ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின. ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.

ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.

அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர். இதன் மூலம் மக்களிடையே ராஜசேகர ரெட்டிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஜெகன்மோகன்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புவதாகவும் சித்தரித்தனர். மேலும், தங்களது தரப்பை வலியுறுத்த டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கினர்.

ஆனால் இதற்கெல்லாம் மசியாத சோனியாகாந்தி, ""புதிய உத்தரவுகள் வரும் வரை ரோசய்யாவே முதல்வராக நீடிப்பார்'' என அறிவிக்கச் செய்தார். இதனால் பிரச்சனை தற்காலிகமாக ஒய்ந்தாலும், ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் தக்க தருணத்துக்காகக் காத்துள்ளனர்.

தற்போது முதல்வராக முன்னிறுத்தப்படும் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியலில் குதித்தவர்; தெலுங்கில் ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவர்; ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அரசியலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; தான் ஒரு முதலாளி எனக் கூறிவந்தவர். இவ்வாறு கட்சியிலோ, மக்களிடமோ செல்வாக்கில்லாத, அரசியலுக்கு வந்து வெறும் நூறு நாட்களே ஆன ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையையே மிரட்டுகிறார் என்றால், அவருக்கு இவ்வளவு துணிவும் ஆற்றலும் எங்கிருந்து வந்தது?

ராஜசேகர ரெட்டி கடந்த முறை முதல்வராக இருந்தபோது, ஆந்திராவில் தொழில் தொடங்கிய முதலாளிகளுடன் மறைமுகமாக நட்பும் கூட்டும் கொண்டிருந்தார்; அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கினார். மோசடி பேர்வழி சத்யம் ராஜு, பொது மக்களுக்கு இலவசக் காப்பீடு என்று கூறிப் பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், இன்னும் இது போன்ற பல கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் சுரங்க முதலாளிகள் என ராஜசேகர ரெட்டியின் நட்பு வட்டாரமும் கள்ளக்கூட்டுகளும் நீண்டது.

இவ்வாறு பன்னாட்டு முதலாளிகளும், தரகு முதலாளிகளும் அரசை தங்களது நோக்கங்களுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த ஏற்பாடு, த டங் கலின்றித் தொடர்வதற்கு, இவர்களுக்குக் கிடைத்தவர்தான் ஜெகன்மோகன். ராஜசேகர ரெட்டி முதலாளிகளிடமிருந்து வாங்கிய பல்லாயிரம் கோடி லஞ்சப் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதும், பினாமிகள் மூலமாக பல நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதும், ஜெகன் மோகனின் வேலையாக இருந்தது.

சந்தூர் பவர் லிமிடெட், ஜகதி பப்ளிகேசன்ஸ், இந்திரா டிவி, சாக்ஷி செய்தித்தாள், மொரீசியஸில் இரு கம்பெனிகள் என 14 கம்பெனிகளை இவர் நடத்திவந்தார். இவரே ஒரு முதலாளி என்பதால், ராஜசேகர ரெட்டி உயிரோடு இருந்தபோதே, இவர் முதலாளிகளுடன் நெருக்கமாக இருந்தார். எனவே முதல்வர் பதவியில் வேறு யாரேனும் அமர்வதற்குப் பதில், இவர் வருவதுதான் முதலாளிகளுக்கு உவப்பானதாக இருந்தது. அதனால்தான், இவரால் ஆந்திரக் காங்கிரசுக் கட்சியின் பழம் பெருச்சாளிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, முதல்வர் பந்தயத்தில் முந்திக்கொண்டு ஓட முடிந்தது.

ஆனால் காங்கிரசு மேலிடத்திற்கோ, இது தனது அதிகாரத்தை எதிர்க்கும் குறுநில மன்னரின் பிரச்சனை. முதல்வர் நாற்காலியில் அமர வைக்க, கட்சித் தலைமை சொல்வதை அப்படியே கேட்டு நடக்கக்கூடியதொரு பொம்மைதான் காங்கிரசுக்குத் தேவை. ஜெகன்மோகன் அத்தகையவர்தானா என சோதித்தறியும் வரை, அவரை முதல்வராக்குவதில்லை என மேலிடம் முடிவு செய்துள்ளது.

இனிமேல், மாநிலத்தின் முதல்வராக ஒருவர் வருவதற்கு, மக்களிடமோ தனது கட்சியிலோ செல்வாக்குப் பெற்றிருக்கத் தேவையில்லை; நான்கைந்து ஏகபோக முதலாளிகள் நினைத்தால் போதும், யாரை வேண்டுமானாலும் முதல்வராக்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது.

ஓட்டுச் சீட்டு அரசியலில் முன்பெல்லாம் கட்சிகள் ஒவ்வொன்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவை தாங்கள்தான் எனப் பரப்புரை செய்யும் தேவையும் இருந்தது. இன்று அம்மாதிரியான பாசாங்குகள் எவையும் தேவையில்லை. அப்பட்டமாக தரகு முதலாளிகளே அரசியலில் இறங்கி ஆட்சியைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்.டி.ராமராவுக்குக் கூட, முதல்வராவதற்கு, சினிமாவில் நடித்து பல லட்சம் மக்களைக் கவரவேண்டியிருந்தது. ஜெகன்மோகனுக்கு அது கூடத் தேவையில்லாமல் போய்விட்டது. கலைஞரின் மனசாட்சி என்றும், மாநில சுயாட்சி பற்றிய கொள்கையை வகுத்தவர் என்றும் முரசொலி மாறன் தூக்கி நிறுத்தப்பட்டதைப் போன்ற பிம்பங்களெல்லாம், நவீன கார்ப்பரேட் முதலாளி தயாநிதி மாறனுக்குத் தேவைப்படவில்லை. கொல்லைப்புறமாக நுழைந்த மு.க.அழகிரி இன்று தமிழகத்தின் தென்மாவட்டங்களை விலைபேசும் திடீர் அரசியல் தலைவராக வளர்ந்து விட்டார். முதலாளித்துவ ஊடகங்களும் இத்தகைய புதுப்பணக்கார அரசியல் வாரிசுகளை ""திறமைசாலி'', ""சிக்கல்களைத் தீர்க்கும் சூத்திரதாரி'', ""புதிய திட்டங்களை வகுத்துத் துணிவோடு செயல்படுத்தும் இளைஞர்'', ""எளிமையானவர்'', ""கடின உழைப்பாளி'' என்றெல்லாம் ஒளிவட்டம் போட்டு துதிபாடுகின்றன.

இலவசத் திட்டங்களைப் பற்றி வாய்ப்பந்தல் போட்டும், தலைக்கு முன்னூறு, ஐநூறு என விலை வைத்து வாக்குகளை வாங்கி விடுவதாகவும் ஓட்டுக் கட்சிகளின் அரசியல் மாறி விட்டது. ஜெகன் மோகன், தயாநிதி மாறன், அழகிரி முதலான இத்தகைய புது வகையான கோடீஸ்வர அரசியல் வாரிசுகள், மக்களிடமிருந்து அரசியலை அகற்றி பிழைப்புவாதத்தை பொதுப் புத்தியாக்கி வருகின்றனர். இவர்கள் பணபலம், குண்டர் பலம், சாதிய பலத்தோடு கணிசமான அளவுக்கு எம்.எல். ஏ . க் களையும் எம்.பி.க்ளையும் தம் பிடியில் வைத்துக் கொண்டு மாநில அளவில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்கள். இவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமையால்கூட இவர்களைக் கட்டுப்படுத்த இயலாது. மாநில அரசியலையே ஆட்டிப் படைக்கும் இவர்கள், எந்த தேசியக் கட்சிக்கும் எதிரானவர்களல்ல. இன்னும் சொல்லப்போனால், எந்த தேசியக் கட்சியும் இவர்களது தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்கவோ, அதைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது.

இத்தகைய கழிசடை அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதிநிலை மட்டுமல்ல; அதற்கே எதிரான அபாயகரமான போக்காகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு, அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அரசியல், சித்தாந்த, அமைப்பு அடிப்படைகளை இத்தகைய கழிசடை அரசியல் சக்திகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இத்தகைய கழிசடை அரசியலுக்கு கொள்கை இலட்சியம் என்று எதுவும் கிடையாது. அது பொறுக்கி அரசியலும் கிரிமினல் அரசியலும் கலந்த வீரிய ஒட்டுரகம். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக யாருடனும் கூட்டுச்சேரத் தயங்காத பிழைப்புவாதிகளின் கூடாரம். மறுகாலனியாக்கம் உருவாக்கியுள்ள இத்தகைய கழிசடை அரசியல் என்பது, பாசிசம் அரங்கேறுவதற்கான எல்லா அடிப்படைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அபாயகரமான அரசியல் போக்காகும்.

ஆந்திராவில் நடந்துவரும் காங்கிரசு கோஷ்டிச் சண்டையை வழக்கமாக அக்கட்சிக்குள் நடக்கும் கூத்தாக ஒதுக்கிவிட முடியாது. அரசியல் அரங்கில் புல்லுருவிக் கூட்டமாக வளர்ந்துவரும் இப்புதுப்பணக்கார கழிசடை சக்திகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், பாசிசத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முடியாது. ·

தனபால்