Language Selection

கடந்தகால மனித விரோதங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டதே எம் வரலாறு. படுபிற்போக்கான அரசியல் கூறுகள், தம் வன்முறைகள் மூலம் உண்மைகளை குழி தோண்டி புதைத்தது. சமூகம் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போனது. இதற்குள் சகல பிற்போக்கு சக்திகளும், தம்மை மூடிமறைத்துக் கொண்டே நீச்சலடித்தனர். (வரலாற்று ஆவணங்கள் இணைப்பு)

வரலாற்று உண்மைகள், அது சார்ந்த ஆவணங்கள், சாட்சியங்கள் அனைத்தும் வரலாற்றின் முன் காணாமல் போய்விடுகின்றது. இதை வைத்து அன்று பிற்போக்கான மக்கள் விரோதநிலை எடுத்தவர்கள், இன்று அதை மூடிமறைத்தபடிதான் மீளவும் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர்.

 

சென்ற பகுதியில் குறித்த ஒரு ஆவணம் மூலம், வரலாற்றை திரித்துப் புரட்டும் அசோக்கிசத்தை மட்டுமல்ல, "இனியொரு" வின் சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தையும் சேர்த்துப் பார்த்தோம். அதைச் சுற்றி வெளிவந்த 10 ஆவணங்களை, வரலாற்றை திரிப்பவர்களுக்கு எதிராக முதன் முதலாக இந்த கட்டுரை மூலம் உங்கள் முன் வெளிக்கொண்டு வருகின்றோம். எது உண்மை என்பதையும், எது அவதூறு என்பதையும் மட்டுமல்ல, வரலாற்றை திரிப்பவர்களின் அரசியல் வரை இது அம்பலமாக்குகின்றது. அன்று யார் எப்படி என்ன செய்தனர் என்பதை, இவை குறிப்பாகவும் தெளிவாகவும் அம்பலமாக்குகின்றது.

 

அன்று றோவுடன் நின்றது தீப்பொறியோ, தளக் கமிட்டியோ அல்ல. ராஜனுடன் நின்ற கும்பல்தான், றோ வழிகாட்டலில் அதன் தேவைக்கு ஏற்ற ஒரு அரசியலை முன்னெடுத்தது.

 

புளாட்டின் பெயரிலான அசோக் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட ஆவணம், அதைத்தான் வரலாறாக்கியது.

 

கொலைகாரர்களுடன் கூட்டாக அசோக்கும் சேர்ந்து வெளியிட்ட இந்த அறிக்கை மூலம் தான், தளக்கமிட்டியின் நோக்கத்துக்கு மாறாக அதன் முதுகில் குத்தினர். இப்படி ஆயிரக்கணக்கான தோழர்களின் முதுகில் குத்தி உருவானதுதான், ஈ.என்.டி.எல்.எவ் என்ற கூலிக் குழு. இங்கு ராஜன், செந்தில், பாபுஜீ போன்ற முன்னணி கொலைகாரர்களுடன் சேர்ந்து  நடத்திய காட்டிக்கொடுப்புதான், புளாட்டை சுற்றி நடந்த போராட்ட வரலாறு.

 

இதையெல்லாம் இருட்டாக்கி மூட்டையாகக் கட்டி வைத்திருக்கும் அசோக், இவைகளை அம்பலப்படுத்துவது இரயாகரனின் கற்பனையான தனிமனித அவதூறு என்கின்றார். இதுவா கற்பனை!?

 

தில்லை சிதம்பரம் ஆலயத்தில் பறையனான நந்தனை எரித்த பார்ப்பனக் கும்பல், அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று கூறியே நாயன்மார்களாக்கியது பார்ப்பனிய இந்துத்துவ சாதிய வரலாறு. இதுபோல் தான் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை ஜோதியில் போட்டு, புரட்சி வரலாறாக காட்டி வந்தனர். இந்த ஆவணங்களையே ஆதாரமற்ற இரயாகரனின் அவதூறு என்று சொல்லுகின்ற எதிர்ப்புரட்சி அரசியல்.

 

இப்படி தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைக்க, அசோக் வரலாற்றையே திரித்துப் புரட்டுகின்றார்.

 

1.தீப்பொறி வெளியேறிய காலமும், தாங்கள் ராஜனுடன் சேர்ந்து தளக்கமிட்டியின் முதுகில் குத்தி சதிசெய்த காலமும் ஒன்றென திரித்து காட்டுகின்றார். பார்க்க "ஒரு பகுதித் தோழர்கள் ராஜனோடும், இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும், மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும் வெளியேறினர்." இது வரலாற்றை குறுக்கிக்காட்டி, உண்மையை புதைக்க அதைத் திரிக்கின்றது. 15.02.1985 வெளியேறிய தீப்பொறியை 15 மாதங்களுக்கு பின் றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ் உடன் இணைத்து திரிக்கின்ற, நரித்தனத்தை இன்று அரங்கேற்றுகின்றனர். 

 

2. தீப்பொறியை, காந்தன் தலைமையிலான சிறிய குழு என்கின்றார். 1985ம் ஆண்டு மாசிவரை இருந்த மத்திய குழுவின், மிகப்பெரும்பான்மையை தீப்பொறி கொண்டு இருந்தது. இது சந்ததியார் தலைமையிலானது. இதை "மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும்" சென்றதாக கூறி திரிக்கின்றது.

 

3.பெரும்பான்மையின் பெயரால் ராஜன் உள்ளிட்டவர்கள் வெளியிட்டது, தீப்பொறியைக் கொல்ல முயன்றவர்கள் உருவாக்கிய புதிய மத்திய குழு. அந்த உண்மையையும் இங்கு திரிக்கின்றார். அத்துடன் இந்த மத்திய குழு, பெரும்பான்மை புளாட் உறுப்பினர்களின்  ஜனநாயக பூர்வமான தெரிவல்ல. மாறாக புளாட் கொலைகாரர்கள் தங்கள் விசுவாசிகளை அடிப்படையாக கொண்டு உருவான புதிய மத்திய குழு.

 

4."இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும்" என்று ஈ.என்.டி.எல்.எவ் இற்கு வெளியில் தளக்கமிட்டியுடன் தான் இருந்ததாக இங்கு அசோக் புனைகின்றார். அதை குறித்த அவர்களின் ஆவணங்கள் அதை மறுக்கின்றது. உண்மையில் கொலைகாரன் ராஜன் உடன் நின்றவர் தான், அதை மறைத்து "எங்களோடு" என்று கூறி தனக்கு வசதியாக ஒரு வரலாற்றையே புனைந்து  திரிக்கின்றார்.

 

இந்த வகையில் தனக்கு எதிரான கடந்த வரலாற்றை திரித்துப் புரட்டுகின்றார். தீப்பொறி வெளியேறிய இரண்டு மாதத்தின் பின் (25.04.2005) அசோக் உள்ளிட்ட புளாட், தீப்பொறிக்கு எதிராக விட்ட அறிக்கை (இணைப்பில் உள்ளது பார்க்க)யில், அவர்களை தங்கள் அவதூறுகள் மூலம் திட்டித் தீர்க்கின்றனர். அபபொழுது அசோக் புளாட் மத்திய குழுவில் தான் இருந்தவர். இந்த மத்திய குழுதான் அவர்களை கொல்லத் தேடி அலைந்தது.

 

அவர்களை உங்களிடமிருந்து பாதுகாத்தவர்கள் நாங்கள். இன்றும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் மட்டும்தான். வரலாற்று உண்மை இதுவாக இருப்பது எதார்த்தமாக நிற்கின்றது.

 

தீப்பொறி குழு, சந்ததியாருடன் என்.எல்.எவ்.ரி தான் தொடர்பில் இருந்தது. அரசியல் ரீதியான புரிந்துணர்வையும், தோழமையையும் கொண்டிருந்தது. அவர்களை உங்கள் தலைமை கொல்ல முயன்ற போது, நாங்கள் இரகசியமான இடத்தில் வைத்து பாதுகாத்தோம். ஏன் அவர்களின் ஒரு பகுதியை மீளவும் மண்ணுக்கு கொண்டுவந்து இறக்கியதும் நாங்கள்தான். அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதன் மூலம்தான் தீப்பொறியும், புதியதோர் உலகம் நூலும் கூட வெளிவந்தது. அந்த நூலை மண்ணிற்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள் நாங்கள். கற்றன் நசனல் வங்கி பணம் எங்கே என்று புனைபெயரில் அவதூறாக பின்னோட்டம் போட்டு  கேட்கின்றீர்களே, இப்படித்தான் பயன்படுத்தப்பட்டது. ஏன் புலிகளின் அனைத்து பயிற்சி முகாம் பயிற்சியாளர்கள் உட்பட அண்ணளவாக 20 பேர் தப்பி வந்தபோதும், நாங்கள்தான் பாதுகாப்பு வழங்கி உதவினோம்.

 

சரி நீங்கள் கண்ணைத் தோண்டிக் கொன்ற சந்ததியார் கொலையை யார் மக்கள் முன் அம்பலம் செய்தது!? நீங்களா இல்லை. எம் சொந்த மண்ணில், நாங்கள் தான் அம்பலப்படுத்தினோம்;. 1985 இன் இறுதியில் 40, 60 சென்றி மீற்றர் அளவு கொண்ட 5000 போஸ்ரர்கள் மூலம், சந்ததியார் கொலையை உலகறிய வெளிக்கொண்டு வந்தவர்கள் நாங்கள். கற்றன் நசனல் வங்கிப் பணம் இப்படி உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. விஜிதரன் போராட்டத்தை புலிக் குண்டர்கள் தாக்கி ஏற்பட்ட பொருட் சேதத்தால், போராடிய மாணவர்கள் கடனாளியாகி திண்டாடிய போது கூட ஒரு பகுதி பணம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இப்படி மக்களின் புரட்சியின் பக்கம் என்.எல்.எவ்.ரி நின்றது என்றால், அதற்காகவே அந்தப் பணத்தை செலவு செய்தது. நான் அந்த அமைப்பைவிட்டு 1988 இன் ஆரம்பத்தில் விலகிய பின், அமைப்பு தொடர்ந்து 1990 வரை இயங்கியது. இருந்த பணத்தை தீப்பொறிக்கு கொடுத்ததாகவும் அறிகின்றேன். இப்படியிருக்க அவதூறுகளை பின்னோட்டத்தில் எழுத பஞ்சமிருக்கவில்லை. தேசம்நெற்றில் அவதூறை அள்ளிவீசியவர்கள் தான், இன்று இனியொருவில் குத்தி முனகுகின்றனர்.

 

அன்று மக்கள் விரோதங்களுக்கு எதிராக என்.எல்.எவ்.ரி அரசியல் ரீதியாக நின்றது. புளாட் மாணவ அமைப்பு ரெசோ முதல் தளக்கமிட்டி வரை, என்.எல்.எவ்.ரி மக்கள் அரசியலை முன்வைத்தவர்களுடன் ஒன்றாக கைகோர்த்து நின்றது. உள்ளே யார் எதிரி, யார் நண்பன் என்பது, எமக்கு வெளிப்படையாக இருந்தது. புளட் வாமதேவன் என்னைக் கொல்ல வந்த போது, அதை முன் கூட்டியே தகவல் தந்தனர். அந்தளவுக்கு உங்களை நம்பாதவர்கள் தான், எம்முடன் உரிமையுடன் நம்பிக்கையுடனும் சேர்ந்து இயங்கியவர்கள். அந்த கொலைகாரனை தெல்லிப்பழை மக்கள் முன் வைத்தே அம்பலம் செய்தோம். உங்களுக்கு எதிராக புளாட் தோழர்களுடன் சேர்ந்து போராடியவைகள் இவை. தீப்பொறி எம்மிடம் பாதுகாப்பைப் பெற்றது இப்படித்தான்.

 

சரி நீங்கள் நேர்மையானவர்கள் என்றால், கொல்லப்பட்ட சந்ததியார் கொலையை அன்றே முன்னிறுத்தி அம்பலம் செய்து இருப்பீர்கள். என்.எல்.எவ்.ரி தான் அதை செய்ய வேண்டியிருந்தது. இதுதான் தளக்கமிட்டியின் உருவாக்கத்துக்குரிய அரசியல் அடிப்படையை வழங்கியது. அவர்களிடம் எதை முன்வைக்கவேண்டும் என்று  முன் கூட்டியே வழிகாட்டி வந்தது. தள அரசியலை முன்னெடுத்த ஐ.பி, தொடர்ந்து எம்முடன் தொடர்பில் இருந்தவர். நீங்கள் புளாட் தோழர்களின் முதுகில் குத்தியபடி, அவர்களுக்கு வெளியில் நின்றீர்கள். உங்கள் துணைவியாக வர இருந்த செல்வி, உங்களுக்கு முரணாகவே அமைப்பைவிட்டு விலகியிருந்தவர். செல்வியின் நல்ல தோழர்களாக தோழியாக இருந்த விமலேஸ்;வரன், சாந்தி, கலா, தில்லை என்று தொடங்கி ரெசோ மாணவ அமைப்பு வரை, உங்கள் அரசியலுக்கு எதிராகவே நின்றனர். பல்கலைக்கழகத்தில் செல்வியுடன் நாங்கள் நாள்தோறும் விவாதித்து வந்தவர்கள். உங்கள் அரசியல் நிலையை மறுத்து நின்றவர் அவர். எம் அரசியல் நிலையுடன் சேர்ந்து நின்றதால் தான், எம்முடன் இணைந்து அவர் போராடியவர். இவர்கள் என்னைப்பற்றி கொண்ட கருத்தை உங்களுக்கு மாறாக வரலாற்றில எப்படி பதிவு செய்தார்கள் என்று அடுத்த தொடரில் பார்ப்போம்.

 

இக்காலத்தில் வெளிவந்த பலவிதமான 10 வெவ்வேறு அறிக்கைகள் இதில் இணைத்துள்ளோம். பார்க்க

 

 1. தீப்பொறிக்கு எதிரான அவதூறுப் பிரசுரம்
 2.  

 3. தளமாநாட்டில் ஆராயப்பட்டது- வெளியீடு தள செயற்குழு 19.02.1986-24.02.1986 
 4.  

 5. ஸ்தாபனத்தின் பின்தள மாநாட்டுக்கான ஆராயவேண்டிய வினாக்களும் கருத்துக்களும்  
 6.  

 7. தள மாநாட்டை ஒட்டிய தமிழீழ மக்கள்விடுதலைக் கழகத்தின் செய்தி - மார்ச் 1986  
 8.  

 9. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகப் பின்தள மாநாட்டு அறிக்கை –பின்தள தற்காலிக செயற்குழு 19.07.1986 
 10.  

 11. பின்தள மாநாடு தொடர்பான தளச் செயற்குழுவின் அறிக்கை 20.07.1986 
 12.  

 13. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பின்தள மாநாட்டை ஒட்டிய செய்தி –உமாமகேஸ்வரன் குழு 24.07.1986 
 14.  

 15. புதுக்குரல்- புளட்டிலிருந்து வெளியேறிய பிரிவினரின் சிறு பிரசுரம் 11.08.1986 
 16.  

 17. எமது வெளியேற்றம் - தமிழீழத்தின் குரல் 
 18.  

 19. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்தியகுழு அறிக்கை- ராஜன் அசோக் பாபுஜி செந்தில் ஈஸ்வரன் குமரன்
 20.  

 

அதன் முற்போக்கு மற்றும் பிற்போக்கு அரசியல் போக்குகளை நீங்கள் படித்து புரிந்து கொள்ள முனையுங்கள். ஏன் ஈ.என்.டி.எல்.எவ் ஜ றோ உருவாக்கியது என்பதற்கு, இது வழிகாட்டும். பெண்களைப் பற்றிப் பெரிதாக பேசாத இவை, பெண்ணை தவறாக கையாள முனைந்ததை எடுத்து விளக்கும் வண்ணம் மூன்று அறிக்கையில் குறிப்புகள் உண்டு. (இது இரயாகரனின் கற்பனையல்ல. இன்னமும் விபரமாக எழுத உள்ளோம்) சந்ததியாரைக் கொன்றது நாங்கள் தான் என்ற புளட் தலைமையின் குறிப்பு, அசோக்கிசத்தின் அவதூறடங்கிய தொடர் பின்னோட்டத்தை, அதன் காழ்ப்பை இது அம்பலமாக்குகின்றது. இதை கவனத்தில் எடுத்து அசோக்கிசமும் இனியொருவும் மூடிமறைக்கும் இந்த ஆவணங்களைப் படியுங்கள்.

 

முன்னைய கட்டுரைகள்

 

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

 

அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)

 

தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல்

 

தொடரும்
                       

பி.இரயாகரன்
03.12.2009