நிறைய இரவுகள்
கடந்துவிட்டன இதுவரையில்
ஒரு சில இரவுகள் மட்டும்
மறக்க முடியாதவைகளாய்…

அப்படி ஒரு இரவுதான் அதுவும்
தூக்கம் வரவில்லை.
கண்களை மூடினால்
நீண்ட… இருட்டு.
மகிழ்ச்சி நிரம்பி வழியும்போது
தூக்கம் வருவது கடினம்தான்.

நான்தான்
முதலில் பார்த்தது
புது நோட்டுக்கள்
புதுப் புத்தகங்களை சுமந்துகொண்டு
சாயங்காலம் பள்ளிக்குள் நுழைந்த
பழைய லாரி ஒன்றை.

எப்படியும் வந்துவிடும்
புது நோட்டுக்களும்
புதுப் புத்தகங்களும்
நாளை என் கையில்.

வாங்கியவுடன்
முதல் பக்கங்களை பிரித்து
‘மோந்து’ பார்க்க வேண்டும்
அவ்வளவு வாசமாய் இருக்கும்.
சலவைக்கு போட்ட
சேலையொன்றை
எப்பொழுதாவது எடுத்து கட்டும்
அம்மாவிடமிருந்து
வருமே ஒரு வாசம்…
அதுபோல.

முடிந்தவரை
இந்த வருடம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
சித்திரத்தை போல
செதுக்க வேண்டும் புதுநோட்டில்.
ஆசிரியர் வாங்கி பார்த்தால்
ஆச்சரியத்தில்
திளைக்க வேண்டும்.

கையில் இருக்கும்
மயிலிறகுகளை
கணக்கு புத்தகத்தில்தான்
முதலில் வைக்க வேண்டும்.
நாளு நாட்கள் கூட
எடுத்துகொள்ளட்டும்
நல்லகுட்டி போட்டால் சரி.

பக்கத்து தெரு
பாண்டித்துரை வீட்டில்தான்
‘நியூஸ் பேப்பர்’  இருக்கும்.
அவனும் கூட
என் ‘சோடு’தான்
ஆனாலும் தைரியமாய்
என் அப்பாவை
பெயர் சொல்லியே அழைப்பான்.
அவன் கொஞ்சம்
கொடுத்தால் போதும்
அட்டைபோட்டு பெயரெழுதி
அழகாய் வைத்துக் கொள்வேன்.

இந்த உரச்சாக்கு பையை
கண்டால்தான் கடுங்கோபம்.
மாமா  புதுப்பை ஒன்று
வாங்கி வரும்வரை,
இதிலேயே புத்தகங்கள்
இருந்து தொலைக்கட்டும்
……………………………..

இன்னும் தூக்கம் வரவில்லை.
நீண்ட விழிப்பிற்கு பிறகு
தூங்கிப் போனேன்.

‘பிரேயர்’
நத்தை வேகத்தில்
நகர்ந்து முடிந்தது.

‘‘ ஸ்காலர்சீப்
புத்தகம் வந்திருக்கு
பள்ளன், பறையன்,
சக்கிலியெனெல்லாம்
அப்படியே நில்லு !
மத்த எல்லோரும்
வகுப்புக்கு போ ’’
எரிச்சலும், கோபமும்
கலந்த குரலொன்று
செவிகளை துளைத்தது.

புதுநோட்டுகளும்
புதுப்புத்தகங்களும்
என் அருகில்தான் இருந்தன

ஆனால்,
முந்தைய இரவு போலவே
தூக்கம் மட்டும்
இன்னும் வரவில்லை.

 முகிலன்

குறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80-களில் பணிபுரிந்த  கிளார்க் ரத்தினபாண்டி  தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகக் கேவலமான முறைவில் சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.

 

வடு