06192021
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

பெர்லின் சுவர், சொல்லாத சேதிகள்

பெர்லின் சுவர் பற்றி நீங்கள் இதுவரை அறியாத தகவல்கள் பல உண்டு. வரலாற்று நூல்களும், ஊடகங்களும் ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தெரிவித்து வந்துள்ளன. கிழக்கு ஜெர்மனியில் "கம்யூனிச சர்வாதிகாரத்தில்" இருந்து தப்புவதற்காக, "சுதந்திர மேற்கு பெர்லினுக்கு" உயிரைப் பணயம் வைத்து ஓடி வந்தவர்களைப் பற்றி கதை கதையாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.

 

 

அதே நேரம், மேற்கு பெர்லினில் இருந்து, கிழக்கு பெர்லினுக்கு தப்பிச் சென்றவர்களைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. இவ்வாறு "மறு பக்கம்" தப்பி ஓடியவர்கள் பலதரப்பட்டவர்கள். சிலர் கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப்பட்டு சென்றார்கள், சிலர் குடும்ப உறவுகளோடு ஒன்று சேருவதற்காக சென்றார்கள், சிலர் நண்பர்களோடு பந்தயம் கட்டி விட்டு சென்றார்கள். இவ்வாறு நூற்றுக்கணக்கான, அல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான அகதிகள் மேற்கு பெர்லினில் இருந்து மதிலேறிக் குதித்து கிழக்கு பெர்லின் சென்றடைந்தார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேற்குலகில் பரவலாக செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கு மாறாக, மதிலேறிக் குதித்த இரண்டு நபர்கள் மட்டுமே (கிழக்கு ஜெர்மனி) எல்லைக்காவல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மேற்கு பெர்லினை சேர்ந்த கம்யூனிஸ்ட் ஒருவர், கிழக்கு ஜெர்மன் காவல்படை தப்பியோடும் அகதிகளை சுடுவதில்லை என நண்பர்களுடன் வாதிட்டு வந்தார். வெர்னர் ஸிபில்ஸ்கி என்ற அந்த நபர், அதனை தானே நிரூபித்துக் காட்டுவதாக பந்தயம் கட்டினார். ஒரு நாள் சொன்னபடியே மதிலேறிக் குதித்து கிழக்கு பெர்லின் சென்று விட்டார். அன்று மதிலருகில் துப்பாக்கி வேட்டுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இருப்பினும் ஸிபிலிஸ்கியை கிழக்கு ஜெர்மன் காவலர்கள் சுட்டு (கொன்று) விட்டதாக மேற்கு பெர்லினில் வதந்தி பரவியது. அந்த வதந்தியை பரப்பியது வேறு யாருமல்ல, "சுதந்திரமாக கருத்து வெளியிடும்" மேற்கு ஜெர்மன் ஊடகங்கள். தன்னைப் பற்றிய தவறான செய்திகளால் எரிச்சலுற்ற ஸிபிலிஸ்கி மீண்டும் மேற்கு பெர்லின் வந்தார். அவரது பெர்லின் நண்பர்கள் "உயிர்த்தெழுந்த இயேசு பிரானைக்" கண்டு அதிர்ச்சியுற்றனர். சில நாட்களின் பின்னர், மீண்டும் மதிலேறிக் குதிக்கும் சாதனை செய்து காட்ட முன்வந்தார். இம்முறை அதிர்ஷ்ட தேவதை அவரை ஏமாற்றி விட்டது. கிழக்கு ஜெர்மன் பொலிஸ் ஸிபிலிஸ்கியை கைது செய்து, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

1980 ம் ஆண்டு, ஜோன் ரன்னிங்க்ஸ் என்ற அமெரிக்கர் பதினெட்டு தடவை பெர்லின் மதிலேறிக் குதித்து ஒரு "உலக சாதனை" நிலைநாட்டினார். தன்னை ஒரு சமாதான ஆர்வலர் என்று இந்த நபர் கூறிக் கொண்டார். ஒரு தடவை, எல்லைக்காவல் படைக்கு முன்பு மதில் மீதேறி நின்று சிறுநீர் கழித்து எதிர்ப்பைக் காட்டினார். கிழக்கு ஜெர்மன் காவல் படையை சேர்ந்தவர்கள், அந்த அமெரிக்கரை ஒரு கிறுக்கனாக பார்த்தார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி மேற்கு பெர்லினில் இருந்த அமெரிக்க படையினருக்கு தகவல் அனுப்பினார்கள். ஆனால் அவர்களோ தமது பிரஜை மீது சட்ட நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர். அதற்கு காரணம் பெர்லின் சுவர் ஒரு சர்வதேச எல்லையில்லையாம்.

1988 ம் ஆண்டு, ஒரு முறை 180 கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரி இளைஞர்கள் சுவர் அருகில் கூடாரங்களை அமைத்து கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். மேற்கு ஜெர்மன் கலவரத் தடுப்பு பொலிஸ் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கோடு வந்தது. இளைஞர்கள் அனைவரும் பொலிசிடம் இருந்து தப்பிக்க ஏணி வைத்து மதிலேறிக் குதித்தார்கள். மதிலுக்கு அந்தப்பக்கம் அவர்களை வரவேற்ற கிழக்கு ஜெர்மன் பொலிஸ், சூடான காலை உணவு பரிமாறி விட்டு, வீட்டிற்கு திருப்பி அனுப்பினார்கள்.

கிழக்கு ஜெர்மனி, "பாசிசத் தடுப்பு சுவர்" என்று பெர்லின் சுவருக்கு பெயரிட்டிருந்தது. ஜெர்மன் ஜனநாயக குடியரசு என்ற கம்யூனிச கிழக்கு ஜெர்மனி முழு பெர்லினுக்கும் உரிமை கோரியது. ஆனால் மேற்கு பெர்லின் பகுதியில் நிலை கொண்டிருந்த அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புகள் கொடுக்க மாட்டேன் என அடம்பிடித்தன. அதையொட்டி எழுந்த சர்ச்சை தீர்க்க முடியாத கட்டம் வந்த போது தான், மேற்கு பெர்லினை சுற்றி மதில் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை மறைத்து, கிழக்கு ஜெர்மன் சர்வாதிகாரத்திற்கு பயந்து ஓடும் மக்களை தடுக்கவே பெர்லின் மதில் கட்டப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்கு பெர்லினை முற்றுகையிடும் நோக்கோடு பெர்லின் சுவர் கட்டப்பட்டாலும், பொது மக்கள் போக்குவரத்துக்கென ஒரு வாயில் எப்போதும் திறந்திருந்தது. 1971 ம் ஆண்டிலிருந்து பல மேற்கு பெர்லின்வாசிகள் இந்த வாசல் ஊடாக சட்டப்படி பிரயாணம் செய்தனர். மேற்கு ஜெர்மன், அல்லது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெருந்தொகையான கம்யூனிச கொள்கைப் பற்றாளர்கள் மதிலை தாண்டி சென்றனர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற தேசம் கலைக்கப்படும் வரை அவர்கள் அங்கே வசதி, வாய்ப்புகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.வெளியுலகில் அதிகம் அறியப்படாத இத்தகைய குறிப்புகளை Martin Schaad என்ற சரித்திரவியலாளர் பதிவு செய்துள்ளார். அவர் எழுதிய"Dann geh doch rüber“ - über die Mauer in den Osten" என்ற நூலில் இது போன்ற அரிய தகவல்கள் பல ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்