இன்று ஒரு அரசியல் இயக்கம் முதல் தனி மனிதன் வரை கொண்டுள்ள அரசியல் நேர்மையானது என்பதை, நாம் எப்படி இனம் காண்பது? கடந்த காலத்தை எப்படி அவர்கள் காட்டுகின்றனர் என்பதுடன் தொடர்புடையது. தாங்களும், மற்றவர்களும் அதில் என்ன அரசியல் பாத்திரத்தை வகித்தனர் என்பதுடன் தொடர்புடையது. அதை விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு எப்படி உள்ளாக்கினர் என்பதுடன் தொடர்புடையது.
கடந்த காலம் முதல் எம் மக்களை இன்றைய இழிநிலைக்கு யார் கொண்டு வந்தனர் என்பதையும், அதைச் செய்தவர்கள் யார் என்பதையும் இனம் காட்டினரா என்பதையும், அதற்கு எதிராக போராடினரா என்றும் பார்க்கவேண்டும். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் என்ன செய்தனர், எதை மக்களுக்கு முன்வைத்தனர். யாருடன் சேர்ந்து நின்றனர் என்பதை எல்லாம் நாம் பார்க்கவேண்டும். நேர்மையான அரசியலை, இங்கு இதனுடாக நாம் இனம் காணமுடியும்.
மக்களுக்கு எதை அவர்கள் முன்வைத்தனர். எதை தீர்வாக வழிகாட்டினர். இப்படி அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யாத அனைத்தும், மீண்டும் மக்கள் விரோத எதிர்ப்புரட்சி அரசியல்தான். இதை யார் செய்தாலும் பொருந்தும். இங்கு இனியொரு மிக எடுப்பான எடுத்துக்காட்டு. கடந்த காலத்தில் ”இனியொரு”, மக்கள் முன் எதை எந்த அரசியலை முன் வைத்தது? அதற்காக எதைச் செய்தது?
கடந்தகாலத்தில் புலிகளின் இயக்க அழிப்புக்கு முன் இருந்த அனைத்து 1.பெரிய இயக்கங்களும், 2.புலிகளும், 3.கூலிக் குழுக்களும், 4.மாற்று அரசியல் பேசிய தளத்திலும், மக்கள் விரோதமே புளுத்துக் கிடந்தது. மக்கள் அரசியலையே நிராகரித்த போக்கே மேலோங்கி ஆதிக்கம் பெற்று நின்றது. இதை எதிர்த்து நின்று போராடியவர்கள் யார்? இங்கு நிலவிய மக்கள் விரோத அரசியல் முதல் அதன் நடைமுறைகள் வரை, ஈவிரக்கமற்ற விமர்சனத்துக்கு உள்ளாக்காத அன்றைய செயல்களும் சரி, இன்றைய அரசியல் மற்றும் நடைமுறைகளும் கூட, எதிர்ப்புரட்சி அரசியலாகும்.
உதாரணமாக புலிப் பாசிசம் வன்னியில் தோற்ற பின், குறிப்பாக புலித் தலைவரின் மரணத்தில் பின்னான புலிகள் மேலான பொது விமர்சனம் என்பது, உண்மைத் தன்மை கொண்டதல்ல. அதிலும் அங்கிருந்த ஒருவரிடம் இருந்து வெளிவரும் விமர்சனம் என்பது, இறுதிக் கட்டத்தில் நடந்ததை மட்டும் விமர்சிப்பது நேர்மையானதல்ல. மாறாக அங்கு நடந்ததை, புலிகளின் வரலாறு நெடுகிலும், அதன் அரசியலுக்கு எதிராக சொல்ல முற்படுவதன் மூலம் தான், உண்மையும் நேர்மையும் அடங்கியிருக்கின்றது. இங்கு இயல்பாகவே சுயவிமர்சனம், விமர்சனம் இரண்டும் ஒருங்கே அவசியமானது. இதுவன்றி புலி அரசியலின் பின் நின்ற ஒருவர், கடைசிக் காலகட்டத்தை மட்டும் விமர்சிப்பதன் மூலம், நேர்மையாக மக்களை ஒருநாளும் அணுக முடியாது. இதுவொரு அரசியல் உண்மை.
இதே அளவுகோல ;தான் இனியொருவுக்கும் அசோக்குக்கும் பொருந்தும். தங்கள் நேர்மையற்ற கடந்தகால நிகழ்கால சந்தர்ப்பவாத அரசியலை மூடிமறைக்க, என் மொழியை எடுத்து வைத்து, இதை இந்த சமூகத்துக்கு புறம்பான மொழியாக காட்டி அதைத் திரிக்கின்றனர். இந்த மொழி அரசியல் பற்றி பின்னால் நாம் விரிவாக பார்போம்.
அசோக்கினதும் இனியொருவினதும் கடந்தகால அரசியல் தான் என்ன? கடந்தகாலத்தைப் பற்றிய, அவர்களின் விமர்சனம் எங்கே? கடந்த காலத்தில் அசோக் புளட்டின் மத்திய கமிட்டியில் இருந்த காலத்தில் (1987 முன்) நடந்த சில நூறு உட்படுகொலைகள் பற்றி, அவர் எங்கே எதை எப்போது எழுதியுள்ளார். அதை மூடிமறைத்தே தான், இதுவரை காலமும் எல்லா கொலைகாரருடனும் கூடி அரசியல் செய்தவர். அவர் எழுதுகின்றார் "இக்காலங்களில் நாங்கள் காடுகள் என்றும் மேடுகள் என்றும் அலைந்தோம். மக்களோடு இரண்டறக்கலந்தோம். மக்களை அரசியல் மயப்படுத்தினோம். எங்கள் கால்படாக் கிராமங்கள் வடக்கு கிழக்கில் இல்லையென்றே கூறமுடியும்." என்கின்றார். என்ன அரசியல் வைத்தீர்கள், என்ன அரசியல் மயப்படுத்தினீர்கள் என்று பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் கால்பட்ட கிராமங்கள் தோறும் சென்று, அடுத்த புத்தாண்டில் தமிழீழம் என்று கூறி, நீங்கள் அழைத்துச் சென்ற இளைஞர்களின் ஒருபகுதியைக் கொன்றவர்களைச் சார்ந்தவர்கள் நீங்கள். இதை எங்கே உங்கள் சுயவிமர்சன அரசியலில் முன்வைத்துள்ளீர்கள். பெருமையாக அரசியல் மயப்படுத்தியதாக, இந்த கொலை அரசியலை நியாயப்படுத்துகின்றீர்கள். உங்களால் அழைத்துச் சென்று கொல்லப்பட்டதை முன் வைக்காத வரை, அனைத்துக் கொலைகார பாசிச இயக்கத்துடனும் அரசியல் உறவை பேணமுடியும். இந்திய றோவால் உருவாக்கப்பட்டதும், இன்றும் இந்தியாவில் வைத்து பராமரிக்கப்படும் ஈ.என்.டி.எல்.எவ் என்ற கூலிக்குழுவின் இன்றைய ஐரோப்பியாவின் முக்கிய பிரதிநிதியான ஜென்னியுடன் கூட்டு சேர்ந்து, இடதுசாரி ("பிரான்சில் இருக்கும் எமது இடதுசாரி தோழர்களோடு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டித்து கண்டன ஊர்வலத்தை நடாத்தினோம்") அரசியல் முதல் அரசியல் பின்னோட்ட அரசியல் வரை நடத்த முடிகின்றது. நீங்களும் சேர்ந்தே உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ், இந்திய கூலிப்படையாக இலங்கை சென்று நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள் எல்லையற்றவை. அதைப் பற்றி பேசாது மொழியை வைத்து பேசும் பெண்ணியம் முதல் அந்த கூலிக் கும்பல் மக்கள் மேல் நடத்திய படுகொலை பற்றி பேசாத அரசியல் தான், தன்னார்வக் குழுவை மட்டும் காட்டி அரசியல் செய்ய முற்படுகின்றது.
அன்று நீங்கள் PLOTE இன் மத்தியகுழு உறுப்பினராக இருந்தபோது இயக்கம் நடத்திய படுகொலை அரசியலுக்கு எதிராக, எதைத்தான் சுயவிமர்சனத்துடன் முன்வைத்துள்ளீர்கள். அதற்கு எதிரான உங்கள் அரசியல் தான் அன்று என்ன? இன்று என்ன? அனாதைகளாக நூற்றுக்கணக்கில் மரணித்தார்களே, அவர்கள் யார்? காடு மேடு எல்லாம் திரிந்து பிடித்துச் சென்ற கொல்லப்ட்டவர்கள் பற்றி நீங்கள், அவர்கள் யார்? என்று, எங்கே எப்போது தான் சுயவிமர்சனத்துடன் முன்வைத்தீர்கள்!? அதை உங்கள் அரசியல் மூலம் எப்போது வெளிக்கொண்டு வந்தீர்கள். அதை எல்லாம் நேர்மையாக நீங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தால், எங்கள் போராட்டத்தின் வலி தெரிந்திருக்கும். எங்கள் கோபமான மொழியின் வலிமை தெரிந்திருக்கும்.
அனாதைகளாக அன்று மடிந்த அந்த மானிடங்கள் பற்றி பேசாத, அதைப் பதிவுக்கு கொண்டு வராத நேர்மை, அந்தக் கொலைகார கும்பலை இனம் காட்டாத அரசியல் நேர்மை என்று ஒன்று எம் மக்கள் முன் கிடையாது. நீங்கள் காடுமேடு எல்லாம் அலைந்து, கூட்டிச் சென்று, அங்கு வைத்து கொலையுண்டார்களே அந்த இளைஞர்களுக்கு நடந்த கதியைப் பற்றியும், அவர்கள் யார் யார் என்றும், யாரால் எந்த நிலையில் வைத்து கொல்லப்பட்டனர் என்பதையும் தமிழ் மக்கள் முன் சொன்னீர்களா? சொல்வீர்களா? சொல்லுங்கள். அப்போது உங்களை இதற்காகத் தன்னும் நாம் மதிப்போம். இதைச் செய்யாத, அதை மூடிமறைத்து கொலைகாரருடன் சேர்ந்து செய்யும் உங்கள் அரசியலுக்கு எதிரான எமது மொழி, வன்மமாக மாறிவிடுகின்றது.
தொடரும்
பி.இரயாகரன்
01.12.2009