Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

 

னாலும் இம்முறை மாவீரர் நாள் கொண்டாடுவதற்காக யேர்மனியில் மக்களைத் தேடிப்புறப்பட்டுள்ளனர் வசூல்ராஜாக்கள். மாவீரரை நினைவுகூர மக்களிடம் பணம் வசூலிபபில் மும்முரமாக யேர்மனியில் பல பாகங்களிலும் ரிக்கெற்றுடன் புறப்பட்டுள்ளனர் பிரதிநிதிகள். 20,40,50,100யூரோக்கள் வகையாக இந்தப் புதிய விற்பனை ஆரம்பமாகியுள்ளன.

maveerar

இந்த ரிக்கெற்களை மக்கள் வாங்காவிட்டால் மாவீரர்நாளை நினைவு கொள்ள முடியாத பஞ்சத்தில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை வசூல் ராஜாக்கள் காட்டுகின்றனர். எமக்காக அணைந்த உயிர்களின் நினைவுநாளைக் கொண்டாட நிதியொரு பிரச்சனையாக இருக்கக்கூடாதென்ற எண்ணத்தில் இவ்விடயத்தில் யாரும் கேள்வி கேட்காமல் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு மக்களிடம் ரிக்கற் விற்றுத்தான் பணம் வாங்கவேண்டுமா?? மக்களின் பணத்தில் இயங்குகின்ற நிறுவனங்கள், கடைகள், கோவில்கள் இவைகளின் வருமானங்கள் எங்கே??யாரிற்கு போகின்றது??

மே 18ன் முடிவுகளின் பின்னர் பணம் கறக்க முடியாமல் இருக்கும் இவர்கள் , கோடிக்கணக்கான சொத்துக்களை யார் சுருட்டுவது என்பதில் இருந்து வரும் போட்டி வெளியகப்புலனாய்வு(அம்புறுஸ் குழு) , நெடியவன் குழு(கஸ்ரோவிற்குப் பின்னாக) கே.பி குழு என ஆளாளுக்கு ஆளையாள் துரொகியாக்கித் திரிவதும் நெடியவன் குழுவின் பின்னணியில் இயங்கும் வாகீசன் மற்றும் இரும்பொறை (நிர்மலன் நேர்வே) குழுவினரின் இந்த நிதி சேகரிப்பு உண்மையில் மாவீரருக்கானதா ? இன்னும் மக்களை ஏமாற்றி மாவீரர் பெயரில் உண்டியல் குலுக்க மக்கள் இவர்களுக்கு உதவத்தான் வேண்டுமா ? கேள்விகள் தவிர்க்க முடியாததாகிறது. ஆக உழைக்க வழியற்றிருந்தவர்களுக்கு மாவீரர் பெயரால் கார்த்திகை மாதம் கொட்டிக் கொடுக்கும் மாதமாகியுள்ளது.

தாயகத்தில் மக்களின் அகதிமுகாம் வாழ்வு அவலம் நிறைந்த துயரம் எதுவும் மாறாத நிலையில் இருக்கின்றனர். இதையும் விட தாயக விடுதலையை மட்டும் கனவாக வரித்த ஆயிரமாயிரம் போராளிகள் இலங்கையரச புனர்வாழ்வென்ற பெயரில் அமைந்த வதைகூடங்களில் வாழ்வுமின்றிச் சாவுமின்றி அவலப்படுகின்றனர். அவர்களுக்காக இதுவரையில் இந்த யேர்மனிய வசூல் ராஜாக்கள் எந்த உதவியையும் செய்யவுமில்லை செய்ய முயற்சிக்கவுமில்லை. கேட்டால் நாங்கள் 2மில்லியன் ரூபாய் கொடுத்து தளபதிகளை வெளியில் எடுத்துள்ளோம் லட்சக்கணக்கில் முகாம்களில் உள்ள போராளிகளுக்கு உதவுகிறோம் என்ற பித்தலாட்டக் கதைகளைச் சொல்லித் தப்பித்துவிடுகிறார்கள். இவர்களது மில்லியன்கள் இந்த நபர்களின் சொந்த உறவுகளுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற எந்தப் போராளிக்கும் இந்த நிதிகளிலிருந்து ஒரு சதமும் இன்னும் கிடைக்கவில்லை. உள்ளவர்கள் உறவினரை வெளிநாடுகளுக்கு அழைக்க இல்லாத போராளிகள் வதைபடும் நிலமைதான் நீடிக்கிறது.

கையிலுள்ள லட்சங்கள் தனிப்பட்ட சொத்துகளாக கோவில்களிலும் வணிக நிறுவனங்களாகவும் வீடுகளாகவும் மாறிக்கொண்டிருக்கும் சொத்துச் சேர்ப்பு வருமானப் பெருக்கத்தை புதுப்பிக்க மாவீரரின் தியாகங்களைக் கையிலெடுத்துள்ள இந்தத் துரோகத்திற்கு துணை நிற்கும் யாவரையும் மக்கள் இனங்காண வேண்டும். இந்த ஊர்ப்பணத்தில் கொழுக்கும் தடிமாடுகளை உழைத்துத் தின்னச் சொல்ல வேண்டும்.

இந்தப்பித்தலாட்டக் குழுக்களிடம் இலட்சியமுமில்லை ஈழக்கனவுமில்லை இவர்களது ஒரே நோக்கம் இவர்கள் வாழ இதுவரை இழந்த மாவீரர்களையும் முட்கம்பிகளுக்குப் பின் வாழும் போராளிகளின் உயிர்களையும் விற்பனையாக்குவது , அடுத்த தலைமையை யார் ஏற்று உழைப்பது என்ற போட்டியும் தான். இதைத்தவிர எந்த இலட்சியமுமில்லை.
„உரியவன் இல்லாட்டில் ஒரு முளம் கட்டை“ என ஊரில் ஒருவரி சொல்வார்கள். இந்தப் பெருச்சாழிகள் உரியவரை மட்டுமல்ல அவர் பின் நின்ற எத்தனையோ ஆயிரம் பேரின் கனவுகளையும் அவர்கள் எதற்காகத் தம்மைத் தற்கொடை செய்தார்களோ அவர்களையெல்லாம் வைத்தும் தாம் வாழும் வழியைத்தான் தேடுவதில் முனைப்போடு நிற்கிறார்கள்.

தமது சகோதரர்களைப் பிள்ளைளைகளை உறவுகளைக் காடுகளிலும் இராணுவத் தடைமுகாம்களுக்குள்ளும் இருந்து மீட்டுத்தரும்படி உறவுகள் வசூல்ராஜாக்களின் தொலைபேசிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது வாயை மூடவைக்கும் முயற்சியாக புதிய புதிய பெயர்களில் இணையத் தளங்களை ஆரம்பித்து தாயகத்தில் மிஞ்சிக்காடுகளில் ஒரு நேர உணவுக்கே அல்லல்படும் பல போராளிகளையும் சில தளபதிகளையும் இராணுவத்தினரால் இயக்கப்படும் ஒட்டுக்குழுவென்றும் இராணுவத்தினரின் கூலிகள் என்றும் புரளியைக் கிழப்பியுள்ளார்கள்.
ஆரம்பத்தில் தளபதி ராம் பல்லாயிரம் போராளிகளுடன் காடுகளிற்குள் தலைவரையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் என்று கதை விட்டவர்கள் இன்று அதே ராம் , மற்றும் தயாமோகன் , நகுலன் என்று அனைவரையும் துரோகியாக்கியது மட்டுமல்ல காடுகளில் எஞ்சியிருக்கும் போராளிகளும் இலங்கை இராணுவத்திற்கு துணைபோய் விட்டதாக நெடியவனின் மேற்பார்வையில் இயங்கும் இணையத்தளத்தில் செய்திகளும் போடுவதுடன் புலிகளின் தலைமைச்செயலகம் வன்னியிலிரந்து அறிக்கை விடுவதாக எழுதுகிறார்கள்.
வுன்னியில் எஞ்சியிருப்பவன் எல்லாமே துரோகியென்றால் யார் அந்த அறிக்கைகளை விடுவது….? இவர்கள் பட்டியலில் துரோகியாகாமல் மிச்சம் இருப்பது பொட்டு அம்மானும் தலைவரும் மட்டும்தான்.விரைவில் இவர்களும் துரோகிகள் என்று இவர்கள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏத்தனையோ போராளிகள் தலைமறைவு வாழ்வு வாழ்கிறார்கள். அவர்கள் இலங்கைக்குள் வாழ ஒரு அடையாள அட்டையெடுக்கக்கூட வசதியற்று வேடுவர்கள் போல காடுகளில் தமது வாழ்வைக் கழிக்கிறார்கள். இவர்களில் சிலர் குப்பிகளில் தங்கள் கதைகளையும் முடித்துள்ளது வேறுகதை.

வெளிநாடுகளில் உள்ள அந்தப் போராளிகளின் உறவுகள் சொல்வது பொய்யென்று காட்டவும் அவர்களெல்லாம் துரோகியென்றால் இங்கிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு நேர உணவுக்கான வழியையும் அடைக்கவும் கனகச்சிதமாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் இந்த வசூல்ராஜாக்கள்.

santhi

கார்த்திகை27இல் இந்தக் கள்வர்களின் சாயம் வெழுத்துவிட முன்னர் சுருட்டிக் கொண்டு சுகமாய்த் தின்ன மாவீரரைச் சொல்லி வரும் இந்த நபர்களுக்கு எவ்வித உதவியையும் செய்யாமல் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். மாவீரருக்கான மரியாதையை கௌரவத்தை நம்மால் தெரிவிக்க முடியுமென்ற உண்மையை இந்த வசூல்ராஜாக்களுக்குப் புரிவிக்க வேண்டும்.

அவர் வருவாரா அடுத்தவர் மாவீரர் உரை தருவாரா என்ற போட்டியில் இதுவரை ஜரோப்பா..இந்தியா..கனடா என 3தரப்பால் மாவீரார் உரை தயாராகுவதாக தகவல்கள் கிடைக்கிறது. இதுவரை நாம் எதிர்பார்த்திருக்கும் மாவீரர் உரையை இம்முறை யாராவது ஒரு கழுதை ஒலிப்பதிவாக அல்லது அறிக்கையாக வெளியிட்டுத் தலைவனின் பெயரையும் இதுவரை ஆகுதியான வீரர்களையும் விலைபேசப்போகிறது. அடுத்த தலைவராகும் கழுதைகளின் கனவில் எங்கள் நேசிப்புக்குரிய தலைவனின் தியாகம் மறுபடியும் ஆராட்சிக்கு உள்ளாக்கப்படப்போகிறது.

கனவுகளில் தமிழினம் வாழவேண்டும் தங்கள் உண்டியல்கள் நிரம்ப வேண்டுமென்ற கவனத்தில் உள்ள ஊரையடிச்சு உலையில் போடும் கள்வர்கள் தொடர்ந்து மாவீரர் பெயரால் உழைக்க வழி செய்யப்போகிறோமா ? அல்லது இந்தத் துரோகத்தை தட்டிக் கேட்கப்போகிறோமா ? தூயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளை
உண்டியலாக்காது முடிவு எடுக்கவேண்டியது புலம்பெயர் தமிழர்கள் கையில்

சாந்தி ரமேஷ் வவுனியன

http://www.psminaiyam.com/?p=479