Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாகம்-2

ரயாகரன் :
வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அது முடிவுக்கு வந்திருக்கின்றது. புலத்துப் புலிகள் அதனுடைய நிதியாதாரத்துக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளின் பாசிசம் தகர்ந்து போக அரசு பாசிசம் மேலெழுந்து வந்துள்ளது. எதைப் புலி செய்ததோ அதை இன்று அரசு செய்துகொண்டிருக்கின்றது. கடந்தகாலத்தில் புலிப் பாசிசம் எனறு சொல்லிக் கொண்டு அதற்கு எதிராகப் போராடினோமோ அல்லது எதிர்த்து நின்றமோ அதேயளவு காரணங்கள் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்டு இன்று அரசை ஆதரிப்பவர்களாக பெரும்பான்மையாக புலியெதிர்ப்புப் பேசியவர்கள் மாறி நிற்கின்றார்கள். ஒரு மாற்றத்தை நோக்கிய தேவை அவசியம் என்பதைத்தான் நாம் இன்று சொல்லி நிற்கின்றோம்.

சுனந்த அவர்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் இணைந்த வேலைத்திடம் அவசியமானது என்பது தெளிவானது. இதை நிராகரித்துவிட்டு குறுக்குவழியால் செல்ல முடியாது. சரோ அவர்கள் குறிப்பிட்டதுபோல் பெண்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது என்றாலும்கூட அந்தப் பெண்கள் தமது சுயமான சிந்தனைமுறை அவசியமானது என்பதை பெண்கள் சார்ந்த பிரச்சினைக்கூடாக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இன்றைய தேவை ஒவ்வொருவரும் தமது சுயம்சார்ந்த சிந்தனையை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதுதான். சரோ குறிப்பிட்டதுபோல் நிதியாதாரங்களில் அல்லது உதவிகளில் தொடர்ந்து தங்கவைப்பது அந்த மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருக்கும் நிலைமையைத்தான் உருவாக்கும். இது இன்றைய எதார்த்தமான உண்மை. அரசோடு பேசித்தான் நாம் உதவிகளைச் செய்யமுடியும் அல்லது அரசோடு மட்டும் பேசித்தான் நாம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சொல்பவர்கள் அனைவரும் மக்களைத் தொடர்ந்து பிச்சைக்காரர்களாக வைப்பதையே செய்யமுடியும்.

மக்கள் தமது சுயத்தை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என சொல்ல முனைவதே இன்றைக்குத் தேவையான அரசியல். இதை யார் முன்னெடுக்க வருகிறார்களோ அவர்கள்தான் மக்களுக்கு உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்க முடியும். 

திலக் :
மேடையில் இருப்பவர்கள் அதிகமாக கருத்துச் சொல்வதும் மற்றவர்கள் கேள்வி மட்டும்தான் கேட்பது என்பதுமான நிலைமைகள் காணப்படுகின்றது. இது பாடசாலை விடயங்களல்ல. கேள்விகளை மட்டுமன்றி கருத்துகளும் கேள்விகளும் இணைந்த கேள்விகளுக்கு இடம்கொடுப்பது நல்லது என நினைக்கிறேன்.

சுனந்த தேசப்பிரிய அவர்கள் முதலாளித்துவத்தின் கபட நாடகங்கள் மோசடிகள் எல்லாவற்றையும் மிக ஆழகாகவே சொல்லியிருக்கிறார். அத்தோடு அவர்கள் போடும் வெற்றுக் கோசங்கள், நீதி நியாயம் என்பன பற்றியெல்லாம் விலாவாரியாக அம்பலப்படுத்தியிருந்தார். அதற்கு எனது பாராட்டுகள்.

அவர் ஒரு முன்னாள் ஜேவிபி போராளி. தலைமை மட்டத்தில் இருந்தவர். மக்களை இணைத்துக்கொள்ளாத அல்லது அதற்கு கால அவகாசம் வழங்காத போராட்டம் என்பதால் அது இந்தியாவின் துணையோடு ஒடுக்கப்பட்டது. இருந்தும் அப்படியான ஒரு போராளி நீண்ட அனுபவங்களைப் பெற்றுள்ளார். விரிந்த பார்வைகளை அவர் அடைந்துள்ளார். அவரது பேச்சை அவதானித்தவர்களுக்குத் தெரியும் அவர் மக்கள் போராட்டங்களை மக்கள் ஒன்றிணைவை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டார். புகலிடத்தில் மக்கள் இணைந்த போராட்டங்களையும் மக்கள் அழுத்தங்களையும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி அவர் தமது சிந்தனைகளைச் சொல்வது எம்போன்றவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

சுனந்த :
புலம்பெயர் சமூகம் பற்றிய நிபுணத்துவம் கொண்டவனல்ல நான். விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் பத்தாயிரம் இருபதினாயிரம் என மக்கள் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்கள். போர் உக்கிரமடைந்த காலத்தில் போரை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவ்வாறான போராட்டங்களை நடத்தினார்கள். 3 இலட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தடுக்கப்பட்ட நிலையில் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி பாரிய ஆர்ப்பாட்டங்கள் செய்ததாக நான் அறியவில்லை. ஜெனீவாவில் மனித உரிமைகளுக்கான பேரவை இருக்கின்றது. அங்கு அடிக்கடி வந்துபோபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள். செப்ரம்பர் மாதத்தில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கப் பட்டபோதும் நான் கண்ட காட்சி  ஒரேமாதிரியானதுதான். அதாவது விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள்தான் வந்துபோனார்கள். சுதந்திரமான தமிழர்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவதில்லை அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் நாம் கூடுதலான அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

அதேநேரத்தில் இலங்கையின் யதார்த்த நிலைமையை நாம் எடுத்துப் பார்க்கின்ற போதும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என கணிப்பிடப்படுகிறது. உரிய மதிப்பீடு இன்னும் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த மதிப்பீடு எடுக்கப்படுகின்றபோது இத் தொகை குறையக்கூடிய சாத்தியக்கூறுகள்தான் அதிகமாக இருக்கின்றன. இந்த வீழ்ச்சி ஏற்பட்டால் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது சம்பந்தமாகவும் எமது கவனம் திசைதிருப்பப்பட வேண்டும். இன்று இலங்கையில் சனத்தொகை எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருந்தவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று முஸ்லிம் மக்களின் தொகை இரண்டாமிடத்துக்கும் தமிழ் மக்கள் மூன்றாவது இடத்துக்கு வருவதும் நிகழலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் நிலைமையை அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்கூடியது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.

சுகன் :
ஒரு கேள்வியாக எடுக்காமல் என்னுடைய ஒரு கருத்தாக எடுங்கள். வெளிநாட்டிலை இருக்கயிக்கை பயம் அதாவது அச்சம் இல்லை. கடவுளுடைய பக்கத்தில் அவருக்கு பயம் எப்படியிருக்கும் என்று தெரியாது. ஏனென்றால் மனிசற்றை பயத்திலை அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போயிட்டுது. அதாலை பயம் என்றால் எப்படியிருக்கும் என்று பார்க்க அவர் ஒரு ஆளை படைச்சார். படைச்ச உடனை, அது கடவுளை கண்டவுடனை கும்பிட்டு மண்டியிட ஆரம்பிச்சுது. பயம் எண்டது மனுசனுக்கு மட்டும் உரியதாக கடவுள் எடுத்துக் கொண்டதாக ஒரு இந்துப் புராணம் சொல்லும். பயமும் அச்சமும் எங்களுக்குரிய மிகச் சிறப்பான குணங்கள். வெளிநாட்டிலை அது எங்களுக்கு இல்லாததாலை நாங்கள் சில மதிப்பீடுகளை அதுசார்ந்தும் எடுத்திருக்கவேண்டியிருக்கு. சுனந்தவின கருத்து இந்த அச்சத்தை கவனத்தில் எடுத்தாலும்கூட இந்த தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற அதனுள் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற வேறுபாடுகளையும் வித்தியாசங்களையும் கருத்தில் எடுக்கவில்லை. அதுகுறித்த விளக்கமான ஒரு உரையை நிகழ்த்த முடியாத ஒரு சூழலாகவும் இருக்கலாமென நான் கருதுகிறேன்.

குறிப்பாக மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், கிழக்கு மாகாண மக்கள், தலித்துகள் இன்னபிற வேற்றுமைகளை சுவித்து அரசியல் அதிகாரங்களை வைத்திருக்கின்ற இந்த அமைப்பை அதுக்குள்ளை இருந்து பார்த்தால் மட்டும்தான் உணரக்கூடியதாய் இருக்குது. சிறுபான்மையினங்கள் எப்பவுமே யுத்தகாலத்திலோ எப்பவுமோ அரசுடன் பேரம் பேசியோ பேரம் பேசாமலோ கிடைக்கிறதைப் பெற்றுக்கொண்டு, அதிலைவந்து தங்களை இணைச்சுக் கொள்ளுறதுதான் தங்கடை இருப்பை உத்தரவாதப்படுத்தும். இதற்கான சிறப்பான உதாரணம் இந்திய பார்ப்பனர்கள். அவர்கள் மிகச் சிறுபான்மை. ஆனால் 6500 இனக்குழுமங்களை கையாளுகின்ற (பொசிற்றிவ்வா நெகற்றிவ்வா என நான் சொல்ல வரவில்லை) சிறுபான்மையை அழிஞ்சுபோகாமல் காப்பாற்றுகின்ற நிலை இருக்கு. சிறுபான்மை சமூகங்களின்ரை இன்றைய பிரச்சினை 500 பொசிசனுக்கு 6500 பேர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது நீங்கள் வாக்களிக்கிற பிரதிநிதி போய் எதிர்க்கட்சி வரிசையிலை போய் உட்காரமுடியாது. அவர் ஒரு எதிர்க்கட்சியிலையோ அல்லது ஒரு புரட்சிகர கட்சியிலையோ இருக்கமுடியாது. அந்த சமூகம் அப்பிடி றண் பண்ண முடியாது. குறிப்பாக யுத்தத்துக்கு பின்னால் வந்த சூழலில் எப்பவுமே அரசு சார்ந்துதான் இயங்க வேண்டிய தேவை அந்த சமூகங்களுக்கு இருக்குது.

60 ஆண்டுகாலமாக தலித்துகளுக்கு எதுவுமே கிடைக்காத சூழலில் தலித்துகள் பாராளுமன்றத்துக்குப் போறதுக்கு தலித்துகள் மட்டும்தான் வாக்களிக்க வேண்டியிருக்கிற சூழலிலை இலங்கையின்ரை அரசியலமைப்புச் சட்டத்திலை தலித்துகளுக்கான சட்டவரையறையை அல்லது உத்தரவாதத்தை எப்படி நீங்கள் வரையறை செய்யிறது அதுக்கான சாத்தியம் உண்டா எனபதை தயவுசெய்து விளக்குங்கள்.

சுனந்த:
உங்களுடைய கடைசி விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவில் சட்டத்தில் தலித்துகளுக்கு என வரையறுக்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் இலங்கையில் இல்லை. ஆனால் தலித்துகளுக்கும் ஏனைய சிறுபான்மை குழுக்களுக்கும் சம சந்தர்ப்பம் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திரிகா தான் பதவியில் இருந்தபோது ஒரு சட்டமூலத்தை (அதை ஜி.எல் பீரிஸ் வரைந்திருந்தார்) பாராளுமன்றத்துக்கு முதல் வாசிப்புக்குக் கொண்டுவர முன்னரே அவருடைய ஆளும் கட்சியினர் மத்தியிலே அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுள் அதற்கு எதிராகச் செயற்பட்டவர்களில் மகிந்த ராஜபக்ச ஒருவர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் ஜேவிபி, ஜாதிக கெல உறுமய போன்றவர்கள். அந்தச் சட்டத்தினுடைய பொருளை மிகச் சுருக்கமாகச் சொன்னால், எங்களுக்குத் தெரியும் இலங்கையில் தேசிய பாடசாலைகளில்கூட பௌத்த பாடசாலைகள் இருக்கின்றன கிறிஸ்தவப் பாடசாலைகள் இருக்கின்ற இந்துப் பாடசாலைகள் இருக்கின்றன இஸ்லாம் பாடசாலைகள் இருக்கின்றன. இந்த அடிப்படையில் இருக்கும் பாடசாலைகளில் அந்த இனத்தைச் சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும். மிகச் சிறு இடம்தான் மற்றவர்களுக்கு இருக்கும். அது தேசியப் பாடசாலை எனில் அதில் தலித்துகள் உட்பட எல்லோருக்குமே வாய்ப்பளிக்கக்கூடியதாகத்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார். இதைக் கொண்டுவரக்கூட இங்கு இடமில்லாமல் போய்விட்டது. இந்தக் குறிப்பை இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புகிறென்.

பிரதாபன்.
சுனந்த அவர்கள் சொன்னார், தமிழ் மக்களிடம் அதிகாரம் இருக்கும்போதுதான் அலலது  அதிகாரத்துக்கான போராட்டமோ என்னவோ இருக்கும்போதுதான் சிங்களத் தலைமைகள் தீர்வுகளைப் பற்றி பேச முன்வந்தன. அப்படியில்லாத காலகட்டத்தில் அதாவது தற்போதுள்ள நிலைமை மாதிரி இருக்கும் காலகட்டத்தில் தமிழ் மக்களை ஒரு குருவிச்சை மாதிரி இருக்கக் கோருகிற போக்குகள் நிலவுகிறது என்பதுபற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார். ஆகவே திரும்பவும் அதிகாரத்துக்கான போரட்டத்தைச் செய்தால்தான் -அது அரசியல் ரீதியாக இருக்கலாம் அல்லது ஆயுத ரீதியாக இருக்கலாம்- நாம் மீண்டும் அதிகாரப் பரவலை நோக்கி முன்னேறலாம் என்றொரு பிரச்சினை வருகிறது. அப்படியானால் எதை நாங்கள் செய்யவேண்டும் என்பதை முதன்மைப்படுத்தகிறார் சுனந்த?

சுனந்த:
என்னிடம் எல்லாவற்றுக்கும் விடைகள் இல்லை. நான் புத்தபகவான் அல்ல. (சிரிப்பு) நான் எனது எண்ணங்களை மட்டும் சொல்ல முயற்சிக்கிறேன். இன்று ஆயுதப் போராட்டம் எந்தப் பெரிய பாத்திரத்தையும் வகிக்கப்போவதில்லை. நாங்கள் ஜனநாயக அரசியலுக்குத்தான் திரும்பவேண்டியிருக்கிறது. நான் நினைக்கிறேன், தமிழ் மக்கள் ஜனனநாயக அமைப்பொன்று அவசியம் என. இந்த அமைப்பு அரசியல் கட்சிகள், இலக்கிய அமைப்புகள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: ஜனநாயக ரீதியில் உரிமைகளுக்காகப் போராடுகிற அமைப்பாக இது இருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களுக்கு தேவையாக இருப்பவை எவை என சிங்களத் தலைவர்கள் உணரவைக்கப்பட வேண்டும். இது செய்யப்படாமல் சிங்களத் தலைமைகளை அணுகமுடியாது. 56 இல்; 58 இல் 77இல் 81 இல் 83 இல் எல்லாம் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியும். இதை நான் சொல்லவேண்டியதில்லை.

தேவன்:

ஜனநாயக அமைப்புகளின் கூட்டிணைவால் போராடித்தான் உரிமையைப் பெறலாம் என நீங்கள் சொல்ல வருகிறீர்கள். ஆனால் ஐநாசபை அமெரிக்கா பிரிட்டன் என யார் சொல்லியுமே எங்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வாய்ப்பு இருக்கவில்லை. இப்படியிருக்க மக்களால் கட்டப்படும் சிறிய இயக்கங்களால் இதைச் செய்ய முடியும் என எப்படி நம்புகிறீர்கள்?

சுனந்த:
இலங்கை அசாங்கம் ஐநாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் செவிகொடுக்காமல் முழுமையாகச் செயற்படுகிறது என நாம் சொல்ல முடியாது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமிழ்நாடடிலிருந்து வந்த எட்டுப் பிரதிநிதிகள் இடம்பெயாந்த மக்களின் முகாம்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 4.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற எதிர்க்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது. அதேநேரத்தில் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதியின் துணைவியாரும் மகனும் முகாம்களுக்குச் சென்று பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இன்று மகிந்தாவை சிங்கள மக்கள் ஆதரிக்கிறார்கள். அவர் ஒரு அரசனாக மாறியிருக்கிறார். இருந்தும் சர்வதேச சமூகங்களுக்கு அவர் செயவிசாய்த்துக் கொண்டுதான் இருக்கிறார், இருக்க முடியும்.

அண்மையில் இடைத்தங்கல் முகாமில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தின் காரணமாக மக்களை நோக்கி இராணுவம் சுட்ட காரணத்தினால் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தபோது சர்வதேச சமூகமும் இலங்கையின் ஏனைய அமைப்புகளும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இதன்காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக மக்கள் குரல்கொடுத்ததால் இது நடந்தது. ஐநாவுக்கோ ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ முழுமையாக காதுகொடுக்காமல் அரசால் இருக்கமுடியாது. அவர்கள் பதில் சொல்லவேண்டியே ஏற்படுகிறது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசு இழக்காதவண்ணம் நடந்துகொள்ள அரசு நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது கிடையாதபோது லிபியா ஈரான் சீனா போன்ற நாடுகளிடம் உதவிகளைப் பெற்றாலும்கூட அது தொடர்ந்து சாத்தியப்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. எனவே சர்வதேச ரீதியான தேசிய ரீதியிலான அழுத்தங்களை அரசு முழுமையாகப் புறக்கணித்து செயற்பட முடியாது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அப்படியான அமைப்புகள் உருவாகாமல் விட்டாலும் இன்னும் ஓரிரு வருடங்களில் அல்லது சில ஆண்டுகளின்பின் சிலசமயத்தில் புதிய அமைப்புகள் உருவாகலாம் அல்லது சிங்கள தமிழ் சக்திகள் இணைந்த அரசியல் அமைப்புகள் உருவாகலாம். ஜேவிபி இன்று ஜனநாயக வழிக்கு வந்திருக்கிறது. இதே ஜேவிபி விடுதலைப் புலிகளைப்போல தமக்கு மாறானவர்களை தெற்கில் கொலைகள் செய்தவர்கள். அதற்கெதிராக அரசு சிங்கள இளைஞர் யவதிகளை கொலைசெய்தது. 1989, 90 களில் ஒவ்வொரு காலையிலும் 30, 40 பேர் கொலைசெய்யப்பட்டு வீசப்பட்டுக் கிடப்பதை நாம் ஒவ்வொரு நாளுமே கண்ணால் பார்க்க நேர்ந்தது. போரின்போது தொகையாக தமிழ் மக்களை அரசு கொலை செய்தது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை மேற்சொன்னவாறான நிலைமை வடக்குக் கிழக்கில் இருக்கவில்லை. விஜய குமாரதுங்கவை கொலைசெய்தவர்கள் ஜேவிபியினர். ஆனால் 1994 இல் அதே ஜேவிபியினருடன் சிறீலங்கா சதந்திரக் கட்சி ஆட்சிப் பொறுப்பை பங்கிட்டுக் கொண்டது. இப்படியாக அரசியல் சூழ்நிலைகள் மாறக்கூடியதாகவே உள்ளன.

ரயாகரன் :
இவ்வளவு காலமும் புலி இருந்தது. புலிக்கு முன்னால் நம்மில் பலர் எதையும் செய்ய முடியாது என ஒதுங்கி கோட்பாடுகள் தத்துவங்கள் எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கியிருந்தோம். இன்று புலம்பெயர் சஞ்சிகைகளில் வேலைசெய்தோர் மற்றும் மார்க்சியம் பின்நவீனத்துவம் என்றெல்லாம் பேசியவர்களில் ஒரு பகுதியினரும் இவ்வாறாக சீரழிந்து இன்று அரசின் பக்கத்தில் போய் இருக்கிறார்கள். ஆயுதப் போராட்டமா மக்களை அணிதிரட்டுவதா என்ற கேள்விக்குமுன் சமூகத்தை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டுவர வேண்டிய தேவை எம்முன் இருக்கிறது. அதன்மூலம்தான் நாம் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இதுதான் இன்றுள்ள முக்கிமான அரசியல் பணி.

சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் எனபது மிக அடிப்படையானது, முக்கியமானது. புலிகளால் மட்டுமன்றி மாற்று இயக்கங்களாலும் கொல்லப்பட்ட முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் உறவை மீளக் கட்டமைக்கின்ற அரசியல் வடிவம் என்ன என்பதும் எம் முன்னாலுள்ள கேள்வி. வெளிநாடுகளின் அழுத்தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு முன்னால் நாம் மக்களோடு மக்களாக இணைந்து கொள்வதற்கு, அதற்கான அரசியல் உணர்வோடு இருக்கிறோமா என்பதும் நம் முன்னாலுள்ள கேள்வி. இந்த உணர்வு இல்லாமல் நாம் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. நாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளை சுயவிமர்சனம் செய்து, அது ஏன் ஏற்பட்டது என்பதற்கான சூழலை சுட்டிக் காட்டி, அதைக் களைந்து முன்னேறுவதன் மூலம்தான் மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

இன்று நாம் எதையும் செய்ய முடியாது அரசுடன் பேசித்தான் எதையும் செய்ய முடியும் என்று சொல்கின்றார்கள். புலி இருந்த காலகட்டங்களில்கூட அரசுக்கு வெளியே நின்று சங்கங்கள் அமைப்புகளினூடாக இவ்வாறான உதவிகளைச் செய்துதான் வந்திருக்கிறோம். ஆனால் இது ஒரு புதிய விசயமாகக் காட்டப்படுகிறது. அதுதான் அரசியல் என சொல்லப்படுகிறது. அதாவது அரசுடன் சில புத்திஜீவிகள் பேசி மக்களுக்கு அரிசி மாவை பிச்சையாகப் போடுவதுதான் அரசியல் என சொல்லப்படுகிறது. மக்களுக்கு இதைச் செய்யவேண்டாம் என யாரும் சொல்ல வரவில்லை. மக்களுக்கு இதைச் செய்வதற்கான வழிமுறைகள் பல உண்டு. அரசியல் என்பதை இந்த வழியினூடுதான் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தவறானது. அரசியல் மக்களோடு இணைந்து நிற்பதைக் கோருகிறது. இதை நாம் செய்கின்றோமா? இல்லை. இதற்கான அரசியல் முயற்சி எடுக்கின்றோமா? இல்லை. அரசுடன் பேச வேண்டும், அரசுக்கு ஊடாகத்தான் உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு பாதையைத்தான் மாற்று அரசியலாக காட்டப்படுகின்றது. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசுக்கு சேவை செய்வதாகத்தான் இருக்கும்.

புலிகள் கடந்த காலங்களில் காசைத் தாங்கோ, நாம் அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம், உதவி அமைப்புகளை நடத்துகிறோம் என்று சொல்லித்தான் செய்தார்கள். இன்று அதே பாதையைத்தான் மாற்றிப்போட்டு அரசுடன் சேர்ந்துதான் இதைச் செய்யலாம் என்ற அரசியல்தான் நடக்கிறது. இன்று மக்களோடு மக்களாக சேர்ந்து செயற்பட வழிவகைகள் இருந்தால் அதுபற்றி யோசியுங்கள், சிங்கள மக்களுடன் விட்டுவந்த உறவைத் தொடர்வதற்கு வழியிருந்தால் அதுபற்றி யோசியுங்கள் என கேட்டு எனது கருத்தை முடிக்கிறேன்.

சுதா :

சர்வதேச அரசியல் சூழல் மாற்றம் அடைந்திருக்கிறது என்ற விசயம் முக்கியமானது. அமெரிக்கா ஐரோப்பா என்றிருந்த ஏகாதிபத்திய ஆதிக்கம் இன்று சீனா இந்தியா நோக்கி மாற்றப்பட்டிருக்கிறது. நான் இலங்கையில் ஒரு தொழிலாளியாக இருந்தால் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள அரசுகள் தமது பொருளாதார வளர்ச்சிக்காக என்ன நடடிக்கைகளை எடுக்கிறதோ அதைத்தான் நான் ஆதரித்து இருப்பேன். ஆனால் நாம் புலம்பெயர்ந்து உள்ளோம். இன்னுமொரு 25, 30 வருடங்களில் நிலைமைகள் அப்படியே மாற்றப்படப் போகிறது. இன்று நாம் சிக்கலான நிலையில் உள்ளோம். நாம் இரண்டு பாத்திரங்களை ஏற்றுச் செயற்பட வேண்டியிருக்கிறது. நாம் இங்கு இருப்பதால் எங்களுடைய வேலைகளைக் காப்பாற்ற நாம் மேற்குலகம் சொல்கின்றவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கு இருந்திருந்தால் இதை நாம் முற்றாக எதிர்த்திருப்போம். மேற்குலகத்துக்கு தெரிகிறது மூலதனம் ஆசியாவுக்கு கைமாறப் போகிறது என. அதனால் அங்கு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும் என அவர்கள் முயல்கிறார்கள். இது முதல் விசயம்.

அடுத்தது ரயாகரன் சொன்னார் அரசுடன் பேசித்தான் உதவிகளைச் செய்யலாம், இதுதான் அரசியலாகக் காட்டப்படுகிறது என. புலிகள் இருக்கிற நேரத்தில் பன்முகத் தன்மை இருக்கவில்லை. இன்றைக்கு அது வேணும். ஒருசிலர் அரிசியைத்தான் கொண்டுபோய் கொடுக்கப் போகிறோம் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். நீங்கள் அதை விமர்சித்து அதை தட்டிக் கழிக்கத் தேவையில்லை. இன்னொரு பக்கம் மாற்று அரசியல் தேவை, மக்களுக்கு அதை நாம் செய்ய வேண்டும் என்பவர்கள்; அதைச் செய்யுங்கள். நாம் வாயால் கதைத்துக் கொண்டிருக்கும் பன்முகத் தன்மை என்பது எம்மிடத்தில் இல்லை. நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. பல அமைப்புகள் வரட்டும். உருவாகட்டும். உருவாக வேண்டும். மாறாக புலிகள் எதிர்பார்த்த மாதிரி ஒரு அமைப்புத்தான் எல்லாவற்றையும் செய்யும் என இப்போ எதிர்பார்க்க முடியாது. சுனந்த வடிவாகச் சொல்லியிருக்கிறார். அரசுக்கு உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அங்கு ஒரு லொபி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதை சில புத்திஜீவிகள் செய்யட்டும். அதைத்தான் அரசியல் என யாருமே சொல்லவில்லை. அதைத்தான் அரசியலாக யாருமே காட்டவில்லை. அதற்குப் பின்னால் எல்லோரும் வாருங்கள் என யாருமே கேட்கவில்லை. அதை சிலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்,; செய்துகொண்டு இருக்கட்டும்.

ராஜன் :

புலிகள் திடீரென அழிந்தொழிந்து போய் புதிய நிலையாக மிகவும் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் புலிகள் அழிக்கப்பட்டதால் எங்கிருந்து தொடங்குவது என்ற பிரச்சினை நான் அவதானித்த விடயம். நாமெல்லாம் இலங்கையிலிருந்து வந்தவர்கள். இலங்கைத் தீவில் பிரச்சினைகள் இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாம் தொடங்கலாம் என யோசிக்கிறேன். இங்கே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வேண்டும், முஸ்லிம் மக்களுக்கு உரிமைகள் வேண்டும், மலையக மக்களுக்கு உரிமைகள் வேண்டும், அதை கொடுங்கள் என சிங்கள மக்கள் கேட்பதன் மூலமோ அல்லது அதைத் தாங்கோ என நாம் கேட்பதன் மூலமோ எதையும் செய்யமுடியாது. மாறாக எமது நாட்டில் இப்படியான பிரச்சினைகள் இருக்கிறது, இவற்றை நாம் எல்லோருமாகச் சேர்ந்து தீர்ப்போம் என்று நினைப்போமாக இருந்தால் இழப்புகளை குறைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம். மாறாக நாங்கள் பறித்தெடுப்போம்; என்று நினைத்தால் இழப்புகள்தான் அதிகரிக்கும். இந்த 30 வருட காலத்தில் நாம் இழந்ததுதான் அதிகம்.

கடந்த சுதந்திரத்தின் பின் இலங்கை அரசு 3 கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கியிருக்கிறது. இருமுறை ஜேவிபியின் கிளர்ச்சியையும் ஒருமுறை தமிழர் கிளர்ச்சியையும் அடக்கியொடுக்கியிருக்கிறது. அரசு தனது வன்முறை இயந்திரங்களை மிக மூர்க்கமாக வளர்த்தெடுக்கும். வன்முறை இயந்திரம் பின்னணியிலும், மென்முறை இயந்திரங்களாக கல்வி நிறுவனங்கள் போன்ற சிவில் சமூக அமைப்புகள் முன்னணியிலும் நின்று செயற்பட்டுக் கொண்டு இருக்கும். மேற்கத்தைய அரசுகள் அவ்வாறுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கிளர்ச்சிகள் எழுகின்ற காலகட்டங்களில் வன்முறை இயந்திரங்கள் முன்னுக்கு வந்து தன்னுடைய கோரப் பற்களைக, காட்டும். இலங்கை அரசு முதலாவது கிளர்ச்சியை அடக்கியொடுக்கியதிலிருந்து தொடங்கி தனது வன்முறை இயந்திரங்களை வளர்த்தெடுத்து உயர்ந்த நிலைக்கு இன்று வளர்ச்சியடைந்து இருக்கிறது. இன்று இராணுவத் தளபதிகளை கவர்னர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் நியமிக்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்று தெளிவாகத் தெரிகிறது, இலங்கை அரசு எப்படிப்பட்ட ஒரு அரசு என்று. இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் சிக்கலான உறவு. இதுதான் இன்று எமக்கு முன்னாலுள்ள நிலைமை.

இன்று வன்முறை மூலமாக கோரிக்கைகளை அடையக்கூடிய நிலையில் சிங்கள மக்கள் உட்பட எந்தப் பிரிவு மக்களும் இல்லை. அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இன்னும் இழப்புகளைக் கொடுக்கக்கூடிய நிலையில் அவர்களிடம் எதுவுமே இல்லை. அதற்காக இந்த நிலைமை தொடர்ச்சியாக நீடிக்கும் என்றில்லை. சில கட்டத்தில் ஒடுக்குமுறை தாங்க முடியாமல் வன்முறை திரும்பவும் வெடிக்கலாம். இலங்கையின் 40 வருட வரலாற்றில் மக்கள் அரசினதும் இயக்கங்களினதும் குழுக்களினதும் வன்முறைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் அமைப்புகள் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு இன்னும் இழப்புகளை ஏற்படுத்தாமல், நீண்ட காலம் எடுத்தாலும் பரவாயில்லை, மெதுவாக சில பரிமாண வளர்ச்சிகளினை அடைய முடியுமாக இருந்தால் அதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கும். கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிந்து போயிருக்கிறது. வடக்கு மக்கள் இல்லை நாமெல்லாம் ஒரே தமிழீழம்தான் என முரண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது.

தமிழீழப் போராட்டமோ அல்லது எந்தப் போராட்டமுமோ ஏதோவொரு வகையில், கீழ்மட்ட மக்களின் நலனை வெளிப்படுத்தினாலும்கூட, அதிகாரப் பங்கிற்காகப் போட்டியிட்ட மேட்டுக்குடியினரின் ஒரு போராட்டம்தான். அவர்கள்தான்; இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இந்த மக்களின் அதிகாரங்களை – அதாவது தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகத்தைச்: சேர்ந்த கீழ்மட்ட மக்களுக்கு அதிகாரங்களைக்- கொடுங்கள் என்றவாறான கிராமங்களுக்கான அதிகாரங்களைக் கோரி ஒட்டுமொத்த இலங்கை மக்களும் கேட்பதன் மூலம், போராடுவதன் மூலம், நாம் சிங்கள மக்களினதும் ஏனைய கீழ்மட்ட மக்களினதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம். இன்று இனவாதத்தைப் பேசுகிற ஜேவிபி போன்ற சக்திகளின் ஆதரவு சக்திகள் ஏழை மக்களாக இருக்கிறார்கள்;. அதாவது அவர்கள் ஏழை கூலி விவசாய மக்களாகவும் சாதாரண கிராமப்புற மக்களாகவும் இருப்பதால், இந்தக் கிராம மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கிராமங்களுக்கான அதிகாரங்கங்களை கோரி, நிலம் நீர் கல்வியை கொடுங்கள் என போராட வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களும் தமது அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு இந்த சமஷ்டி முறை பற்றி பேசிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

கண்ணன்:
மே மாதத்துக்குப் பிறகு ஒரு புதிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஆரோக்கியமான சூழல். இந்தச் சூழலுக்காக பல்வேறு தளங்களில் பல்வேறு சக்திகள் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் மதித்தாக வேண்டும். நாம் இந்தச் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் இரு விசயங்களை நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும். அதற்கான எந்த செயல் வடிவம் கொடுப்போம் என தொடர்ந்து கதைப்போமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் மக்களிடம் சிதைந்து போயிருக்கிற சிவில் சமூகத்தை நாம் மீளவும் கட்டியமைக்கலாம். நாட்டில் அந்த மக்கள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அவர்கள் போராடியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், தாங்கள் என்ன செய்யலாம் என்று. அவர்களுக்கு நாம் இங்கிருந்து கட்சிகட்டி ஏற்றுமதி செய்யலாம் என்ற சிந்தனை எல்லாவற்றையும் முறித்துக்கொள்ள வேண்டும். அந்த சிவில் சமூகம் வளர்ச்சியடைவதற்கு நாம் என்ன செய்லாம், என்ன தேவை என அறிந்து செயற்படுவோம். அதைச் செய்வதினூடாக அந்த மக்கள் தங்கள்; தேவைக்கேற்ப தீர்மானித்துக் கொள்வார்கள் அரசியலை நடத்துவதற்கு.

இங்கு ஏற்கனவே சொல்லப்பட்டபடி இன்று எவ்வளவு பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள், எவ்வளவு பிள்ளைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். மற்றது மின்சாரம். போராட்டம் நடந்த நாடுகளிலை தோல்வியைத் தழுவிய சக்திகள்மீது அரசு அல்லது ஆதிக்க சக்திகள் மறைமுகமாகச் செலுத்துகின்ற ஆதிக்கமாக, அவர்களை இன்னும் ஒடுக்கி அவர்களை வெளியில் வர விடாமல் இருக்கப்பண்ணுவது என்ற அடிப்படையில் மின்சாரம் ஒரு கருவியாக பாவிக்கப்பட்டிருக்கிறது. கோசோவாவின் எல்லைப்புறக் கிராமங்களுக்கான மின்சாரத்தை சேர்பியா தடுக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காமல் தடுக்கப்படுகிறது. இன்று கோசோவாவில் மின்சாரத்தைப் பெறுவதற்கான அணுஉலை கட்டவேண்டிய தேவை எழுந்துள்ளது. இன்றைக்கு இதை நாமும் எமது நாட்டில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ ஆதிக்கத்துக்கான போராட்டம் என்ற கதைகள் இங்கேயும் கேட்டது. இன்று நாம் ஆதிக்கமாக இருந்தால்தான் சிங்கள அரசுடன் பேச முடியும் என்ற கனவுகளையெல்லாம் தூக்கி எறியவேண்டும். இன்று 3 இலட்சம் மக்களுக்கு அங்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது. அந்த 3 இலட்சம் மக்கள் மட்டுமல்ல, இன்று மலையக மக்கள் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என எல்லோரின் மீதும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக நாங்கள் இங்கிருந்து குரல் கொடுப்போம். இது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு கொண்டுபோகும். நண்பர் சொன்னதுபோல சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கங்கள் விரும்பியோ விரும்பாமலோ மதிப்பளித்துத்தான் ஆகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாங்கள் நினைப்பதுபோல் கறுப்பும் வெள்ளையுமாய் அது இருக்கவில்லை. பன்முக செயற்பாடுகளின் குவியமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.

யுத்தம் முடிந்துவிட்டது. யுத்தத்தால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே நாம் எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. புலிகளின் ஜனநாயக மறுப்புக்கு எதிராக நம்மால் முடிந்தளவு புகலிட நாடுகளில் போராடி வந்திருக்கிறோம். இன்று  அந்தச் சந்தர்ப்பத்தை பிழையான சக்திகளிடம் கொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை. எமது சமூகம் முன்னேற வேண்டும். இலங்கைத்தீவு ஒரு சுதந்திரமான பிராந்தியங்களின் கூட்டமைவாக அமைய வேண்டும். நண்பர் சொன்னார், சமஷ்டி ஆட்சியின் கூட்டமைப்பாக இருக்கவேண்டும் என. இன்று சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை சமஷ்டித் தீர்வை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்தது பெண்கள் பிரச்சினை. சகோதரி கூறியதுபோல இடஒதுக்கீடு சம்பந்தமாக நாம் சிந்தித்தாக வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தில் 30 வீத ஒதுக்கீடு என்பது சுயமான போராட்டங்களினூடாக பெண்கள் மத்தியிலிருந்து எழ வேண்டும். உண்மையில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்க வேண்டும். இங்கே (சுவிசில்) அப்படி இல்லை என்றபோதும் மத்திய அரசில் ( 7 பேரில்) 3 பெண்கள் போயிருக்கிறார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டது, ராஜினி திரணகம சொன்னமாதிரி, முக்கியமாக பெண்கள்தான். அவர்கள் இரட்டைச் சுமையைச் சுமக்கிறார்கள்;. எனவே பெண்கள் பிரச்சினையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. உங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் போராடுங்கள். ஒரு சங்கம் கட்டப்போகிறீர்களா நாங்களும் வாறம்… இவ்வளவு இடம் தா என கேளுங்கள். அப்பதான் தெரியும் எங்கை நாம் போராட வெளிக்கிடுறம், எங்கை எங்கடை ஆக்கள் போராட்டத்தை எதிர்பார்க்கினம் என்று.

நாம் இன்று கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பல்தளங்களில் முன்னெடுப்போம். பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் விதத்தில் இங்கிருந்து நாம் சிந்திக்கத் தொடங்குவோம்.

திலக் :
புலம்பெயர் மக்களை கருத்தியல் ரீதியில் ஒன்றிணைப்பதற்காக தற்போதைய நிலையில் மார்க்சிச சமூக பொருளாதார விஞ்ஞானம் சார்ந்து செயற்பட முடியுமா? அப்படியெனில் அதை நாம் எவ்வாறு முன்னெடுப்பது? (சற்று தெளிவாகச் சொல்லுங்கள்)

சுனந்த:
சிரிப்புடன். நான் நினைக்கவில்லை மார்க்சோ எங்கெல்சோ புலம்பெயர் சமூகம் பற்றி எதுவும் சொல்லவில்லை என. டயஸ்ரோ பின்னர் வந்தது. டயஸ்போரா நடவடிக்கைகளில் மார்க்சோ லெனினோ என்ன சொன்னார்கள் என்று தேடி கண்டுபிடிப்பது கடினம். மார்க்சிய லெனினிசத்தால் ஒரு பொறிமுறையை வழங்க முடியும். அதை நாம் பயன்படுத்த முடியும். மார்க்சியக் கோட்பாடு வர்;க அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. புலம்பெயர் சமூகத்தை ஒரு வர்க்கமாக வகைப்படுத்த முடியாது. ஒரு வைத்தியரிலிருந்து ஒரு சாதாரண தொழிலாளிவரை புலம்பெயர் சமூகத்துள் இருக்கிறார்கள். அதேநேரத்தில் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் மார்க்சிச லெனினிச அடிப்படைகளை பயன்படுத்த முடியும். இதுவிடயத்தில் என்னைவிட அனுபவம் வாய்ந்தவர்கள் இங்கு கருத்துகளை தெரிவிக்க முடியும். இலங்கையைப் பொறுத்தவரையில் மார்க்சிசக் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் கட்சிகள் அல்லது அமைப்புகள் மிகச் சிறியனவாகவே இருக்கின்றன. மார்க்சிசம் சமூக நீதியைக் கோருகிறது.  அது அருகிப் போயிருக்கும் எமது சமூகத்தில் அதை நிலைநாட்ட மார்ச்சிசம் கோட்பாட்டு ரீதியில் பயன்படலாம் என நான் கருதுகிறேன்.

விஜி :
முதலில் சுனந்த தேசப்பரிய அவர்களுக்கு நன்றி இலங்கையிலுள்ள பிரச்சினைகளை அவருடைய பார்வையில் தெளிவாகக் குறிப்பிட்டார். புலிகளுக்கு எதிராக அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்த போர்pன்போது நடந்த ஆர்ப்பாட்டமும், 3 இலட்சம் மக்களை அகதிமுகாம்களிற்குள் விட்டபின், எதுவுமில்லாமல்; ஏன் இருக்கிறார்கள் என்ற கேள்வி அவருக்கு விளங்க முடியாதுதான். அது எங்களுக்கு நன்றாக விளங்கும். எல்லா மக்களையும் குறைசொல்ல முடியாது. ஆனால் புலிக்குப் பின்னால் போவதற்கான அரசியல் அதுதான். புலியைக் காப்பாற்ற வேண்டிய தேவைக்குத்தான் அந்தப் போரை நிறுத்தச் சொல்லி ஊர்வலத்தில் போன அவ்வளவு மக்களும் கோசம் போட்டார்கள். மக்களைக் காப்பாற்றச் சொல்லியல்ல. அது இங்கு தமது வாழ்க்கையை காப்பாற்றுவதற்காகத்தான். இலங்கையில் பிரச்சினை நடந்துகொண்டிருந்தாற்தான் தாங்கள் இங்கு வாழக்கூடியதாக இருக்கும் என்ற நோக்கமும், தமிழீழக் கோரிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற எல்லாமும் சேர்ந்துதான் அது நடந்தது.

இன்று 3 இலட்சம் மக்களைப் பற்றிய ஊர்வலம் பெரியளவில் நடக்கவில்லை என்பது உண்மை. ஏனென்றால் அவர்கள் மக்களைப் பற்றி யோசிக்கிற ஆட்கள் இல்லை. திரும்பவும் அந்த மக்களை வைத்து, இந்த வெளிநாட்டிலிருந்து கொண்டு நாடு கடந்த தமிழீழம் எடுக்கும் நோக்கத்துக்கு எப்படி பாவிக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள். அந்தளவில்தான் புலிக்கு ஆதரவாக இருப்பவர்களில் தொண்ணூறு சதவீதமான மக்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பார்த்தீர்களானால் அங்கு இருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசிக்கிறோம். ஆனால் ஒருமைப்பாட்டுக்கு இதுவரையில் வரமுடியவில்லை. வரமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

அடுத்தது, அரசோடு சேர்ந்துதான் எதையும் செய்யலாம் என்கிற ஆட்கள் சம்பந்தப்பட்ட கருத்து. சரி, அவர்கள் பிச்சைதான் போடுகிறார்கள் என்று வைப்போம். எங்கள் பார்வையில் அப்பிடி இல்லை. அது இன்று தேவைதானே மக்களுக்கு. நீங்கள் ஒரு ஐம்பது யூரோ அனுப்புவது என்பதும் அந்த மக்களுக்கு தேவைதான். ஆனால் அதைச் செய்துவிட்டு பேசாமல் இருக்க முடியாது. அதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அது சரிதான். அரசாங்கத்தோடு பேசி உதவி செய்யும் ஆட்கள் எல்லாம் பிச்சைக்காரர்களை உருவாக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

டொக்டர் பாலா அங்கு போய் நின்று எவ்வளவோ செய்கிறார். ஆயிரத்தெட்டு டொக்டர்மார் இருக்கிறார்கள் புலம்பெயர் நாட்டில். ஆனால் எல்லோரும் விரும்பவில்லை போவதற்கு. விரும்பியிருந்தால் அவரைப்போல பதினைந்து பேர் போயிருப்பார்கள். போகவில்லை.
அவர் போனார். அவரால் முடிந்தளவு ஏதோ தன்னுடைய வேலையைச் செய்கிறார். அதுக்காகவாவது அரசாங்கத்தோடு பேசி கதைத்து போக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் தொடர்ந்து அரசாங்கத்தோடு பேசி கதைத்து வேலை செய்யப் போகிறீர்களா அல்லது அதுதான் தீர்வா என்று கேட்டால் நிச்சயமாக யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். புத்தியுள்ளவர்கள் யாரும் அப்படிச் சொல்லமாட்டார்கள். இன்றைய தேவை அதுவாக இருக்கிறது. அவ்வளவுதான். அரசு சாராமல் நாங்கள் எல்லோரும் சேர்ந்து எதைச் செய்ய முடியும். இன்று அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் சுயமாக எதையும் செய்ய முடியாமல் இருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவோம். ஆகவே அவர்கள் சுயமாக எதையாவது செய்வதற்கு அல்லது நாளை உருவாகப்போகும் அரசியல் கட்சிகள் அல்லது இன்று இருக்கும் தலைமைக்குப் பின்னால் இருந்து நாளை உருவாகப்போகும் தலைமைகள் அவர்களுக்கு எம்மாலான ஊக்கத்தைக் கொடுக்க முடிகிறதா.

நாம் போரில் நேரடியாக அகப்படாமல் இருந்துகொண்டு நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டு எங்கள் பிள்ளைகளை ஆபத்தில்லாமல் வளர்த்துக்கொண்டு இருப்பதால் அங்குள்ள மக்கள் மேல் உள்ள அக்கறை எங்களுக்கு குறைவுதான். அவர்கள் படும் துன்பமும் அவர்கள் படும் அவதியும் அத்தோடு அவர்களது எதிர்காலம் பற்றிய ஏக்கத்தையும் யோசிப்பது என்பது கடினம் எங்களுக்கு. அதற்கு காலம் பிடிக்கும். அவர்களுக்கான உட்பலத்தையும் உடற்பலத்தையும் எங்களாலை நிச்சயமாக கொடுக்க முடியும். அதுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும். அந்த மக்கள் நாளை தங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தாமே தீர்மானித்து போராடுவார்கள். நாம் இங்கிருந்து அவர்களை யோசிக்கப் பண்ண முடியுமே தவிர அவர்களுக்கு யோசனை சொல்ல முடியாது. அதற்கான ஒரு சங்கமோ அமைப்போ ஏதாவது செய்ய முடியும் என்று சொன்னால் அதைச் செய்வோம். அதைச் செய்வதற்கு எனக்கும் விருப்பமாக இருக்கிறது.

அடுத்தது பெண்களுக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமானது. அந்த இட ஒதுக்கீடு ஏன் 30 வீதம் என்பதை விளங்கப்படுத்துங்கள். அது ஏனென்று எனக்கு விளங்கவில்லை. நீங்கள் தந்த விபரப்படியும் எங்களுடைய பார்வைப்படியும் அங்குள்ள கணவனை இழந்த பெண்கள் தொகையையும் பார்த்தால் கணக்கெடுப்பு எடுத்தால் பெண்களின் தொகைதான் கூடுதலாக இருக்கும் என நினைக்கிறேன். அல்லது குறைந்தபட்சம் சரிசமனாகவாவது இருக்கும். 30 வீதமே இல்லை… 50 வீதம் ஏன் என்று கேட்காதீர்கள். (சிரிப்பு). 50க்கு 50 என கேட்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இங்கு நாம் குறைந்தளவு பெண்கள்தான் இருக்கிறோம். புலிகளின் பெண்கள் அமைப்புகளில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களுடனான தொடர்பு இல்லை. என்றபோதும் சிறிய அமைப்பான பெண்கள் சந்திப்பு அமைப்பு மறுப்புச் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். எங்களால் பெரிதாக எதையும் செய்ய முடியாது. நீங்கள் இந்த விடயத்தில் ஏதாவது செய்ய எங்களிடம் கேட்பீர்களானால் சேர்ந்து செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்.

ரவி :

விஜி சொன்னது முக்கியமான பிரச்சினைதான். நான் இதற்கு பதிலளிக்க வேண்டி  இருப்பது ஏனெனில் நான் போர் நிறுத்தம் சம்பந்தமாக எழுதி பல விமர்சனங்கள் அதற்கு வந்திருந்தது. விஜி அந்த அடிப்படையில் கதைத்திராவி;டாலும் இது சம்பந்தமான எனது நிலையை தெளிவுபடுத்த இச் சந்தர்ப்பத்தை பாவிக்கலாமென நம்புகிறேன். புலிகள் போர்நிறுத்தத்தைக் கோரியது புலிகளின் உயிர்வாழ்தலுக்காகத்தான் என்பதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. அதேநேரம் புலிகள் தமது உயிர்வாழ்தலுக்காகத்தான் இதைச் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக நாம் போர்நிறுத்தத்துக்கு எதிராக நிற்க முடியாது. ஏனெனில் பாதிக்கப்படப் போவது மக்கள்தான். அந்த அடிப்படையில் புலி ஏன் யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது என்பது எமக்குப் பிரச்சினையில்லை. புலிகளின் அதிகார அரசியலைத்தான் நாம் புலியாகப் பார்க்கிறோம். புலிகளின் கீழணிப் போராளிகளையும் நாம் மக்களாகத்தான் பார்க்கிறோம். புலிகளின் கீழணியிலுள்ள போராளிகள் மட்டுமல்ல, பெருந்தொகையான மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனநோயாளியாக்கப்பட்டிருக்கிறார்கள். போர்pல் இப்படியெல்லாம் நடக்கும் நடக்கிறது என்ற அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து நாம் போர்நிறுத்தத்தைக் கோரினோம். புலி போர்நிறுத்தத்தைக் கோருவது தமது வாழ்வுக்குத்தான் என்பதால், நாம் போர்நிறுத்தத்தை எதிர்ப்பது என்பது அரசியலாக இருக்க முடியாது. புலியெதிர்ப்பாகத்தான் இருக்க முடியும்.

மற்றது விஜி சொன்ன கருத்து. இப்போதெல்லாம் புலிகள் வன்னி மக்களுக்காக எந்த ஊர்வலத்தையும் செய்யவில்லை என. உண்மை. அவர்களின் பிரச்சினை முடிந்துவிட்டது. ஆனால் அதேநேரம் இந்தக் கேள்வியை எம்மை நாமும் கேட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. முன்னர் புலிகள் ஒன்றுக்குமே விடுகிறார்களில்லை என்றோம். இப்போ புலி செததுவிட்டது என்று சொல்கிறோம். ஆனால் நாம் இப்போதும் ஒன்றும் செய்யாமல்தான் இருக்கிறோம். ஏன் அதை நாம் செய்யவில்லை என்று கேட்டால் எம்மிடம் பதிலில்லை.

அதேபோல் கிழக்கு சம்பந்தமான பிரச்சினையில் கிழக்கு பிரிந்து போவது சம்பந்தமாக எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. கருணாவையும் பிள்ளையானையும் ஒரு தளத்தில் வைத்து கிழக்குப் பிரச்சினை பேசப்பட்டது. இன்று கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பிரச்சினை வந்திருக்கிறது. மாகாண சபைகளுக்கான அதிகார அடிப்படையில் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்டோ அல்லது மாகாணசபைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமை குறித்தோ பிய்ளையான் துணிச்சலாக குறிப்பிட்ட விடயத்துக்கு ஆதரவாகக்கூட நாம் குரல்கொடுக்காமல்தான் இருக்கிறோம். அதேபோல் கருணா தன்னை தேசியக் கட்சிக்குள் கரைத்தது சம்பந்தமாக முரண்பாடு இருந்தால், பிள்ளையானின் கோரிக்கைகளுக்கு எதிராக கருணா செயற்படுவதை எதிர்த்தால் ஏன் நாம் பகிரங்கமாக விமர்சிக்காமல் இருக்கிறோம். ஏன் நாம் பிள்ளையானின் குரலை உயர்த்தக்கூடாது. ஆக புலி இருக்கும்போதும் பேசினோம். புலி செத்தபிறகும் புலியைத்தான் பேசுகிறோம். நாம் இன்று சும்மா இருக்கப் பழகிக்கொண்டுள்ளோம். காரணம் புலியும்தான். 30 வருடமாக வெகுஜன அமைப்புகளை எல்லாம் இல்லாமல் பண்ணி எல்லா செயற்பாட்டையும் இல்லாமல் பண்ணினதும் ஒரு காரணம்தான். ஆனாலும் எமது சுயமான செயற்பாடின்மைக்கு அதுமட்டும் காரணமல்ல. எங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 3 இலட்சம் மக்களுக்காக நாம் ஏன் வீதியில் இறங்கக்கூடாது. புலிதான் இறங்கவேண்டுமா?

விஜி :

போருக்கு எதிராகக் குரல் கொடுப்பதை ஒரு இடத்திலும் நான் பிழை என்று சொல்லவில்லை. அது புலி கொடுத்தாலும் சரி நீங்கள் கொடுத்தாலும் சரி. போரில் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போருக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என்பதில் முரண்பாடு இல்லை. புலிகளை ஆயுதத்தை கீழே வைக்க சொல்ல முடியாது என்று (கட்டுரையில்) எழுதியதுதான் பிரச்சினை. இன்று புலிகள் அழிக்கப்பட்டதற்கு ராஜபக்சவுக்கு நன்றிதான். அதில் எந்தக் கதையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் பிரபாகரனோடு சமனாகப் பார்த்தாலும், புலிகளை அழித்ததால் அங்கு வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாக மூச்சுவிடுகிறார்கள். பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் பிடிக்கப்படாமலும் யாராலும் சுடப்படாமலும் இருப்பதற்கும், பெண்கள் பயப்படாமல் வேறு வீடுகளுக்குப் போகாமல் தமது அம்மா அப்பாவோடு நிற்பதற்கும், ஓடியோடி ஒளித்த சனம் இன்று தங்கள் வீடுகளுக்கு திரும்பிப்போய் வாழ்வதற்கும், அவரவர் தமது நிலத்தில் திரும்ப விவசாயம் செய்வதற்கும், முஸ்லிம் தமிழ் மக்கள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழத் தொடங்குவதற்கும் ராஜபக்சதான் காரணம்.

ரயாகரன் :

விஜி முன்னர் சொன்ன கருத்துச் சம்பந்தமானது. டொக்டர் பாலா அங்கு சேவை செய்கிறார், அதை அரசுடன் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. சுனாமி வந்த நேரமும் டாக்டர்கள் வன்னிக்குப் போனார்கள் புலிகளோடு சேர்ந்து வேலை செய்தார்கள். அன்று ஏன் டொக்டர் பாலா போகவில்லை. புலிகளோடு சேர்ந்து வேலைசெய்யவில்லை. ஆகவே அங்கு ஒரு அரசியல் சார்புத் தன்மை இருக்கிறது. அதனூடாகத்தான் அங்கு போக முடிகிறது. டொக்டர் பாலா போல் புலி சார்பான டொக்டர்கள் புலியின் காலகட்டத்தில் வேலைசெய்தார்கள். அன்று அந்த நிலைமை இன்று இந்த நிலைமை. அவ்வளவுதான் வித்தியாசம்.

அங்கு உயிர்வாழ முடியாமல் எத்தனைபேர் இங்கு வந்திருக்கிறார்கள். சுனந்தவும் கூட அங்கு உயிர்வாழ முடியாமல்தான் இங்கு வந்திருக்கிறார். நீங்கள் சொல்ல முடியாது, அங்கு ஜனநாயகம் வந்துவிட்டது என. புலிகள் சுட்டார்கள்தான். யார் சொன்னார் இல்லையென. இலங்கையில் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையாக 80 ஆயிரம் பேரை படுகொலை செய்தது இலங்கை அரசுதான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுமார் 20 ஆயிரம் கொலைகளை புலி செய்தது. புலி செய்தது சரி என்பதல்ல விவாதம். நீங்கள் எந்த அரசியலோடு ஒப்பிட்டு கதைக்கிறீர்கள் என்பதுதான் விவாதம். எதை நோக்கி நகர்கிறீர்கள் என்பதுதான் விவாதம்.

பன்முகத்தன்மை பற்றி சொல்லப்பட்டது. அதைத்தான் நாங்களும் கோருகிறோம். புலிகள் ஒற்றைத் தன்மையைக் கோரினார்கள், நாங்கள் பன்முகத்தன்மையைக் கோருகிறோம் என அதேவேகத்தில் பன்முகத் தன்மையை விரிவுபடுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பன்முகத் தன்மையும்கூட மக்களைச் சார்ந்து நிற்கவேண்டும். அந்த மக்களின் எதிரியுடன் சேர்ந்து நின்று சொல்வதல்ல. இந்த அரசு வெறும் தமிழ் மக்களுக்கு மட்டும் எதிரியல்ல. சிங்கள மக்களுக்கும் எதிரி. முஸ்லிம் மக்களுக்கும் எதிரி. மலையக மக்களுக்கும் எதிரி. அது அந்த மக்களை ஒடுக்குகின்றது. பன்முகத்தன்மையென எதிரியுடன் சேர்ந்து வேலைசெய்வதல்ல. மக்களின் எந்தப் பிரிவினரோடும் சேர்ந்து வேலைசெய்ய முடியுமேயொழிய மக்களின் எதிரியுடனல்ல.

டக்ளஸ் தேவா செய்கின்றார். அவர் செய்hவை பற்றி பிழைசரி சொல்ல வரவில்லை. அவர் செய்கின்றார். அது அவரது கடமை. ஒரு நாட்டின் அரசு அந்த நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைச் செய்ய வேண்டியது அந்த அரசின் கடமை. அதை செய்யாமல் இருப்பதற்கு எதிராகப் போராடுவதுதான் அரசியல். அரசு ஏன் செய்யவில்லை என்ற கேள்விதான் முதன்மையானது. சுயமாக செய்யக்கூடிய எத்தனையோ வேலை முறைகள் இருக்கின்றன. இதுதான் வேலைமுறையல்ல. இன்றைய அகதிமுகாம் பிரச்சினைதான் முதன்முதலில் செய்யப்படும் வேலைமுறை அல்ல. புலிகளின் அதிகார கட்டமைப்பு நிலவிய காலகட்டத்தில்கூட மறைமுகமாக மக்களுக்கு சேவைகள் பலவழிகளில்  செய்யப்பட்டிருக்கின்றன. அதில் சரி பிழைகள் இருக்கலாம். உதாரணமாக நேற்றைய (தமிழ் டயஸ்போரா) கூட்டத்தில் கேட்டிருப்பீர்கள், உதயன் தான் சுயமாகத்தான் வேலைசெய்கிறார். அரசுடனல்ல. பாடசாலைகள் கோவில் குளங்கள் என பல விசயங்கள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் மறுக்க நாம் வரவில்லை. பன்மைத்துவம் என்று சொல்லிக்கொண்டு மக்களின் எதிரியுடன் சேர்ந்து சொல்வதைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.

ராஜன் :
எங்களுக்கு ஒரு பக்குவம் வந்திருக்க வேண்டும். அநேகமாக எல்லோரும் ஒரு 40 வயதை அடைந்திருக்கிறோம் என நினைக்கிறேன். விவாதங்களில் ஒருவர் என்ன கருத்தைச் சொல்லவருகிறார் என்று புரிந்து அதன் அடிப்படையில் விவாதத்தை நடத்துவோமானால் நேரத்தையும் மீதப்படுத்தலாம். ரயாகரன் சொல்ல வரும் கருத்து என்னவெனில் உதவிகள் செய்வதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினையேதுமில்லை என்பதை. மாறாக இதற்குள் சிலர் ஒரு அரசியலை செய்யப் பார்க்கிறார்கள் எனச் சொல்கிறார். சிலர் தெரிந்துகொண்டு செய்கிறோம். சிலர் தெரியாமல் இழுபறிப்பட்டுப் போகிறோம். ரயாகரன் சொல்லவந்த விடயம் அதுதான் என நினைக்கிறேன். அவர் ஒட்டுமொத்தமாக அதை நிராகரிக்கவில்லை. அதேமாதிரி இந்தக் கட்டத்தில் விஜி, ராஜபக்சவுக்கு நன்றி என்று சொன்னார். அதுவும் பிரச்சினையில்லை. புலிகளின் ஒடுக்குமுறை அவ்வளவு மோசமாக இருந்தது. இதிலிருந்து விடுதலையடைய எல்லோருமே துடித்தோம், யாராவது வந்து மீட்டெடுக்க மாட்டானா என. இதற்கெல்லாம் நாம் சண்டைபிடிக்கத் தேவையில்லை.

அடுத்து, புகலிடத்தில் வாழ்பவர்களும் மார்க்சிச லெனினிச வழிமுறைகளும் பற்றி இங்கு பேசப்பட்டது. மார்க்ஸ் வரையறுக்கும்போது, தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்று சொல்லும்போது, முக்கியமாக சொல்கிறார் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கட் பிரிவினர்; என்று. இழப்பதற்கு எதுவுமற்ற மக்கட் பிரிவினராக வெளிநாட்டுவாழ் மக்கள் இல்லாததால் இவர்களை மார்க்சிச லெனனிச கோட்பாட்டுக்குள் அணிதிரட்டுவது மிகக் கடினமான விடயம். இதைத்தான் சுனந்த தேசங்களின் பொதுவான பிரச்சினைக்கு ஊடாக அணிதிரட்டலாம் என்றொரு பார்வையை வைத்தார். அது ஒரு சரியான பார்வை என நினைக்கிறேன. ஏதாவது ஒரு கோரிக்கை பொதுவானதாக இருக்கும். அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த மக்களை அணிதிரட்டக்கூடியதாக இருக்கும். அப்படி அணிதிரட்டுவதுகூட மார்க்சிச லெனினிசத்தக்கு விரோதமான ஒரு பார்வையல்ல. அடிப்படை மார்க்சிசம் என்ற பெட்டகத்துள் போட்டுப் பார்ப்போமாக இருந்தால் கடினமானது. ஒருவேளை மார்க்ஸ் இப்போ இருந்திருந்தால் இதைத்தான் வரையறுத்திருப்பாரோ தெரியாது.

திரும்பவும் ஒரு விடயத்தை நான் சொல்கிறேன். பிராந்தியங்களுக்கிடையிலான ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது சம்பந்தமாக கண்ணன் கதைத்தார். உயர் அலகுகளுக்கான கோரிக்கைகளைவிட நாங்கள் ஏன் கிராம மட்டத்திலான அதிகாரங்களைக் கோருவதன் மூலம் இதைத் தொடங்கக்கூடாது. ஒட்டுமொத்த இலங்கையில் கிராமத்தில்தான் தலித்துகள் இருக்கிறார்கள், கிராமத்தில்தான் மலயைக மக்கள் இருக்கிறார்கள, கிராமத்தில்தான் பெண்கள் இன்னும் அதிகமாக ஒடுக்கப்படுகிறார்கள். 33 வீதமான பெண்கள் பாராளுமன்றத்தில் இருப்பதைவிட கிராம நிர்வாகத்தில் வரப் பண்ணுவது நல்லது. ஆகவே கிராம அடிப்படையிலிருந்து ஏன் தொடங்கக்கூடாது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்…

http://www.psminaiyam.com/?p=391

பாகம்-1 (ஏற்கனவே வந்திருந்தது)

http://www.psminaiyam.com/?p=26  அல்லது
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6333:2009-10-18-13-05-51&catid=320:2009-10-18-13-01-28  அல்லது
http://www.puhali.com/index/view?aid=307