உள்ளான் என்று நினைந்து வாழ்ந்து வருவதைக் கண்டார். மற்றவர் உண்மையைக் கூற, நிலை என்னவாக இருந்திருக்கும் தெரியுமா? இதை கூறக் காரணம் இந்த வாலிபன் இறந்தது கழகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் அதே ஊரில் இருந்து தோழர்களை சேர்த்தார்கள். இச்சம்பவத்தை மக்களுக்கோ அல்லது அவர்களின் வீட்டாருக்கோ தெரியப்படுத்தாமல் இவ்வாறான நயவஞ்சகப் போக்குத்தான் காணப்பட்டது.

 

நண்பர் அசோக், நாவலன் ஆகியோரோ றயாகரனின் எழுத்துக்கள் தனிமனிதத் தாக்குதல் என்று குற்றம் சாட்டுகிறீர்கள், இப்படிப்பட்ட  துரோகக்கும்பலின் பங்காளர்களை வேறு எவ்வாறுதான் விமர்சிப்பது!?

 

அன்று மக்களை ஏமாற்றி சோசலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் கதைத்து தமது இருப்பை நிலைநாட்ட போட்டுக்கொண்ட வேசமே இந்த சொற்பதங்கள். ஆனால் அந்த சொற்பதங்களைப் பயன்படுத்தித்தான் அசோக்கும் காடுமேடெல்லாம் திரிந்து மக்களை அரசியல் மயப்படுத்தினார். புளட்டின் அரசியலை இறுதிவரைக்கும் பொத்திப் பாதுகாக்க முனைந்தார். இறுதியில் அந்த மக்கள் அதே இயக்கத்தால் தண்டிக்கப்படும்போது, அதை அந்த மக்களிடம் வெளிக் கொண்டுவராது தனது இருப்பை நிலைநாட்ட இன்னும் ஒரு இயக்கத்தை இந்திய உளவுப்படையின் உதவியுடன் ஆரம்பித்தார். இவரை சார்ந்து நின்ற சக தோழர்களின் நிலைபற்றி எந்த கவலையும் இன்றி செயற்பட்டார். இதில் ஒரு விடையத்தை குறிப்பிடுகின்றேன். நான் பின்தளத்தில் வதைமுகாமில் இருக்கின்றேன் என்ற செய்தியை தளத்தில் என்னை பின்தளத்திற்கு அனுப்பியவருக்கு (சுகந்தனுக்கு) அறியவர, இது தொடர்பாக அறிந்து கொள்ள தனது உயிரையும் பார்க்காது பின்தளத்திற்கு வந்து என்னை சந்தித்தவர். இது பற்றி அவர் தனது அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது எழுதுவார் எனவும் நினைக்கின்றேன். இப்படிப்பட்ட தோழர்களும் கழகத்தில் இருந்தனர். ஆனால் நண்பர் அசோக் என்ன செய்தார்?

 

தமிழீழ விடுதலைப் போரில் மக்களுக்கு துரோகத்தை விதைத்த இயக்கங்களில் புளட் ஒன்று. அதன் மத்திய குழு உறுப்பினர் ஆகிய அசோக் இதுவரை காலமும் சுயவிமர்சனத்தை மக்கள் முன் வைக்காது, மீண்டும் அமைப்பு புரட்சி மார்க்சியம் சோசலிசம் என்று கதைக்க முற்படுகின்றார். இவரின் கபடத்தனத்தை அரங்கேற்ற இவருக்கு துணையாக புளட்டின் சில பெருச்சாளிகள் கருத்து எழுதுவதையும் பார்த்தேன். சுய விமர்சனமின்றேல் அரசியல் அனாதையாக்கப்பட வேண்டிய இவர்கள், மீண்டும் மக்கள் முன் எந்த முகத்துடன் வருகின்றனர் என்று தான் தெரியவில்லை. புலியின் அழிவிற்குப்பின் தம்மை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்பவதற்கும், மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கும் முற்படும் இவர்களை, மக்கள் முன் அம்பலப்படுத்தவும் புளட்டில் இருந்த பலரும் (தளமாநாட்டிற்கு முன் இருந்தவர்கள்) முன் வர வேண்டும் என்று கோருகின்றேன்.

 

சீலன்
07.12.2009