Fri01172020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!

  • PDF

2009 நவம்பர் ஒன்பதாம் திகதி, நேபாளத்தின் சில மாவட்டங்களை இணைத்து "கிராட் சுயாட்சிப் பிரதேசம்" அறிவிக்கப் பட்டுள்ளது. ஐக்கிய மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தன்னை அறிவித்துக் கொண்ட கோபால் என்பவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய எழுச்சிக் கமிட்டி அங்கத்தவர்கள் விரைவில் தெரிவு செய்யப்படுவர் என்றும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தின் ஒரு பகுதியில் சுதந்திரப் பிரகடனம் செய்தவர்களுக்கு, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மாவோயிஸ்ட் கட்சியின் தலைமைப்பீடம் ஆதரவு வழங்கியுள்ளது. மேலும் சில மாவட்டங்கள் "தனி நாடு" பிரகடனம் செய்ய உத்தேசித்துள்ளன. இத்தகைய தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம், சமாதான ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் என, சில அரசியல் அவதானிகள் அஞ்சுகின்றனர்.

 

லட்சக்கணக்கான மாவோயிஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரில் அரசாங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்கள் கைகளில் அரச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு எதிர்பாராத விதமாக, ஐ.நா. மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது "நிலைமையை மோசமாக்காமல், சமரசமாக போகும்படி", ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் கூறியுள்ளார். ஐ.நா. செயலதிபரின் கூற்று, அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. காத்மண்டு ஆர்ப்பாட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த போதிலும், "தனி நாடு சுதந்திரப் பிரகடனம்" பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தில் தொடரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பின்னால் உள்ள, இந்திய-சீன ஆதிக்கப் போட்டி, வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றது. நேபாளத்தை பகடைக்காயாக்கி பனிப்போரில் ஈடுபட்டுள்ள இந்தியாவும், சீனாவும் தமக்கிடையிலான நேரடி மோதலை தவிர்க்கப்பார்க்கின்றன.

 

 

நேபாளத்தின் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள, நாம் சற்று வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷார் விட்டுச் சென்ற காலத்தில் இருந்து, நேபாளம் இந்திய காலனி போன்றே நிர்வகிக்கப்பட்டு வந்தது. நேபாளம் இந்தியாவுடன் பெருமளவு வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தது. மறுபக்க எல்லையில் சீனா இருந்த போதிலும், சீனாவுடனான உறவு பெயரளவில் மட்டுமே இருந்தது. தசாப்த காலமாக மாவோயிஸ்டுகளுடன் வெல்ல முடியாத போரில் ஈடுபட்டிருந்த மன்னர் ஞானேந்திரா சீனாவிடம் ஆயுதங்கள் வாங்கினார். அதுவரை நேபாள இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வந்த இந்தியாவிற்கு இது பிடிக்கவில்லை. 240 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள் எழுச்சிக்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியது. இந்தியா கை விட்டு விட்டதாலேயே, மன்னரும் சிம்மாசனத்தை விட்டு நகர வேண்டிய நிலை வந்தது.

 

இதற்கிடையே இந்தியாவில் "நாடு கடந்த நேபாள அரசை" நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது. மன்னரால் விரட்டப்பட்டு இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்த பாராளுமன்றக் கட்சிகளுடன், ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளையும் சேர்த்து, ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது. முடியாட்சியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் இந்திய சார்பு அரசாங்கத்தை அமைப்பது தான் நோக்கம். இத்தகைய திட்டம் ஏற்கனவே சிக்கிம் என்ற தேசத்தில் (தற்போது இந்திய மாநிலங்களில் ஒன்று) முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

 

மக்கள் எழுச்சிக்கு அடிபணிந்த மன்னர், ஜனநாயகத் தேர்தல்கள் நடத்த ஒப்புக்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மாவோயிஸ்ட்களும் பங்கெடுக்க வேண்டும் என்றே இந்தியாவும் எதிர்பார்த்தது. தேர்தலில் எப்படியும் அதுவரை ஆட்சியில் இருந்த இந்திய சார்பு கட்சிகளே வெற்றி பெறும், மாவோயிஸ்ட் கட்சிக்கு பெரும்பான்மை வாக்குகள் விழாது என்று, இந்தியா தப்புக்கணக்கு போட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, 2008 ம் ஆண்டு தேர்தலில், மாவோயிஸ்ட் கட்சியினர் 38 % வீதமான வாக்குகளைப் பெற்று, பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் சென்றனர். அப்போதும் சில அவதானிகள், பதவி சுகம் கண்ட மாவோயிஸ்ட்கள் புரட்சியை கைவிட்டு விடுவார்கள், அல்லது முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்தியாவின் தயவை நாடுவார்கள் என்று கணித்தார்கள்.


எதிர்பாராவிதமாக மாவோயிஸ்ட் அரசாங்கம், நேபாள வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. புதிய அரசாங்கத்தில் யார் பிரதமராவது என்ற நீண்ட இழுபறிக்கு பின்னர், மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பிரதமரானார். அதுவரை நேபாளத்தில் புதிதாக பதவியேற்கும் பிரதமர்கள், முதலில் இந்தியா சென்று ஆசீர்வாதம் வாங்கிய பிறகு தான் மறு வேலை பார்ப்பார்கள். அதற்கு மாறாக பிரசந்தாவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் சீனாவை நோக்கியதாக இருந்தது. பிரசந்தா பதவியேற்ற அதே காலகட்டத்தில், இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை பார்வையிட செல்வது என்ற சாட்டில், அந்த விஜயம் அமைந்திருந்தது. அதே காலகட்டத்தில் நேபாளத்தில் இடம்பெற்ற திபெத்தியர்களின் போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டது. இதன் மூலம் பிரசந்தா அரசு, சீனாவின் நன்மதிப்பை பெறத் தவறவில்லை.

 

இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பிரிவினையை தூண்டும் சக்திகளுக்கு நேபாளம் இடம்கொடுக்க கூடாது என்று சீனா உறுதி மொழி வாங்கிக் கொண்டது. அதற்கு மாறாக நேபாளத்திற்கு தேவையான பொருளாதார, இராணுவ உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தது. எது எப்படி இருந்த போதிலும், அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் யாவும், நேபாளம் சீனாவுடன் நெருக்கமாகி வருவதை எடுத்துக் காட்டின. நேபாள அறிவுஜீவிகள் குழுவொன்றுக்கு சீனாவின் நிபுணத்துவ பயிற்சி வழங்கப்பட்டது. பெப்ரவரி மாதம், சீனா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவொன்றும், சீன இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் நேபாளம் வந்தனர். மாவோயிஸ்ட் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படை தலைமைக் கமாண்டர் நந்திகிஷோர் தற்போது சீனாவில் தங்கியிருப்பதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது.

 

நேபாள உள்விவகாரங்களில் மீண்டும் இந்தியா தலையிட்டது. மாவோயிஸ்ட் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. பசுபதிநாத் ஆலய மதகுரு சம்பந்தமான சர்ச்சை நிச்சயமாக இந்தியாவிற்கு எரிச்சலைக் கொடுத்திருக்கும். காலங்காலமாக தென்னிந்தியாவில் இருந்து சென்ற பிராமணர்களே, பசுபதிநாத் சிவன் கோயிலின் தலைமை மதகுருக்களாக வீற்றிருந்தனர். மாவோயிஸ்ட் அரசாங்கம் உள்நாட்டு நேபாள பிராமணரை பதவியில் அமர்த்தியது. ஒரு சுற்று இந்தியா சென்று வந்த சர்ச்சை உச்ச நீதிமன்ற படியேறியது. மாவோயிஸ்ட்கள் வேறு வழியின்றி விட்டுக் கொடுக்க வேண்டியேற்பட்டது.

 

ஐ.நா. சமாதானத் திட்டப்படி நேபாள அரச படைகளில், மாவோயிஸ்ட் போராளிகளை சேர்த்துக் கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டது. மே மாதம், மாவோயிஸ்ட் அரசாங்கம் அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர விரும்பிய போது, இராணுவ தளபதி கத்தாவால் மறுத்துவிட்டார். (இந்தியா சார்பானவர் என கருதப்படும்) இராணுவத் தளபதியின் பிடிவாதம் காரணமாக, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பிரசந்தா பதவியில் இருந்து நீக்கிய தளபதியை, அன்று மாலையே ஜனாதிபதி மீண்டும் பதவியில் அமர்த்தினார். ஜனாதிபதியின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று ஆட்சேபித்த மாவோயிஸ்ட்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். எதிர்க்கட்சி ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டனர்.

 

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரு தரப்பிலும் நிலவிய நம்பிக்கையின்மை. திரைமறைவில் இந்தியாவின் சதிவேலைகள். இந்திய எஜமானுக்கு சேவை செய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள். இது போன்ற பல காரணங்கள், தற்போதைய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துள்ளன. இதற்கிடையே சோஷலிச புரட்சிக்கான போராட்டம் தொடரவேண்டும் என்று மாவோயிஸ்ட் கட்சிக்குள்ளே அழுத்தம் எழுந்தது. குறிப்பாக இளைஞர் அணியினர் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அரசியலில் ஆர்வம் காட்டினர்.

 

மாவோயிஸ்ட்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு காரணம், ஒத்த தன்மை கொண்ட அரசியல் கொள்கை அல்ல. போராட்டம் நடைபெற்ற காலங்களில், மாவோயிஸ்ட்கள் சீன அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். இன்றைய சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவ சிந்தனையுள்ள திரிபுவாதிகளாக கணிக்கப்பட்டனர். அதே நேரம் நேபாள மன்னருடன் இராஜதந்திர உறவு வைத்திருந்த சீனா, மாவோயிஸ்ட்களின் எழுச்சி தனது நாட்டையும் பாதிக்கும் என எண்ணியது. மாறி வரும் உலகின், பூகோள அரசியல் நேபாள மாவோயிஸ்ட் கட்சியையும், சீனாவையும் நண்பர்களாக்கியுள்ளது. அச்சுறுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புறம், அதன் பிராந்திய நலன் காக்கும் இந்திய வல்லரசு மறு புறம், இவற்றை எதிர்த்து நிற்க வேண்டுமானால் சீனாவின் நட்புறவு அவசியம். சீனாவைப் பொறுத்த வரை, நேபாளம் இந்தியா எல்லையோரமாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில், மாவோயிஸ்ட்கள், சீனா இருவரினது நலன்களும் ஒத்துப் போகின்றன. இந்திய ஆக்கிரமிப்பு சவால்களை மாவோயிஸ்ட்கள் துணிச்சலாக எதிர்த்து நிற்பதற்கு, சீனாவின் பக்கபலம் காரணம் என தலைநகர் காத்மண்டுவில் பேச்சு அடிபடுகின்றது. Nepal Maoist's Agitation Enjoys China Support: Prachanda Claims

 

Last Updated on Tuesday, 17 November 2009 21:23